என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருச்சியில் 24-ந்தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்: வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி
    X

    திருச்சியில் 24-ந்தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்: வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி

    • தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளும் , எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.
    • பிரசார கூட்டத்தில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.

    திருச்சி:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதையடுத்து கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிந்து விட்டது.

    தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளும் , எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. மீதமுள்ள 33 தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக களம் காண உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி நேற்று அறிவித்தார். இன்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.

    இதற்கிடையே அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி கே.பழனிசாமி வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூறாவளி பிரசாரத்தை திருச்சியில் தொடங்க உள்ளார்.

    அன்று மாலை 4 மணிக்கு திருச்சி வண்ணாங்கோவில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இந்த பிரசார கூட்டத்தில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார். இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

    இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளை அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக 26-ந் தேதி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும், 27-ந் தேதி நாகர்கோவில், சங்கரன்கோவில் பகுதியிலும், 28-ந் தேதி சிவகாசி மற்றும் ராமநாதபுரம் பகுதியிலும்,

    29-ந் தேதி சென்னை மதுராந்தகம், பல்லாவரம் ஆகிய இடங்களிலும், 30-ந்தேதி புதுச்சேரி மற்றும் கடலூரிலும் 31-ந் தேதி மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    பாராளுமன்ற தேர்தல் களத்தில் தி.மு.க.வை போல அ.தி.மு.க.வும் தனது முதல் தேர்தல் பிரசாரத்தினை திருச்சியில் தொடங்க உள்ளது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) சிறுகனூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ள நிலையில் வருகிற 24-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் செய்ய இருப்பதால் திருச்சி விழா கோலம் பூண்டுள்ளது.

    Next Story
    ×