என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • கள்ளக்குறிச்சி தொகுதியில் குமரகுரு போட்டி.
    • ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரேம்குமார் போட்டி.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., அகில இந்திய பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகள் தவிர மீதமுள்ள 32 பாராளுமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

    நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று அ.தி.மு.க. வேட்பாளர்களின் 2-வது பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    ஸ்ரீபெரும்புதூர்- பிரேம்குமார்

    தருமபுரி - அசோகன்

    கள்ளக்குறிச்சி-குமரகுரு

    வேலூர் - பசுபதி

    திருவண்ணாமலை - கலியபெருமாள்

    கோவை- ராமச்சந்திரன்

    திருச்சி- கருப்பையா

    பெரம்பலூர்- சந்திரமோகன்

    பொள்ளாச்சி- கார்த்திகேயன்

    திருப்பூர் - அருணாசலம்

    நீலகிரி (தனி) - லோகேஷ்

    மயிலாடுதுறை - பாபு

    திருநெல்வேலி- சிம்லா முத்துசோழன்

    சிவகங்கை -சேவியர் தாஸ்

    தூத்துக்குடி- சிவசாமி வேலுமணி

    கன்னியாகுமரி- பசிலியா நசரேத்

    புதுச்சேரி- தமிழ்வேந்தன்

    விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தல் - ராணி

    • தூத்துக்குடிக்கு பல புதிய முதலீடுகள் கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் முனைப்போடு இருக்கிறார்
    • நீட் தேர்வை ரத்து செய்ய ஆட்சி மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

    பின்னர் விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    இந்த பகுதி தண்ணீருக்கு பிரச்சனையான பகுதி. 361 கிராமங்களை உள்ளடக்கிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு முடிவடைய கூடிய நிலையில் உள்ளது.

    தூத்துக்குடியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட வின் பாஸ்ட் (கார் கம்பெனி) நிறுவனத்தில் தூத்துக்குடியில் இருக்கக்கூடிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு பயிற்சி கொடுத்து இங்கு இருக்க கூடியவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று முதலமைச்சர் உறுதி கொடுத்துள்ளனர்.

    இன்னும் தூத்துக்குடிக்கு பல புதிய முதலீடுகள் கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் முனைப்போடு இருக்கிறார். இதன் மூலம் தூத்துக்குடி புகழ் பெற்ற நகரமாக மிளிரும்.

    நீட் தேர்வை ரத்து செய்ய ஆட்சி மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இன்றும் நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றத்தில் வழக்காடி வருகிறது.

    ஒன்றியத்தில் மாற்றம் உருவாகும்போது தமிழகத்தில் இருந்து நீட் விலக்கப்படும். எங்களை யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். ஆனால் 10 ஆண்டுகள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்து எதையுமே செய்யாத எடப்பாடி பழனிசாமி இந்த கேள்வியை கேட்பது வருத்தமாக உள்ளது.

    மக்களுக்கு எதிராக பா.ஜ.க. கொண்டு வந்த அத்தனை மசோதாக்களையும் ஏற்றுக்கொண்டு அது வெற்றி பெறுவதற்காக வாக்களித்த இயக்கம் தான் அ.தி.மு.க.. அப்போது முதலமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
    • தஞ்சை, நாகை தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) பிரசாரம் செய்கிறார்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன.

    இந்த தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும், பா.ஜ.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் இன்னொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.

    கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை அடைந்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களது கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் சுமுகமாக தொகுதி பங்கீடு செய்து முடித்து விட்டார். அதன் பின்னர் நேற்று தி.மு.க. சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

    இதை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் தொடங்குகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதல் பிரசார பொதுகூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு, திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இதற்காக அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

    முன்னதாக சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் நாளை மாலை 4.45 மணிக்கு திருச்சிக்கு வருகிறார். அவருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    பின்பு அவர் காரில் சிறுகனூருக்கு செல்கிறார். பிரசார பொதுக்கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் அவர் கார் மூலமாக தஞ்சாவூருக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் தஞ்சை, நாகை தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ச்சியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல், கரூர்,வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, மதுரை, சிவகங்கை,தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருவள்ளூர், வடசென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 25, 26, 27,29, 30,31,ஏப்ரல் 2, 3, 5, 7,6,9, 10, 12, 13 ,15 ,16 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.

    இறுதியாக அடுத்த மாதம் 17-ந்தேதி தென்சென்னையில் மத்திய சென்னை வேட்பாளரை ஆதரித்து இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மொத்தம் 20 நாட்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க-வை இந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்.
    • 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரசாரத்தை மேற்கொள்ளும்.

    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தலைவர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பா.ஜ.க. எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த பாராளுமன்றத் தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும்.

    மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க 'இந்தியா கூட்டணியை 2024 பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் தி.மு.கவை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது.

    இனி மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்திய பெருமுதலாளிகளின் கையில் கார்ப்ரேட்டின் கொள்ளைக் கூடாரமாகிவிடும். கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றிட, தமிழ்நாட்டில் அடிமை துரோகக் கட்சியான அ.தி.மு.க-வை இந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்.

    தி.மு.க.விற்கு பல்வேறு தோழமைக் கட்சிகள் தமது ஆதரவை தெரிவிக்கும் அதே வேளையில் பலம் வாய்ந்த இக்கூட்டணியை 40 இடங்களிலும் வெற்றிப்பெற செய்ய திமு.க.விற்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

    மக்கள் விரோத சனாதன சக்திகளை விரட்ட, அடிமை துரோக அ.தி.மு.க.வை வீழ்த்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரசாரத்தை மேற்கொள்ளும்.

    இவ்வாறு கருணாஸ் தெரிவித்துள்ளார்.

    • மத்தியில் பா.ஜனதா ஆட்சி, மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தால் பாலாரும், தேனாறும் ஓடும் என்று வாக்குறுதி கொடுத்தார்.
    • கருத்து வேறுபாடுகளை களைந்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக புதுச்சேரி தி.மு.க. நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா ஆட்சியில் புதுச்சேரி மாநில மக்கள் அவதிபடுகின்றனர். சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கஞ்சா பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். நிலம், வீடு அபகரிப்பு நடக்கிறது.

    பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது இரட்டை எஞ்சின் ஆட்சி இருக்க வேண்டும்.

    மத்தியில் பா.ஜனதா ஆட்சி, மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தால் பாலாரும், தேனாறும் ஓடும் என்று வாக்குறுதி கொடுத்தார்.

    ஆனால் அவரால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை. அவர்களின் தேர்தல் அறிக்கையை எடுத்து பார்த்தால், 5 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை.

    புதுச்சேரி மாநிலத்தில் ரெஸ்டோ பார்களை திறந்து மதுகுடிக்கும் மாநிலமாக மாற்றிவிட்டனர். கஞ்சா மாநிலமாக ஆக்கி விட்டனர். இவர்கள் ஆட்சியில் நீடித்தால் புதுச்சேரியின் வளர்ச்சி மட்டுமின்றி, இளைஞர் சமுதாயம் வீணாகிவிடும். அதற்கு முன்னோட்டமாக இந்த மக்களவை தேர்தல் இருக்கிறது.

    இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இருந்து வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். நாம் தொகுதிகளில் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.

    கருத்து வேறுபாடுகளை களைந்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். வேட்பாளரை கண்டுபிடிக்க முடியாமல் 4 மாதங்களாக தடுமாறிக் கொண்டிருக்கின்ற என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திருச்சி தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.
    • துரை வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து கவிதையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க.வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், துரை வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து கவிதையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நாடாளுமன்றத் தேர்தலுக்கு

    வாழ்த்துப்பெற வந்தார்

    திருச்சி வேட்பாளர்

    தம்பி துரை வையாபுரி

    தீயின் பொறி

    திராவிட நெறி

    தேர்தலே வெறி

    திருச்சியே குறி

    நிறைவெற்றி காண்பார்

    துரை வையாபுரி

    இவ்வாறு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    • பிரதமரின் உத்தரவாதத்தை விட உபத்திரவாதம் தான் அதிகமாக உள்ளது.
    • பா.ம.க. கூட்டணி குறித்து மாறி மாறி பேசி தற்போது பா.ஜ.க.வில் இணைந்து உள்ளனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை. தற்போது தேர்தலில் மோடி உத்தரவாதம் என்று பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமரின் உத்தரவாதத்தை விட உபத்திரவாதம் தான் அதிகமாக உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மொத்தம் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போதும் இந்த கூட்டணி வெற்றி பெறும். 10 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணி செயலாற்றி வருகிறது. தொகுதி பங்கீட்டில் எங்களுக்குள் எந்த வித முரண்பாடும் இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில் உருவாகியிருக்கிற கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும். பா.ம.க. கூட்டணி குறித்து மாறி மாறி பேசி தற்போது பா.ஜ.க.வில் இணைந்து உள்ளனர். இந்த கூட்டணியை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்.

    கடந்த காலங்களில் மக்களுக்கு எதிரான சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியபோது அதனை ஆதரித்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரையும் மக்கள் நிராகரிப்பார்கள்.

    பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசியதற்கு பா.ஜ.க. மத்திய இணை அமைச்சர் ஷோபாவுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செலவின பார்வையாளராக மதுகர் குமார், தொடர்பு அலுவலராக காசி விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இலவச தொலை பேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வடசென்னை சட்டமன்ற தொகுதிகளான திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், ராயபுரத்திற்கு செலவின பார்வையாளராக அபிஜித் அதிகாரி, தொடர்பு அலுவலராக சண்முகம், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிக்கு செலவின பார்வையாளராக ஹரஹானந்த், தொடர்பு அலுவலராக முத்துகுமாரசாமி நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    மத்திய சென்னையின் வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர் ஆகிய சட்ட மன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக சுபோத் சிங், தொடர்பு அலுவலராக இளங்கோ மற்றும் துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக மதுகர் குமார், தொடர்பு அலுவலராக காசி விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தென்சென்னையின் விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக முகேஷ் குமாரி, தொடர்பு அலுவலராக ஹரிநாத் மற்றும் சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக மானசி திரிவேதி, தொடர்பு அலு வலராக மோகன வடிவேல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 3 பாராளுமன்ற தொகுதிகளில் நேற்று முதல் தேர்தல் பணிகளை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்கள் இருக்கும் பட்சத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இலவச தொலை பேசி எண்கள் 1950, 1800 425 7012 மற்றும் 044-2533 3001, 2533 3003, 2533 3004, 2533 3005 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தேர்தலையொட்டி காவல்துறை தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.
    • பிரதமர் ரோடு ஷோ சென்ற பகுதியில்தான் சம்பந்தப்பட்ட பள்ளி உள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு சத்யபிரதா சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழகம் முழுவதும் 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிடுபவர்களிடம் இருந்து வேட்புமனுக்களை பெறும் நடவடிக்கை 20-ந்தேதி (நேற்று) தொடங்கியது. தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

    தேர்தல் தொடர்பான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை கேட்பதற்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் கூட்டத்தை கூட்டும்படி தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. இந்த தகவல் அந்தந்த கட்சிகளின் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேட்புமனு தாக்கல் செய்யும் காலகட்டம் என்பதால் இந்த வார இறுதி நாளில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தும்படி கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும். தேர்தலையொட்டி காவல்துறை தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

    கோவையில் 18-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ரோடு ஷோ நிகழ்ச்சியில், சீருடையில் பள்ளி மாணவிகள் பங்கேற்றது தொடர்பான முதல்கட்ட விசாரணையில், பிரதமர் ரோடு ஷோ சென்ற பகுதியில்தான் சம்பந்தப்பட்ட பள்ளி உள்ளது என்றும் பிரதமர் வரும்போது குழந்தைகள் ஆர்வத்துடன் அவர்களாகவே பள்ளிக்கு வெளியே வந்து பிரதமரை பார்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை அறிக்கை கிடைத்ததும் அது தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 3 பேரை வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளோம்.
    • இந்தியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளோம். வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மாநில தேர்தல் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெள்ள பிரசாத் முன்னிலை வகித்தார்.

    பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு கூட்டத்தில், வேட்பாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் கலந்துரையாட உள்ளோம். இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் மத்திய தேர்தல் குழு தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு இன்று இரவுக்குள் பட்டியல் வெளியிடப்படும். ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 3 பேரை வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளோம்.

    இதேபோல, பிரதமர் மோடி கலந்துகொண்ட மாநாட்டில் ஓ. பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரனை மேடையில் வைத்துக்கொண்டு பா.ஜனதா தலைவர்கள் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று கூறுகிறார்கள். எனவே, திராவிட இயக்கத்தை ஒழிக்க நினைக்கும் பா.ஜனதாவுக்கு டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர் செல்வமும் உறுதுணையாக இருக்கிறார்களா? என்று அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

    இதேபோல, ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாசை மேடையில் வைத்துக்கொண்டு வாரிசு அரசியலை ஒழிப்போம் என்கிறார்கள். இதற்கு அவர்களும் பதில் சொல்ல வேண்டும்.

    ராகுல் காந்தியும், மல்லிகார்ஜூன கார்கேவும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்கள். கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும் கலந்துகொள்வார்கள். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வரவேற்கிறோம். 400 இடங்களில் வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு. இந்தியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளோம். வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார். ஒருவேளை தமிழகத்தில் போட்டியிட்டாலும் அவர் வெற்றி பெறுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்றத் தேர்தலுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
    • மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 17-ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார் என தி.மு.க. தெரிவித்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் விவரத்தை திமுக வெளியிட்டுள்ளது. மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 17-ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இந்நிலையில், தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பாராளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் விவரத்தை திமுக வெளியிட்டுள்ளது. மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 17-ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார்.

    அதன்படி, திருச்சி, பெரம்பலூரில் 22-ம் தேதியும், தஞ்சை, நாகையில் 23-ம் தேதியும், கன்னியாகுமரி, திருநெல்வேலியில் 25ம் தேதியும், தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் 26-ம் தேதியும், தென்காசி, விருதுநகரில் 27-ம் தேதியும் பிரசாரம் செய்கிறார்.

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் 29-ம் தேதியும், சேலம், கள்ளக்குறிச்சியில் 30-ம் தேதியும், ஈரோடு, நாமக்கல் 31-ம் தேதியும், வேலூர், அரக்கோணம் 2ம் தேதியும், ஆரணி, திருவண்ணாமலை 3ம் தேதியும், கடலூர், விழுப்புரம் 5-ம் தேதியும், சிதம்பரம், மயிலாடுதுறை 6-ம் தேதியும், புதுச்சேரி 7-ம் தேதியும், மதுரை, சிவகங்கை 9-ம் தேதியும், தேனி, திண்டுக்கல் 10-ம் தேதியும் பிரசாரம் செய்கிறார்.

    திருப்பூர், நீலகிரி 12-ம் தேதியும், கோவை, பொள்ளாச்சி 13-ம் தேதியும், திருவள்ளூர், வடசென்னை 15-ம் தேதியும், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூதுர் 16-ம் தேதியும், தென் சென்னை, மத்திய சென்னை 17-ம் தேதியும் பிரசாரம் மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேர்தலில் போட்டியிட சீட் வழங்காததால் அசாம் எம்.பி. அப்துல் காலிக் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தார்.
    • அப்துல் காலிக் இதுவரை இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்.

    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 14 எம்.பி. தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்.பி.க்கள் இருந்தனர். அதில் 2 பேருக்கு வரும் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.

    பார்பேட்டா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான அப்துல் காலிக்குக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்கு பதிலாக தீப் பயான் என்பவரை அக்கட்சி வேட்பாளராக களமிறக்கியது.

    அப்துல் காலிக் இதுவரை இரண்டு முறைஎம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்து வந்த அப்துல் காலிக், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் அனுப்பி வைத்தார்.

    இந்நிலையில், அசாம் எம்.பி.யான அப்துல் காலிக், காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தனது ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த அப்துல் காலிக், காங்கிரசை வலுப்படுத்துவது காலத்தின் தேவை. எனவே எனது ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன். ராகுல் காந்தி மற்றும் உங்களின் திறமையான தலைமையின் கீழ் பணியாற்ற விரும்புகிறேன் என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ×