என் மலர்
உலகம்
- லாஸ் ஏஞ்சல்சில் அவரது வீட்டில் உள்ள நீச்சல் குளத்திலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
- லாஸ் ஏஞ்சல்சின் கேட்டமைன் ராணி [Ketamine Queen] என்று அழைக்கப்படும் போதைப்பொருள் விற்பனையாளர் ஜாஸ்வீன் சங்கா
மேத்யூ பெர்ரி
அமெரிக்காவின் பிரபலத் தொலைக்காட்சித் தொடரான பிரண்ஸ் [FRIENDS] தொடரில் நடித்த தொலைக்காட்சி நடிகர் மேத்யூ பெர்ரி (Matthew Perry) சாண்ட்லர்[Chandler] கதாபாத்திரத்தின் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுகிறார்.
54 வயதான மேத்யூ கடந்த ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்சில் அவரது வீட்டில் உள்ள நீச்சல் குளத்திலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது ரத்தத்தில் கேட்டமைன் [ketamine] எனப்படும் போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக இருந்தது பின்னர் நடந்த பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

கேட்டமைன் என்றால் என்ன?
மனநலம் சார்ந்த பிரசனைகளுக்கு கேட்டமைன் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மனஉளைச்சல் மற்றும் மனப் பதற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்த மேத்யூ அதை குணப்படுதவுவதற்காக கேட்டமைன் உட்கொளள்ளத் தொடங்கியுள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் கேட்டமைனுக்கு அடிமையாகி உள்ளார்.

சூழ்ச்சியில் சிக்கிய மேத்யூ
இதனைப் பயன்படுத்தி இரண்டு மருத்துவர்களுடன் சேர்ந்து மேத்யூவின் உதவியாளர் அவருக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்பில் கேட்டமைன் போதைப் பொருளைத் தொடர்ந்து வழங்கி பணம் பறித்து வந்துள்ளனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக மேத்யூவின் உதவியாளர், அந்த இரண்டு மருத்துவர்கள் உட்பட 5 பேர் போலீசில் சிக்கியுள்ளனர்.
கேட்டமைன் ராணி
இவர்களுள் முக்கியமானவர் லாஸ் ஏஞ்சல்சின் கேட்டமைன் ராணி [Ketamine Queen] என்று அழைக்கப்படும் போதைப்பொருள் விற்பனையாளர் ஜாஸ்வீன் சங்கா [41 வயது] . ஹாலிவுட் பிரபலங்களும் பணக்காரர்களும் வாழும் லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகரில் ஜாஸ்வீன் சங்கா போதைப்பொருட்களை சப்பளை செய்து வந்துள்ளார்.

போதை சாம்ராஜ்யம்
மேத்யூவுக்கு அதிக கேட்டமைன் டோஸ்களை ஜாஸ்வீன் கொடுத்திருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சங்காவின் குடியிருப்பில் 79 பாட்டில்களில் திரவ கேட்டமின்கள், 2000 மெத் மாத்திரைகள், கோகைன்கள் ஆகியவை பிடிபட்டுள்ளன.
எரிக் பிளெமிங் என்ற இடைத்தரகர் மூலம் மேத்யூவுக்கு சங்கா கேட்டமின்களை விற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. ஒரு குப்பி கேட்டமின் 12 டாலர்கள் என்று இருந்த நிலையில் மெத்தியூவிடன் ஒரு குப்பி கேட்டமினை 1000 டாலர்கள் வரை இந்த கும்பல் ஏமாற்றி விற்றுள்ளது.
- பிறந்து 4 நாட்களே ஆன தனது இரட்டைக் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார் முகமது.
- சான்றிதழ்களை ஏந்தியவாறு முகமது கதறி அழும் வீடியோ போரின் கொடுமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 40 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். அதிலும் மொத்த குடும்பத்தையும் இழந்து தனி ஆளாக உயிர்பிழைத்தவர்களின் வலி சொல்லி மாளாதது. அதை கண்முன் நிறுத்தும் விதமாக பாலஸ்தீன தந்தை ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிறந்து 4 நாட்களே ஆன தனது இரட்டைக் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீட்டுக்கு வந்த முகமது அபு அல்- கும்சான் என்ற அந்த தந்தைக்கு தனது மனைவியும் குழந்தைகளும் இஸ்ரேலின் வான்வெளித் தாக்குதலில் இறந்துவிட்டனர் என்ற அதிர்ச்சியே மிஞ்சியது.
மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் ஃபாலா பகுதியில் நடந்த தாக்குதலில் முகமதின் மனைவி, பிறந்து நான்கு நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகள் அசைல்[Aysel] மற்றும் அசெர் [Asser] உயிரிழந்துள்ளனர். கையில் இரண்டு பிறப்புச் சான்றிதழ்களை ஏந்தியவாறு முகமது கதறி அழும் வீடியோ போரின் கொடுமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. அரசியல் தலைவர்களும் ஆயுத வியாபாரிகளும் லாபம் அடைவதற்காக உருவாக்கப்பட்ட போர் காலங்காலமாக அப்பாவி மக்களின் தலையிலேயே விடிவது மனிதக்குலத்தின் மீள முடியாத சாபம் ஆகும்.
- தைவானில் ஒரே நாளில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கம், கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தைவானின் கிழக்கு நகரான ஹூவாலியனில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்தது. ஒரே நாளில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இது ஆகும். எனினும், இதில் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.
நிலநடுக்கம் காரணமாக தலைநகர் தைபேவில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுரங்க சேவைகள் குறைந்த வேகத்தில் இயங்க அனுமதிக்கப்பட்டன. நிலநடுக்கம் பூமியில் இருந்து 9.7 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். தைவானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகி இருக்கிறது.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம், அந்நாட்டு வரலாற்றில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்படாத மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், 900-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
- ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடியதால் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- 2020-ல் அதிகாரத்தை கைப்பற்றிய போதிலும் ஆட்சி கவிழ்க்கப்பட்டு 27 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடியவர் ஆங் சான் சூகி. இவர் பல வருடங்கள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2010-ம் ஆண்டு வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின் அரசியல் தீவிரமாக ஈடுபட்டு 2020 தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் 2021 பிப்ரவரியில் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சியை பிடித்தது. அப்போது அவருக்கு 27 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் தற்போது வீட்டுக்காவில் உள்ளார்.
இந்த நிலையில் யங்கூன் ஏரிக்கரையில் 1.9 ஏக்கர் நிலத்தில் இவரின் தாயார் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு அவருடைய மூத்த சசோதரர் உரிமை கொண்டாடினார். இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது நீதிமன்றம் வீட்டை ஏலத்தில் விட உத்தரவிட்டது. அதற்கான அடிப்படை விலை 142 மில்லியன் அமெரிக்க டாலர் என நிர்ணயிக்கப்பட்டது.
இன்று வீடு ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் ஏலம் கேட்கவில்லை. இதனால் வீடு ஏலம் விடப்படவில்லை. இவ்வாறு நடப்பது இது 2-வது முறையாகும்.
மியான்மர் சுதந்திர ஹீரோவா கருதப்படும் ஜெனரல் ஆங் சான் இவரது தந்தை. இவர் 1947-ல் படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஆங் சான் மனைவி (சூகி தாயார்) கின் கி-க்கு இந்த வீடு அரசால் வழங்கப்பட்டது. இது பிரிட்டிஷ் கால ஸ்டைலில் இரண்டு மாடி வீடாகும்.
இந்த வீட்டில் ஆங் சான் சூகி 15 வருடங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிங்டன், ஐநா பொதுச் செயலாளர் பான் கி-மூன் ஆகியோர் இந்த வீட்டிற்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங் சான் சூகி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் ஆவார். தனது வாழ்க்கையின் பெரும்பாலான வருடங்களை சிறையில் கழித்துள்ளார்.
- கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலான தாக்குதலில் 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு.
- போர் நிறுத்தம் ஈரான், ஹிஸ்புல்லாவின் பதிலடியை திரும்பப்பெறும் பரிசீலனைக்கு வழி வகுக்கும் என நம்பிக்கை.
ஹமாஸ் அமைப்பினர குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 10 மாதங்ளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட்டு காசாவில போர் நிறத்தத்தை கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்கள். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்தும்போதெல்லாம் காசா மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்துவை சுட்டிகாட்டு தடைபட்டு வருகிறது.
இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கான புதிய பேச்சுவார்த்தை முன்னெடுத்து வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாட்டின் அதிகாரிகள் இஸ்ரேல் அதிகாரிகளுடன் இன்று கத்தாரில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையால் காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராக இருக்கும் நிலையில் அதை கட்டுப்படுத்த முடியும் என மத்தியஸ்தர் நாடுகள் நம்புகின்றன.
இந்த பேச்சுவார்த்தையில் ஹமாஸ் பங்கேற்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. கடந்த 31-ந்தேதி அமெரிக்க அதிபர் போர் நிறுத்தத்திற்கான திட்டத்தை வெளியிட்டார். இதை இரண்டு தரப்பிலும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டனர். ஆனால், ஹமாஸ் அதில் திருத்தம் செய்ய பரிந்துரைத்தது. இஸ்ரேல் தெளிவுப்படுத்துதல் குறித்து பரிந்துரை செய்தது.
இருதரப்பிலும் உருவாக்கப்பட்ட புதிய கோரிக்கைகள் தொடர்பாக பரஸ்பர குற்றம்சாட்டியதால் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
- அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்புக்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
- 'ஸ்டேயிங் அலைவ்' என்ற பாடலுக்கு டிரம்பும் அவரும் நடனம் ஆடும் வீடியோவை மஸ்க் பகிர்ந்துள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்புக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் டிரம்பை நேர்காணல் செய்தார். உலகம் முழுவதிலும் நேரலையில் நடைபெற்ற இந்த நேர்காணலை சுமார் 13 லட்சம் பேர் கேட்டனர்.
இந்நிலையில், மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் அவரும் டொனால்டு டிரம்பும் நடனமாடுவது போன்ற AI வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "எங்களை வெறுப்பவர்கள் இதனை AI என்று சொல்லக்கூடும்" என்று அவர் கிண்டலடித்துள்ளார்.
இந்த AI வீடியோவில் 'பீ கீஸ்' என்ற கிளாசிக் மியூசிக் ஆல்பத்தின் 'ஸ்டேயிங் அலைவ்' என்ற பாடலுக்கு மஸ்க்கும் டிரம்பும் நடனம் ஆடுகின்றனர்.
அண்மையில், பேஷன் ஷோவில் உலக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக சிரிப்பூட்டும் வித்தியாசமான கெட்டப்பில் நடந்து வரும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் மஸ்க் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தனது 542 கிலோ எடையை குறைத்து 63 கிலோ எடையுள்ள நபராக அவர் மாறியுள்ளார்.
- படுத்த படுக்கையாகி இருந்த அவர், இப்போது 63 கிலோவுடன் சகஜமாக நடமாட தொடங்கியுள்ளார்.
உலகின் அதிக எடையுள்ள மனிதராக இருந்த காலித் பின் மொஹ்சென் ஷாரி தனது எடையை பெருமளவில் குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
610 கிலோ எடை வரை இருந்த அவர், தற்போது 542 கிலோ எடையை குறைத்து 63 கிலோ எடையுள்ள நபராக மாறியுள்ளார்.

சவூதி அரேபியாவின் முன்னாள் மன்னர் அப்துல்லாவின் உதவியால் ஷாரிக்கு எடையை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் உணவுக் கட்டுப்பாடு மற்றும் போதுமான உடற்பயிற்சியால் அடுத்த 6 மாதங்களில் தனது எடையில் பாதியை அவர் குறைத்தார்.
அவரது மருத்துவக் குழு வழங்கிய தீவிர சிகிச்சை மற்றும் பிசியோதெரபி ஆகியவை அவரது எடை குறைப்பிற்கு உதவிகரமாக அமைந்தது.
அதிக எடை காரணமாக படுத்த படுக்கையாகி இருந்த அவர், இப்போது 63 கிலோவுடன் சகஜமாக நடமாட தொடங்கியுள்ளார்.

- பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தேசத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை ராணுவத்தின் மதிப்புமிக்க சொத்து.
- வரலாற்று ரீதியாக, ஒரு தேசமாக நாம் ஒவ்வொரு கஷ்டத்துக்குப் பிறகும் வலுவாக வெளிப்பட்டிருக்கிறோம்.
பாகிஸ்தானின் சுதந்திர தினத்தையொட்டி பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் சுதந்திர தின பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ஆசிம் முனீர், ராணுவத்தை பலவீனப்படுத்துவது அரசை பலவீனப்படுத்துவதாகும் எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக ராணுவ தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் கூறுகையில் "எந்தவொரு சக்தியாலும் நாட்டை சீரழிக்க (குறைமதிப்பிற்கு உட்படுத்த) முடியாது. நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும், நாட்டை பலவீனப்படுத்துவதற்கு சமமாகும்.
டிஜிட்டல் பயங்கரவாதத்தை பயன்படுத்தி, அரசு நிறுவனங்களுக்கும் பாகிஸ்தான் மக்களுக்கும் இடையே பிளவை உருவாக்க நினைக்கும் வெளிநாட்டு சக்திகளின் முயற்சிகளுக்கு மத்தியில் தேசிய ஒற்றுமையை காப்பது முக்கியமானது.
பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தேசத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை ராணுவத்தின் மதிப்புமிக்க சொத்து. எந்தவொரு எதிர்மறை சக்தியாலும் இந்த நம்பிக்கை மற்றும் அன்பின் உறவை பலவீனப்படுத்த முடியவில்லை அல்லது எதிர்காலத்தில் அவ்வாறு செய்ய முடியாது.
வரலாற்று ரீதியாக, ஒரு தேசமாக நாம் ஒவ்வொரு கஷ்டத்துக்குப் பிறகும் வலுவாக வெளிப்பட்டிருக்கிறோம். நாட்டிற்கும் ராணுவத்திற்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கை முக்கிய பங்கு வகித்தது. பாகிஸ்தானின் எதிர்காலம் பிரகாசமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. நமது படைகள் அதை உறுதியுடன் தொடர்ந்து பாதுகாக்கும்" என்றார்.
- குர்ஸ்க் பிராந்தியத்தில் 10 ஆயிரம் உக்ரைன வீரர்கள் ஊடுருவி சென்றுள்ளனர்.
- மற்றொரு பிராந்தியமான பெல்கோரோட்டிலும் சூழ்நிலை மோசமானதால் அவசரநிலை பிறப்பித்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருந்த போதிலும் போர் முடிவுக்கு வரவில்லை. இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
வீரர்கள் நேருக்குநேர் மோதாமல் டிரோன், ராக்கெட் மூலம் கட்டமைப்புகளை குறிவைத்து இருநாடுகளும் பரஸ்பர தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில்தான் கடந்த வாரம் திடீரென 10 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்தது ரஷியாவுக்கு தெரியவந்தது. இதனால் அப்பிராந்தியத்தில் அவசரநிலை பிறப்பித்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றியதுடன், எல்லையில் இருந்து உக்ரைன் வீரர்களை வெளியெற்ற ரஷியா ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் மற்றொரு எல்லை பிராந்தியமான பெல்கோரோட் பிராந்தியத்திலும் ரஷியா அவசரநிலை பிறப்பித்துள்ளது. உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பெல்கோரோட் பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார்.
இங்குள்ள 5 ஆயிரம் குழந்தைகளை பாதுகாப்பான பகுதியில் உள்ள முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இங்கு மோசமான நிலை உருவாகியுள்ளது. வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் காயம் அடைந்துள்ளனர். உள்ளூர் மக்கள் கவலை அடைந்துள்ளனர். 11 ஆயிரம் மக்கள் தங்களது வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். ஆயிரம் பேர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என பெல்கோரோட் கவர்னர் வியாசெஸ்லாவ் கினாட்கோவ் தெரிவித்துள்ளார்.
இதனால் குர்ஸ்க், பெல்கோரோட் பிராந்தியங்களில் அசாதாரண நிலை நிலவி வருகிறது. உக்ரைன் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்துள்ள நிலையில், ரஷியாவின் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இருநாட்டு வீரர்களும் நேருக்குநேர் மோதும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனைச் சேர்ந்த 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களுடன் நுழைந்தனர்.
இது தொடர்பாக உக்ரைன் வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் "உக்ரைனின் நோக்கம் ரஷியாவின் பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்து அல்ல. குர்ஸ்க் பகுதியில் இருந்து உக்ரைன் நோக்கி ரஷியாவின் ஏவுகணை தாக்குதலை நிறுத்துவதற்காகத்தான்" எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் படைகள் எப்போது எப்படி ரஷியா எல்லைக்குள் ஊடுருவியது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. மக்கள் வசிக்கும் 74 பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- வங்கதேச போராட்ட வன்முறைக்கு 500-க்கும் மேற்பட்டோர் பலி.
- ஐ.நா.-வின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்த முயற்சி மேற்கொள்ளும் இடைக்கால அரசு.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பின்னர் வன்முறையாக வெடித்தது. இதன்காரணமாக இடஒதுக்கீட்டை ரத்து செய்ய அரசு சம்மதம் தெரிவித்தது.
என்றாலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டமும் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் கடந்த 5-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகும் வன்முறை கட்டுக்குள் வரவில்லை. அவரின் அவாமி லீக் கட்சி தலைவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அக்கட்சியை சேர்ந்தவர்கள், மைனாரிட்டிகள் தாக்கப்பட்டனர்.
இதனால் ஷேக் ஹசீனா பதவி விலகியதற்குப்பின் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த வன்முறையில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்ததால் நோபல் பரிசு வென்ற பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. முகமது யூனுஸ் வங்கதேசம் மீண்டும் அமைதி நிலைக்கு திரும்ப முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் வன்முறையின்போது கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சட்ட ஆலோசகர் டாக்டர் ஆசிஃப் நஸ்ருல் கூறும்போது "போராட்ட வன்முறை தொடர்பாக ஐநா-வின் மேற்பார்வையில் விசாரணை நடத்துவதற்கான முயற்சியை இடைக்கால அரசு மேற்கொண்டுள்ளது. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 5-ந்தேதி வரை நடைபெற்ற கொலைகள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரணை நடத்த முயற்சி செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
- தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவிநீக்கம் செய்து கோர்ட் உத்தரவிட்டது.
- கோர்ட் உத்தரவை மதிக்கிறேன் என பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் தெரிவித்துள்ளார்.
பாங்காக்:
தாய்லாந்து மந்திரி சபையில் பிச்சித் சைபான் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் மந்திரியாக நியமிக்கப்பட்டார். பிச்சித் சைபான் கடந்த 2008-ம் ஆண்டு நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி 6 மாதம் சிறை தண்டனை பெற்றவர். அவரை மந்திரியாக நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பிச்சித் சைபான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே, பிச்சித் சைபானை மந்திரியாக நியமிக்க பரிந்துரை செய்த தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவிநீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது.
மந்திரிசபை உறுப்பினர்களை தகுதி அடிப்படையில் நியமிக்கும் பொறுப்பு பிரதமருக்கு இருப்பதாகவும், பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் நடத்தை விதிகளை மீறிவிட்டார் என கோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோர்ட் உத்தரவை மதிக்கிறேன் என பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், கோர்ட் தீர்ப்பை நான் மதிக்கிறேன். இந்தப் பொறுப்பில் இருந்து ஏறக்குறைய ஒரு வருடமாக நாட்டை நேர்மையாக வழிநடத்த நல்ல நோக்கத்துடன் முயற்சித்தேன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்தார்.
மந்திரியாக நியமிக்கப்பட்ட பிச்சித் சைபான் 6 மாத சிறை தண்டனை பெற்றவர் என்பது மட்டுமின்றி, சுப்ரீம் கோர்ட் அவரை நன்னடத்தை இல்லாதவர் என குறிப்பிட்டுள்ளது.
தற்போது ஸ்ரெத்தா தவிசின் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமரை பாராளுமன்றம் அங்கீகரிக்கும் வரை அமைச்சரவை காபந்து அடிப்படையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரஷியாவில் 74 குடியேற்ற பகுதிகளை உக்ரைன் கைப்பற்றியுள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்
- இந்த தாக்குதல் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ரஷியாவை நிர்ப்பந்திக்கும் செயலா?
உக்ரைன் போரும் நேட்டோ நண்பர்களும்
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. தொடக்கத்தில் இருந்தே இந்த [போரில் ரஷியாவின் கை ஓங்கியே இருந்தது. உக்ரைன் தலைநகர் கீவ் வரை ரஷிய ராணுவம் முன்னேறிச் சென்றது.
ராணுவ பலம் கொண்ட ரஷியாவின் தாக்குதலைச் சமாளிக்க மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகள் செய்து வருகின்றன.மேற்குலகின் பொருளாதாரத் தடைகளை மீறி இந்த போரில் ரஷியா அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது. மறுபுறம் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேட்டோவில் அங்கமாவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
தலைகீழாக மாறிய போர்
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வரும் போரில் முதல் முறையாக உக்ரைன் படைகள் ரஷியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. ரஷியாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாகப் பொதுமக்கள் அனைவரும் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்..
தற்போது ரஷியாவின் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உக்ரைன் படைகள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷிய மக்களின் சுமார் 74 குடியேற்ற பகுதிகளை உக்ரைன் கைப்பற்றியுள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்திருப்பது உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ரஷிய மண்ணில் மிகப்பெரிய அளவுக்கு வேற்று நாடு ஒன்றின் படைகள் நடத்தியுள்ள தாக்குதல் இதுவாகும். இதுதொடர்பாக ஜெலன்ஸ்கி தனது சமூக வலைதள பக்கத்தில் ஆக்கிரமிப்பு ரஷிய பகுதியில் பொறுப்பில் உள்ள உக்ரைன் ராணுவ தளபதியுடன் பேசிய வீடியோ காலை பகிர்ந்துள்ளார்.
ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் சொல்வது என்ன ?
உக்ரைன் படைகள் முன்னேறியுள்ள பகுதிகளில் அவர்களை விரட்டும் பணியில் ரஷிய படைகள் ஈடுபட்டுவருவதாகவும்,சில இடங்களில் ஏற்கனவே உக்ரைன் படைப்பிரிவுகள் தோல்வியடைந்து பின்வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூர்க்ஸ் பிராந்தியத்தின் எல்லைப்பகுதிகளில் உள்ள 120,000 ரஷிய மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துவந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேற்கு முதலாளிகளும் புதினின் ஆவேசமும்
ரஷியாவில் உக்ரைன் படைகள் முன்னேறி வருவது குறித்து பேசியுள்ள அதிபர் புதின், தனது மேற்கு முதலாளிகள் உதவியுடன் இந்த தாக்குதலை உக்ரைன் அரங்கேற்றியுள்ளது. போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ரஷியவை விட அதிக தனது கையை ஓங்கியிருக்கச் செய்யவே இந்த தாக்குதலை உக்ரைன் செய்துள்ளது.
ஆனால் அதற்காக அப்பாவி ரஷிய பொதுமக்கள் மீதும், அணுமின் நிலையங்களின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்துவது ஏற்புடையது அல்ல. எங்களின் தற்போதைய முக்கியமான பணி, எங்கள் இடத்தில் உள்ள எதிரியை அடித்துத் துரத்துவதுதான், ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க ரஷிய ராணுவம் முன்னேறி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

புதின் கூறியதுபோல உக்ரைனின் இந்த தாக்குதல் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ரஷியாவை நிர்ப்பந்திக்கும் செயலே ஆகும் என்று உக்ரைன் வெளியுறவு மந்திரியும் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கிடையே, உக்ரைனின் இந்த எதிர்பாராத தாக்குதலால் புதின் பேரதிர்ச்சியில் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.






