என் மலர்tooltip icon

    உலகம்

    • ஸ்டார்லிங்க் ரெசிடென்ஸ் லைட் என்ற இரண்டு வகையான மாதாந்திர நெட்வொர்க் பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • பயனர்கள் 300 Mbps வரை இணைய வேகத்தை பெற முடியும்.

    அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் உடைய ஸ்டார்லிங்க் இணைய சேவை வங்கதேசத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    வங்கதேச இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ் உடைய சிறப்பு உதவியாளர் பைஸ் அகமது இதை உறுதிப்படுத்தி உள்ளார். ஸ்டார்லிங்க் ரெசிடென்ஸ், ஸ்டார்லிங்க் ரெசிடென்ஸ் லைட் என்ற இரண்டு வகையான மாதாந்திர நெட்வொர்க் பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    பயனர்கள் 300 Mbps வரை இணைய வேகத்தை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வங்கதேசத்தில் ஸ்டார்லிங்க் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது அது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    முன்னதாக கடந்த பிப்ரவரி 19 அன்று ஸ்டார்லிங்க் சேவையை வங்கதேசத்தில் வழங்க எலான் மஸ்க்கிற்கு முகமது யூனுஸ் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அரசின் இணைய சேவை கொள்கைகளை ஸ்டார்லிங்க் ஏற்க மறுப்புத்தால் அதன் சேவைகளை அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

    • கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் செல்லும் அனைத்து உதவிப்பொருட்களையும் இஸ்ரேல் நிறுத்திவைத்தது.
    • உணவைக் கொண்டு செல்வதில் நாங்கள் அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொள்கிறோம்"

    போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் மனிதாபிமான நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

    அடுத்த 48 மணி நேரத்திற்குள் கூடுதல் அவசர உதவி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், கிட்டத்தட்ட 14,000 குழந்தைகள் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) கவலை தெரிவித்துள்ளது.

    கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் செல்லும் அனைத்து உதவிப்பொருட்களையும் இஸ்ரேல் நிறுத்திவைத்தது. இந்நிலையில் நேற்று கனடா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நட்பு நாடுகளின் அழுத்தத்தின் கீழ், குறைந்த அளவிலான உதவிப்பொருட்களை காசாவுக்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதித்தது.

    இந்நிலையில் பிபிசி ரேடியோ 4 க்கு அளித்த பேட்டியில் ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் பேசுகையில், திங்களன்று ஐந்து லாரிகள் நிறைய மனிதாபிமான உதவிகள் மட்டுமே காசாவிற்குள் நுழைந்தன, அதில் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களும் அடங்கும்.

    இஸ்ரேலிய முற்றுகையின் பல வாரங்களுக்குப் பிறகு, இந்த உதவி கடலில் ஒரு துளி போன்றது. இந்த சிறிய அளவிலான உதவி கூட இன்னும் தேவைப்படுபவர்களை சென்றடையவில்லை. நாங்கள் அவர்களை அடையவில்லை என்றால், அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறந்துவிடுவார்கள்.

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத அவநம்பிக்கையான சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கும் உணவைக் கொண்டு செல்வதில் நாங்கள் அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில், இஸ்ரேல் உதவியைத் தடுத்ததையும், பாலஸ்தீனியர்களை பெருமளவில் வெளியேற்ற இஸ்ரேலின் அச்சுறுத்தல்களையும் அவர்கள் கடுமையாகக் கண்டித்தனர்.

    இதை குறிப்பிட்டு பேசிய டாம் பிளெட்சர், சர்வதேச சமூகம் தனது நிலைப்பாட்டை கடுமையாக்கியுள்ளது வரவேற்கத்தக்கது என்றார். மேலும் இன்று காசாவிற்கு குழந்தை உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை மேலும் 100 லாரிகளில் வழங்க ஐ.நா எதிர்பார்க்கிறது என்று அவர் கூறினார். அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த 14,000 குழந்தைகளில் முடிந்தவரை பலரைக் காப்பாற்ற விரும்புகிறோம்" என்று அவர் கூறினார்.  

    • சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயலாகும்.
    • காசாவிற்கு முழுமையாக உதவியை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்த நிலையில் உலக நாடுகளின் தலையீட்டால் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் இரு தரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் 2-ம் கட்ட போர் நிறுத்த பேச்சின் போது, இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஏற்க ஹமாஸ் தரப்பு மறுத்தது. இதனால் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் இஸ்ரேலுக்கு அதன் நட்பு நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகியவை திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், காசாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் சகிக்க முடியாதது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அரசாங்கம் இந்த மோசமான நடவடிக்கைகளைத் தொடரும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம்.

    இஸ்ரேல் தனது ராணுவத் தாக்குதலை நிறுத்தி, மனிதாபிமான உதவி மீதான கட்டுப்பாடுகளை நீக்காவிட்டால் இஸ்ரேலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம். பொதுமக்களுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவியை இஸ்ரேல் தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயலாகும். இஸ்ரேல் உடனடியாக காசாவிற்கு முழுமையாக உதவியை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மனிதாபிமான உதவிகளை, காசாவிற்குள் முழுமையாக அனுமதிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

    • சபாநாயகர் சர்தார் ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பரிசீலித்து வருகிறது.
    • பாகிஸ்தான்-இந்தியா இடையே ஏற்பட்ட பதட்டங்கள் காரணமாக தற்காலிகமாக பின்வாங்கினோம்.

    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதை இந்தியா ராணுவம் முறியடித்தது. மேலும் பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின் 4 நாட்களுக்கு பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இந்தியாவுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீ்பபுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இம்ரான்கான் கட்சியான பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி முடிவு செய்து உள்ளது.

    தெக்ரீக்-இ-இன்சாப் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பரிசீலித்து வருகிறது. இதை தெக்ரீக்-இ-இன்சாப் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான அசாத் கைசர் உறுதி செய்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை நாங்கள் பரிசீலனையில் வைத்திருக்கிறோம். பாகிஸ்தான்-இந்தியா இடையே ஏற்பட்ட பதட்டங்கள் காரணமாக தற்காலிகமாக பின்வாங்கினோம். தற்போது பதட்டம் குறைந்ததால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர உள்ளோம் என்றார்.

    இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள் சேதமடைந்ததை ஷபாஸ் ஷெரீப் சமீபத்தில் ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியர்களுக்கு மீண்டும் அமெரிக்காவிற்கு வர நிரந்தர தடை விதிக்கப்படும்
    • டிரம்பின் இந்த புதிய அறிவிப்பால் அங்கு வசித்து வரும் 45 லட்சம் இந்தியர்களும் அதிர்ச்சி

    அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் என இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    விசா முடிந்தும் வெளியேறாத இந்தியர்களுக்கு மீண்டும் அமெரிக்காவிற்கு வர நிரந்தர தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

    அதிபர் டிரம்பின் இந்த புதிய அறிவிப்பால் அங்கு வசித்து வரும் 45 லட்சம் இந்தியர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    • ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது.
    • 3 ஆண்டுக்கு மேலாக சண்டை நடந்துவரும் நிலையில் நேரடி பேச்சுவார்த்தை நடந்தது.

    ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் சம்மதம் தெரிவித்தார்.

    இரு நாட்டு பிரதிநிதிகளும் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைக்காக நேற்று முன்தினம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கூடினர். துருக்கி நாட்டின் அதிகாரிகள் நடுநிலை வகித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷிய அதிபர் புதினிடம் தொலைபேசியில் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

    இது தொடர்பான டிரம்பின் எக்ஸ் பதிவில், "ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இரண்டு மணி நேரம் தொலைபேசியில் உரையாடினேன். ரஷ்யாவும் உக்ரைனும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும் என்று நம்புகிறேன். போர் நிறுத்தத்திற்கான நிபந்தனைகள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    இந்த போர் முடிந்தவுடன் அமெரிக்காவுடன் பெரிய அளவிலான வர்த்தகம் செய்ய ரஷ்யா விரும்புகிறது. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். புதிய வேலைவாய்ப்புகள், மற்றும் செல்வதை உருவாக்க ரஷ்யாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. அதேபோல், உக்ரைன் தனது நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வர்த்தகத்தில் பெரும் பயனாளியாக இருக்க முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.

    அதே சமயம், இனி எக்காலத்திலும் நேட்டோவில் உக்ரைன் சேரக்கூடாது என்றும் கிரீமியா பகுதி முழுமையாக ரஷியாவுக்கே அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் ரஷியா நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், ரஷியாவுக்கு எதிரான பொருளாதார தடைகள் தொடர வேண்டும் என்று தொலைபேசியில் பேசிய டிரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுதியாக கூறப்படுகிறது

    • வடக்கு சுலேவேசியில் உள்ள டோகா திண்டுங் தங்க சுரங்கம் மிகப்பெரிய தங்க சுரங்கங்களில் ஒன்றாகும்.
    • வடக்கு பப்புவாவில் கனமழை பெய்ந்தது.

    ஜகர்த்தா:

    தெற்காசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டது. ஆசிய நாடுகளிலேயே தங்க உற்பத்தியில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து மட்டும் சுமார் 100 டன் அளவில் உலக நாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி ஆனது.

    வடக்கு சுலேவேசியில் உள்ள டோகா திண்டுங் தங்க சுரங்கம் மிகப்பெரிய தங்க சுரங்கங்களில் ஒன்றாகும். மேலும் கிழக்கு ஜாவாவில் உள்ள சும்பெராகுங் தங்க சுரங்கம், தும்பாங் தங்க சுரங்கம் என அரசு சார்பிலும் தனியார் நிறுவனங்களும் தங்க சுரங்கங்களை தோண்டி தங்கத்தை வெட்டி எடுத்து வருகின்றன. இருப்பினும் நாடு முழுவதும் ஆங்காங்கே சட்டவிரோதமாக தங்க சுரங்கங்கள் தோண்டப்பட்டு தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

    உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் இந்த சுரங்கங்களால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுவது மட்டுமின்றி அவ்வப்போது அசாம்பாவித சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இதனால் இவற்றை அகற்ற அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இந்தநிலையில் மேற்கு பப்புவா மாகாணம் ஏர்பாக் மலைப்பகுதி அருகே சட்டவிரோதமாக தங்க சுரங்கம் தோண்டப்பட்டு தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சுரங்கத்தில் உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று வடக்கு பப்புவாவில் கனமழை பெய்ந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சட்டவிரோத தங்க சுரங்கத்துக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. தொழிலாளர்கள் பலர் தங்கம் வெட்டி எடுத்து கொண்டிருந்த சமயத்தில் அந்த சுரங்கம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

    இடிபாடுகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 20-க்கும் மேற்பட்டோரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உயிரிழந்த 6 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    • புற்றுநோய் ஜோ பைடனின் எலும்புகளுக்கும் பரவி உள்ளது.
    • மருத்துவமனையில் ஜோ பைடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான Prostate வகை புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புற்றுநோய் ஜோ பைடனின் எலும்புகளுக்கும் பரவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு மிக மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    • காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் 3 நிபந்தனைகள் விதித்துள்ளது.
    • பிணைய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.

    இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு பிறகு காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.

    இந்நிலையில், காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் 3 நிபந்தனைகள் விதித்துள்ளது. அதாவது பிணைய கைதிகளை விடுதலை செய்து ஹமாஸ் அமைப்பு நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் காசாவில் ஆயுதங்கள் இருக்க கூடாது என்று இஸ்ரேல் நிபந்தனைகள் விதித்துள்ளது.

    மேலும், உலக நாடுகளின் அழுத்தத்தால் உணவு பஞ்சம் அதிகரித்துள்ள காசாவுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.

    • உலக நாடுகளின் கடன் திறனை 'AAA'-ல் இருந்து C வரை மூடிஸ் நிறுவனம் மதிப்பிட்டு வருகிறது.
    • இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவின் கடன் ரேட்டிங் குறைக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் கிரெடிட் ரேட்டிங்கை 'AAA'-வில் இருந்து 'Aa1' ஆக மூடிஸ் நிறுவனம் குறைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உலக நாடுகளின் கடன் திறனை 'AAA'-ல் இருந்து C வரை மூடிஸ் நிறுவனம் மதிப்பிட்டு வருகிறது.

    இந்நிறுவனம் அமெரிக்காவின் கடன் ரேட்டிங்கை 'AAA' (outlook)-ல் இருந்து 'Aa1' (Stable) ஆக குறைத்தது அந்நாட்டில் பேசுபொருளாகியுள்ளது.

    இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவின் கடன் ரேட்டிங்கை 'Aa1' ஆக மூடிஸ் நிறுவனம் குறைத்ததால் அமெரிக்க பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.

    • நைஜீரியாவில் பயங்கரவாதிகள் சிலர் கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
    • இந்த தாக்குதலில் அப்பாவி விவசாயிகள் 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    அபுஜா:

    மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்த நாட்டில் ஐ.எஸ், அல்–கொய்தா, போகா ஹாரம் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. மேலும், ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்களும் ஊடுருவி உள்ளனர்.

    போகோ ஹாரம் எனும் கொடூர கடத்தல் கும்பல்களும் நைஜீரியாவில் செயல்படுகின்றன. இதனால் பயங்கரவாதிகளின் கூடாரமாக இருக்கும் நைஜீரியாவில் அவ்வப்போது பாதுகாப்புப் படையினர், அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், போகோ ஹாரம் என்ற கும்பல் போர்னோ மாகாணம் மாளம் கராண்தி கிராமத்தை சூறையாட முடிவு செய்தனர். அதன்படி நள்ளிரவில் கிராம மக்கள் அசந்து தூங்கி கொண்டிருந்த சமயத்தில் கொள்ளை கும்பல் ஊடுருவியது. அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்தியது.

    கண்ணில் படுபவர்கள் மீது கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டும், வாளால் வெட்டி வீசியும் கொடூர தாக்குதல் நடத்தி அங்கிருந்த தானியங்கள், விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.

    இந்த தாக்குதலில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 23 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக செத்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பெண்கள், சிறுமிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கொள்ளை கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

    தகவலறிந்த ராணுவத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொள்ளை கும்பலிடம் பிணைய கைதிகளாகச் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    • இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு தொகை விடுவிக்கப்பட்டது.
    • பாகிஸ்தானுக்கு கூடுதலாக 11 புதிய நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதித்தது.

    இஸ்லாமாபாத்:

    நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் கடன் வழங்க கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல் தவணையாக 110 கோடி டாலர் பாகிஸ்தானுக்கு ஏற்கனவே விடுவிக்கப்பட்டது.

    பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு 2வது தவணையாக 8,670 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக ஐ.எம்.எப். அறிவித்தது. இதற்கு நம் நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கும் முடிவை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.

    இந்நிலையில், அடுத்த தவணையை விடுவிக்க பாகிஸ்தானுக்கு கூடுதலாக 11 புதிய நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியானது. இவற்றையும் சேர்த்து மொத்த நிபந்தனைகள் 50 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த 11 நிபந்தனைகளில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான நிபந்தனை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×