search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "namakkal district"

    • நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஸ்ரேயாசிங் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னையில் தமிழக வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த டாக்டர் உமா இடமாற்றம் செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஸ்ரேயாசிங் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னையில் தமிழக வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதை தொடர்ந்து சென்னையில் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த டாக்டர் உமா இடமாற்றம் செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    டாக்டர் எஸ்.உமா, தற்போது தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டத்தின், திட்ட இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

    அவர் ஒரு சுகாதார அதிகாரியாகத் தொடங்கி, சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

    தமிழ்நாடு அரசு அவருக்கு 2019-ம் ஆண்டு இந்திய நிர்வாகப் பணிகள் (ஐ.ஏ.எஸ்) கேடருக்குப் பதவி உயர்வு அளித்தது.

    நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்தபாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் விற்பனை தொடர்பாக, விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் அமுதவள்ளி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர் அருள்சாமி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் விவரங்கள் குறித்த மாவட்ட சுகாதாரத்துறையின் அறிக்கை சிபிசிஐடியிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் விசாரணை நடத்த உள்ளனர். 

    இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 24 பெண் குழந்தைகள் மற்றும் 6 ஆண் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக சிபிசிஐடி போலீஸ் தெரிவித்துள்ளது. 
    சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #JactoGeo
    சேலம்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    போராட்டத்தில் 4-வது நாளான நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார் நேரு கலையரங்கில் அடைத்து வைத்தனர்.

    மாலை 6 மணிக்கு மேல், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கிய நபர்களை மட்டும் கைது செய்து சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்ற ஊழியர்கள் தங்களையும் கைது செய்யுமாறு கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் ஆசிரியர்களின் உறவினர்களும் கலையரங்கம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    பின்னர் இன்று அதிகாலை 1 மணியளவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகளான கோவிந்தன், சிங்கராயன், உதயகுமார், பாரி, ராஜேந்திரன், சந்திரசேகர், முத்துக்குமாரன், சுரேஷ், ராஜேஷ், ஸ்ரீராம், லெனின், லோகு உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    பின்னர் அவர்களை சேலம் ஜே.எம்.1 கோர்ட் மாஜிஸ்திரேட் செந்தில்குமார் வீட்டில் இன்று காலை ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிடுவாரா, அல்லது விடுவிப்பாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல நாமக்கல்லில் பூங்கா சாலையில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் 72 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை மாஜிஸ்திரேட் வருகிற 1-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கள். #JactoGeo
    நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.13.5 கோடிக்கு மது விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இது வழக்கமான விற்பனையை விட 2 மடங்கு அதிகமாகும்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 188 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடந்தது. 

    குடிமகன்கள் ஆர்வத்துடன் மது பாட்டில்களை வாங்கி சென்றனர். இதனால் பீர், பிராந்தி, ரம் உள்ளிட்ட மதுபானங்கள் ரூ.13.5 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்தது. இது வழக்கமான விற்பனையை விட 2 மடங்கு அதிகமாகும். 

    இதில் பீர் 16 ஆயிரத்து 400 பெட்டிகளும், பிராந்தி, ரம் உள்ளிட்டவைகள் 21 ஆயிரம் பெட்டிகளும் விற்பனையானது. 
    டாக்டர்கள் போராட்டம் காரணமாக நாமக்கல் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். #DoctorsStrike
    நாமக்கல்:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்குவதைபோல் தமிழக அரசு டாக்டர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் மற்றும் பணப்படிகளை வழங்கிட வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்லில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மொத்தம் 70 டாக்டர்கள் பணிபுரிகிறார்கள். இதில் புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவில் பணிபுரியும் டாக்டர்கள் அனைவரும் இன்று பணிகளை மேற்கொள்ளவில்லை.

    சிகிச்சை பெறுவதற்காக காலையில் வரிசையில் நின்று ஓ.பி.சீட் வாங்கிக்கொண்டு வந்த நோயாளிகள், புறநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் யாரும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். டாக்டர்களின் அறை வெறிச்சோடி காணப்பட்டது.

    இருப்பினும் டாக்டர்களின் வருகைக்காக அங்கு நோயாளிகள் காத்திருந்தனர். ஆனால், காலை 10.30 மணியை தாண்டியும் டாக்டர்கள் யாரும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு வராததால் என்ன செய்வது? என தெரியாமல் சிரமம் அடைந்தனர்.

    புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதுபோல் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் புறக்கணிப்பு செய்தனர். ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 21 டாக்டர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் விடுப்பில் உள்ளார். மற்ற 20 டாக்டர்களும் பணிக்கு வந்திருப்பதாக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

    பணிக்கு வந்திருந்த டாக்டர்கள் வழக்கம்போல் அனைத்து வார்டுகளிலும் உள்ள உள்நோயாளிகள் பிரிவிலும் மற்றும் அவசர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் புறக்கணித்தனர்.

    இந்த நிலையில் புறநோயாளிகளின் வருகை வழக்கத்தைவிட குறைந்த அளவில் காணப்பட்டது. வழக்கமாக காலை நேரங்களில் நூற்றுக்கணக்கான புறநோயாளிகள் நீண்ட வரிசையில் சிகிச்சைபெற காத்திருப்பார்கள். புறநோயாளிகளுக்கு டாக்டர் சிகிச்சை அளிக்காததால் புறநோயாளிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். #DoctorsStrike
    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.
    நாமக்கல்:

    ரேஷன்கடை பணியாளர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யும்வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். மருத்துவ படியை ரூ.300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 4 ஆயிரம் பணியாளர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் பகுதிநேர மற்றும் முழுநேர ரேஷன்கடைகள் மொத்தம் 919 உள்ளது. இவற்றில் 591 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 32 பேர் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் 32 ரேஷன்கடைகள் நேற்று மூடப்பட்டு இருந்தன. எனவே அவற்றில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காண முடிந்தது. மீதமுள்ள ரேஷன்கடைகள் வழக்கம்போல் இயங்கின.

    இதையொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். #tamilnews
    நாமக்கல் மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் 16-ந் தேதி நடக்கிறது. இதில் தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர், கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு திருச்செங்கோட்டில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், அவைத்தலைவர் நடன சபாபதி தலைமையில் நடைபெறுகிறது.

    இதில் தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×