என் மலர்tooltip icon

    உலகம்

    • மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 688 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் எந்த உணவு மற்றும் உதவிப் பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவில்லை.

    பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 53,587 ஆக அதிகரித்துள்ளது. காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் கடந்த 2023 அக்டோபரில் அந்நாட்டில் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் வரை பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    இதற்கு பழிவாங்கும் வகையில் கடந்த 2 வருடங்களாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் உயிரிழந்தவர்களில் பெரும்பாண்யானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா தரவுகள் தெரிவிக்கின்றன.

    கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் எந்த உணவு மற்றும் உதவிப் பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. இதனால் 14,000 குழந்தைகள் அடுத்த சில நாட்களில் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக ஐநா தெரிவித்தது. மேலும் காசாவை முழுமையாக கைப்பற்ற போவதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்தார்.

    இதனை கண்டித்து கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் வெளியில் இருந்து எந்த அழுத்தத்தையும் ஏற்க போவதில்லை என நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இந்நிலையில் காசாவில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 84 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53,587 ஆக அதிகரித்துள்ளது.

    மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 688 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருபுறம் வெடிகுண்டு தாக்குதல், மறுபுறம் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சம் என இரண்டினாலும் காசா மக்களை மரணம் துரத்துகிறது. 

    • இஸ்ரேலுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை இங்கிலாந்து ரத்து செய்தது.
    • காசாவில் கடும் உணவு பஞ்சம் நிலவுகிறது.

    பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்த நிலையில் உலக நாடுகளின் தலையீட்டால் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் இரு தரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் 2-ம் கட்ட போர் நிறுத்த பேச்சின் போது, இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஏற்க ஹமாஸ் தரப்பு மறுத்தது. இதனால் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில் நட்பு நாடுகளில் இருந்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டு, நேதன்யாகுவின் திட்டத்திற்கும், காசாவுக்குள் கடந்த 11 வாரங்களாக உணவு மற்றும் உதவிப்பொருட்கள் செல்ல விடாமல் செய்ததற்கும் கடும் கண்டனம் தெரிவித்தன.

    மேலும், இஸ்ரேலுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக இங்கிலாந்து அறிவித்தது.

    இந்நிலையில், காசா மீதான தாக்குதலுக்கு எதிராக பிற நாடுகளில் இருந்து வரும் புற அழுத்தத்திற்கு தங்கள் நாடு ஒருபோதும் அடிபணியாது என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

    • 1375 ஆம் ஆண்டில் மிங் வம்சத்தின் போது இந்த கோபுரம் கட்டப்பட்டது.
    • 2017 ஆண்டில் இந்த கோபுரத்தின் கூரை ஓடுகள் சேதமடைந்தன.

    சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள 650 ஆண்டுகள் பழமையான ஃபெங்யாங் டிரம் கோபுரத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

    கோபுரத்தின் கூரை இடிந்து விழுந்த சமயத்தில் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்ப்படவில்லை.

    கோபுரத்தின் கூரை இடிந்து விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    1375 ஆம் ஆண்டில் மிங் வம்சத்தின் போது இந்த கோபுரம் கட்டப்பட்டது. 2017 ஆண்டில் இந்த கோபுரத்தின் கூரை ஓடுகள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ரோபோக்களுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி மே 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
    • குத்துச்சண்டை போட்டிக்காக தீவிர பயிற்சியில் மனித ரோபோக்கள் ஈடுபட்டு வருகின்றன.

    சீனாவின் ஹாங்சூ (Hangzhou) நகரில் மனித ரோபோக்களுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி மே 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இந்த குத்துச்சண்டை போட்டிக்காக தீவிர பயிற்சியில் மனித ரோபோக்கள் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், பயிற்சியில் ஈடுபடும் மனித ரோபோக்களின் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

    • வெனிசுலாவில் வரும் 25-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலா அரசாங்கம் தடை விதித்துள்ளது.

    கராகஸ்:

    தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் மோசடி நடந்ததாகக்கூறி எதிர்க்கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். அப்போது எதிர்க்கட்சியினருக்கு கொலம்பியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் ஆதரவு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதற்கிடையே, வரும் 25-ம் தேதி அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை சீர்குலைக்கும் வகையில் நடைபெறும் போராட்டத்தில் தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. இதுதொடர்பாக கொலம்பியா, மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த 17 பேர் உள்பட சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலா அரசாங்கம் தடை விதித்துள்ளது. தேர்தல் முடியும் வரை இந்தத் தடை நீடிக்கும் என வெனிசுலா உள்துறை மந்திரி டியோஸ்டாடோ கபெல்லோ தெரிவித்துள்ளார்.

    • நடப்பு ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கான இறுதிப்பட்டியலில் 6 புத்தகங்கள் இடம்பிடித்தன.
    • பானு முஷ்டாக் கன்னட மொழியில் எழுதிய நூலை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

    லண்டன்:

    ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அல்லது மொழிபெயர்க்கப்பட்டு பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் புத்தகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் புகழ்வாய்ந்த இலக்கிய பரிசான சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.

    நடப்பு ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் 6 புத்தகங்கள் இடம்பிடித்தன. இதில் தென்னிந்திய மொழிகளில் ஒன்றான கன்னட மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட ஹார்ட் லாம்ப் எனும் நூலும் ஒன்றாகும்.

    இந்நிலையில், கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய ஹார்ட் லாம்ப் எனும் புத்தகம் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது.

    பானு முஷ்தாக் கன்னட மொழியில் எழுதிய இந்த நூலை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். குடும்பம், சமூகப் பதற்றங்களுக்கிடையே இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் அன்றாட வாழ்வியல் சார்ந்த பதிவுகளைச் சிறுகதைகளாக எடுத்துரைக்கிறது இந்த நூல்.

    புக்கர் பரிசு பெறும் புத்தக்கத்துக்கு 50,000 யூரோ பரிசுத்தொகை வழங்கப்படும். வெற்றி பெற்ற எழுத்தாளருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் பரிசுத்தொகை சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.

    • ஹபீஸ் சயீத் 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் முக்கிய பங்காற்றியவர்.
    • பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

    ஜெருசலம்:

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளை மற்ற நாடுகள் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது.

    இந்நிலையில், இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜே.பி. சிங் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    மதத்தின் அடிப்படையில் பயங்கரவாதிகள் மக்களைக் கொல்கின்றனர். அவர்களை கொல்லும் முன் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என கேட்டுள்ளனர். அதன்பின்னரே கொன்றுள்ளனர். இதற்கு இந்தியா பதிலடி தந்துள்ளது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்பது தற்காலிகமாக தான் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அது இன்னமும் முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் தொடரும். அவர்கள் எங்கிருந்தாலும் அழிப்போம்.

    பயங்கரவாதிகள் தொடர்பு குறித்து நாங்கள் தொழில்நுட்ப ரீதியான உள்ளீடுகளை அளித்துள்ளோம். அமெரிக்கா ஆதாரங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் பயங்கரவாதிகள் சுற்றித் திரிகின்றனர்.

    ராணாவை ஒப்படைக்க அமெரிக்காவால் முடியும்போது, பாகிஸ்தானால் ஏன் பயங்கரவாதிகளை (ஹபீஸ் சயீத், சாஜித் மிர், ஜாகிர் ரஹ்மான் லக்வி) ஒப்படைக்க முடியாது.

    எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்கவே முடியாது என பிரதமர் மோடி ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார் என தெரிவித்தார்.

    பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ப்ளூம்பெர்க் அமைப்பு கத்தார் பொருளாதார மாநாடு நடத்துகிறது.
    • கடந்த சில மாதங்களாக டெஸ்லா கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளது.

    ப்ளூம்பெர்க் அமைப்பு இன்று ஏற்பாடு செய்த 'கத்தார் பொருளாதார மாநாட்டில் ' அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் காணொளி வாயிலாக பங்கேற்றார்.

    இதன் போது, ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் மஸ்க்கிடம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் எதிர்காலம் குறித்து ஒரு கேள்வியைக் கேட்டார்.

    இதற்கு பதிலளித்த மஸ்க், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீடிக்க உறுதிபூண்டுள்ளதாகக் கூறினார்.

    கடந்த சில மாதங்களாக டெஸ்லா கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளது. அதிபர் டோனால்டு டிரம்பின் நிர்வாகத்தில் மஸ்க் ஆதிக்கம் செலுத்துவதே இதற்கு காரணம்.

    அமெரிக்க அரசாங்கத்தில் செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வரும் குழுவில் மஸ்க் உள்ளார். இந்த துறையால் அமெரிக்க அரசில் பலரின் வேலை பறிபோனது. இதற்கு எதிராக பல டெஸ்லா ஷோரூம்களுக்கு வெளியே போராட்டங்களும் டெஸ்லா கார்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் நடந்து வருகின்றன. 

    • காசாவில் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் மீது இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர்.
    • வெளிப்படையாகச் சொன்னால், இது பிரிட்டிஷ் மக்களின் மதிப்புகளுக்கு அவமானம்.

    இஸ்ரேல் முழு காசா பகுதியையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என்று கடந்த வாரம் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். மேலும் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து, காசாவிற்குள் மருத்துவப் பொருட்கள், உணவு மற்றும் எரிபொருள் நுழைவதை இஸ்ரேல் தடுத்துள்ளது, இதனால் சர்வதேச நிபுணர்கள் வரவிருக்கும் பஞ்சம் குறித்து எச்சரித்தனர்.

    இந்நிலையில் நட்பு நாடுகளில் இருந்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டு, நேதன்யாகுவின் திட்டத்திற்கும், காசாவுக்குள் கடந்த 11 வாரங்களாக உணவு மற்றும் உதவிப்பொருட்கள் செல்ல விடாமல் செய்ததற்கும் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இதன் விளைவாக சொற்ப அளவிலான உணவு மற்றும் உதவிகளை காசாவுக்குள் இஸ்ரேல் அனுமதித்துள்ளது. இருப்பினும் அதை கூட மக்களிடம் கொண்டு சேர்ப்பது சிக்கலாக உள்ளதாக ஐநா தெரிவித்தது.

    இந்த சூழலில் இஸ்ரேலுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைப்பதாக இங்கிலாந்து அறிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இங்கிலாந்து இஸ்ரேல் தூதருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி பேசுகையில்,

    "இந்தப் புதிய சீரழிவை பார்த்து அமைதியாக இருக்க முடியாது. இது நமது இருதரப்பு உறவை ஆதரிக்கும் கொள்கைகளுடன் பொருந்தாது. வெளிப்படையாகச் சொன்னால், இது பிரிட்டிஷ் மக்களின் மதிப்புகளுக்கு அவமானம்.

    எனவே, இந்த இஸ்ரேலிய அரசாங்கத்துடனான புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை நாங்கள் நிறுத்திவிட்டதாக அறிவிக்கிறேன்" என்று தெரிவித்தார். இதற்கிடையே காசாவில் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் மீது இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர்.  

    • ஒரு வாரத்தில் நேபாளத்தைத் தாக்கும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.
    • காஸ்கியின் சில பகுதிகளிலும், அருகிலுள்ள தனஹு, பர்வத் மற்றும் பாக்லங் மாவட்டங்களிலும் நிலஅதிர்வு ஏற்பட்டது.

    இமயமலையை ஒட்டிய நேபாளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (NEMRC) தெரிவித்துள்ளது.

    ஒரு வாரத்தில் நேபாளத்தைத் தாக்கும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஸ்கி மாவட்டத்தின் சினுவா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டது.

    இந்த நிலநடுக்கம் காரணமாக, காஸ்கியின் சில பகுதிகளிலும், அருகிலுள்ள தனஹு, பர்வத் மற்றும் பாக்லங் மாவட்டங்களிலும் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். இருப்பினும், உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை.

    நேபாளத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு, மே 14 அன்று, கிழக்கு நேபாளத்தில் உள்ள சோலுகும்பு மாவட்டத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் அமைதியை நாடினாலும், தங்கள் தேசிய கௌரவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கத் தயங்காது
    • பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அசிம் முனீர் தலைமையிலான இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கியது.

    பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீருக்கு ஃபீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.

    இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் மோதலில் முக்கிய முகமாக விளங்கிய அசிம் முனிர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

    பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவுடனான மோதலில் முன்மாதிரியான பங்கிற்காக முனீர் பதவி உயர்வு பெற்றதாக அரசு நடத்தும் தொலைக்காட்சி சேனல் பிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. ஃபீல்ட் மார்ஷல் என்பது ராணுவத்தின் உச்சபட்ச பதவியாக கருதப்படுகிறது. 

    பாகிஸ்தான் அமைதியை நாடினாலும், தங்கள் தேசிய கௌரவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று அசிம் முனீர் முன்னர் தெரிவிருந்தார்.

    ராணுவ ஜெனரல் ஆவதற்கு முன்னர், முனீர் நாட்டின் உளவுத்துறை நிறுவனமான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI)-க்கு தலைமை தாங்கினார்.

    பிப்ரவரி 2019 இல் புல்வாமா தாக்குதலில் 40 CRPF வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்தன.

    நவம்பர் 2022 இல், ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவுக்குப் பதிலாக ஜெனரல் அசிம் முனீர் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.

    அசிம் முனீர் 2022 முதல் பாகிஸ்தானில் 11வது ராணுவத் தளபதியாகப் பணியாற்றி வருகிறார். நவம்பர் 2024 இல், ராணுவத் தளபதியாக அவரது பதவிக்காலம் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. சமீபத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அசிம் முனீர் தலைமையிலான இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

    • பெண் தோழியை வீட்டிற்கு வரவழைத்து கற்பழித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
    • உயர்நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய நிலையில், உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

    திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த பெண் தோழியை கற்பழித்து கொடூரமாக தலையை துண்டித்து கொலை செய்த ஜாகிர் ஜாபரின் மரண தண்டனையை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளனர்.

    கடந்த 2021ஆம் ஆண்டு பாகிஸ்தான் அமெரிக்கரான ஜாகீர் ஜாபர், தனது பெண் தோழியான நூர் முகதமிடம் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். இதற்கு நூர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் பெண் தோழியை இஸ்லாமாபாத்தில் உள்ள வீட்டில் வைத்து கொடூரமாக தாக்கியதுடன் கற்பழித்துள்ளார். அதோடு விடாமல் பெண் தோழியின் கழுத்தை துண்டான வெட்டி கொலை செய்துள்ளார்.

    இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று, ஜாகிர் ஜாபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜாகிர் ஜாபர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.

    நூர் முன்னாள் தூதரின் மகள் ஆவார். ஜாகீர் ஜாபரின் பிடியில் இருந்து தொடரந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரது வீட்டில் வேலை செய்யும் இருவரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். பின்னர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது முன்கூட்டியே திட்டமிட்டது என விசாரணையின்போது ஜாகிர் ஜாபர் ஒப்புக்கொண்டார்.

    கற்பழிப்பு மற்றும் கொலை செய்த வழக்கில் ஜாபருக்கு கடந்த 2022ஆம் ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது. வீட்டு வேலைக்காரர்கள் இருவருக்கு தலா 10 வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

    ×