என் மலர்
உலகம்
- நேதன்யாகு போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.
- ஜிப்ரால்டர் ஜலசந்தி வழியாக அட்லாண்டிக் பெருங்கடல் வான்பரப்பில் நுழைந்தது.
காசாவில் செய்து வரும் படுகொலைகளுக்காக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த 2024 நவம்பர் 21 அன்று கைது வாரண்ட் பிறப்பித்தது.
விசாரணையில் நேதன்யாகு மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகவும் கண்டறியபட்டது.
தற்போது அமரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்று வரும் 80வது ஐநா கூட்டத்தில் பேசுவதற்காக நேதன்யாகு அமெரிக்கா பயணப்பட்டுள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரண்ட் காரணமாக, அமெரிக்காவுக்கான தனது பயணத்தின் போது நேதன்யாகு தனது பாதையை மாற்றியுள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்துடன் ஒப்பந்தங்களைக் கொண்ட பல ஐரோப்பிய நாடுகள், நேதன்யாகு தங்கள் எல்லைகளைத் தாண்டினால் கைது செய்யப்படுவார் என்று கூறியிருந்தன.
இதைக் கருத்தில் கொண்டு, ஐ.சி.சி.யுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்து நேதன்யாகுவின் பயணம் அமைந்தது.
இஸ்ரேலில் இருந்து அமெரிக்கா செல்ல பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், அயர்லாந்து, இங்கிலாந்து வழியே செல்வதே நேர்வழி ஆகும். ஆனால் அவ்வழியை தவிர்த்த நேதன்யாகுவின் விமானம் கிரீஸ் மற்றும் இத்தாலியை ஒட்டி பயணித்து, மத்தியதரைக் கடலைக் கடந்து ஜிப்ரால்டர் ஜலசந்தி வழியாக அட்லாண்டிக் பெருங்கடல் வான்பரப்பில் நுழைந்தது. மத்திய தரைக்கடல் - அட்லாண்டிக் கடலை இணைப்பது ஜிப்ரால்டர் ஜலசந்தி ஆகும்.
கடந்த பிப்ரவரி, ஜூலை அமெரிக்கா பயணித்த போதும் நெதன்யாகுவின் விமானம் ஐரோப்பிய நாடுகளை தவிர்த்தே பயணித்தது. தற்போது அவர் பயணித்த பாதையின் ரேடார் விவரங்கள் வைரலாகி வருகின்றன.
- இளைஞர்கள் போராட்டத்தால் பிரதமர் ஷர்மா ஒலி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- அவருக்குப் பதிலாக சுஷிலா கார்கி பிரதமராக பதவி ஏற்ற நிலையில், அடுத்த வருடம் பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அரசு ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி இளைஞர்கள் தலைமையிலான Gen Z குரூப் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்தது. இளைஞர்கள் பிரதமர் வீட்டை சூறையாடினர். பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனைத்தொடர்ந்து பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் வன்முறை முடிவுக்கு வந்தது. முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
பிரதமராக பதவி ஏற்றதும், அடுத்த வருடம் மார்ச் மாதம் 5ஆம் தேதி பொதுத்தேர்தலை நடத்துவற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேபாள அதிபர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வயதை 18 வயதில் இருந்து, 16ஆக குறைப்பதற்கான சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதன்மூலம் நேபாளத்தில் 16 வயது நிறைவடைந்தோர், வாக்காளர் பட்டியலில் தனது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். பொதுவாக தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக பெயர் சேர்ப்பதற்கான காலஅவகாசம் வழங்கப்படும். தற்போது இப்போதில் இருந்தே விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், 16 வயதில் விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டை பெற்றாலும், 18 வயது நிரம்பிய பின்னர்தான் வாக்கு செலுத்த முடியும்.
- ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசரித்துள்ளார்.
- 2019 க்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை செல்வது இதுவே முதல் முறை.
80வது ஐ.நா. பொதுச்சபை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கூடியது. கடந்த 21ஆம் தேதி தொடங்கிய கூட்டம் 29 சாம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கிடையே காசா பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்வர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் ஒருவர் ஆவார்.
இந்த சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை வியாழக்கிழமை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசிர்த்துள்ளார்.
இதன்போது இருநாட்டு உறவுகள்,வருங்கால திட்டங்கள் குருத்து பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. சந்திப்புக்கு முன் அவர்கள் இருவரையும் டிரம்ப் ஒரு மணி நேரம் காக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.
2019 க்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை செல்வது இதுவே முதல் முறை.
50 சதவீத வரி உள்ளிட்ட நடவ்டிக்கைகளால் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் டிரம்ப் அண்மை காலங்களாக பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சந்திப்புக்கு பின், இருவரையும் சிறந்த மனிதர்கள் என டிரம்ப் விவரித்துள்ளார்.
- இருநாட்டு தலைவர்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
- வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி நோபல் பரிசு பெறுபவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளது.
உலக அளவில் பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைப்பதை ஒரு கவுரவமாக கருதுகின்றனர். இதற்காக அவர்கள் தீவிர முயற்சிகள் செய்து வருகின்றனர். அதுவும் இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த விருதை பெற வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்.
தான் 2-வது முறையாக பதவி ஏற்றபிறகு இந்தியா-பாகிஸ்தான் சண்டை உள்ளிட்ட 7 போரை நிறுத்தி உள்ளேன். அதனால் எனக்கு தான் நோபல் பரிசு வழங்க வேண்டும் என வெளிப்படையாக கூறி வருகிறார். எப்படியும் இந்த பரிசு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கையில் இருந்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இல்லை என்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர அவர் திட்டமிட்டு இருந்தார். இது தொடர்பாக இருநாட்டு தலைவர்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதன் காரணமாக அவருக்கு நோபல் பரிசு கிடைக்காது என கூறப்படுகிறது.
இந்த ஆண்டு நோபல் பரிசு கமிட்டி குழுவினர் அமைதிக்கான நோபல் பரிசினை ஏதாவது ஒரு மனிதாபிமானம் சார்ந்து செயல்பட கூடிய அமைப்புக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பே இல்லை என வரலாற்று நிபுணர் ஆஸ்லே ஸ்லீன் தெரிவித்து இருக்கிறார்.
டிரம்பின் நடவடிக்கைகள் நோபல் பரிசு அளவுகோலுக்கு எதிரானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அவர் நோபல் பரிசு வெல்ல மாட்டார். அவரது கருத்து எதிர்வினையை ஏற்படுத்தும், பரிசு வழங்கும் குழு சுதந்திரமாக செயல்படுகிறது என நோபல் பரிசு கமிட்டிக் குழுவை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால் டிரம்பின் நோபல் பரிசு கனவு தகர்ந்து விடும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி நோபல் பரிசு பெறுபவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது.
- இந்தியாவின் மருந்துத் துறை இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம், உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவி நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தார்.
மேலும், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததை அடுத்து இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது.
இந்த நிலையில், அக்டோபர் 1-ந்தேதி முதல் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் மருந்து பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகத்தை மிகவும் சார்ந்திருக்கும் உள்நாட்டுத் தொழில்களில் ஒன்றான இந்தியாவின் மருந்துத் துறை, இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
- காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நேரடி பிரச்சனை என்பதே அமெரிக்காவின் நீண்டகால கொள்கை.
- காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதை இந்தியா-பாகிஸ்தானிடமே விட்டுவிட்டோம்.
நியூயார்க்:
காஷ்மீர் பிரச்சனை இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் காஷ்மீர் பிரச்சனையில் 3-ம் நபர் தலையீட்டை அனுமதிக்க முடியாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.
இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட விரும்பவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நேரடி பிரச்சனை என்பதே அமெரிக்காவின் நீண்டகால கொள்கை. இதில் இந்தியா-பாகிஸ்தான் இடையே அமெரிக்காவை நிறுத்துவதில் விருப்பம் இல்லை' என தெரிவித்தார்.
மேலும் அவர், 'அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கையில் போதுமான பிரச்சனைகள் இருக்கின்றன. எனவே காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதை இந்தியா-பாகிஸ்தானிடமே விட்டுவிட்டோம். எந்த பிரச்சனை தொடர்பாகவும் அமெரிக்காவிடம் உதவி கேட்டால் செய்வதற்கு தயாராக உள்ளோம்' என்றும் கூறினார்.
அதேநேரம் இந்தியா-பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நடந்த ராணுவ மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு டிரம்ப் உதவினார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
- ரகசா புயல் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தையும் தாக்கியது.
- அந்த மாகாணத்தில் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
பீஜிங்:
தென் சீனக்கடலில் உருவான புயலுக்கு ரகசா என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. தைவானைப் பந்தாடிய இந்தப் புயல் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தையும் தாக்கியது. அப்போது மணிக்கு 265 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
மணிக்கு 200-லிருந்து 230 கிமீ வேகத்தில் கடுமையான காற்று வீசியது. குவாங்டாங் மாகாணத்தில் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் அங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சுமார் 5 லட்சம் வீடுகள் இருளில் சிக்கித் தவித்தன.
இதனை தொடர்ந்து கனமழையும் கொட்டித் தீர்த்ததால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக் காடாக மாறின. எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதற்காக பல இடங்களில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனையடுத்து அந்தப் புயல் வியட்நாம் நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- பிரான்சில் 2007 முதல் 2012 வரை பிரான்ஸ் அதிபராக பதவி வகித்தவர் சர்கோசி.
- சர்கோசி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருந்தவர் நிகோலஸ் சர்கோசி. இவர் 2007 முதல் 2012 வரை பிரான்ஸ் அதிபராக பதவி வகித்தவர்.
லிபியாவின் முன்னாள் அதிபர் மம்மர் கடாபிக்கு ஆதரவாக பேச நிகோலஸ் சர்கோசி முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ஈடாக , சர்கோசியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு கடாபி நிதி உதவி செய்வதற்கான ஒப்பந்தம் இருதரப்புக்கு இடையே மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு பாரீஸ் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி சர்கோசிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து இன்று பாரீஸ் கோர்ட் தீர்ப்பளித்தது. மேலும், ஒரு லட்சம் யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து சர்கோசி மேல்முறையீடு செய்தாலும், அவர் சிறைக்குச் செல்வது உறுதி என கூறப்படுகிறது.
தன் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வரும் சர்கோசி, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சர்கோசி கூறுகையில், நான் சிறையில் தூங்க வேண்டும் என அவர்கள் விரும்பினால் சிறையில் தூங்குவேன். ஆனால், தலைகுனிய மாட்டேன். தன்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டவை என்றார்.
- இலங்கையில் கேபிள் கார் விபத்தில் 7 புத்த துறவிகள் உயிரிழந்தனர்.
- காயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொழும்பு:
இலங்கையில் நிகவெரட்டி அருகே புத்த மடம் ஒன்று அமைந்துள்ளது. இது கொழும்புவில் இருந்து 125 கி.மீ. தொலைவில் உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் தியானம் செய்ய இங்கு வருகை தருவர்.
இங்கு தரைப்பகுதியில் இருந்து கேபிள் கார் மூலம் துறவிகள் மலையில் இருக்கும் தியான மண்டபங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.
இந்நிலையில், ஒரு சிறிய கேபிள் கார் பெட்டியில் துறவிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கேபிள் கார் பெட்டியின் கேபிள் அறுந்துவிட்டது. இதனால், கார் வேகமாக கீழே இறங்கி வந்து ஒரு மரத்தில் பலமாக மோதியது. இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த 6 பேரில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேபிள் கார் அறுந்து 7 துறவிகள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டம் வன்முறையா வெடித்து 74 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அரசு ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி இளைஞர்கள் தலைமையிலான Gen Z குரூப் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்தது. இளைஞர்கள் பிரதமர் வீட்டை சூறையாடினர். பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனைத்தொடர்ந்து பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் வன்முறை முடிவுக்கு வந்தது. முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
இந்த நிலையில் போராட்டத்தின்போது உயிரிழப்புக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷிலா கார்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுஷிலா கார்கி கூறியதாவது:-
தற்போதைய அரசுக்கு அரசிலமைப்பு திருத்துவதற்கும், நிர்வாக அமைப்பு மாற்றுவதற்கும் அதிகாரம் கிடையாது. ஊழலை முடிவுக்கு கொண்டு வரவும், சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்வதையும், மக்கள் எதிர்பார்க்கும் சேவையை மேம்படுத்தவும் உறுதி பூண்டுள்ளது.
போராட்டத்தின்போது உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மாணவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த வருடம் மார்ச் 5ஆம் தேதியில் பாராளுமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இவ்வாறு சுஷிலா கார்கி தெரிவித்தார்.
- வங்கதேசம்- இந்தியா இடையிலான உறவில் விரிசல் உள்ளது.
- கடந்த வருடம் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா, பதவியில் இருந்து விலகி இந்தியாவுக்கு தப்பி வந்தார். அதன்பிறகு, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு பொதுத் தேர்தலை நடத்த ஆயத்தமாகி வருகிறது.
ஐ.நா. பொதுச்சபையில் கலந்து கொள்வதற்கான அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள முகமது யூனுஸ் கூறியதாவது:-
வங்கதேசம்- இந்தியா இடையிலான உறவில் விரிசல் உள்ளது. ஏனென்றால், ஷேக் ஹசீனாவை பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்ற முக்கிய காரணமாக அமைந்த கடந்த வருடம் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை.
இந்திய மீடியாக்கள் போலி தகவல்களை பரப்பின. இது பதட்டத்தை மேலும் மோசமடைய வழிவகுத்தது. இந்தியாவில் இருந்து ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வந்தன. அந்த வீடியோக்களில் மாணவர்களின் போராட்டத்தை இஸ்லாமிய இயக்கம் எனக் கூறின.
பிரச்சனையை உருவாக்கிய ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது இந்தியா- வங்கதேசம் இடையே பிரச்சனையை ஏற்படுத்தியது.
இவ்வாறு முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளது.
- அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் நேரத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமெரிக்காவில் இன்று டிரம்பை சந்தித்து பேசவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் போது, டிரம்ப் மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பிலும் ஷெரீப் கலந்து கொண்டார்.
முன்னதாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி, ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் இந்தாண்டு 2 முறை அமெரிக்காவிற்கு சென்று அரசின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்
இதற்கிடையில், இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதற்காக டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு வழங்கவேண்டும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.






