என் மலர்tooltip icon

    உலகம்

    • சீனாவில் நேற்று நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.

    பீஜிங்:

    சீனாவில் நேற்று நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 11 மணியளவில் இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.

    இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    • அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ராபர்ட் பிரிவோஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
    • இந்நிகழ்வில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (88), கடந்த மாதம் 21-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.

    புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இதற்கிடையே, 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாள் இழுபறிக்குப் பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டார். வாடிகனில் உள்ள தேவாலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது.

    புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ராபர்ட் பிரிவோஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், புதிய போப் பதவியேற்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவி ஏற்கும் நிகழ்வு, வாடிகன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிகழ்வில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

    இந்தியா சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மற்றும் நாகாலாந்து துணை முதல்னர் யாதுங்கோ பட்டொன் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில், அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் 14ம் போப் ஆக பதவியேற்றுள்ளார்.

    • கப்பல் விபத்தில் 19 பேர் படுகாயமடைந்தனர்.
    • விபத்து தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

    அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தின் மீது மெக்சிகோவின் கடற்படை கப்பல் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 19 பேர் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

    இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

    • மஸ்கட் கவர்னரேட் பகுதியில் செயல்படும் ஒரு ஓட்டலில் மாடியில் இருக்கும் அறையில் வசித்து வந்தனர்.
    • அதிகாலையில் ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியை சேர்ந்தவர் பங்கஜாக்சன்(வயது59). இவரது மனைவி சஜிதா(53). இவர்கள் பல ஆண்டுகளாக ஓமன் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

    அவர்கள் மஸ்கட் கவர்னரேட் பகுதியில் செயல்படும் ஒரு ஓட்டலில் மாடியில் இருக்கும் அறையில் வசித்து வந்தனர். 

    இந்தநிலையில் அதிகாலையில் அந்த ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.

    இதில் பங்கஜாக்சன், சஜிதா ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சென்னையில் வசித்துவரும் அவரது மகள் ஓமன் விரைந்துள்ளார்.

    • அனைத்துக்கட்சி தூதுக்குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்தது.
    • 7 குழுக்களை கொண்ட 51 பேர் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தவும், ஆபரேசன் சிந்தூர் தாக்குதல் பற்றி விளக்கவும் அனைத்துக்கட்சி தூதுக்குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்தது.

    அதன்படி எம்.பிக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என 7 குழுக்களை கொண்ட 51 பேர் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளனர். அவர்கள் 32 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    இந்த நிலையில் இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் தனது தூதுக்குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிவு செய்து உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையில் தூதுக் குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் திட்டமிட்டு உள்ளார்.

    இதுதொடர்பாக பிலாவல் பூட்டோ தனது எக்ஸ் பதிவில், "பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் என்னை தொடர்பு கொண்டு சர்வதேச அரங் கில் அமைதிக்கான பாகிஸ் தானின் நிலைப்பாட்டை முன்வைக்க ஒரு குழுவை வழி நடத்துமாறு கேட்டுக் கொண்டார்.இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இந்த சவாலான காலங்களில் பாகிஸ்தானுக்கு சேவை செய்வதில் உறுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பாலத்தின் மேல் தளத்தில் கப்பல் மோதிய போது கம்பங்கள் இடிந்து விழுந்தது.
    • விபத்தில் கப்பலில் இருந்த 19 பேர் காயம் அடைந்தனர்.

    நியூயார்க்:

    மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான குவாக்டே மோக் என்ற கப்பல், 15 நாடுகளில் உள்ள 22 துறை முகங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு தனது பயணத்தை கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கியது. 297 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட இக்கப்பலில் கடற்படை வீரர்கள் உள்பட 277 பேர் பயணம் செய்தனர்.

    அந்த கடற்படை பாய் மரக் கப்பல் அமெரிக்காவின் நியூயார்க்குக்கு சென்றது. அங்குள்ள புரூக்ளின் பாலத்தை கடந்து செல்ல முயன்றது. அப்போது கப்பலின் கம்பங்கள், புரூக்ளின் பாலத்தில் மோதியது. பாலத்தின் மேல் தளத்தில் கப்பல் மோதிய போது கம்பங்கள் இடிந்து விழுந்தது.



    இந்த விபத்தில் கப்பலில் இருந்த 19 பேர் காயம் அடைந்தனர். இதில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பாலத்தின் மீது கப்பல் மோதும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    இதுதொடர்பாக மெக்சிகோ கடற்படை கூறும்போது, பயிற்சி கப்பலான குவாக்டேமோக், புரூக்ளின் பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் சேதமடைந்தது. இதனால் அதன் பயணத்தை தொடர முடியவில்லை. பணியாளர்கள் மற்றும் பொருட்களின் நிலை கடற்படை மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.


    மெக்சிகோ வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, அமெரிக்காவிற்கான தூதரும் நியூயார்க்கில் உள்ள மெக்சிகோ துணைத் தூதரக அதிகாரிகளும் "பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவித்தது. இந்த விபத்தில் 142 ஆண்டுகள் பழமையான புரூக்ளின் பாலத்துக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தியது.
    • இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.

    இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இந்நிலையில், காசா போரில் இஸ்ரேல் ராணுவத்துக்கு AI மூலம் உதவியதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளது.

    காசாவில் நடந்த போரின் போது இஸ்ரேலிய இராணுவத்திற்கு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை விற்றதாகவும், இஸ்ரேலிய பணயக்கைதிகளைக் கண்டுபிடித்து மீட்பதற்கான முயற்சிகளுக்கு உதவியதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

    ஆனால், அதே சமயம் காசாவில் உள்ள மக்களை தாக்குவதற்காக AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இரு நாட்டிற்கு இடையேயான போரில் Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன

    முன்னதாக இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கி வருகிறது என்று குற்றம் சஷ்டி அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • லூசியானா சிறையில் துளை போட்டு 10 கைதிகள் தப்பியோடினர்.
    • உடந்தையாக இருந்த 3 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்பட சுமார் 1,500 பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த சிறைச்சாலையில் எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். ஆனால் அங்குள்ள சில கைதிகள் நள்ளிரவு நேரம் கழிப்பறை சென்றிருந்தனர்.

    அதன்பின் கழிப்பறையின் பின்னால் உள்ள துளை வழியாக 10 கைதிகள் ஏறி குதித்து தப்பினர். இந்தச் சம்பவம் நடந்த 7 மணி நேரத்துக்குப் பிறகே சிறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து, உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது தப்பிச்சென்ற கைதிகள் சிறையில் இருந்து வெளியேறியதும் சீருடைகளை மாற்றி விட்டு வேறு ஆடைகளை அணிவது தெரிய வந்தது.

    பின்னர் சந்தேகம் வராத வகையில் குடியிருப்பு பகுதியில் நடந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    தப்பியோடியவர்களில் ராபர்ட் மூடி (21) என்ற கைதியை மட்டும் போலீசார் பிடித்தனர். அவர் ஏற்கனவே இதேபோல் 2 முறை தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, மற்ற கைதிகளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    விசாரணையில் கைதிகள் நள்ளிரவு நேரம் தங்களது அறையில் இருந்து வெளியேற அதிகாரிகள் சிலர் உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு உடந்தையாக செயல்பட்ட 3 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    • இந்தோனேசியாவில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் அதிகாலை 2:58 மணிக்கு (உள்ளூர் நேரம்) ஏற்பட்டது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த விவரம் வெளியாகவில்லை.

    • அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது.
    • கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலியாகினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை மேலும் பாதித்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.

    இந்நிலையில், கெண்டகி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலியாகினர்.

    தொடர் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்தடையால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

    ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    வெள்ளத்தின் அளவு அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அம்மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.

    • ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது.
    • 3 ஆண்டுக்கு மேலாக சண்டை நடந்துவரும் நிலையில் நேரடி பேச்சுவார்த்தை நடந்தது.

    வாஷிங்டன்:

    ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் சம்மதம் தெரிவித்தார்.

    இரு நாட்டு பிரதிநிதிகளும் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைக்காக நேற்று முன்தினம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கூடினர். துருக்கி நாட்டின் அதிகாரிகள் நடுநிலை வகித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது.

    இந்நிலையில், ரஷியா-உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து திங்கட்கிழமை அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசுவேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    வரும் திங்கட்கிழமை ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புதினிடம் தொலைபேசி மூலம் பேசுவேன். அப்போது வாரத்திற்கு சராசரியாக 5000-க்கும் மேற்பட்ட ரஷிய மற்றும் உக்ரைன் வீரர்களைக் கொல்லும் போரை நிறுத்துவது குறித்து பேசுவேன்.

    அதன்பின் நான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடமும் பேசுவேன். இது ஒரு முக்கிய நாளாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு போர் நிறுத்தம் ஏற்படும். மேலும் இந்த வன்முறை முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

    • ரஷியா- உக்ரைன் அதிகாரிகள் இடையே நேருக்குநேர் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்று.
    • 2 மணி நேரம் கூட இந்த பேச்சுவார்த்தை நீடிக்கவில்லை.

    ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்தன. ஆனால் ரஷியா மற்றும் உக்ரைன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்தன.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட முயற்சி மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார். 30 நாட்கள் போர் நிறத்த பரிந்துரையை தயார் செய்தது. அதன்பின் ரஷியாவுடன் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் உக்ரைனுடன் மேற்கத்திய நாடுகளான பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.

    முதலில் இரு நாடுகளும் 30 நாட்கள் போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியானது. பின்னர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

    இந்த நிலையில்தான் நேற்று ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் நேருக்குநேர் பேச்சுவார்த்தை நடத்தினர். 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வரும் நிலையில் முதன்முறையாக நேருக்குநேர் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை 2 மணி நேரம் கூட நீடிக்கவில்லை.

    இந்த நிலையில் ரஷியா உக்ரைனின் வடகிழக்கு சுமி பிராந்தியத்தில் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில, 4 பேர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    ரஷியா எல்லையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுமியின் பிலோபிலியா நகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான பாடத்தை வெளியிட்டு சுமி நிர்வாகம், பொதுமக்கள் வாகனம் மீது வேண்டுமென்று ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது மற்றொரு போர் குற்றம் எனச் சாடியுள்ளது.

    உக்ரைன்- ரஷியா இடையிலான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இரு தரப்பிலும் மிகப்பெரிய அளவில் கைதிகள் பரிமாற்றத்திற்கு சம்மதம் தெரிவிதுள்ளதாக தெரிகிறது.

    அதேவேளையில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்ச்சை நடத்த வேண்டும் என உக்ரைன் விரும்புவதாக தெரிகிறது. அதேவேளையில் ரஷியா இருதரப்பிலும் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் தலைவர்கள் சந்திப்பு பரிசீலனையில்தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

    ×