என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டி.
    • ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், ராமநாதபரத்தில் போட்டியிடும் 5 ஓ.பன்னீர்செல்வங்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இதன்மூலம், ராமநாதபுரத்தில், 5 ஓ.பன்னீர்செல்வங்களும் சுயேச்சையாக சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியானது.

    • தேர்தல் அதிகாரி சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனுவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
    • செல்வகணபதிக்கு எதிராக கொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கியது. 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    வேட்பு மனுவை பரிசீலனை செய்து வரும் தேர்தல் அதிகாரி சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனுவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

    2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    செல்வகணபதிக்கு எதிராக கொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    செல்வகணபதிக்கு 2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் அளித்த புகார் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வயநாடு தொகுதியை பொறுத்தவரை ஆனி ராஜா மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவருமே தீவிர பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
    • காங்கிரஸ் வேட்பாளரான ராகுல்காந்தி இன்னும் பிரசாரத்துக்கு தொகுதிக்கு வரவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. ஏனென்றால் தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

    அவருடன் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

    இதன் காரணமாக அனைவரின் பார்வையும் வயநாடு தொகுதியில் பக்கம் திரும்பியிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆனி ராஜா போட்டியிடுவார் என்று அந்த கட்சி அறிவித்து விட்டது. இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தனது பிரசாரத்தை ஆனி ராஜா தொடங்கிவிட்டார்.

    அதேபோல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில தலைவர் சுரேந்திரன் போட்டியிடுவார் என்று சில நாட்களுக்கு முன்பு தான் அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து அவரும் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    வயநாடு தொகுதியை பொறுத்தவரை ஆனி ராஜா மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவருமே தீவிர பிரசாரத்தை தொடங்கி விட்டனர். அவர்கள் ராகுல் காந்தியை தோற்கடித்து, வெற்றிவாகை சூடிவிட வேண்டும் என்ற முனைப்பில் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதேவேளையில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் காங்கிரஸ் வேட்பாளரான ராகுல்காந்தி இன்னும் பிரசாரத்துக்கு தொகுதிக்கு வரவில்லை. அவர் ஏப்ரல் 3-ந்தேதி வயநாட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவரது வருகைக்கு பின் வயநாடு தொகுதி தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும். அதே நேரத்தில் ஆனி ராஜா மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவருமே ராகுல்காந்தியை தாக்கி பேசுவதையும், அவரை தொகுதி மக்கள் விரும்பவில்லை என்று கருத்து கூறியபடியும் தங்களின் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் தொகுதியில் இருப்பதையே விரும்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆனி ராஜா கூறியதாவது:-

    நான் தொகுதியில் இருப்பேனா அல்லது தற்போதைய எம்.பி. போன்று விருந்தினராக இருப்பேனா? என்பதை இங்குள்ள வாக்காளர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் நான் அவர்களுடன் தான் இருப்பேன் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாரதிய ஜனதா கட்சி சுரேந்திரன் கூறும்போது, 'தேர்தலில் வெற்றி பெற்றால் முழு காலத்துக்கும் வாக்காளர்களுடன் இருப்பேன். தற்போது பதவியில் இருப்பவரை போல் எம்.பி.யாக இருக்க முடியாது. செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக இருந்தாலும், பின்தங்கிய பாராளுமன்ற தொகுதிக்கு வளர்ச்சியை ஏற்படுத்துவதில் எம்.பி.யாக ராகுல்காந்தி தோல்வியடைந்தவர் என்பதை நிரூபித்துள்ளார்' என்றார். 

    • தரமணி ரெயில் நிலைய சாலையில் ரூ.1 கோடி 68 லட்சம் மதிப்பீட்டில் 100க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • மெட்ரோ ரெயில் குறித்தும் பல முறை பாராளுமன்றத்தில் குரல்‌ கொடுத்திருக்கிறேன்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல் முடிந்துள்ள நிலையில் அதன் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதையடுத்து வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி, தென்சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் இன்று தியாகராயர் நகரில், 142-வது வட்டத்திற்கு உட்பட்ட சி.ஐ.டி நகரில், போக் சாலை, சாதூல்லா ரோடு, வ.உ.சி தெரு, மேட்லி தெரு, காமராஜர் காலனி, பர்கிட் ரோடு, மன்னார் தெரு, தாமோதரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

    அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், கடந்த மூன்று நாட்களாக வாக்கு சேகரித்து வருகிறேன்; செல்கின்ற இடமெல்லாம் பொதுமக்களும், கழகத்தினரும், தோழமைக் கட்சியினரும் அளிக்கும் வரவேற்பையும், அன்பையும், எழுச்சியையும் பார்கின்ற போது, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி எனத் தெரிவித்தார்.

    இதனிடையே, ரெயில்வே துறையில் தொகுதிக்காக நீங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறுகிறார்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதற்கு பதிலளித்த தமிழச்சி தங்கபாண்டியன், தொகுதி முழுவதும் உள்ள ரெயில்வே துறை சார்ந்த பிரச்சனைகளுக்காக நான் 2019-ல் வெற்றி பெற்றது முதல் 2024 வரை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு குறைகளை மனுவாக அளித்துள்ளேன்.

    ZRUCC கூட்டம் அனைத்திலும் கலந்துகொண்டு, தொகுதிக்குட்பட்ட அனைத்து ரெயில்வே துறை சார்ந்த பிரச்சனைகளுக்காக பேசியுள்ளேன். அதன் விளைவாக மாம்பலம், சைதாப்பேட்டை ரெயில் நிலையங்களில் பழுதடைந்த மேற்கூரை மாற்றப்பட்டது. தரமணி ரெயில் நிலைய சாலையில் ரூ.1 கோடி 68 லட்சம் மதிப்பீட்டில் 100க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர் முண்டக்கன்னியம்மன் கோவில் ரெயில் நிலையத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நுழைவு வாயில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது; வேளச்சேரி - புனித தோமையர் மலை MRTS இணைப்பிற்காக, பாராளுமன்றத்தில் பலமுறை பேசியும், ரெயில்வே அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை விடுத்ததன் காரணமாக, நிலம் கையகப்படுத்துதல் முடிக்கப்பட்டு, பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது; மெட்ரோ ரெயில் குறித்தும் பல முறை பாராளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறேன் என கூறினார்.

    • 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.
    • யார்-யார் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் அதிகாரிகள் இன்று மாலை வெளியிட இருக்கிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதல் கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்கி உள்ளது.

    இக்கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுதாக்கல் செய்து விட்டனர். இது தவிர சுயேட்சை வேட்பாளர்களும் ஆர்வமுடன் போட்டி போட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில் மொத்தம் 1403 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்திருப்பதால் மொத்த வேட்புமனு எண்ணிக்கை 1749 ஆகும்.

    வேட்புமனுக்களில் அதிகபட்சமாக கரூரில் 62 பேர், வட சென்னையில் 54 பேர், கோவையில் 53 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். குறைந்தபட்சமாக நாகையில் 13 பேர், சிதம்பரத்தில் 22 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.


    40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.

    வடசென்னை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோ, தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி, பா.ஜ.க. வேட்பாளர் வழக்கறிஞர் பால்கனகராஜ் ஆகியோர் இன்று காலை வண்ணாரப்பேட்டையில் உள்ள ராயபுரம் மண்டல அலுலகத்திற்கு பரிசீலனையில் போது வந்திருந்தனர்.

    அப்போது ஒவ்வொரு வேட்பாளரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது. அதில் பாரதிய ஜனதா வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் மனு ஏற்கப்பட்டது.

    அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோவின் வேட்புமனுவில் முந்தைய வழக்குகளின் விவரங்களை குறிப்பிடவில்லை என்று தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கு அ.தி.மு.க.வினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    தேர்தல் அதிகாரி உடனே ராயபுரம் மனோவின் மனுவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். மீண்டும் 12.45 மணிக்கு வேட்புமனு மீது பரிசீலனை நடைபெறும் என்று கூறினார்.

    இதே போல் தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி வேட்புமனு பரிசீலிக்கப்பட்டபோது வேட்புமனு தாக்கலின் போது விதிகளை மீறியதால் தி.மு.க. வேட்பாளரின் மனுவை ஏற்கக் கூடாது என்று அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் தி.மு.க. வேட்பு மனுவையும் தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்தார். இந்த மனு மீது மதியம் 12.45 மணிக்கு பரிசீலனை நடைபெறும் என்று அறிவித்தார்.

    அ.தி.மு.க., தி.மு.க. இரு வேட்பாளர்களின் மனுக்களையும் காலையில் நிறுத்தி வைத்ததால் அங்கு பரபரப்பான நிலை காணப்பட்டது. அதன் பிறகு மீண்டும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரான எம்.சந்திரகாசன் மனுதாக்கல் செய்திருந்தார். அங்கு வேட்பாளரை மாற்றப் போவதாக திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சந்திர காசி திடீரென்று மனு தாக்கல் செய்தார். அதே நேரத்தில் சந்திரகாசியின் வேட்புமனு சரியாக பூர்த்தி செய்யப்படாததால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு பரிசீலனையின் போது வேட்புமனுவில் சில பிழைகள் இருப்பதாக கூறப்பட்டதால் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து அவரது மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்புமனுவும் பரிசீலனையின் போது நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அதுவும் ஏற்கப்பட்டது.

    சேலம் தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த செல்வகணபதிக்கு சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் மேற்கு, சேலம் வடக்கு ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குரிமை இருப்பதாக அ.தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஆன்லைன் மூலமும், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் செய்தனர். அதே போல் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் செல்வகணபதி சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாகவும், பழைய வழக்குகள் குறித்து வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி வேட்புமனுவை அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். மற்ற மனுக்கள் பரிசீலனை முடிந்ததும் கடைசியாக இந்த மனுவை பரிசீலனை செய்வதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

    இதற்கிடையே செல்வ கணபதி சார்பில் கடந்த 2015-ம் ஆண்டே இரட்டை வாக்குரிமைகளில் ஒன்றை நீக்குமாறு மனு கொடுத்ததாக தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் அளித்தனர்.

    தேனி தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வேட்புமனு மீதான பரிசீலனையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. டி.டி.வி.தினகரன் மீதான வழக்கு விவரங்களை வேட்புமனுவில் தெளிவாக குறிப்பிடவில்லை என்று கூறி தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் டி.டி.வி.தினகரனின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது.

    கரூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் செந்தில்நாதன் வேட்புமனு மீதான பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் மனு ஏற்கப்பட்டது.

    மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன், தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதி மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    தென்சென்னையில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் வேட்புமனுவும், பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனுவும், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது.

    கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் மத்திய மந்திரி எல்.முருகன் வேட்புமனு ஏற்கப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு, விருதுநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ராதிகா சரத்குமார், தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன், தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி, கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத், கடலூர் பா.ம.க. வேட்பாளர் தங்கர்பச்சான் மனுக்களும் ஏற்கப்பட்டது.

    ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம், முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி, தூத்துக்குடியில் கனிமொழி வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன. நாம் தமிழர் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் மனுவும் ஏற்கப்பட்டது.

    இதேபோல் பெரும்பாலான அரசியல் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

    யார்-யார் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் அதிகாரிகள் இன்று மாலை வெளியிட இருக்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிக வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் நான் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    • மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை வேரறுக்க வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனுக்கான பரிசீலனை இன்று நடந்தது.

    தி.மு.க., பா.ஜ.க, அ.தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

    பின்னர் வேட்பு மனு தாக்கல் பரிசீலனை முடிந்து மன்சூர் அலிகான் வெளியே வந்தார்.

    தமிழகத்தில் முதல் நாளில் நான்தான் மனுத்தாக்கல் செய்தேன். எனக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும் வருகிற 30-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய உள்ளேன். டார்ச் லைட் சின்னம் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் எனக்கு விளக்கு பிடிப்பதற்கு விருப்பமில்லை. அந்த சின்னம் வேண்டாம்.

    அதிக வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் நான் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை வேரறுக்க வேண்டும். நான் எந்த கட்சிகளையும் வேறுபாடு பார்க்க மாட்டேன். அனைவரையும் தாக்கி பேசுவேன் என்றார்.

    முன்னதாக வேட்பு மனு பரிசீலனைக்காக கலெக்டர் அலுவலகத்திற்குள் மன்சூர் அலிகான் சென்றார்.

    எதிரில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வந்தார். அப்போது இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதியில் நீங்கள் (தி.மு.க) தான் வெற்றி பெறுவீர்கள். ஆனால் வேலூர் தொகுதியில் மட்டும் நான் வெற்றி பெறுவேன் என்றார். அதற்கு கதிர் ஆனந்த் அதனை நான் பார்த்துக்கொள்கிறேன் என சிரித்துக் கொண்டே பதில் அளித்துவிட்டு சென்றார்.

    • டெல்லியை நோக்கி போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள்போல் மோடி அரசு நடத்துகிறது.
    • கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்துள்ளது பா.ஜ.க. அரசு.

    கரூர்:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் கரூர் கிருஷ்ணராயபுரம் கடைவீதி, வெங்கமேடு அண்ணாசிலை அருகில், க.பரமத்தி கடை வீதி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க. ஆட்சியில் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது. 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தை வழங்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏமாற்றியது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படும்.

    பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படும். டோல்கேட் அகற்றப்படும். இந்தியா கூட்டணி ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.

    ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கப்பதாக கூறி மோடி அரசு ஏமாற்றியுள்ளது. விவசாயிகள் கடன்கள், மாணவர்களின் கல்விக் கடன்களை ரத்து செய்ய மோடி அரசு மறுத்துள்ளது. டெல்லியை நோக்கி போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள்போல் மோடி அரசு நடத்துகிறது.

    கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்துள்ளது பா.ஜ.க. அரசு. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பா.ஜ.க. எம்.பி.க்கள் 44 பேர் நாடாளுமன்றத்தில் உள்ளனர். தேர்தல் பத்திரங்கள் மூலம் இமாலய ஊழல் நடந்துள்ளது.

    மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    • நடிகைகள் விந்தியா, கவுதமி, காயத்ரி ரகுராம், நிர்மலா பெரியசாமி, நடிகர் சிங்கமுத்து பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

    அதில் 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 40 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் 33-வதாக நடிகர் கருணாஸ் பெயரும், 35-வது பெயராக நடிகர் கமல்ஹாசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 40 பேர் உள்ளனர். இதில் நடிகைகள் விந்தியா, கவுதமி, காயத்ரி ரகுராம், நிர்மலா பெரியசாமி, நடிகர் சிங்கமுத்து பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

    த.மா.கா. பட்டியலில் ஜி.கே.வாசன், சுரேஷ், சக்தி வடிவேல், விடியல் சேகர், முனவர் பாஷா, ராஜம் எம்.பி.நாதன், ஜி.ஆர்.வெங்கடேஷ் உள்ளிட்ட 20 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    பாரதிய ஜனதா பட்டியலில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, நிர்மலா சீத்தாராமன், யோகி ஆதித்யாநாத் பெயர்களுடன் தமிழக தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன், டாக்டர் ராமதாஸ், அன்புமணி, தமிழருவி மணியன், எச்.ராஜா, குஷ்பு, சரத்குமார் உள்ளிட்ட 40 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    காங்கிரஸ், பா.ம.க. கட்சிகள் இதுவரை நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை அளிக்கவில்லை.

    • கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்போது தொகுதிகள் மாறுவது தவிர்க்க முடியாது.
    • திருநாவுக்கரசருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் அவருக்கு பெரிய பதவியை கட்சி வழங்கும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எம்.பி.யாக இருக்கும் மத்திய மந்திரி எல்.முருகனையும் கவர்னராக இருந்த டாக்டர் தமிழிசையையும் தேர்தலில் போட்டியிட வைத்துள்ளீர்கள்.

    ஆனால் தென்சென்னையில் பிறந்த ஜெய்சங்கரையும் திருச்சியில் பிறந்த நிர்மலா சீதாராமையும் போட்டியிட வைக்கவில்லை. இதற்கான உண்மையான காரணத்தை பா.ஜனதா தெளிவுபடுத்த வேண்டும்.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, சமூக பாதுகாப்பு அளிக்கப்படும். வயதான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும். இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறது பா.ஜனதா. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை வற்புறுத்தியும் சமூக நீதி பற்றி பேசியும் வரும் பாட்டாளி மக்கள் கட்சி பா.ஜனதா உடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்தக் கட்சி சமூக நீதிக்கு எதிராக சென்று கொண்டிருக்கிறது.

    கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்போது தொகுதிகள் மாறுவது தவிர்க்க முடியாது. அந்த வகையில் திருச்சி தொகுதி மாறியது. எங்கள் கட்சியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் அவருக்கு பெரிய பதவியை கட்சி வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் த.மா.கா. சார்பில் வேட்பாளர் வேணுகோபால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
    • ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, அதிமுக வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் போட்டியிடுகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்கி உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் த.மா.கா. சார்பில் வேட்பாளர் வேணுகோபால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், வேணுகோபாலை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் பிரசாரத்தில் ஈடுபட்ட போது சைக்கிள் சின்னத்திற்கு பதிலாக கை சின்னத்திற்கு வாக்கு கேட்டதால் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    திறந்த ஜீப்பில் நின்றபடி பிரசாரத்தில் ஈடுபட்ட ஜி.கே.வாசன், வேணுகோபாலுக்கு நீங்கள் எல்லாம் கைச்சின்னத்திலே... என்று சொல்லும் போது நிர்வாகி ஒருவர் குரல் எழுப்ப அதனை சமாளிக்கும் விதமாக வேட்பாளரை கையை நகர்த்துங்கள் என்று கூறி சமாளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, அதிமுக வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் போட்டியிடுகின்றனர்.

    • முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் பிரசாரம் செய்யும் இடங்களை அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
    • 8-ந்தேதி-தஞ்சாவூர், 9-ந்தேதி-நாகப்பட்டினம், 10-ந்தேதி-ராமநாதபுரம், விருதுநகர், 11-ந்தேதி-சிவகங்கையில் பிரசாரம் செய்கிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளரும், செய்தி தொடர்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் பிரசாரம் செய்யும் இடங்களை அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    1-ந்தேதி-சென்னை தெற்கு, 2-ந்தேதி-சென்னை வடக்கு, 3-ந்தேதி-காஞ்சிபுரம், 4-ந்தேதி-ஆரணி, 5-ந்தேதி-திருவண்ணாமலை, 6-ந்தேதி-கள்ளக்குறிச்சி, 7-ந்தேதி-திருச்சி, 8-ந்தேதி-தஞ்சாவூர், 9-ந்தேதி-நாகப்பட்டினம், 10-ந்தேதி-ராமநாதபுரம், விருதுநகர், 11-ந்தேதி-சிவகங்கை, 12-ந்தேதி-கரூர், 13-ந்தேதி-நாமக்கல், 14-ந்தேதி-சேலம், 15-ந்தேதி-மதுரை, 16-ந்தேதி-தேனி, 17-ந்தேதி-திண்டுக்கல் ஆகிய இடங்களில் முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் பிரசாரம் செய்கிறார்.

    • 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.
    • வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் மனோ ஆகியோரின் வேட்புமனுக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கியது. 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில் மொத்தம் 1403 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்திருப்பதால் மொத்த வேட்புமனு எண்ணிக்கை 1749 ஆக உள்ளது.

    40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் வேட்பு மனுவை பரிசீலனை செய்து வரும் தேர்தல் அதிகாரி சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

    2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறி வேட்பு மனு மீதான பரிசீலனையை தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்துள்ளார்.

    அதேபோல் வடசென்னை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் மனோ ஆகியோரின் வேட்புமனுக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    பரஸ்பரம் ஆட்சேபணை தெரிவித்த நிலையில் 2 பேரின் வேட்பு மனு மீதான பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ×