என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தனிப்பட்ட முறையில் என்னுடன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கினார்.
    • இந்தத் தொடரில் இந்திய அணி நடந்து கொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கிறது.

    இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்தத் தொடரில் இந்திய அணி நடந்துகொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய அணியினர் கைகுலுக்க மறுத்தது எங்களுக்கு அவமரியாதை அல்ல. அது கிரிக்கெட்டுக்கு அவர்கள் நிகழ்த்திய அவமரியாதை. நாங்கள் கோப்பையுடன் அணியாக புகைப்படம் எடுத்து எங்கள் கடமையைச் சரியாக செய்துவிட்டோம்.

    தொடர் தொடங்குவதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் என்னுடன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கினார். கேமராவுக்கு முன்பு கைகுலுக்க மறுத்துள்ளார். வெளியில் இருந்து வந்த உத்தரவின்படி அவர் அப்படி நடந்துகொண்டார். அது பரவாயில்லை.

    நான் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை, ஆனால் அவர்கள் மிகவும் அவமரியாதையாக நடந்துகொண்டனர். என் வாழ்வில் இது நடப்பதை நான் பார்ப்பது இதுவே முதல் முறை. இந்தத் தொடரில் நடந்தவை மிகவும் மோசமானவை, இது ஒரு கட்டத்தில் நிற்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல

    இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ ஒரு குழந்தை இதைப் பார்த்தால், நாம் அவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அனுப்பவில்லை. மக்கள் எங்களை முன்மாதிரியாக நினைக்கிறார்கள், ஆனால் நாங்கள் இப்படி நடந்துகொண்டால், நாங்கள் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கவில்லை

    ACC-க்கு தலைவர் ஒருவர் இருந்தால் அவரிடம் கோப்பை வாங்குவதுதான் முறை. நீங்கள் அதை அவரிடமிருந்து வாங்காமல், வேறு எப்படி வாங்குவீர்கள்?

    நான் இதை மீண்டும் சொல்கிறேன். என்ன நடந்ததோ அது தவறு. அது நடந்திருக்கக்கூடாது. எனவே அதைச் செய்தவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு சல்மான் ஆகா கூறியுள்ளார்.

    • கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளனர்.
    • பிரசவம் நடந்தபிறகு ஜெஸ்வீனா திடீரென மயங்கினார்.

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராசிகுல். இவரது மனைவி ஜெஸ்வீனா (வயது30). இவர்களுக்கு 4 வயதில் ஜோஹிருல் என்ற மகன் இருக்கிறான். ராசிகுல் தனது மனைவி மற்றும் மகனுடன் கேரளாவில் வாழ்ந்து வந்தார். கூலி வேலைகளுக்கு சென்று தனது மனைவி மற்றும் மகனை காப்பாற்றி வந்தார்.

    இந்தநிலையில் ஜெஸ்வீனா மீண்டும் கர்ப்பமானார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராசிகுல் தனது மனைவி மற்றும் மகனுடன் கண்ணூர் மாலோடு பகுதியில் ஒரு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த ஜெஸ்வீனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்தில் அவருக்கு அழகிய குழந்தை பிறந்தது. இந்தநிலையில் பிரசவம் நடந்தபிறகு ஜெஸ்வீனா திடீரென மயங்கினார். சுயநினைவை இழந்த அவரை அவரது குடும்பத்தினர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு ஜெஸ்வீனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் தலைமறைவாகினர். ஜெஸ்வீனாவுக்கு புதிதாக பிறந்த குழந்தை மற்றும் மகன் ஜோஹிருல் ஆகியோரை தனியாக தவிக்க விட்டுவிட்டு அவர்கள் மாயமாகினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்பு ஜெஸ்வீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு புதிதாக பிறந்த குழந்தையை மீட்டு பரியாரத்தில் உள்ள கண்ணூர் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவரது மகன் ஜோஹிருலை சைல்டு லைன் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவன் அவர்களது பராமரிப்பில் உள்ளான்.

    வீட்டில் பிரசவம் பார்த்ததால் பெண் இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் ஜேஸ்வீனாவின் கணவர் மற்றும் குடும்பத்தினரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கரூர் சம்பவம் தொடர்பாக நிறைய வதந்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.
    • நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கரூர் சம்பவம் தொடர்பாக நிறைய வதந்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதன் உண்மைநிலை வெளிவர வேண்டும்.

    * நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்.

    * கரூர் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் முழுமையான விசாரணையை நடத்த வேண்டும்.

    * உடற்கூராய்வை அவசரமாக நடத்தியது ஏன்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாகிஸ்தானை மட்டும் இந்திய அணி 3 தடவை வீழ்த்தி முத்திரை பதித்தது.
    • இந்திய அணிக்கு 9-வது முறையாக ஆசிய கோப்பை கிடைத்தது.

    மும்பை:

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தோல்வி எதையும் சந்திக்காமல் தான் மோதிய 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை வென்றது. பாகிஸ்தானை மட்டும் இந்திய அணி 3 தடவை வீழ்த்தி முத்திரை பதித்தது.

    இந்திய அணிக்கு 9-வது முறையாக ஆசிய கோப்பை கிடைத்தது. இதற்கு முன்பு 1984, 1988, 1991, 1995, 2010, 2016, 2018, 2023 ஆகிய ஆண்டுகளில் ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது.

    இந்த நிலையில் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.21 கோடி பரிசு தொகை அளிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அணியின் வெற்றி மிகவும் சிறப்பானது. ஆசிய கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.21 கோடி பரிசு வழங்கப்படுகிறது. பரிசு தொகை வீரர்கள், அணி ஊழியர்கள் என அனைவருக்கும் பிரித்து வழங்கப்படும். தோல்வியை சந்திக்காமல் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்ட நெரிசல் சம்பவங்களை ஆங்கிலத்தில் Stampede என்று குறிப்பிடுகிறார்கள்.
    • ஹத்ராஸ் கூட்டநெரிசலில் பலர் உயிரிழந்ததை அடுத்து Stampede என்ற வார்த்தை இந்திய அளவில் ட்ரெண்டானது.

    கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.

    இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் (2025) கோவில் திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், ரெயில் நிலையங்கள் மற்றும் மகா கும்பமேளா போன்ற நிகழ்வுகளில் 100-க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    கூட்ட நெரிசல் சம்பவங்களை ஆங்கிலத்தில் Stampede என்று குறிப்பிடுகிறார்கள். கடந்தாண்டு உ.பி. மாநிலம் ஹத்ராஸில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் பலர் உயிரிழந்ததை அடுத்து Stampede என்ற வார்த்தை இந்திய அளவில் ட்ரெண்டானது.

    Stampede என்ற ஆங்கில வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? பெருமளவிலான மக்கள் ஒரே இடத்தை நோக்கி ஓடுவதை தான் ஆங்கிலத்தில் Stampede என்று குறிப்பிடுகிறார்கள்.

    2024ம் ஆண்டில் கூகுளில் இந்திய அளவில் அதிகமாக அர்த்தங்கள் தேடப்பட்ட வார்த்தைகளின் பட்டியலில் Stampede என்ற வார்த்தை 7-ம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது.
    • எல்லா யோசனைகளையும் பரிசீலித்து முடிவுகளை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    உயிரிழந்தோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    கரூர் மாநகரில் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை. குறிப்பாக உயிர் இழப்புக்கு காரணமான வேலுச்சாமிபுரம் பகுதி ஆறாத சுவடுகளுடன் போர்க்களம் போல் இன்னமும் காட்சியளிக்கிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருவதால், வேலுச்சாமி புரத்தில் தடயங்கள் சேதப்படாமல் இருக்க 60க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

    இந்நிலையில் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததையடுத்து தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் யோசனை தெரிவித்துள்ளார். அதில்,

    * கரூர் நிகழ்வைப் போன்ற துயர சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க எல்லோரும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.

    * இதில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது.

    * எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனையைத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம் தெரிவித்திருக்கிறேன்.

    * எல்லா யோசனைகளையும் பரிசீலித்து முடிவுகளை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு.

    * அந்த முடிவுகளுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் கீழ்ப்படிந்து நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வெற்றிபெற்ற ஒரு அணிக்கு கோப்பை மறுக்கப்படுவதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன்.
    • என்னுடைய கோப்பைகள் (வீரர்கள்) ஓய்வறையில் அமர்ந்துள்ளனர்.

    துபாய்:

    இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நான் கிரிக்கெட் விளையாட, கிரிக்கெட்டை பின்தொடர தொடங்கியதில் இருந்து வெற்றிபெற்ற ஒரு அணிக்கு கோப்பை மறுக்கப்படுவதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். என்னுடைய கோப்பைகள் (வீரர்கள்) ஓய்வறையில் அமர்ந்துள்ளனர். அணி வீரர்கள் 14 பேரும், பயிற்சியாளர்கள் உதவியாளர்கள்தான் இந்தத் தொடரில் உண்மையான வெற்றிக் கோப்பைகள்.

    2 நாட்களில் இரண்டு தொடர்ச்சியான நல்ல ஆட்டங்கள். நாங்கள் அதற்கு தகுதியானவர்கள் என்று நினைக்கிறேன். மேலும் என்னால் எதுவும் சொல்ல முடியாது. நான் அதை நன்றாகச் சுருக்கமாக கூறியுள்ளேன் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

    • விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
    • இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.

    இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் (2025) கோவில் திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், ரெயில் நிலையங்கள் மற்றும் மகா கும்பமேளா போன்ற நிகழ்வுகளில் 100-க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    ஜூலை 27, 2025: உத்தரகாண்டின் ஹரித்வாரில் உள்ள மன்சா தேவி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

    ஜூன் 4, 2025: ஐபிஎல் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணியின் போது பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.

    மே 3, 2025: கோவாவின் ஷிர்காவ் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லைராய் தேவி கோவிலின் வருடாந்திர திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர்.

    பிப்ரவரி 15, 2025: புதுடெல்லி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளாவுக்கு ரெயில் ஏற காத்திருந்த பக்தர்கள் இடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர்.

    ஜனவரி 29, 2025: மகா கும்பமேளாவின் புனித நீராடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், பிரயாக்ராஜில் உள்ள சங்கமம் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் (அரசு தரவுகள்) உயிரிழந்தனர்.

    ஜனவரி 8, 2025: திருப்பதி வெங்கடேஸ்வரர் சுவாமி கோவிலில் வைகுண்ட துவார தரிசன டிக்கெட்டுகளை வாங்க பக்தர்கள் முண்டியடித்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவங்கள் பொது இடங்களில் கூட்ட நெரிசலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருக்கும் குறைபாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. 

    • பா.ம.க. எங்களுக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக அன்புமணி தரப்பு ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.
    • தற்போதைய அரசியல் குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது.

    பா.ம.க. எங்களுக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக அன்புமணி தரப்பு ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.

    இதற்கு பதிலடி கொடுத்த ராமதாஸ் பா.ம.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என் பக்கம் தான் உள்ளனர். நான் தான் கூட்டணி குறித்து முடிவு செய்வேன் என கூறி இருந்தார்.

    கடந்த சில நாட்களாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை சென்று இருந்தார்.

    இந்த நிலையில் அவர் திண்டிவனம் திரும்பினார். இன்று தைலாபுரம் தோட்டத்தில் அவர் இருந்தார். அவரை விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் எம்.பி. திடீரென சந்தித்து பேசினார். சி.வி.சண்முகத்தின் சகோதரர் மகன் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் பங்கேற்குமாறு ராமதாசுக்கு அவர் அழைப்பிதழ் வழங்கினார்.

    மேலும் அவர்கள் தற்போதைய அரசியல் குறித்து பேசியதாக தெரிகிறது.

    • காவல்துறை சார்பில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமிக்கப்பட்டு தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
    • நீதிபதி அருணா ஜெகதீசன் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.

    கரூர்:

    கரூரில் தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.

    காவல்துறை சார்பில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமிக்கப்பட்டு தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவர் ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரபடுத்தினார். இந்த நிலையில் டிஎஸ்பி மாற்றம் செய்யப்பட்டு கரூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    அவர் இன்று சம்பவ இடமான வேலுச்சாமி புரத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார்.

    • செலினா கோமஸின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
    • செலினா கோம்ஸ்-யை இன்ஸ்டாகிராமில் 425 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

    பிரபல ஹாலிவுட் நடிகையும், பாப் பாடகியுமான செலினா கோம்ஸ் பாடலாசிரியர் பென்னி ப்ளான்கோவை காதலித்து வந்தார்.

    இருவருக்கும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தற்போது தனது காதலர் பென்னி பிளாங்கோவை செலினா கோம்ஸ் திருமணம் செய்துள்ளார். செலினா கோமஸின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    சில மாதங்களுக்கு முன்னர் தனது திருமணம் குறித்து பேசிய செலினா கோம்ஸ், "தனக்கு உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாகவும், அதனால் தன்னால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் தற்போது வாடகைத் தாய் மற்றும் குழந்தை தத்தெடுப்பு போன்றவை இருப்பதால் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

    33 வயதான செலினா கோம்ஸ் இன்ஸ்டாகிராமில் 400 மில்லியன் பாலோயர்ஸைக் கொண்ட முதல் பெண் பிரபலம் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போதுவரை அவரை இன்ஸ்டாகிராமில் 425 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    • சுற்றுப்புற பகுதியில் உள்ள மக்கள் பலர் அதிகாலையிலே கோவிலுக்கு நடந்து வந்து தரிசனம் செய்தனர்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெரும் திருவிழாவில் 7-ம் திருநாளான இன்று காலை முதல் இரவு வரை மண்டகப்படிதாரர்களின் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இதையொட்டி காலையில் நடை திறந்தது முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் ஏராளமான தசரா குழுவினர் நேற்று இரவு வரை மேளவாத்தியங்களுடன் ஆட்டம் பாட்டத்துடன் வந்து காப்புகட்டி சென்றனர்.

    இன்றும் தசரா குழுவினர் வந்து காப்புகட்டி சென்றனர். சுற்றுப்புற பகுதியில் உள்ள மக்கள் பலர் அதிகாலையிலே கோவிலுக்கு நடந்து வந்து தரிசனம் செய்தனர்.

    இன்று கோவில் கலை அரங்கத்தில் மாலை 3 மணிமுதல் ஆசிரியர் பெருமாள், கிஷோர் சமய சொற்பொழிவு, நடனம், பரதநாட்டியம், தொடர்ந்து இரவு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கிறார்.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், ஆய்வாளர் முத்துமாரியம்மாள் அறங்காவலர் குழுத்தலைவர் தாண்டவன்காடு கண்ணன் மற்றும் அறங்காவலர்கள், ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×