என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாக கொண்ட சிம்லா முத்துசோழன் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.
    • வக்கீலான சிம்லா முத்துசோழன், தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் ஆவார்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. முதல் கட்ட வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

    இதில் 16 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் எஞ்சிய 16 தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. போட்டியிடும் 32 தொகுதிகளில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் என்ற பெயரை சிம்லா முத்துசோழன் பெற்றுள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். வக்கீலான சிம்லா முத்துசோழன், தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் ஆவார். சற்குண பாண்டியன் தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளராகவும், கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது அமைச்சராகவும் இருந்துள்ளார்.

    சிம்லா முத்துசோழன் 2016-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க.வில் இருந்து விலகிய அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த நிலையில் தற்போது அவருக்கு நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • சிறையில் பார்க்க வந்த மகனை பார்க்க விடாமல் காவலர்கள் தடுத்தார்கள்.
    • எனது மகனை நான் ஒரு வருடம் தொடாமல் பாசத்தை கட்டுப்படுத்தி தியாகம் செய்துள்ளேன்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பிரதமர் மோடி நாங்கள் தியாகம் செய்யவில்லை என கூறுகிறார். நாங்கள் தியாகத்திலேயே வளர்ந்தவர்கள். பலமுறை மிசாக்கு சிறை சென்றுள்ளோம். அப்படி சிறைக்கு சென்ற போது எனது மகன் எனது சட்டையை பிடித்து இழுத்து அழுது கொண்டிருந்தார். மேலும் சிறையில் பார்க்க வந்த மகனை பார்க்க விடாமல் காவலர்கள் தடுத்தார்கள்.

    மேலும் எனது மகனை நான் ஒரு வருடம் தொடாமல் பாசத்தை கட்டுப்படுத்தி தியாகம் செய்துள்ளேன். திமுக-வில் செல்வாக்குள்ள வேட்பாளர் நிற்பதால் அவரை ரெய்டு நடத்தி கைது செய்ய மேலிடம் சொன்னதாக எனக்கு தகவல் வந்துள்ளது. அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரு கட்சி தலைவர்களுடனும் பா.ஜனதா குழுவினர் பேசி வருகிறார்கள்.
    • நாளை வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.

    சென்னை:

    பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள த.மா.கா., பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை உடன்பாடாகிவிட்டது.

    இன்று கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு செய்து விட்டு பிற்பகல் 2 மணிக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை டெல்லி செல்வதாக இருந்தது.

    ஆனால் மயிலாடுதுறை தொகுதியை பா.ம.க.வும், த.மா.கா.வும் கேட்பதால் உடன்பாடு எட்டுவதில் தாமதமானது.

    இதுதொடர்பாக இரு கட்சி தலைவர்களுடனும் பா.ஜனதா குழுவினர் பேசி வருகிறார்கள். மாலை 4 மணிக்கு த.மா.கா. குழுவினர் கமலாலயம் செல்கிறார்கள். மாலைக்குள் அனைத்து கட்சிகளுடனும் பேச்சு வார்த்தையை முடித்துவிட்டு அண்ணாமலை வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி செல்கிறார். நாளை வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.

    • தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. பங்கேற்று தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை வழங்க உள்ளார்.
    • கூட்டத்தில் வேட்பாளர் அல்லது அவரது முகவர், மாவட்ட கழக செயலாளர்கள், வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை வழங்க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நாளை காலை 11 மணியளவில் (22-ந்தேதி) காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடத்தப்படுகிறது.

    இதில் தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. பங்கேற்று தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை வழங்க உள்ளார்.

    கூட்டத்தில் வேட்பாளர் அல்லது அவரது முகவர், மாவட்ட கழக செயலாளர்கள், வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    • விஜயகாந்த் இல்லாமல் தே.மு.தி.க. சந்திக்கும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது.
    • தே.மு.தி.க. விரும்பிய தொகுதிகளை அ.தி.மு.க. வழங்கியுள்ளது.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க. தலைமைக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும், பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணலும் நடந்து வருகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளும் இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு விஜயகாந்த் அறையில் சிறிது நேரம் கலந்தாலோசனை செய்தனர்.

    வருகிற 24-ந்தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. அந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சேர்ந்த அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறோம்.

    அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு எடப்பாடி பழனிசாமி என்னை நேரில் வந்து அழைத்துள்ளார். எனவே நானும், முக்கிய நிர்வாகிகளும் அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறோம்.

    40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அந்த பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்து அன்று முதல் பிரசாரத்தையும் தொடங்க இருக்கிறோம்.

    இந்த கூட்டணி ஒற்றுமையாக கூட்டணி தர்மத்துடன் செயலாற்றி 'நாளை நமதே, நாற்பதும் நமதே' என்று வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு நல்ல புரிதலோடு பயணிக்க இருக்கிறோம்.

    இங்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய 3 தெய்வங்களின் ஆசீர்வாதத்தோடு இந்த கூட்டணி, 2011-ல் அமைந்த வெற்றிக் கூட்டணி போல சரித்திரம் படைக்கும்.

    தே.மு.தி.க.வுக்கு மேல் சபை உறுப்பினர் சீட் உறுதியாகிவிட்டது. வெற்றிலை பாக்கை மாற்றி உறுதி செய்துவிட்டோம். ஆனால் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    மேல்சபை எம்.பி. தேர்தலில் யார் போட்டியிடுவார் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
    • தனபால் தற்போது அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    கோவை:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே இவர் 2 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார். கடந்த பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணியை தொடங்கி களப்பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் ஆவார். இவர் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

    இவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., தமிழ்ச்செல்வன் என்ற பெயரை வைத்துள்ளார்.

    இவரது திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்துள்ளார்.

    தனபால் தற்போது அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்த சட்டமன்ற தொகுதி நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தான் வருகிறது. இதனால் தங்களுக்கு சாதமாக இருக்கும் என கருதி லோகேஷ் தமிழ்ச்செல்வன் களமிறக்கப்பட்டுள்ளார்.

    தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவுக்கு, லோகேஷ் தமிழ்ச்செல்வன் கடும் நெருக்கடி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் பாரதிய ஜனதாவும் களமிற ங்குவது உறுதியாகி உள்ளது. இதனால் நீலகிரி தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும்.

    • பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் வேட்பாளர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பணியை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.
    • பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையின் பிரசாரம் தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு அணியாகவும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும், பா.ஜ.க. தலைமையில் ஒரு அணியும் களத்தில் உள்ளன.

    இந்த 3 அணிகளுக்கு இடையே சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இப்படி தமிழக தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி நிலவும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 28 நாட்களே உள்ளன.

    நேற்று வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில் வேட்பாளர்கள் மனு தாக்கல், பிரசாரம் என தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்ற தொடங்கி இருக்கிறார்கள். தேர்தல் காலம் என்பதால் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கட்சியின் தலைமை அலுவலகங்களில் திரண்டு தேர்தல் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதனால் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் திருவிழா கோலம் போல தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு காணப்படுகிறார்கள்.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் வேட்பாளர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பணியை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி தூத்துக்குடியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அடுத்த மாதம் 17-ந் தேதி வரை அவரது சுற்றுப்பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 24-ந் தேதி திருச்சியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். முதல் கட்ட பிரசாரத்தை வருகிற 31-ந் தேதி வரையில் அவர் மேற்கொள்கிறார். முதல் கட்ட பிரசாரம் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமியின் 2-வது கட்ட சுற்றுப்பயணமும் தயாராகி வருகிறது.

    இதே போன்று மற்ற கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் சென்னையில் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஏற்றி வருகிற 23-ந் தேதி தேர்தல் பிரசாரத்தை பல்லாவரம் ரேடியல் சாலையில் தொடங்குகிறார்.

    இப்படி அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் தேர்தல் களத்தில் பரபரப்பாக இயங்க தொடங்கி இருக்கிறார்கள். அடுத்த வாரம் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பிறகு தற்போது இருப்பதைவிட தேர்தல் களம் மேலும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரத்தால் தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தல் களத்தில் நான்கு முனைகளில் இருந்தும் பிரசார குரல் ஒலிக்க உள்ளது.

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து தனது பிரசாரத்தின்போது வாக்கு சேகரிக்க உள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்து தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.

    பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையின் பிரசாரமும் தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுவரை தமிழகத்தை ஆண்ட 2 திராவிட கட்சிகளையும் விமர்சித்து அவரது பிரசாரம் இருக்கும். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் எப்போதும் போல மத்திய மாநில அரசுகளை விமர்சித்து தனது அனல் பறக்கும் பேச்சை கக்க உள்ளார்.

    இப்படி தமிழக தேர்தல் களம் விறுவிறுப்படைந்து இருப்பதால் அனைத்து கட்சியின் தொண்டர்களுமே சுறுசுறுப்போடு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு இருக்கிறார்கள்.

    • பாரதிய ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.
    • நட்சத்திர பேச்சாளர்கள் பிரசார பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி, வேட்பாளர் தேர்வு ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. பாரதிய ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில் பிரசார களத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் சார்பிலும் பங்கேற்க இருக்கும் பட்டியல் மற்றும் பிரசாரம் செய்யும் இடங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

    தி.மு.க. சார்பில் நடிகர்கள் வாகை சந்திரசேகர், பெஞ்சமின், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட் உள்பட பல நடிகர்கள் பிரசாரத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

    அ.தி.மு.க. சார்பில் சிங்கமுத்து, வையாபுரி, விந்தியா, நாஞ்சில் அன்பழகன், கவுதமி, காயத்ரி ரகுராம், அனுமோகன், பபிதா, ஜெயமணி ஆகியோர் பிராசரம் செய்ய தயாராக இருக்கின்றனர். நட்சத்திர பேச்சாளர்கள் பிரசார பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    பிரசாரம் பற்றி சிங்கமுத்துவிடம் கேட்டபோது, கட்சி சார்பில் பிரசாரம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அறிவிப்பு வெளியான பின்தான் யார்-யார் எங்கு பிரசாரம் செய்ய உள்ளார்கள் என்ற விபரம் தெரியவரும். தேர்தல் அறிக்கை மற்றும் பல்வேறு விசயங்கள் மற்றும் விமர்சனங்கள் தேர்தல் பிரசார களத்தில் பேச இருக்கிறோம்.

    கட்சியின் அறிவிப்பு வெளியிட்டவுடன் எங்களது பிரசார பணிகள் தொடங்கும் என கூறினார்.

    பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக நடிகைகள் குஷ்பு, நமீதா, ரஞ்சனா நாச்சியார் உள்பட பலர் பிரசாரம் செய்ய இருக்கின்றனர்.

    • திருச்சி சிறுகனூரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.
    • முதலமைச்சர் 23-ந்தேதி திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சென்னை செல்கிறார்.

    திருச்சி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை திருச்சி வருகிறார். திருச்சி சிறுகனூரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசுகிறார். பின்பு அவர் காரில் தஞ்சை வழியாக திருவாரூர் செல்கிறார்.

    பின்னர் 23-ந்தேதி அவர் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சென்னை செல்கிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அவர் பயணம் செய்யும் சாலைகளில் பாதுகாப்பு கருதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடை இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 23-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

    • தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளும் , எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.
    • பிரசார கூட்டத்தில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.

    திருச்சி:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதையடுத்து கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிந்து விட்டது.

    தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளும் , எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. மீதமுள்ள 33 தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக களம் காண உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி நேற்று அறிவித்தார். இன்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.

    இதற்கிடையே அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி கே.பழனிசாமி வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூறாவளி பிரசாரத்தை திருச்சியில் தொடங்க உள்ளார்.

    அன்று மாலை 4 மணிக்கு திருச்சி வண்ணாங்கோவில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இந்த பிரசார கூட்டத்தில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார். இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

    இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளை அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக 26-ந் தேதி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும், 27-ந் தேதி நாகர்கோவில், சங்கரன்கோவில் பகுதியிலும், 28-ந் தேதி சிவகாசி மற்றும் ராமநாதபுரம் பகுதியிலும்,

    29-ந் தேதி சென்னை மதுராந்தகம், பல்லாவரம் ஆகிய இடங்களிலும், 30-ந்தேதி புதுச்சேரி மற்றும் கடலூரிலும் 31-ந் தேதி மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

     பாராளுமன்ற தேர்தல் களத்தில் தி.மு.க.வை போல அ.தி.மு.க.வும் தனது முதல் தேர்தல் பிரசாரத்தினை திருச்சியில் தொடங்க உள்ளது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) சிறுகனூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ள நிலையில் வருகிற 24-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் செய்ய இருப்பதால் திருச்சி விழா கோலம் பூண்டுள்ளது.

    • அ.தி.மு.க. தாங்கள் போட்டியிடும் 33 தொகுதிகளில் தி.மு.க.வோடு நேரடியாக மோதும் 18 தொகுதிகள் தவிர, அதன் கூட்டணி கட்சிகளை எதிர்த்து 15 இடங்களில் போட்டியிடுகிறது.
    • திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், எஸ்.டி.பி.ஐ. கட்சியும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்தக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் மீதியுள்ள 19 தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் 7 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 33 தொகுதிகளில் அ.தி.மு.க. தங்கள் கட்சி வேட்பாளர்களை களம் இறக்குகிறது. தி.மு.க. 21 தொகுதிகளிலும், அ.தி.மு.க. 33 தொகுதிகளில் போட்டியிட்டாலும், இந்த 2 கட்சிகளும் 18 தொகுதிகளில் நேரடியாக மோதிக் கொள்கின்றன.

    நேரடி போட்டி நிலவும் தொகுதிகள் வருமாறு:-

    வடசென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி (தனி) கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி.

    தி.மு.க. போட்டியிடும் மற்ற 3 தொகுதிகளில் மத்திய சென்னை, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு எதிராகவும், தென்காசி (தனி) தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு எதிராகவும் களம் காண்கிறது.

    அதேபோல் அ.தி.மு.க. தாங்கள் போட்டியிடும் 33 தொகுதிகளில் தி.மு.க.வோடு நேரடியாக மோதும் 18 தொகுதிகள் தவிர, அதன் கூட்டணி கட்சிகளை எதிர்த்து 15 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய இடங்களிலும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக மதுரையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி), ஆகிய தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் களமிறங்குகிறார்கள். ம.தி.மு.க.வுக்கு எதிராக திருச்சியிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு எதிராக ராமநாதபுரத்திலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு எதிராக நாமக்கல் தொகுதியிலும் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

    சில தொகுதிகளில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே களத்தில் இல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள் மோதிக் கொள்கின்றன. குறிப்பாக திருவள்ளூர் (தனி), கடலூர், விருதுநகர் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், தே.மு.தி.க.வும் மோதிக் கொள்கின்றன. அதேபோல் திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், எஸ்.டி.பி.ஐ. கட்சியும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • விருதுநகர், கரூர் ஆகிய தொகுதிகளை கேட்டு பெரிய அளவில் யாரும் மோதவில்லை.
    • விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் எம்.பி., சிந்துஜா ஆகிய இருவரது பெயர்கள் மட்டுமே இடம் பெற்று உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    இந்த தொகுதிகளில் போட்டியிட மனு கொடுத்திருக்கும் தலைவர்கள் வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்று தவித்து கொண்டிருக்கிறார்கள்.

    தமிழக தேர்தல் குழுவினர் வாய்ப்பு கேட்டவர்கள் பட்டியலை தயாரித்து டெல்லிக்கு அனுப்பி இருக்கிறார்கள். நேற்று இரவு மேலிட குழுவினருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசித்து ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேர் கொண்ட பட்டியலை தயாரித்தனர்.

    இதில் விருதுநகர், கரூர் ஆகிய தொகுதிகளை கேட்டு பெரிய அளவில் யாரும் மோதவில்லை. இந்த தொகுதிகளில் ராகுலின் நேரடி பார்வையில் உள்ள வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதாகவும் அதனால்தான் மற்றவர்கள் மனு செய்யவே தயங்கியதாகவும் கூறப்படுகிறது.

    கரூர் தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலில் ஜோதிமணி எம்.பி. அவரது தீவிர எதிர்ப்பாளர் பேங்க் சுப்பிரமணி ஆகிய இருவரது பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

    அதே போல் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் எம்.பி., சிந்துஜா ஆகிய இருவரது பெயர்கள் மட்டுமே இடம் பெற்று உள்ளது.

    மற்ற தொகுதிகளில் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் பெயர் விவரங்கள் வருமாறு:-

    கன்னியாகுமரி: விஜய் வசந்த் எம்.பி., ராபர்ட் புரூஸ், பிரின்ஸ் எம்.எல்.ஏ.,

    திருநெல்வேலி: திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு,

    சிவகங்கை: கார்த்தி சிதம்பரம், எம்.பி., சுதர்சனன் நாச்சியப்பன், திருநாவுக்கரசர்

    கிருஷ்ணகிரி: டாக்டர் செல்லக்குமார் எம்.பி., தங்கபாலு, கோபிநாத்

    மயிலாடுதுறை: திருநாவுக்கரசர், பிரவீன் சக்ரவர்த்தி, டாக்டர் விஷ்ணு பிரசாத்

    கடலூர்: கே.எஸ்.அழகிரி, நாசே ராமச்சந்திரன், சி.டி.மெய்யப்பன், சுதா ராமகிருஷ்ணன்

    திருவள்ளூர்: பி.விசுவநாதன், சசிகாந்த் செந்தில், ரஞ்சன் குமார், லெனின் பிரசாத்.

    இந்த பட்டியலை மத்திய தேர்தல் கமிட்டியினர் இன்று பரிசீலித்து வேட்பாளர்களை முடிவு செய்கிறார்கள். இன்று இரவுக்குள் முதல் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×