என் மலர்
உலகம்

இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 84 பேர் உயிரிழப்பு.. 53,500-ஐ கடந்த பலி எண்ணிக்கை
- மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 688 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் எந்த உணவு மற்றும் உதவிப் பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவில்லை.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 53,587 ஆக அதிகரித்துள்ளது. காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் கடந்த 2023 அக்டோபரில் அந்நாட்டில் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் வரை பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதற்கு பழிவாங்கும் வகையில் கடந்த 2 வருடங்களாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் உயிரிழந்தவர்களில் பெரும்பாண்யானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் எந்த உணவு மற்றும் உதவிப் பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. இதனால் 14,000 குழந்தைகள் அடுத்த சில நாட்களில் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக ஐநா தெரிவித்தது. மேலும் காசாவை முழுமையாக கைப்பற்ற போவதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்தார்.
இதனை கண்டித்து கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் வெளியில் இருந்து எந்த அழுத்தத்தையும் ஏற்க போவதில்லை என நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் காசாவில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 84 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53,587 ஆக அதிகரித்துள்ளது.
மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 688 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருபுறம் வெடிகுண்டு தாக்குதல், மறுபுறம் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சம் என இரண்டினாலும் காசா மக்களை மரணம் துரத்துகிறது.






