search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல்- யார், யார் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது?
    X

    பாராளுமன்ற தேர்தல்- யார், யார் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது?

    • 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.
    • யார்-யார் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் அதிகாரிகள் இன்று மாலை வெளியிட இருக்கிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதல் கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்கி உள்ளது.

    இக்கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுதாக்கல் செய்து விட்டனர். இது தவிர சுயேட்சை வேட்பாளர்களும் ஆர்வமுடன் போட்டி போட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில் மொத்தம் 1403 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்திருப்பதால் மொத்த வேட்புமனு எண்ணிக்கை 1749 ஆகும்.

    வேட்புமனுக்களில் அதிகபட்சமாக கரூரில் 62 பேர், வட சென்னையில் 54 பேர், கோவையில் 53 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். குறைந்தபட்சமாக நாகையில் 13 பேர், சிதம்பரத்தில் 22 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.


    40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.

    வடசென்னை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோ, தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி, பா.ஜ.க. வேட்பாளர் வழக்கறிஞர் பால்கனகராஜ் ஆகியோர் இன்று காலை வண்ணாரப்பேட்டையில் உள்ள ராயபுரம் மண்டல அலுலகத்திற்கு பரிசீலனையில் போது வந்திருந்தனர்.

    அப்போது ஒவ்வொரு வேட்பாளரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது. அதில் பாரதிய ஜனதா வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் மனு ஏற்கப்பட்டது.

    அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோவின் வேட்புமனுவில் முந்தைய வழக்குகளின் விவரங்களை குறிப்பிடவில்லை என்று தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கு அ.தி.மு.க.வினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    தேர்தல் அதிகாரி உடனே ராயபுரம் மனோவின் மனுவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். மீண்டும் 12.45 மணிக்கு வேட்புமனு மீது பரிசீலனை நடைபெறும் என்று கூறினார்.

    இதே போல் தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி வேட்புமனு பரிசீலிக்கப்பட்டபோது வேட்புமனு தாக்கலின் போது விதிகளை மீறியதால் தி.மு.க. வேட்பாளரின் மனுவை ஏற்கக் கூடாது என்று அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் தி.மு.க. வேட்பு மனுவையும் தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்தார். இந்த மனு மீது மதியம் 12.45 மணிக்கு பரிசீலனை நடைபெறும் என்று அறிவித்தார்.

    அ.தி.மு.க., தி.மு.க. இரு வேட்பாளர்களின் மனுக்களையும் காலையில் நிறுத்தி வைத்ததால் அங்கு பரபரப்பான நிலை காணப்பட்டது. அதன் பிறகு மீண்டும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரான எம்.சந்திரகாசன் மனுதாக்கல் செய்திருந்தார். அங்கு வேட்பாளரை மாற்றப் போவதாக திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சந்திர காசி திடீரென்று மனு தாக்கல் செய்தார். அதே நேரத்தில் சந்திரகாசியின் வேட்புமனு சரியாக பூர்த்தி செய்யப்படாததால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு பரிசீலனையின் போது வேட்புமனுவில் சில பிழைகள் இருப்பதாக கூறப்பட்டதால் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து அவரது மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்புமனுவும் பரிசீலனையின் போது நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அதுவும் ஏற்கப்பட்டது.

    சேலம் தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த செல்வகணபதிக்கு சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் மேற்கு, சேலம் வடக்கு ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குரிமை இருப்பதாக அ.தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஆன்லைன் மூலமும், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் செய்தனர். அதே போல் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் செல்வகணபதி சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாகவும், பழைய வழக்குகள் குறித்து வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி வேட்புமனுவை அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். மற்ற மனுக்கள் பரிசீலனை முடிந்ததும் கடைசியாக இந்த மனுவை பரிசீலனை செய்வதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

    இதற்கிடையே செல்வ கணபதி சார்பில் கடந்த 2015-ம் ஆண்டே இரட்டை வாக்குரிமைகளில் ஒன்றை நீக்குமாறு மனு கொடுத்ததாக தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் அளித்தனர்.

    தேனி தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வேட்புமனு மீதான பரிசீலனையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. டி.டி.வி.தினகரன் மீதான வழக்கு விவரங்களை வேட்புமனுவில் தெளிவாக குறிப்பிடவில்லை என்று கூறி தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் டி.டி.வி.தினகரனின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது.

    கரூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் செந்தில்நாதன் வேட்புமனு மீதான பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் மனு ஏற்கப்பட்டது.

    மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன், தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதி மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    தென்சென்னையில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் வேட்புமனுவும், பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனுவும், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது.

    கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் மத்திய மந்திரி எல்.முருகன் வேட்புமனு ஏற்கப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு, விருதுநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ராதிகா சரத்குமார், தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன், தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி, கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத், கடலூர் பா.ம.க. வேட்பாளர் தங்கர்பச்சான் மனுக்களும் ஏற்கப்பட்டது.

    ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம், முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி, தூத்துக்குடியில் கனிமொழி வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன. நாம் தமிழர் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் மனுவும் ஏற்கப்பட்டது.

    இதேபோல் பெரும்பாலான அரசியல் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

    யார்-யார் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் அதிகாரிகள் இன்று மாலை வெளியிட இருக்கிறார்கள்.

    Next Story
    ×