search icon
என் மலர்tooltip icon
    • நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கம் (என்.சி.எம்.எஸ்) உள்ளது.
    • வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கம் (என்.சி.எம்.எஸ்) உள்ளது. இங்கு வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு, நாமக்கல், மோகனூர், பரமத்தி, வேலூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்ப நாய்க்கன் பட்டி, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,800 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    திருச்செங்கோடு, கொங்கணாபுரம், ஈரோடு, அவிநாசி, கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

    ஏலத்தில் ஆர்.சி.எச் ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.5,500 முதல் ரூ.7,870 வரையிலும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.3,595 முதல் ரூ.5,395 வரையிலும் விலை போனது.

    மொத்தம் ரூ.39 லட்சம் மதிப்பிலான பருத்தி ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. 

    • ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஈரோடு-அசாம் மாநிலம் ரங்கபாரா வடக்கு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
    • அதிகாலை 2.30 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் 3.30 மணிக்கு சேலம் வந்தடையும்.

    சேலம்:

    ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஈரோடு-அசாம் மாநிலம் ரங்கபாரா வடக்கு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி ஈரோடு-ரங்கபாரா வடக்கு சிறப்பு ரெயில் (06073) வருகிற 24 மற்றும் 31-ந் தேதிகளில் (புதன்கிழமை) இயக்கப்படுகிறது.

    அதிகாலை 2.30 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் 3.30 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 3.35 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கலே, தெனாலி, விஜயவாடா வழியாக வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ரங்கபாரா வடக்கை சென்றடையும்.

    இதேபோல் மறு மார்க்கத்தில் ரங்கபாரா வடக்கு- ஈரோடு சிறப்பு ரெயில் (06074) 24 மற்றும் ஜூன் மாதம் 3-ந் தேதிகளில் (சனிக்கிழமை) இயக்கப்படும். ரங்கபாரா வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு இந்த ரெயில் புறப்பட்டு பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக திங்கட்கிழமை காலை 11.57 மணிக்கு சேலம் வந்தடையும்.

    பின்னர் இங்கிருந்து 12 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு ஈரோடு சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (புதன்கிழமை) காலை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வருவாய்த்துறை அதிகாரிகள் ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கை செய்யும் ‘ஜமாபந்தி’ முகாம், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.
    • இன்று அருநூற்றுமலை குறுவட்ட கிராமங்களுக்கும், நாளை காரிப்பட்டி குறுவட்ட கிராமங்களுக்கும், நாளை மறுதினம் வாழப்பாடி குறுவட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கிராம நிலவரி கணக்குகளை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கை செய்யும் 'ஜமாபந்தி' முகாம், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.

    சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை) கவிதா தலைமையில் நடைபெற்ற முதல் நாள் ஜமாபந்தியில், பேளூர் வருவாய் குரு வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களின், நிலவரி கணக்குகள் மற்றும் நில உடமை ஆவணங்கள் தணிக்கை செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், இலவச வீட்டு மனை பட்டா கோரி 100-க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.

    பேளூர் பேரூராட்சியில் குடியிருந்து வரும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், பயனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகையை மீண்டும் வழங்க கோரியும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

    வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.

    இன்று அருநூற்றுமலை குறுவட்ட கிராமங்களுக்கும், நாளை காரிப்பட்டி குறுவட்ட கிராமங்களுக்கும், நாளை மறுதினம் வாழப்பாடி குறுவட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

    ஜமாபந்தியில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து, தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என, வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • செந்தில்நாதன் மகள் தனுஸ்ரீ(வயது 14). இவர் அருகாமையில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • சிறுமியை தடுத்து நிறுத்தி அவர் அணிந்திருந்த தங்கச்செயினை பறித்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே பெரியமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மகள் தனுஸ்ரீ(வயது 14). இவர் அருகாமையில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று தனுஸ்ரீ அவரது சைக்கிளில் பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ரமேஷ்குமார்(32), மதுக்கரையை சேர்ந்த முருகேசன் மகன் கிஷோர்குமார்(21) ஆகியோர், சிறுமியை தடுத்து நிறுத்தி அவர் அணிந்திருந்த தங்கச்செயினை பறித்தனர்.

    அப்போது தனுஸ்ரீ நிலைதடுமாறி சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார். உடனே தனுஸ்ரீ சத்தம் போட்டு உள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வரவே ரமேஷ்குமாரும், கிஷோர்குமாரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்து உள்ளனர்.

    இருப்பினும் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு சுற்றி வளைத்து இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து, பரமத்தி வேலூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிவு செய்து, ரமேஷ் குமார் மற்றும் கிஷோர் குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

    • வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் நெறி வழிகாட்டு மையத்தில் மாதம் தோறும் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.
    • இம்மாதத்துக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 19-ந் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் நெறி வழிகாட்டு மையத்தில் மாதம் தோறும் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.

    இம்மாதத்துக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 19-ந் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

    முகாமில் அனைத்து கல்வி தகுதி உடையவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் பணிவாய்ப்பு பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.

        சேலம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுகள் மட்டும்) - எலைட், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (எம்ஐஎம்எஸ்), வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (சிடிஎஸ்) என 3 வகைகளில் செயல்படுத்தப்படுகிறது.

    மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று, பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

    இந்த திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் sdat@tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை வருகிற 20-ந்தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர, பிற விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

    தகுதியான வின்ணப்பங்கள், அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும். பின்னர், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, இறுதியாக தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர். அதிகபட்சம் அவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

    இந்த 3 திட்டங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 22-ந்தேதி வரை ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பெற்ற பன்னாட்டு, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விவரங்களை ஏற்கனவே உள்ள பதிவு ஐ.டி. மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்து உள்ளார்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஸ்ரேயாசிங் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னையில் தமிழக வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த டாக்டர் உமா இடமாற்றம் செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஸ்ரேயாசிங் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னையில் தமிழக வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதை தொடர்ந்து சென்னையில் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த டாக்டர் உமா இடமாற்றம் செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    டாக்டர் எஸ்.உமா, தற்போது தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டத்தின், திட்ட இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

    அவர் ஒரு சுகாதார அதிகாரியாகத் தொடங்கி, சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

    தமிழ்நாடு அரசு அவருக்கு 2019-ம் ஆண்டு இந்திய நிர்வாகப் பணிகள் (ஐ.ஏ.எஸ்) கேடருக்குப் பதவி உயர்வு அளித்தது.

    • பரமத்திவேலூர், பள்ளி சாலையில் உள்ள கிளை நூலக வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம், கடந்த 9-ம் தேதி தொடங்கி வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • இப்பயிற்சி முகாமில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பள்ளி சாலையில் உள்ள கிளை நூலக வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம், கடந்த 9-ம் தேதி தொடங்கி வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இப்பயிற்சி முகாமில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், புத்தகம் படித்தல், கணினி பயன்பாடு, கதை சொல்லுதல், கைவினை பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, செஸ், கேரம் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும் ஆர்வமுள்ள மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என பரமத்திவேலூர் 2-ம் நிலை கிளை நூலகர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த 13-ந் தேதி வெல்ல ஆலையில் தூங்கிக் கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
    • இந்தநிலையில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த 13-ந் தேதி வெல்ல ஆலையில் தூங்கிக் கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

    இதில் 2 பேர் படுகாயம் அடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் ரவி, பரமத்தி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, நேற்று பரமத்தி போலீஸ் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், பரமத்தி மற்றும் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையங்களுக்கு இன்ஸ்பெக்டராக உள்ளார். 

    • பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந்தேதி வெளியிடப்பட்டது.
    • வருகிற ஜூன் மாதம் 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ள துணைத் தேர்வை எழுதலாம்.

    சேலம்:

    பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந்தேதி வெளி யிடப்பட்டது.

    இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வுக்கு செல்லாதவர்கள் வருகிற ஜூன் மாதம் 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ள துணைத் தேர்வை எழுதலாம். இந்த துணை தேர்வை எழுத மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களிலும் கடந்த 11-ந்தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர்.

    தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து வருகின்றனர்.

    இந்த துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

    நாளை விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் உரிய கூடுதல் கட்டணத்துடன் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் இணை யவழியில் விண்ணப்பிக்க லாம்.

    இந்த தகவலை பள்ளிக்க ல்வித்துைற அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

    • ராஜசேகரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் இன்று மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர்.
    • மோகனசுந்தர பாண்டியன் (வயது 28) என்பவர் மாலத்தீவில் பிளம்பர் உள்ளிட்ட பணிகளுக்கு வேலை இருப்பதாகவும், மாதம் ரூ.70 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் காட்டூர் பகுதியை சேர்ந்த ராஜசேகரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் இன்று மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ராஜசேகரன் கூறும்போது, சமூக வலைத்தளமான முகநூலில் மாலத்தீவில் எலக்ட்ரீசியன், பிளம்பர் உள்ளிட்ட பணிகளுக்கு வேலை இருப்பதாக விளம்பரம் ஒன்று செய்து இருந்தனர்.

    அதை பார்த்து தொடர்பு கொண்டபோது, ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த மோகனசுந்தர பாண்டியன் (வயது 28) என்பவர் மாலத்தீவில் பிளம்பர் உள்ளிட்ட பணிகளுக்கு வேலை இருப்பதாகவும், மாதம் ரூ.70 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.

    பணிகளுக்கு ஏராளமான நபர்கள் தேவை எனவும் கூறியிருந்தார்.

    இதையடுத்து எனது வட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்டோரை வேலைக்காக அறிமுகம் செய்தேன். அனைவரிடமும் ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என சுமார் 8 லட்ச ரூபாய் பெற்று கொண்டார்.

    ஆனால் அதன்பின்னர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்தார். அவரை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த நிலையில் தலைமறைவாகி விட்டார். சுமார் ஒரு வருடமாக தேடி வந்த நிலை யில் மேட்டுப்பாளையம் பகுதியில் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் மேட்டுப்பாளையம் சென்று நேற்று அவரை பிடித்து, இன்று காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்துள்ளோம் என தெரிவித்தார்.

    மேலும் காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • 10-ந்தேதி மதியம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
    • இது பற்றி பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் பாலகிருஷ்ணா லாட்ஜ் சங்கம் சைக்கிள் நிறுத்தம் நிலை யம் அருகில் கடந்த 10-ந்தேதி மதியம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இது பற்றி பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவர் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த இந்த முதியவரின் பெயர் மற்றும் முகவரி தெரியாததால் உடலை ஒப்படைக்க முடி யாத சூழ்நிலை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இறந்த முதியவருடைய இடது கால் முட்டி, இடது காலில் காய தழும்பு உள்ளது. எனவே இவரை பற்றி தகவல் கிடைத்தால் போலீஸ் நிலை யத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ×