என் மலர்tooltip icon

    உலகம்

    • ஹமாஸ் அமைப்பினர் 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
    • இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தியது.

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.

    இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு பிறகு காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.

    இதற்கிடையே காசாவை விலைக்கு வாங்கி அமெரிக்காவுக்கு சொந்தமாக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அங்குள்ள பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இதற்கு பாலஸ்தீனம் மற்றும் காசா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் காசா பகுதியில் இருந்து 10 லட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியா நாட்டுக்கு மாற்றும் திட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

    மேலும் பாலஸ்தீனியர்களை மீள்குடியேற்றுவதற்கு ஈடாக, டிரம்ப் நிர்வாகம் லிபியாவிற்கு கோடிக்கணக் கான டாலர் நிதியை அளிக்கும் என்றும் கூறப்பட்டது.

    இந்நிலையில், பாலஸ்தீனியர்களை லிபியா நாட்டுக்கு மாற்றும் திட்டம் குறித்து வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனக்கூறி அமெரிக்க அதிகாரி ஒருவர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

    • இத்தாலி பிரதமர் மெலோனி அல்பேனியா வந்தடைந்தார்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    அல்பேனியா நாட்டில் ஐரோப்பிய அரசியல் சமூக (EPC) உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி பிரதமர் மெலோனி அல்பேனியா வந்தடைந்தார்.

    அப்போது, இத்தாலி பிரதமர் மெலோனியை, சிவப்பு கம்பளத்தின் மீது அல்பேனிய பிரதமர் எடி ராமா முழங்காலிட்டு வணக்கம் தெரிவித்து வரவேற்றார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது.

    • உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.
    • அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருக்கிறது.

    கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு டிரம்ப் பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா மட்டுமே எதிர்வரி விதித்து எதிர்வினை ஆற்றியது. பின்னர் சர்வதேச அழுத்தம் காரணமாக பின் அந்த வரிவிதிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளார்.

    இதனிடையே மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப் கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது, "அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருக்கிறது. வரி இல்லாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா விருப்பம் தெரிவித்தது" என்று டிரம்ப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அமெரிக்க பொருட்கள் மீது 100% வரி குறைப்புக்குக் கூட இந்தியா தயாராக இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த டிரம்ப், "உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக தாங்கள் இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அமெரிக்க பொருட்கள் மீது 100% வரி குறைப்புக்குக் கூட இந்தியா தயாராக இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், அது விரைவில் வரும்" என்று தெரிவித்தார்.

    • பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தது.
    • நமது நாட்டைக் காப்பாற்ற நமது விமானப்படை உள்நாட்டு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியது.

    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதையடுத்து இந்தியா பதிலடி தாக்குதல் கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.

    இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதை முறியடித்த இந்திய ராணுவம், பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. 4 நாட்கள் சண்டைக்கு பிறகு இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் விமானப்படை தளத்தை இந்தியா தாக்கியது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் நினைவுச் சின்னத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஷபாஸ் ஷெரீப் பங்கேற்று பேசியதாவது:-

    மே 9, 10-ந்தேதி இடைப்பட்ட இரவில் சுமார் 2.30 மணியளவில் ராணுவத் தலைவர் அசிம் முனீர், என்னை தொடர்பு கொண்டு இந்திய ஏவுகணைகள் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப் படை தளம் மற்றும் பிற பகுதிகளை தாக்கியதாக தகவல் தெரிவித்தார். இது மிகவும் கவலைக்குரிய தருணமாக இருந்தது.

    அவரது குரலில் தன்னம்பிக்கை மற்றும் தேசபக்தி இருந்ததை கடவுள் மீது சத்தியம் செய்வதன் மூலம் நான் உங்களுக்குச் சொல்ல முடியும்.

    அதன்பின் நான் எனது பாதுகாப்பான தொலைபேசியை எடுத்துக்கொண்டு நீச்சலடிக்கச் சென்றேன். அப்போது ராணுவ தளபதி 2-வது முறையாக என்னை தொடர்பு கொண்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பதிலடி கொடுத்ததாக தெரிவித்தார்

    நமது நாட்டைக் காப்பாற்ற நமது விமானப்படை உள்நாட்டு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியது. மேலும் சீன ஜெட் விமானங்களிலும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இங்கிலாந்து ராணுவ தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் உள்பட 3 பேர் பலியாகினர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் தென்கிழக்கு பிராந்தியமான ஆக்ஸ்போர்டுஷையர் நகரில் ராணுவ தளம் அமைந்துள்ளது. விமானப்படைக்குச் சொந்தமான அந்த ராணுவ தளத்தில் கூட்டுப்போர் பயிற்சி, வழக்கமான ராணுவ பயிற்சிகள் போன்றவை நடைபெற்றன.

    தற்போது அந்த ராணுவ தளங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன. கைவிடப்பட்ட அந்த ராணுவ தளம் தற்போது ஆயுதங்கள், வெடிமருந்துகள் கிடங்காகப் பயன்படுகின்றது.

    இந்நிலையில், இந்த ராணுவ பயிற்சி தளத்தில் நேற்று திடீரென தீப்பிடித்தது. அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியதால் அந்த இடம் முழுதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் உள்பட 3 பேர் உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து, பலியான தீயணைப்பு வீரர்களுக்கு அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது இரங்கலைத் தெரிவித்தார். தீ விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    • ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது.
    • 3 ஆண்டுக்கு மேலாக சண்டை நடந்துவரும் நிலையில் தற்போது நேரடி பேச்சுவார்த்தை நடக்கிறது.

    டிரானா:

    ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் சம்மதம் தெரிவித்தார்.

    இரு நாட்டு பிரதிநிதிகளும் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைக்காக நேற்று துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கூடினர். பாதுகாப்பு மந்திரி ருஸ்டெம் உமரோவ் தலைமையிலான உக்ரைன் தூதுக்குழு, அதிபரின் உதவியாளர் மெடின்ஸ்கி தலைமையிலான ரஷிய குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. துருக்கி நாட்டின் அதிகாரிகள் நடுநிலை வகித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய தலைவர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தினார். ஐரோப்பிய கவுன்சில் தலைவர், ஐரோப்பிய ஆணைய தலைவர் மற்றும் நெதர்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் பிரதமர்களுடன் கலந்துரையாடினார்.

    இந்நிலையில், அதிபர் ஜெலன்ஸ்கி பேசுகையில், அமைதியை அடைவதற்கான முதல் படி போர் நிறுத்தம் என்றார். ரஷியா மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்திய ஜெலன்ஸ்கி, ராணுவ ஆதரவை வலுப்படுத்துதல், உக்ரைனின் வான் பாதுகாப்பு, பாதுகாப்பு உற்பத்தி திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    • வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரிவிதிக்க வகைசெய்யும் மசோதா வரையறுக்கப்பட்டது.
    • இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், 'தி ஒன் பிக் பியூட்டிபூல் பில்' என்ற புதிய மசோதாவை அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் வரையறுத்துள்ளது. இதில் வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், வரிகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    குறிப்பாக, அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர், தங்களது சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என புதிய மசோதாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கிரீன் கார்டு மற்றும் எச்1பி, எச்2ஏ, எச்2பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அதிர்ச்சி அடைந்தனர். அதிபர் டிரம்பின் புதிய வரி விதிப்பால் அங்கு வசித்து வரும் 45 லட்சம் இந்தியர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    --------------

    • வலது கண் பார்வையை இழந்த ருஷ்டியின் ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது.
    • தி சாத்தானிக் வெர்சஸ் நாவலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    நியூயார்க்:

    இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கடந்த 2022, ஆகஸ்ட் 12-ம் தேதி நியூயார்க்கில் உள்ள சௌடவுகுவா கல்வி நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார்.

    அப்போது மேடையில் ஏறிய ஹாடி மாத்தர் சல்மான் ருஷ்டியை 12 முறை சரமாரியாகக் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ருஷ்டி ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 6 வார சிகிச்சைக்கு பின் படிப்படியாக குணமானார்.

    இந்தத் தாக்குதலில் ருஷ்டியின் தலை, கழுத்து, இடது உள்ளங்கை, கல்லீரல், குடல் உள்பட உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. வலது கண் பார்வையை இழந்த ருஷ்டியின் ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது. ஹாடி மாதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    1988-ம் ஆண்டு சல்மான் ருஷ்டி வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' நாவலுக்கு இஸ்லாமிய மதவாதிகளிடையே கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. அவர் பல கொலை மிரட்டல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் அரங்கேறியது என கூறப்படுகிறது.

    இந்நிலையில், குற்றவாளிக்கு 25 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    • தாக்குதல் நடத்தப்பட்ட இரண்டு துறைமுகங்களும் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ளது.
    • ஆயுதங்கள் பரிமாற்றிக் கொள்ள துறைமுகங்களை பயன்படுத்தி வந்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மத்திய கிழக்குப் பகுதி சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த நாடு திரும்பிய நிலையில் இஸ்ரேல் காசா மீது தாக்குதலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஏமனில் உள்ள இரண்டு துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    தாக்குதல் நடத்திய ஹுதைதா மற்றும் சாலிஃப் ஆகிய இரண்டு துறைமுகங்களும் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றை ஆயுதங்கள் பரிமாற்றம் செய்வதற்கான ஹவுதி பயன்படுத்தி வருகிறது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.

    • கிளர்ச்சியாளர்களுக்கும் வீரர்களுக்கும் இடையில் கடும் சண்டை.
    • ஆயுதங்கள் மற்றும் அம்புகள் மூலம் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதால் ராணுவம் பதிலடி.

    இந்தோனேசியாவின் பதற்றமான பப்புவா பகுதியில் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

    20-க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் ராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் வில் அம்புகளுடன், இன்டான் ஜயாவில் உள்ள கிராமங்களில் சுகாதாரம் மற்றும் கல்வி சேவை வழங்க தயாராக இருந்த வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் மொதல் ஏற்பட்டது.

    ஆயுதம் ஏந்திய குழுக்கள் அரசு வீரர்களை தாக்கும்போது சூழ்நிலை மோசமானது. இதனால் அளவிடப்பட்ட மற்றும் தொழில்முறை நடவடிக்கை செயல்களை மேற்கொண்டோம் என ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

    பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிகள், அம்புகள், வெடிப்பொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றினர் எனவும் தெரிவித்துள்ளார்.

    • ரஷியா- உக்ரைன் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு போர் தொடங்கியது.
    • 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வரும் நிலையில், தற்போது நேரடி பேச்சுவார்த்தை நடக்கிறது.

    ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் படையெடுத்தது. தொடக்கத்தில் இருநாட்டு எல்லையில் உள்ள உக்ரைன் பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்தது.

    இதனால் 3 வருடங்களை தாண்டி இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. சண்டை நிறுத்த பல்வேறு தரப்பில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் உக்ரைன், ரஷியா பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளவில்லை.

    டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரமாக கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அப்போது உக்ரைன்- ரஷியா இடையே அமைதி ஏற்பட முயற்சி மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார்.

    அதன்படி உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது அமெரிக்கா. 30 நாள் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை அமெரிக்கா முன் வைத்துள்ளது.

    இந்த நிலையில் உக்ரைன் மற்றும் ரஷியா அதிகாரிகள் இன்று துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 வருடத்திற்குப் பிறகு இரு நாட்டு பிரதிநிதிகளும் நேருக்குநேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பேச்சுவார்தை முடிவில் போர் நிறுத்த ஏற்பட வாய்ப்புள்ளது. ரஷியா 30 நாள் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்து உக்ரைனில் இருந்து கடத்தப்பட்ட குழந்தைகளை திருப்பி அனுப்புவதுடன், போரின் போது பிடிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய முன்வந்தால் அமைதி ஏற்பட வாய்ப்புள்ளது என உக்ரைன் கருதுகிறது.

    அதேவேளையில் எல்லையில் படைகளை குவிக்கக் கூடாது, மேற்கத்திய நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி குவிப்பதை உக்ரைன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ரஷியா முன் வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் புதின் இதற்குத் தடையாக இருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றன, மேலும் அவர் அமைதியை விரும்புவதில் தீவிரம் காட்டவில்லை என்றும் கூறுகின்றன.

    • கடந்த மே 10 ஆம் தேதி ஒப்பந்தம் மூலம் மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
    • பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காம்ரா விமானப்படை தளத்தில் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் உரையாடினார்.

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. கடந்த மே 10 ஆம் தேதி ஒப்பந்தம் மூலம் மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

    இந்நிலையில் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்  அறிவித்தார்.

    இருப்பினும், இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு காஷ்மீர் பிரச்சினையும் ஒரு நிபந்தனையாக இருக்கும் என்பதை அவர் தெரிவித்தார். பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காம்ரா விமானப்படை தளத்தில் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் உரையாடும் போது ஷெபாஸ் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்

    ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அவற்றை ஒருபோதும் பிரிக்க முடியாது என்றும் இந்தியா ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×