என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.
    • சங்கரபாண்டியன் என்பவர் கையில் தூக்கு கயிறுடன் விழிப்புணர்வு பதாகையை ஏந்தி மனுத்தாக்கல் செய்ய வந்தார்.

    மதுரை:

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. அப்போது மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் என்பவர் கையில் தூக்கு கயிறுடன் விழிப்புணர்வு பதாகையை ஏந்தி மனுத்தாக்கல் செய்ய வந்தார். இதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    இதுகுறித்து சங்கரபாண்டியன் கூறுகையில், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்களின் பணத்தை பெற்றுக்கொண்டு ஊழல்வாதிகளுக்கு வாக்களித்தால் அது தற்கொலை செய்வதற்கு சமம் என்கின்ற வகையிலும், வாக்குக்காக பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தூக்கு கயிறுடன் போலியான ரூபாய் நோட்டுகளை இணைத்து மனுதாக்கல் செய்ய வந்ததாக தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது
    • எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டு இருந்தார். மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

    இதனிடையே, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

    அதன்படி, திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

    இதற்கு முன்னதாக, பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனுத் தாக்கல் செய்தார். விருப்ப மனுவை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் விஜய பிரபாகரன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எண்ணிக்கை முக்கியமல்ல, கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம் என்றார்.
    • பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 24-ந்தேதி முதல் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்ய உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தரப்பில் 3-ல் இருந்து 4 தொகுதிகள் கேட்ட நிலையில் இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என பாஜக தெரிவித்ததால் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என தகவல் வெளியானது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.


    தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன் கூறியதாவது:-

    * நாங்கள் கேட்ட 2 தொகுதிகளை பா.ஜ.க. வழங்கியுள்ளது.

    * எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை பாஜக தலைமை அறிவிக்கும்.

    * எண்ணிக்கை முக்கியமல்ல, கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம் என்றார்.

    இதனிடையே, 2 தொகுதிகளில் ஒன்றில் போட்டியா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நான் தேனியில் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என சூசகமாக பதில் அளித்தார்.

    முன்னதாக, பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 24-ந்தேதி முதல் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்ய உள்ளார். வருகிற 24-ந்தேதி அன்று தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

    • மனுவை பரிசீலித்து, பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும்.
    • வழக்கை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது.

    சென்னை:

    நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அகிம்சை சோசலிச கட்சி தலைவர் ரமேஷ் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பா.ஜ.க.வுக்கு தேசிய மலரான தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக்கோரி கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது மனுவை பரிசீலித்து, பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. வக்கீல்கள் வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த வழக்கில் எந்த தகுதியும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

    • வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டுப் பதிவு செய்ய 12டி படிவத்தில் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.
    • ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், வீட்டில் இருந்தபடியே ஓட்டளிக்கலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 12,760 மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட 30,822 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள், வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டுப் பதிவு செய்ய 12டி படிவத்தில் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.

    ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று, தபால் ஓட்டு பதிவு செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு படிவம் 12டி வழங்குகின்றனர்.

    இதுதொடர்பாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த வாக்காளருக்கு விருப்ப படிவம் வழங்குவது குறித்த கூட்டம், சப்- கலெக்டர் சவுமியா தலைமையில் நடைபெற்றது. இதில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்களுக்கு படிவம் 12டி வழங்கப்பட்டது.

    • தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் விவரங்களை, சம்பந்தப்பட்ட கட்சியினர் ஆன்லைனில் தான் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    • பிரசார வாகனத்தின் வண்ண புகைப்படம், பதிவுச்சான்றிதழ், வாகனக் காப்பீடு இவையெல்லாம் இருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தை தொடங்க உள்ளனர்.

    இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் விவரங்களை, சம்பந்தப்பட்ட கட்சியினர் ஆன்லைனில் தான் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறும்போது, தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கான வாகன அனுமதியை பல்வேறு கட்சிகளும் அணுகக்கூடும். இது ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பிரசார வாகனத்தின் வண்ண புகைப்படம், பதிவுச்சான்றிதழ், வாகனக் காப்பீடு மற்றும் வாகனத்தின் தற்காலிக புகை அளவு சான்றிதழ்கள் இவையெல்லாம் இருக்க வேண்டும். இவை இல்லாதபோது, அந்த வாகனங்கள் பிரசாரத்துக்கு அனுமதிக்கப்படாது.

    பொதுவாகவே அனைவரும் பதிவுசான்றிதழ் வைத்திருப்பார்கள். ஆனால் காப்பீடு, தற்காலிக புகை அளவு சான்றிதழ் உள்ளிட்டவை இருக்காது. ஆகவே அப்படிப்பட்ட வாகனங்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் அனுமதி கிடையாது. கடைசி நேரத்தில் பலரும் எங்கள் வாகனங்களுக்கு, பிரசாரத்தில் அனுமதி தரப்படவில்லை என்பதற்கான காரணங்களில் மேற்கண்ட ஏதேனும் ஒரு காரணம் இருக்கக்கூடும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மேல் மட்டத்தில் தலைவர்கள் தங்கள் உறவை புதுப்பித்து திருப்தி அடைந்தாலும் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியே நிலவுவது தெரியவந்துள்ளது.
    • பா.ம.க.வின் கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவுடன் பா.ம.க. தொடர்ந்து பேசி வந்தது. திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் நாட்டு நலன் மற்றும் கட்சி நலன் கருதி பா.ஜனதா கூட்டணியில் இணையும் முடிவை எடுத்திருப்பதாக பாம.க. அறிவித்தது.

    நேற்று சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரசார கூட்டத்திலும் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களை வரவேற்ற பிரதமர் மோடியும் பா.ம.க. இணைந்ததன் மூலம் தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணி வலுவான கூட்டணியாக மாறி இருப்பதாக குறிப்பிட்டார்.

    மேல் மட்டத்தில் தலைவர்கள் தங்கள் உறவை புதுப்பித்து திருப்தி அடைந்தாலும் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியே நிலவுவது தெரியவந்துள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் நீண்ட காலமாக பா.ம.க.வில் இருந்து வரும் தொண்டர்கள் சிலர் கூறும்போது, "டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணியும் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். ஆனால் அ.தி.மு.க.வுடன்தான் சென்றிருக்க வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைத்து இருந்தாலும் அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கலாம். பா.ஜனதாவுடன் கை கோர்த்ததால் கட்சிக்கு எந்த பலனும் இல்லை.

    இதற்கு முக்கிய காரணம் எங்கள் கிராமங்களில் பா.ஜனதாவுக்கு பூத் கமிட்டிகள் கூட இல்லை. அதே நேரம் அ.தி.மு.க.வுக்கு பூத் கமிட்டி இல்லாத கிராமங்களையே பார்க்க முடியாது. கூட்டணி அமைத்தாலும் வேலை செய்ய தொண்டர்கள் வேண்டுமல்லவா" என்றார்கள்.

    அரியலூரை சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, "கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தும் பா.ம.க. வலுவாக இருக்கும் ஜெயங்கொண்டம், விருத்தாசலம் தொகுதிகளில் தோற்றோம். அதற்கு காரணம் தி.மு.க.வின் வலிமையான அடித்தளம்தான். இந்த நிலையில் இப்போது பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது" என்றார்கள்.

    ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, "பா.ம.க.வின் கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

    ஆனால் பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் இடஒதுக்கீட்டை எதிர்த்தன. அப்படியிருக்கும் போது மக்கள் ஆதரவை எப்படி பெற முடியும்?

    பெயர் வெளியிட விரும்பாத பா.ம.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, "எங்கள் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகிறது. அதை காங்கிரஸ் ஒத்துக்கொண்டது. ஆனால் பா.ஜனதா மவுனம் காத்து வருகிறது. இப்படி பல பிரச்சனைகள் இருக்கும் போது தொண்டர்கள் எப்படி திருப்தியாக வேலை செய்வார்கள்?" என்றனர்.

    மேலும் சில முக்கிய விஷயங்களை அவர்கள் விவரித்தனர். "வட மாவட்டங்களில் பா.ஜனதாவில் பொறுப்பில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பா.ம.க.வில் இருந்து சென்றவர்கள்தான். இப்போது கூட்டணியை தலைமை அறிவித்து விட்டாலும் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்படுவது கேள்விக்குறியே" என்றனர்.

    • பாராளுமன்றம், சட்டமன்றம் என எந்த தேர்தல் வந்தாலும் முதல் ஆளாக இவர் வேட்பு மனுத்தாக்கல் செய்து விடுவார்.
    • ஜனநாயம் செத்து விட்டது என்பதை உணர்த்துவதற்காக சவப்பெட்டியுடன் வந்ததாக தெரிவித்தார்.

    கோவை:

    கோவையில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது. கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் நூர்முகமது. இவர் கோவையின் தேர்தல் மன்னனாக அறியப்படுகிறார். பாராளுமன்றம், சட்டமன்றம் என எந்த தேர்தல் வந்தாலும் முதல் ஆளாக இவர் வேட்பு மனுத்தாக்கல் செய்து விடுவார்.

    தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியதை அடுத்து இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    அப்போது அவர் சவப்பெட்டியுடன் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்தார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சவப்பெட்டியை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நூர்முகமது மனுத்தாக்கல் செய்தார். இவர் 42-வது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு தேர்தல்களிலும் இவர் போட்டியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, தற்போது 42-வது முறையாக, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளேன். ஜனநாயம் செத்து விட்டது என்பதை உணர்த்துவதற்காக சவப்பெட்டியுடன் வந்ததாக தெரிவித்தார். 

    • தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம். தமிழ்நாட்டோட நலன் முக்கியம்.
    • நாட்டோட எதிர்காலம் தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் களத்தில் தமிழகம் இன்று காலை முதல் பரபரப்பின் உச்சத்தில் உள்ளது. முதலில் 16 பேர் கொண்ட அ.தி.மு.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்பிறகு புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

    அடுத்ததாக, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. தேர்தல் அறிக்கை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

    இதனை அடுத்து, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. அப்போது பேசிய மு.க.ஸ்டாலின்,

    * ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு குறைந்தாலும் மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பு அமைச்சர் தான் பொறுப்பு.

    * எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

    * தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம். தமிழ்நாட்டோட நலன் முக்கியம்.

    * நாட்டோட எதிர்காலம் தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும்.

    * வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அரவணைத்து அழைத்து சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்.

    * தேர்தலுக்குப் பிறகு ஒன்றிய- நகரம்- பகுதி- பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தின் பட்டியலை எடுக்கப் போகிறேன் எனக் கூறினார்.

    • மத்திய மந்திரி ஷோபா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் வலியுறுத்தி இருந்தார்.
    • தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியது தொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுவை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள் என்று மத்திய மந்திரி ஷோபா பேசினார். பா.ஜனதா சார்பில் பெங்களூரில் நடந்த போராட்டத்தின் போது அவர் இந்த சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தார்.

    அவரது இந்த கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மத்திய மந்திரி ஷோபா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் சமூக வலைதள பதிவில் வலியுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் இன்று தி.மு.க. புகார் அளித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியது தொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளார்.

    • அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
    • குடியுரிமைத் திருத்தச் சட்டம்' (CAA-2019) ரத்து செய்யப்படும்.

    திமுக மக்களை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. இதில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் உள்ள மக்களின் பேராதரவுடன் மத்தியத்தில் 'இந்தியா' கூட்டணி அரசு நிறுவப்பட்டபின் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் என தலைப்பில் கீழ்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.

    1. இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கிகளில் பெற்றிருக்கும் கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்படும்.

    3. அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.

    4. மாநில முதலமைச்சர்களை கொண்ட மாநில வளர்ச்சிக்குழு அமைக்கப்படும்.

    5. பா.ஜ.க அரசால்கலைக்கப்பட்ட மத்திய திட்டக்குழு மீண்டும் அமைக்கப்பட்டு நாடு முழுமையிலும், மாநில அரசுகளின் கோரிக்கையின் அடிப்படையில் திட்டங்கள் வகுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போதுள்ள நிதி ஆயோக் கலைக்கப்படும்.

    6. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

    7. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

    8. தொழில் மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகள் கான்கிரீட் சாலைகளாக விரிவுபடுத்தப்பட்டு, போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்.

    9. பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் நியமனத்தை, இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கமே மேற்கொள்ளும்வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.

    10. குடியுரிமைத் திருத்தச் சட்டம்' (CAA-2019) ரத்து செய்யப்படும்.

    11. கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு ஜி.பி. அளவில் கட்டணமற்ற 'இலவச சிம் கார்டு' வழங்கப்படும்.

    12. மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்.

    13. வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.

    14. மத்திய திட்டக் குழுவைப்போல, மத்திய நிதிக் குழுவும் நிரந்தர குழுவாக அமைக்கப்படும்.

    15. வசூலிக்கப்படும் கூடுதல் வரி செலவிடப்படும் முறை வெளிப்படைத் தன்மையுடன் இருப்பது உறுதி செய்யப்படும்.

    16. கண்காணிப்பு அமைப்புகளின் நியமனங்கள் ஒரு நியமனக் குழுவால் நியமிக்கப்படுவர். இக்குழுவில் 50 சதவிகித உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.

    17. அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மத்திய அரசால் நிறுவப்பட்டு, தரமான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும்.

    18. அந்நிய ஆக்கிரமிப்புத் தாவரங்களைக் களையெடுக்க நிதியுதவி செய்ய மத்திய அளவில் நிதியம் ஒன்று உருவாக்கப்படும்.

    20. இந்தியாவில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும்.

    21. இந்தியாவில் உள்ள முக்கிய புனிதத் தலங்களுக்குப் பயணிகள் வர வசதியாக அந்தந்த ஊர்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    22. இந்தியாவில் ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell) மொழி ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும்.

    23. மேல் வரியை (CESS) மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப் பரிந்துரைக்கப்படும். மாநில அரசிடமிருந்து பெறப்படும் நிதியில் 42% முதல் 50% வரிப் பங்கீடு மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்க நிதிக் குழுமம் மூலம் பரிந்துரைக்கப்படும்.

    24. பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் இணைய 2 ஆண்டுகள் காத்திருப்புக் காலமாக அறிவித்து புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.

    25. இந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்கள் குடியுரிமை பெற வழிவகுக்கப்படும்.

    26. கச்சத்தீவு மீட்பு: கச்சத்தீவில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில், குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைந்திருப்பதால், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் மீனவர்களின் நலன் காக்கப்படவும், கச்சத்தீவை மீட்க வழிவகை செய்யப்படும்.

    27. இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும். அந்த மாநில சட்டமன்றத்திற்கு உடனடியாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படும். மேலும், காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

    28. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இந்திய அரசின் திட்டம் கைவிடப்படும். மேலும், மக்களவை தொகுதி உறுப்பினர் எண்ணிக்கையில் தற்போதைய நடைமுறையே (1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு) பின்தொடர ஆவன செய்யப்படும்.

    29. இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரையில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற தன்மை நிலைநாட்டப்பட பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாமல் கடுமையாகத் தடுக்கப்படும்.

    30. யுபிஎஸ்சி தேர்வு கமிட்டியில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் குழு அமைக்கப்படும்.

    31. இந்தியாவில் எமர்ஜென்ஸி காலகட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரம் மாநில பட்டியலில் இருந்து, பொதுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப்பட்டன. அவை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்படும்.

    32 கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களும் இந்தியா கூட்டணி அரசு பொறுப்பேற்ற உடன் மறுபரிசீலனை செய்யப்படும்.

    33. மாநிலக் கல்வி நிறுவனங்களின் மீது திணிக்கப்படும் மத்திய அரசின் அனைத்துப் பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படும்.

    34. புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 முற்றிலும் அகற்றப்படும்.

    35. நிதிக்குழுவின் அமைப்பு, ஆய்வு விதிகள் ஆகியன மாநிலங்களுக்கான மன்றத்தில் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.

    36. FRBM Act - நிதியியல் பொறுப்பு -வரவு செலவு மேலாண்மை சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய நிபந்தனைகளை நிராகரிக்க வழிவகை செய்யப்படும்.

    37. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் 33% மகளிர் இட ஒதுக்கீடு உடனடியாகச் செயல்படுத்தப்படும்.

    38. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சமூக நீதி அடிப்படையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்படும்.

    39. வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள்/இளைஞர்களுக்குத் தேவையான திறன் மேம்பாடு, மொழி அறிவு, உள்ளூர்ப் பிரச்சனைகளைச் சமாளிக்கும் வழிகாட்டல் ஆகியவற்றை மத்திய அரசே அளிக்கும். நாடு திரும்பும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்குத் தேவையான கடனுதவிகள் அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

    40. MSME-க்கான வருமான வரிச் சட்டம் 43(h) பிரிவு நீக்கப்படும்.

    41. மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு நிதி இரட்டிப்பாக்கப்படும்.

    42. பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அரசாங்கம் பங்குகளை விலக்கிக் கொள்வது முற்றிலுமாக நிறுத்தப்படும்.

    43. மாணவ- மாணவிகள் நலன் கருதி இந்தியா முழுவதும் நான் முதல்வன்- புதுமைப் பெண் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

    44. தேசிய அளவில் ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்டம் கொண்டுவரப்படும்.

    45. அதிக மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு திட்டம் உருவாக்கப்படும்.

    46. தமிழ்நாட்டில் மத்தியப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.

    47. பெட்ரோல் ரூபாய் 75 க்கும் - டீசல் ரூபாய் 65 க்கும்- கேஸ் ரூபாய் 500 க்கும் வழங்கப்படும்.

    • வருகிற 22-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
    • 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண்கள் இடம்பெறவில்லை.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டு இருந்தார். மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்து ஆனது.

    இதனிடையே விருதுநகர், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, மத்திய சென்னை ஆகிய 5 தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்து ஆகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகிறது. வருகிற 22-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. அன்றே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக வெளியிடப்பட்ட 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண்கள் இடம்பெறவில்லை. அதனால் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×