என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • பாடல்கள் பாடியும் மாணவிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • புதிய வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை செய்ய வலியுறுத்தினர்.

    ஓமலூர்:

    சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவை அதிகரிக்க செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், விழிப்புணர்வையும் செய்து வருகின்றனர்.

    கிராமங்களில் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டும், நகரங்கள், கல்லூரிகளில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி, ஓமலூர் அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், பரத நாட்டியம், பாடல்கள், இசை கருவிகள் இசைத்தல், வீணை வாசித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அலுவலர் லட்சுமி, மாணவிகள் முன்னிலையில் வீணை வாசித்து 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மேலும், தேர்தல் அலுவலர் லட்சுமீ சுமார் ½ மணி நேரம் வீணை வாசித்து அசத்தினார். இவரை தொடர்ந்து சேலம் இசை பள்ளி மாணவிகள் வீணை வாசித்தும், பாடல்கள் பாடியும் மாணவிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புதிய வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை செய்ய வலியுறுத்தினர்.

    • காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய 3 பிரிவினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
    • பெண்களுக்கு மாதம் உதவி தொகை கொடுப்பது பற்றி அறிவிப்புகள் வர உள்ளன.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை இந்த தடவை மிகவும் வித்தியாசமான கோலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது. புதிய அம்சங்களுடன் தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவினர் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர். சமீபத்தில் அந்த அறிக்கை காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    வருகிற 6-ந்தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட காங்கிரஸ் மேலிட தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இதற்கான விழா நடக்கிறது. அதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் ஆகியோர் பங்கேற்று தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள்.

    தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக நேற்று காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய 3 பிரிவினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிமொழி அளிக்கப்பட உள்ளது.

    அதுபோல பெண்களுக்கு மாதம் உதவி தொகை கொடுப்பது பற்றி அறிவிப்புகள் வர உள்ளன. இதனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தொகுப்பூதிய பணியாளர்களும் கட்டாயம் பணிக்கு செல்ல வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
    • கட்டாயம் தேர்தல் பணிக்கு வர வேண்டும், இல்லா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    சேலம்:

    தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தேர்தல் பணியில் கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.

    இதற்கிடையே சேலம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்கு கடந்த டிசம்பர் மாதம் வருவதாக கூறிய அரசு ஊழியர்களில் தற்போது தேர்தல் பணிக்கு வராமல் 1781 பேர் மருத்துவ விடுப்பில் சென்று விட்டனர். இதையடுத்து தேர்தல் பணியை புறக்கணித்து மருத்துவ விடுப்பில் சென்ற கல்வித்துறை ஊழியர்கள் 946 பேர் உள்பட 1781 பேருக்கும் விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான விளக்கம் அளிக்காதோர் சஸ்பெண்டு செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

    இதே போல பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் 21 பேரும் கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் பணிக்கு வருவதாக கூறி விட்டு தற்போது அதில் 20 பேர் பணிக்கு வர மறுத்துள்ளனர். இதையடுத்து பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) விஸ்வநாத மூர்த்தி , உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், தொகுப்பூதிய பணியாளர்களும் கட்டாயம் பணிக்கு செல்ல வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    இது குறித்து கலெக்டர் பிருந்தா தேவி கூறுகையில், கட்டாய மருத்துவ விடுப்பு தேவைப்படுவோருக்கு மட்டும் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும், மற்ற படி யாருக்கும் விலக்கு கிடையாது. கட்டாயம் தேர்தல் பணிக்கு வர வேண்டும், இல்லா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • மேல்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • காரில் எதுவும் இல்லாததால் கார் பதிவு எண் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரங்களை பறக்கும் படையினர் சேகரித்தனர்.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது அவர் அடிக்கும் காமெடி கலாட்டாவிற்கும் பஞ்சமில்லை.

    மன்சூர் அலிகான் என்றாலே மக்கள் தானாக சிரிக்கும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் உள்ளன. நேற்று குடியாத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக மன்சூர் அலிகான் காரில் சென்றார்.

    மேல்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த மன்சூர் அலிகான் காரை வழிமடக்கி சோதனையிட்டனர்.

    காரில் எதுவும் இல்லாததால் கார் பதிவு எண் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரங்களை பறக்கும் படையினர் சேகரித்தனர். அப்போது நடிகர் மன்சூர் அலிகான் முகத்துக்கு போட்டுக் கொள்ளும் பவுடர் தான் இருக்கிறது.. பூசி கொள்கிறீர்களா... என அதிகாரிகளை பார்த்து கேட்டார்.

    அதனை கேட்டதும் சிரித்துக்கொண்டே அதிகாரிகள் அவரது காரை விடுவித்தனர்.

    • முதலமைச்சர் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    சேலம்:

    தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் முடிவடைந்து மனுக்கள் மீதான பரிசீலனையும் முடிவடைந்து விட்டது. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது. இதனால் தலைவர்கள் தொகுதியில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    இந்த நிலையில் தருமபுரி தி.மு.க. வேட்பாளர் மணி, கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து தருமபுரியில் இன்று மாலை நடைபெறும் பிரசாரக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுகிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் சேலம் காமலாபுரத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகிறார். பின்னர் தருமபுரி தடங்கம் பகுதிக்கு செல்லும் அவர் அங்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். தொடர்ந்து இரவில் சேலம் வரும் மு.க.ஸ்டாலின் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார்.

    நாளை (30-ந்தேதி) காலையில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து மாலை 6 மணியளவில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். அங்கு சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி ஆகியோர் செய்துள்ளனர்.

    சேலம் பிரசார பொதுக்கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் ஈரோட்டிற்கு புறப்பட்டு செல்கிறார். இதையொட்டி சேலம் விமான நிலையம், பெத்தநாயக்கன்பாளையத்தில் கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் சேலத்தில் அவர் தங்கும் மாமாங்கம் பகுதிகளிலும் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். முதலமைச்சர் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து 2-வது கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
    • 3-ந்தேதி மதுரை, திருச்சி தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    சென்னை:

    அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து 2-வது கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 1-ந்தேதி தூத்துக்குடி, நெல்லை தொகுதிகளிலும், 2-ந்தேதி தென்காசி, விருதுநகர் தொகுதிகளிலும், 3-ந்தேதி மதுரை, திருச்சி தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    4-ந்தேதி மயிலாடுதுறை, தஞ்சாவூர் தொகுதிகளிலும், 6-ந்தேதி கோயம்புத்தூர் தொகுதியிலும், 7-ந்தேதி வேலூர் தொகுதியிலும், 8-ந்தேதி திருச்சி தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது 2 கோடி அ.தி.மு.க. தொண்டர்கள் எடுத்த முடிவு.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமரை எதிர்ப்பது போல் வெளியில் வீர வசனம் பேசி வருகிறார்.

    மதுரை:

    மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி ஏற்பட்டதை அடுத்து நிர்வாகிகள் தொண்டர்கள் எழுச்சியோடு செயல்பட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

    தமிழகத்தில் ஒரே அலை தான் வீசுகிறது, அது அ.தி.மு.க. அலையாக வீசுகிறது. அ.தி.மு.க. இதுவரை என்னென்ன சாதனைகள் செய்துள்ளோம், இனி என்னென்ன சாதனைகள் செய்யப் போகிறோம் என மக்களிடம் கூறுவதால் மக்கள் அ.தி.மு.க. கூட்டணியை விரும்புகிறார்கள்.

    பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கள்ளக்கூட்டணி வைத்துள்ளது என முதலமைச்சர் விமர்சனம் செய்வதற்கு அவரே விளக்கம் அளிக்க வேண்டும். இப்படி எல்லாம் யாரும் விமர்சனம் செய்ததே இல்லை. ஒவ்வொரு தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படுகிறது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க. மீது அவதூறு பரப்பி வருகிறது.

    தோல்வி பயத்தின் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அ.தி.மு.க.வை பற்றி அவதூறாக பேசி வருகிறார்கள். பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தோம், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பு எதை பேசுவது? தி.மு.க. மாதிரி நாங்கள் அல்ல, அ.தி.மு.க. கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்போம். கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம். கூட்டணியில் இருக்கும்போது கட்சியினரை விமர்சனம் செய்யக்கூடாது. அப்படி விமர்சனம் செய்தால் உள்ளடி வேலை செய்வதாக அர்த்தம்.

    கூட்டணி கட்சிகளை விமர்சனம் செய்வது தி.மு.க.விற்கு கைவந்த கலை. கூட்டணி கட்சியினருக்கு அ.தி.மு.க. என்றுமே விசுவாசமாக இருக்கும். தமிழ் நாட்டு மக்களுக்கு பாதிப்பு வருகின்ற திட்டங்களை கடுமையாக எதிர்ப்போம். தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வி அடைவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். அ.தி.மு.க.விற்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மக்களிடம் அபரிமிதமான செல்வாக்கு உள்ளது. அதனால் 40 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம்.

    தேர்தலில் நிற்க பணம் இல்லை என நிர்மலா சீதாராமன் கூறி இருப்பது அவருடைய சொந்த பிரச்சனை. இதுகுறித்து அவர் தான் கருத்து கூற வேண்டும். ஜனநாயக நாட்டில் யாரும் பெரியவர்கள் இல்லை, அனைவரும் சமமாக உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து தேர்தலில் போட்டியிடக்கூடிய 5 ஓ.பன்னீர்செல்வமும் தேர்தலில் நிற்க தகுதியானவர்கள்.

    அ.தி.மு.க.வில் 2 கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது 2 கோடி அ.தி.மு.க. தொண்டர்கள் எடுத்த முடிவு. ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.விலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு அல்ல.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமரை எதிர்ப்பது போல் வெளியில் வீரவசனம் பேசி வருகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருப்புக்குடை பிடித்தால் பிரதமர் கோபித்துக் கொள்வார் என வெள்ளைக் குடை பிடிக்கிறார். தமிழ் நாட்டில் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அமைச்சர் உதயநிதி ஓடோடி சென்று பிரதமரை அழைத்து வருகிறார். பிரதமரிடத்தில் சரணாகதி அடைந்து விட்டு வெளியே பிரதமரை எதிர்ப்பது போல் இரட்டை விடும் போடுகிறார்கள். தேர்தலில் மிட்டா மிராசுகள் நின்ற காலம் போய் சாமானிய தொண்டனும் போட்டியிடலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 100 அரசுப் பள்ளிகளுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான கணினிகளைத் தமது சொந்த நிதியில் இருந்து வழங்கியுள்ளார்.
    • பாரிவேந்தரின் பிறந்தநாளின் போது, 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    மக்களவை தேர்தலுக்கான கட்சிகளின் களப் பணிகள் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ளது. முதற்கட்டமாக அதுவும் ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், போட்டியிடும் கட்சிகளும் அதன் கூட்டணிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு தொகுதியிலும் அதன் எம்.பிக்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று மக்களுக்கு கொண்டு சேர்க்கின்றனர்.

    அந்த வகையில், பெரம்பலூர் தொகுதி எம்பியும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனருமான பாரிவேந்தர் தனது தொகுதி மக்களுக்கு செய்துள்ள நற்பணிகளை பட்டியலிட்டு இருக்கின்றனர். அப்படி என்ன திட்டங்களை தொகுதி மக்களுக்காக செய்திருக்கிறார் என்று பார்ப்போம்.

    பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 100 அரசுப் பள்ளிகளுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான கணினிகளைத் தமது சொந்த நிதியில் இருந்து வழங்கியுள்ளார்.

    தமது ஏழ்மை நிலையால் உயர்கல்வி படிக்க வழியில்லாமல் சாலை ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டு வந்த, கடலூர் மாவட்டம்

    வேப்பூர் ஒன்றியம் வி.சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த, சத்யாதேவி என்ற மாணவிக்கு எஸ்.ஆர்.எம். கல்லூரியில் வேளாண் உயர்கல்வியும், தங்கும் விடுதி மற்றும் உணவு ஆகியவற்றை மூன்று ஆண்டுகளுக்கும் முழுவதும் இலவசமாக வழங்கியுள்ளார்.

    ஒவ்வொரு ஆண்டும் பாரிவேந்தரின் பிறந்தநாளின் போது, 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட மூன்று தொகுதிகளில் அலுவலகங்கள் திறந்துவைத்து பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு கண்டு வருகிறார்.

    முசிறிப் பகுதி விவசாய மக்களின் பல ஆண்டு கோரிக்கையான கொரம்பு அமைப்பதற்கு நேரில் ஆய்வு செய்து தீர்வு காண வழிவகை செய்துள்ளார்.

    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை வைத்ததின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க ரூ.1 கோடி நிதி எஸ்.ஆர்.எம். அறக்கட்டளை மூலம் தரப்பட்டது.

    இதன் மூலம் உடும்பியம், அன்னமங்கலம், திருவாலந்துறை, நூத்தப்பூர், பெரிய வடகரை, சாத்தனூர் உள்பட 10 கிராமங்கள் பயன்பெற்றன. 

    பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட மூன்று கிராமங்களுக்குச் சொந்த நிதியில் போர்வெல் அமைத்துக் கொடுத்தார். தொட்டியம் - நத்தம் கிராமத்தில் ரூ.3 லட்சத்தில் மயான சாலை அமைத்துள்ளார்.

    லால்குடி - திண்ணியத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தாருக்கு ரூ.1 லட்சம் உதவி பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 2020-ம் ஆண்டு ஏற்பட்ட

    கடும் வறட்சியால், குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க, தமது சொந்தச் செலவில் லாரிகள் மூலம் தேவைப்பட்ட கிராமங்களுக்குக் குடிநீர் வழங்கினார்.

    வெளிநாட்டில் தவித்தவர்களுக்கு தேடிச் சென்று உதவிய பாரிவேந்தர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மினி வேன் டயர் வெடித்ததால் கிணற்றுக்குள் விழுந்து, 8 பேர் பலியாகினர்.

    பலியானோர் குடும்பங்களுக்குத் தமது சொந்த நிதியில் தலா ரூ.1 லட்சம் வழங்கி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்விச் செலவையும் தாமே ஏற்றுக்கொண்டார்.

    வேலை வாய்ப்பிற்காக இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று, அங்கு எதிர்பாரா விதமாக மரணமடைந்த 6 நபர்களின் சடலங்களை, வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் மூலம் அவர்களின் உடல்களைக் குடும்பத்தாரிடம் சேர்க்க வழிவகை செய்தார்.

    கொரோனா காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாட்டங்களைச் சார்ந்த 11 பேர் அயல்நாட்டில் பணியிழந்து தாயகம் திரும்ப இயலாமல் தவித்த நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பத்திரமாகத் தாயகம் திரும்ப வழிவகை செய்யப்பட்டது.

    வெகுகாலமாகத் தொடர்கின்ற தமிழக மீனவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தினார்.

    பொருளாதாரப் பற்றாக்குறையால் சிகிச்சை பெற இயலாமல் உயிரிழக்கும் ஏழை மக்களைக் காக்கும் பொருட்டு, பிரதம மந்திரி நிவாரண நிதியின் மூலம் நோய்வாய்ப்பட்ட ஏழை மக்கள் இலவச சிகிச்சை பெற பிரதமருக்குப் பரிந்துரை செய்ததன் பேரில், பிறந்த குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரை 40 க்கும் மேற்பட்ட ஏழை நோயாளிகள்

    ஒவ்வொருவரும் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை உயர்தரமான இலவசச் சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர். இலவச உயர்கல்வித் திட்டத்திற்கான ஆணையைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் பாரிவேந்தர் வழங்கினார்.

    இதன்படி 2019-ல் கொடுத்த தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வருடத்திற்கு 300 மாணவர்கள் வீதம் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் 1200 மாணவ, மாணவியர்களுக்கு இலவச உயர் கல்வியை, தமது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் வழங்கினார்.

    50 ஆண்டு கால கனவுத் திட்டமான அரியலூர் - பெரம்பலூர்- துறையூர்- நாமக்கல் புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்குப் பாராளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற அன்றிலிருந்து இன்று வரை பிரதமர், நிதி அமைச்சர், ரெயில்வே துறை அமைச்சர் மற்றும் ரெயில்வே வாரியம் என அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து இலவச உயர்கல்வித் திட்டத்திற்கான ஆணையைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் பாரிவேந்தர் வழங்கினார்.

    முறையாக எடுத்துக் கூறியதால் தற்பொழுது 2023 ஜூலையில் புதிய ரெயில் தடம் அமைப்பதற்கான சர்வே மேற்கொள்ளப்படும் என ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் விரைவில் பெரம்பலூருக்கு ரெயில் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காகப் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி தமிழக அரசுக்கு வழங்கினார்.

    பாரிவேந்தர் எம்.பி.யின் இத்தகைய பணிகளுக்கு தொகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் கமல்ஹாசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.
    • மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதில் 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 40 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் 33-வதாக நடிகர் கருணாஸ் பெயரும், 35-வது பெயராக நடிகர் கமல்ஹாசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,

    திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலை கமல்ஹாசன் ஈரோடு மற்றும் குமாரபாளையத்திற்கு (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) வருகை தருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார். அதில்,"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க" என்று பதிவிட்டுள்ளளார்.

    • கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் பிரதமர் சொல்வதைத்தான் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது
    • முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் வரும் என்பது தெரிந்து தான் பிரதமர் அத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார்

    சென்னை சத்தியமூர்த்தி பவனில், தீரர் சத்தியமூர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

    அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "தேர்தலில் போட்டியிட பணமில்லை என நிர்மலா சீதாராமன் சொல்கிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை விட, தமிழிசை மற்றும் எல்.முருகனிடம் அதிக பணம் உள்ளதா? வெயிலில் சுத்தாமல் எந்தவித சிரமமும் இல்லாமல் ஆட்சி அதிகாரத்தை அனுபவிப்பதற்கு நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் ஆசைப்படுகிறார்கள்.

    கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் பிரதமர் சொல்வதைத்தான் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் வரும் என்பது தெரிந்து தான் பிரதமர் பல முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார். மோடி தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகளை நம்பியே உள்ளார். ஆனால் நாங்கள் மக்களை நம்பி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

    • தேர்தலில் போட்டியிட தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்
    • என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது

    மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

    நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்று கூறினார்.

    இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், காங்கிரஸ் ஆட்சியின் போது, தேநீர் விற்றவர்கள் தேர்தலில் நின்றார்கள் என்று பதிவிட்டுள்ளார். 

    • வேலூர் தொகுதியில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • மக்கள் மனம் நெகிழ்ந்து, மீண்டும் நீங்கள் தான் வெற்றிபெறுவீர்கள் என கூறுகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேலூர் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான கதிர் ஆனந்தே மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பசுபதி, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இதையடுத்து வேலூர் தொகுதியில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், குடியாத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கதிர் ஆனந்த், என்ன எல்லாம் பளபளப்பாக வந்து இருக்கீங்க? 1000 ரூபாய் தான் காரணமா? என பேசுவதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியாகி வைரலானது.

    ஆனால் நடந்தது என்ன என்பது குறித்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், என்ன பளபளப்பாக வந்து இருக்கீங்க ? என கதிர் ஆனந்த் கேட்க, அங்கிருந்த மக்கள் 1000 ரூபாய் தான் என சொல்ல... அதற்கு கதிர் 1000 ரூபாய் தான் காரணம் என பதில் பேசுகிறார். மேலும், "தளபதியின் ஆட்சியில் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்க மனம் நெகிழ்கிறது" என கதிர் ஆனந்த் கூறினார். இதனால் அங்குள்ள மக்கள் மனம் நெகிழ்ந்து, மீண்டும் நீங்கள் தான் வெற்றிபெறுவீர்கள் என கூறுகின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ காண இங்கே க்ளிக் செய்யவும்...

    ×