என் மலர்
உலகம்
- சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் டிக் டாக் செயலியை நிர்வகித்து வருகிறது.
- டிக் டாக் செயலியின் பெரும்பாலான கட்டுப்பாட்டை அமெரிக்கா கையகப்படுத்த முடிவு
டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.
சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் இச்செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலிக்கு ஜோ பைடன் அரசு தடை விதித்தது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி 19 முதல் அமலில் உள்ளது. இதனால் தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால் டிக்டாக் செயலிக்கு வழங்கப்பட்ட கெடுவை தற்போது வரை அதிபர் டிரம்ப் தொடர்ந்து நீட்டிப்பு செய்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் டிக் டாக் செயலி மீண்டும் செயல்படும் ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் டிரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார். டிக் டாக் செயலியின் பெரும்பாலான கட்டுப்பாட்டை அமெரிக்கா கையகப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
17 கோடி அமெரிக்க பயனர்களைக் கொண்ட டிக்டாக், கடந்த ஆண்டு தேர்தலில் வெற்றிபெற உதவியதாக டிரம்ப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தலைநகர் கராகசுக்கு மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜூலியா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் கராகசுக்கு மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜூலியா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2-ஆக பதிவானது. 7.8 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த பயங்கர நிலநடுக்கம் பக்கத்து மாகாணங்களிலும் உணரப்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. உடனே பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அண்டை நாடான கொலம்பியாவிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
- புதினும் ரஷியாவும் பெரும் பொருளாதாரச் சிக்கலில் உள்ளனர்.
- உக்ரைன் செயல்பட இதுவே சரியான நேரம்.
உக்ரைன் போர் விவகாரத்தில், ரஷிய அதிபர் புதினை இதுவரை மென்மையாகக் கையாண்டு வந்த டிரம்ப், சமீபத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பேசிய டிரம்ப், ரஷியா ஒரு காகிதப் புலி என்றும் இழக்கப்பட்ட போரை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
ரஷியாவல் போரை விரைவாக வெல்ல முடியவில்லை என்றும் கேலி செய்த டிரம்ப், உக்ரைன் தனது இழந்த பகுதிகள் அனைத்தையும் ரஷிய படைகளிடம் இருந்து மீட்க முடியும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
மேலும்,"புதினும் ரஷியாவும் பெரும் பொருளாதாரச் சிக்கலில் உள்ளனர்; உக்ரைன் செயல்பட இதுவே சரியான நேரம்" என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஆர்.பி.சி. வானொலியில் பேசுகையில், "ரஷ்யா ஒருபோதும் புலி அல்ல. அது பாரம்பரியமாகவே கரடியாக பார்க்கப்படுகிறது. காகிதத்தால் ஆன கரடி என்று ஒன்று இல்லை. ரஷியா ஒரு உண்மையான கரடி... அதில் காகிதம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று தெரிவித்தார்
மேலும், 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீதான முழு அளவிலான தாக்குதலைத் தொடர்ந்து மேற்குலக நாடுகள் விதித்த தடைகள் காரணமாக சில பதட்டங்கள் இருந்தாலும், ரஷியா பொருளாதார நிலைத்தன்மையுடன் நீடிப்பதாகவும் பெஸ்கோவ் தெரிவித்தார்.
- ஜார்ஜியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளை புதினின் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றும் வாய்ப்பை மேற்குலகம் ஏற்கனவே தவறவிட்டுவிட்டது.
- ஆயிரக்காணக்கான உக்ரைன் குழந்தைகளை ரஷியா கடத்திச் சென்றுள்ளது.
80வது ஐநா பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடந்து வருகிறது.
நேற்றைய கூட்டத்தில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "புதினை இப்போது தடுத்து நிறுத்தவில்லை என்றால், உக்ரைனின் எல்லைகளுக்கு அப்பால் ஐரோப்பாவுக்கும் போரை விரிவுபடுத்துவார்.
ரஷிய டிரோன்கள் மற்றும் ஜெட் விமானங்கள் நேட்டோ வான்வெளியில் அத்துமீறி நுழைகின்றன.
ரஷியாவை இப்போதே தடுத்துநிறுத்த ஐ. நா கட்டாயம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
நேச நாடுகள் ஒன்றிணைந்து உக்ரைனுக்கு ஆதரவு கொடுத்தால் மட்டுமே ரஷியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து பிற நாடுகளைக் காப்பாற்ற முடியும்.
ஜார்ஜியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளை புதினின் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றும் வாய்ப்பை மேற்குலகம் ஏற்கனவே தவறவிட்டுவிட்டது. அதேபோல ஐரோப்பிய நாடுகள் மோல்டோவாவையும் ரஷியாவிடம் இழந்துவிடக் கூடாது.
ஆயிரக்காணக்கான உக்ரைன் குழந்தைகளை ரஷியா கடத்திச் சென்றுள்ளது. அவர்களில் சிலரை மட்டுமே மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம்.
அவர்கள் அனைவரையும் மீட்க இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்? அவர்களை நாம் மீட்பதற்குள் தங்கள் குழந்தைப் பருவத்தை அவர்கள் கடந்துவிடுவர் போலத் தெரிகிறது.
தற்போது உலகின் ராணுவத் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் மனித வரலாற்றிலேயே மிக அழிவுகரமான ஆயுதப் போட்டியில் வாழ்கிறோம். "யார் பிழைக்கிறார்கள் என்பதை ஆயுதங்களே தீர்மானிக்கின்றன.
டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் போன்ற ஆயுதங்கள், பாரம்பரியப் போர்களை விட அதிக ஆபத்தை உருவாக்குகின்றன.
ராணுவ ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்துவது குறித்து சர்வதேச விதிகள் தேவை.
சர்வதேச அமைப்புகள் உக்ரைனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்குவதில் மிகவும் பலவீனமாக செயல்படுகின்றன. நேட்டோவில் இருப்பது மட்டுமே பாதுகாப்பைக் கொடுக்காது.
- விளையாட்டில் டார்கெட்களை அடைய முடியாதபோது சிறுவன் ஆக்ரோஷமடைவது வழக்கம்.
- விளையாட்டின் தாக்கத்தால் இந்தக் கொலையைச் செய்ததாகக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
பாகிஸ்தானில் ஆன்லைன் PUBG விளையாட்டில் ஏற்பட்ட வெறியின் உச்சத்தில் தனது தாயார் மற்றும் மூன்று சகோதரர்களை சுட்டுக் கொன்ற 17 வயதுச் சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
லாகூரின் கஹ்னா பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஜைன் அலி. 2022 இல் இந்த சம்பவம் நடந்த போது ஜைன் அலிக்கு 14 வயது.
PUBG விளையாட்டில் தீவிரமாக அடிமையாக இருந்த சிறுவன், விளையாட்டில் அதிக நேரத்தைச் செலவழிப்பதாகத் தாயார் நாகித் முபாரக் (45) கண்டித்து வந்தார்.
மேலும், விளையாட்டில் டார்கெட்களை அடைய முடியாதபோது சிறுவன் ஆக்ரோஷமடைவது வழக்கம்.
அப்போது ஒரு நாள், பல மணி நேரம் PUBG விளையாடிய ஜைன் அலி, ஒரு இலக்கைத் தவறவிட்டதால் ஆத்திரமடைந்தான். அதேநேரம் தாயாரும் சிறுவனை அதிக நேரம் விளையாட்டில் மூழ்கியிருப்பதாக கண்டிக்கவே அவன் மேலும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தாயார் நாகித் முபாரக், அண்ணன் தைமூர் (20), மற்றும் இரண்டு சகோதரிகள் மஹ்னூர் (15), ஜன்னத் (10) ஆகியோர் தூங்கும் சமயத்தில் வீட்டில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சிறுவன் ஜைன் அலி அவர்களை சுட்டுக் கொன்றான்.
விளையாட்டின் தாக்கத்தால் இந்தக் கொலையைச் செய்ததாகக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த வழக்கை விசாரித்த லாகூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
குற்றவாளி ஜைன் அலிக்கு அவனது வயது காரணமாக, மரண தண்டனைக்குப் பதிலாக நான்கு ஆயுள் தண்டனைகள் (ஒவ்வொரு கொலைக்கும் 25 ஆண்டுகள்) என மொத்தம் 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 4 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
- மால் ஹயாம் ஷாப்பிங் சென்டர் அருகே ஏராளமான உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் கூடியிருந்தனர்.
- இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் நடத்திய பதில் தாக்குதல்களில் மக்கள் படுகாயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது ஏமனில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் நடத்திய தாக்குதல்களில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இஸ்ரேலின் அயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பை கடந்து நேற்று பின்னேரத்தில் டிரோன்கள் நகரத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டது.
சுற்றுலா நகரமாக அறியப்படும் ஏலாட்டில் உள்ள மால் ஹயாம் ஷாப்பிங் சென்டர் அருகே ஏராளமான உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் கூடியிருந்த பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடையாதோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஏமனில் இருந்து இஸ்ரேலின் மீது தொடர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று யூகிக்கப்படுகிறது.
டிரோன்களை தகர்க்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் நடத்திய பதில் தாக்குதல்களில் மக்கள் படுகாயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு படை விசாரணை நடத்தி வருகிறது.
- அமெரிக்கக் கனவுடன் வாழும் இந்தியர்கள் மத்தியில் இது பொது விவாதமாக மாறியுள்ளது.
- நெட்டிசன்கள் பலரும் இந்தப் பதிவைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.
H-1B திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.
இந்நிலையில், H-1B விசா வைத்திருக்கும் கணவரை விவாகரத்து செய்துவிட்டு Green Card வைத்திருக்கும் நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா என்ற இந்திய பெண்ணின் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப் பெண், தனது போஸ்டில் விசா தொடர்பான மன அழுத்தத்தையும், எதிர்கால அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் கேள்வி சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அமெரிக்கக் கனவுடன் வாழும் இந்தியர்கள் மத்தியில் இது பொது விவாதமாக மாறியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்தப் பதிவைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
விசா கட்டண உயர்வு போன்ற சமீபத்திய சம்பவங்களால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவே இது என பலர் கருத்து தெரிவித்தனர்.
அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விரும்பும் பலர், விசா மற்றும் கிரீன் கார்டு தொடர்பான பிரச்சனைகளால் பாதிப்பு அடைகிறார்கள் என்பதையும் இப்பதிவு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
- கிட்டத்தட்ட 160 அடிக்கு மேலாக பெரும் பள்ளம் ஏற்பட்டது.
- பள்ளத்தில் வாகனங்கள் மட்டுமில்லாமல் மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சாலையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் கார்கள் விழுந்தது நொறுங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கிட்டத்தட்ட 160 அடிக்கு மேலாக பெரும் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் வாகனங்கள் மட்டுமில்லாமல் மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. ஆனால் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலைக்கு அடியில் இருந்த சுத்திகரிப்பு குழாய்கள் வெடித்ததால் இந்த பெரும் பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- தான் அதிபராக பதவி ஏற்ற பிறகு 7 போர்களை நிறுத்தி உள்ளேன் என்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
- இந்தியா-பாகிஸ்தான் சண்டையும் என்னால் தான் தீர்க்கப்பட்டது என தொடர்ந்து சொல்லி வருகிறார்.
பாரிஸ்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தான் அதிபராக பதவி ஏற்ற பிறகு 7 போர்களை நிறுத்தி உள்ளேன். இந்தியா-பாகிஸ்தான் சண்டையும் என்னால் தான் தீர்க்கப்பட்டது என தொடர்ந்து சொல்லி வருகிறார். நேற்று நடந்த ஐ.நா.சபை கூட்டத்திலும் அவர் இதே கருத்தை வலியுறுத்தினார். ஆனால் இந்தியா இதனை நிராகரித்துள்ளது.
இதற்கிடையே, 7 போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும் என அதிபர் டிரம்ப் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியதாவது:
காசா போரை முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல முடியும்.
இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு மட்டுமே உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் ஏதாவது செய்யக்கூடிய நபராக டிரம்ப் இருக்கிறார்.
காசாவில் இஸ்ரேல் அரசு தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அமெரிக்கா இஸ்ரேல் மீது அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது.
காசா மோதலை நடத்த அனுமதிக்கும் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு நாங்கள் வழங்குவதில்லை.
நாங்கள் ஒருபோதும் செயலற்றவர்களாக இருக்கமாட்டோம். எப்போதும் பிரான்சின் நலன்களைப் பாதுகாப்போம் என தெரிவித்தார்.
- உலக பணக்காரர்களில் முதல் இடத்தில உள்ளவர் எலான் மஸ்க்.
- எலான் மஸ்க்கிற்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இடையே வார்த்தை மோதல் நடைபெற்றது.
உலக பணக்காரர்களில் முதல் இடத்தில உள்ளவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களையும் மற்றும் எக்ஸ் வலைத்தளத்தையும் நடத்தி வருகிறார்.
அண்மையில் எலான் மஸ்க்கிற்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இடையே நடந்த வார்த்தை மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், எலான் மஸ்க்கின் தந்தை எரால் மஸ்க் (79) மீது ஐந்து குழந்தைகள் மற்றும் வளர்ப்பு குழந்தைகள் சிலருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், அவை முட்டாள்தனமானவை, ஆதாரமற்றமவை,போலி என்று எரால் மஸ்க் தெரிவித்துள்ளார்.
- ஐ.நா.சபை ஊழியர்கள் வேண்டுமென்றே இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
- ஐ.நா.சபை கூட்டத்தில் அதிபர் டிரம்ப் உரையாற்றிய போது அவர் முன்னால் வைக்கப்பட்டு இருந்த டெலி பிராம்ப்டர் செயல் இழந்தது.
நியூயார்க்கில் நேற்று ஐ.நா. சபை பொது உறுப்பினர் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் சென்றார். அவர்கள் அங்குள்ள நகரும் படிக்கட்டில் (எஸ்கலேட்டர்) சென்றனர்.
அப்போது திடீரென நகரும் படிக்கட்டு பழுதானதால் அப்படியே நின்றது. மெலனியா ஹீல்ஸ் செருப்பு அணிந்து இருந்ததால் நிலை தடுமாறினார். பின்னர் இருவரும் நகரும் படிக்கட்டில் நடந்தே சென்றனர்.
இந்த பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்து உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அதன் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
ஐ.நா.சபை ஊழியர்கள் வேண்டுமென்றே இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். அவர்களை பணிநீக்கம் செய்து உடனடியாக விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இது பற்றி டிரம்ப் கூறும் போது, மெலனியா சுதாரித்துக்கொண்டதால் கீழே விழவில்லை. நாங்கள் இப்போது பலமாக இருக்கிறோம் என தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் ஐ.நா.சபை கூட்டத்தில் அதிபர் டிரம்ப் உரையாற்றிய போது அவர் முன்னால் வைக்கப்பட்டு இருந்த டெலி பிராம்ப்டர் செயல் இழந்தது. இருந்த போதிலும் அவர் தொடர்ந்து பேசினார். இதுவும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
- சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் சுதந்திர உலகின் பெரும் பகுதி அழிகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் (UNGA) நேற்று(செப்டம்பர் 23 ) தொடங்கியது. வரும் 29 ஆம் தேதி வரை கூட்டம் நடைபெற உள்ளது.
நேற்றைய கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 1 மணி நேரம் உரையாற்றினார்.
தனது உரையில், 'காலநிலை மாற்றம்' என்பது உலகில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய மோசடி.
கார்பன் தடம் (carbon footprints) என்பது தீய எண்ணம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஏமாற்று வேலை" என்று குற்றம் சாட்டினார்.
மேலும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பசுமை எரிசக்தி கொள்கைகள் ஐரோப்பாவை அழித்து வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
"சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்கிறது.
அவர்களை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் சுதந்திர உலகின் பெரும் பகுதி அழிகிறது.
திறந்த எல்லைகள் கொண்ட கொள்கைகள் ஐரோப்பாவை அழிவின் விளிம்பிற்கு தள்ளியுள்ளது. அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை இழந்து வருகின்றனர்" என்று டிரம்ப் தெரிவித்தார்.
தொடர்ந்து ஐநா அமைப்பு குறித்து விமரிசத்த டிரம்ப், "ஐ.நா.வின் நோக்கம் என்ன?. ஐநா, வெறும் கடுமையான வார்த்தைகளை கொண்ட கடிதங்களை மட்டுமே எழுதுகிறது. வெறுமையான வார்த்தைகள் போரைத் தீர்க்காது" என்று சாடினார்.






