search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் பா.ம.க. தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் அதிருப்தி?
    X

    பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் பா.ம.க. தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் அதிருப்தி?

    • மேல் மட்டத்தில் தலைவர்கள் தங்கள் உறவை புதுப்பித்து திருப்தி அடைந்தாலும் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியே நிலவுவது தெரியவந்துள்ளது.
    • பா.ம.க.வின் கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவுடன் பா.ம.க. தொடர்ந்து பேசி வந்தது. திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் நாட்டு நலன் மற்றும் கட்சி நலன் கருதி பா.ஜனதா கூட்டணியில் இணையும் முடிவை எடுத்திருப்பதாக பாம.க. அறிவித்தது.

    நேற்று சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரசார கூட்டத்திலும் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களை வரவேற்ற பிரதமர் மோடியும் பா.ம.க. இணைந்ததன் மூலம் தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணி வலுவான கூட்டணியாக மாறி இருப்பதாக குறிப்பிட்டார்.

    மேல் மட்டத்தில் தலைவர்கள் தங்கள் உறவை புதுப்பித்து திருப்தி அடைந்தாலும் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியே நிலவுவது தெரியவந்துள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் நீண்ட காலமாக பா.ம.க.வில் இருந்து வரும் தொண்டர்கள் சிலர் கூறும்போது, "டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணியும் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். ஆனால் அ.தி.மு.க.வுடன்தான் சென்றிருக்க வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைத்து இருந்தாலும் அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கலாம். பா.ஜனதாவுடன் கை கோர்த்ததால் கட்சிக்கு எந்த பலனும் இல்லை.

    இதற்கு முக்கிய காரணம் எங்கள் கிராமங்களில் பா.ஜனதாவுக்கு பூத் கமிட்டிகள் கூட இல்லை. அதே நேரம் அ.தி.மு.க.வுக்கு பூத் கமிட்டி இல்லாத கிராமங்களையே பார்க்க முடியாது. கூட்டணி அமைத்தாலும் வேலை செய்ய தொண்டர்கள் வேண்டுமல்லவா" என்றார்கள்.

    அரியலூரை சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, "கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தும் பா.ம.க. வலுவாக இருக்கும் ஜெயங்கொண்டம், விருத்தாசலம் தொகுதிகளில் தோற்றோம். அதற்கு காரணம் தி.மு.க.வின் வலிமையான அடித்தளம்தான். இந்த நிலையில் இப்போது பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது" என்றார்கள்.

    ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, "பா.ம.க.வின் கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

    ஆனால் பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் இடஒதுக்கீட்டை எதிர்த்தன. அப்படியிருக்கும் போது மக்கள் ஆதரவை எப்படி பெற முடியும்?

    பெயர் வெளியிட விரும்பாத பா.ம.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, "எங்கள் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகிறது. அதை காங்கிரஸ் ஒத்துக்கொண்டது. ஆனால் பா.ஜனதா மவுனம் காத்து வருகிறது. இப்படி பல பிரச்சனைகள் இருக்கும் போது தொண்டர்கள் எப்படி திருப்தியாக வேலை செய்வார்கள்?" என்றனர்.

    மேலும் சில முக்கிய விஷயங்களை அவர்கள் விவரித்தனர். "வட மாவட்டங்களில் பா.ஜனதாவில் பொறுப்பில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பா.ம.க.வில் இருந்து சென்றவர்கள்தான். இப்போது கூட்டணியை தலைமை அறிவித்து விட்டாலும் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்படுவது கேள்விக்குறியே" என்றனர்.

    Next Story
    ×