என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
    • அப்போது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களில் 12 பேர் பலியாகினர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவாமி குழு என்ற அமைப்பின் தலைமையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாதில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. இதனால் அங்குள்ள சந்தைகள், கடைகள் மற்றும் உள்ளூர் வணிகங்கள் முழுமையாக மூடப்பட்டன. போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.

    அப்போது நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அவாமி அதிரடி குழு தலைமையிலான போராட்டங்கள் கடந்த 72 மணி நேரமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை முடக்கி உள்ளன.

    • உக்ரைன் - ரஷியா இடையிலான போர் 3 ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது.
    • இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.

    புதுடெல்லி:

    உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே 3 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச நாடுகள் முயற்சித்து வருகின்றன. எனினும் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

    உக்ரைன்–ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என இந்தியாவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில், வரும் டிசம்பர் மாதத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகிறார். அதிபர் புதின் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நிகழ்த்தும் அவர், சுகோய்-57 ரக போர் விமான விற்பனை, எஸ்- 400 ஏவுகணைகள் டெலிவிரி ஆகியவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பிலும் பாதுகாப்பு, எரிசக்தி, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ கார்ட்னர் சதமடித்து அசத்தினார்.

    இந்தூர்:

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 326 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஆஷ்லீ கார்ட்னர் அதிரடியாக ஆடி 83 பந்துகளில் ஒரு சிக்சர், 13 பவுண்டரி உள்பட 115 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    நியூசிலாந்து சார்பில் ஜெஸ் கெர், லியா தகுகு ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து 327 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. கேப்டன் சோபி டிவைன் தனி ஆளாகப் போராடி சதமடித்து 112 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், நியூசிலாந்து அணி 43.2 ஓவரில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

    • சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது.
    • சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார்

    நவம்பர் புரட்சி பற்றி சிலர் பேசுகின்றனர். 5 ஆண்டுகளும் நானே முதலமைச்சராக நீடிப்பேன். ஆனால் மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்

    கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பெற சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அகில இந்திய தலைமை சித்தராமையாவை முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்-மந்திரியாவும் அறிவித்தது.

    இதையடுத்து சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்றும் அடுத்த 2 ½ ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சித்தராமையா மற்றும் டிகே. சிவகுமார் ஆதரவாளர்கள் இடையே முதல்-மந்திரி பதவி தொடர்பாக கடும் விவாதம் நடந்து வருகிறது.

    மேலும் இது தொடர்பாக அடிக்கடி சித்தராமையாவும், டி.கே. சிவகுமாரும் டெல்லிக்கு சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நவம்பரில் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கர்நாடக முதலமைச்சராவார் என சில காங்கிரஸ் தலைவர்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இதுகுறித்து பேசிய சித்தராமையா, "நவம்பர் மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடையும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். நான் சொல்ல வருவது என்னவென்றால், மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.

    நான் இரண்டாவது முறையாக முதலமைச்சராக வரமாட்டேன் என்று சிலர் கணித்தார்கள், ஆனால் நான் முதலமைச்சரானேன். என் காரில் காகம் அமர்ந்திருப்பது ஒரு கெட்ட சகுனம் என்றும் நான் முதலமைச்சராகத் தொடர மாட்டேன் என்றும் பலர் சொன்னார்கள். நான் பட்ஜெட்டை தாக்கல் செய்ய மாட்டேன் என்றும் சொன்னார்கள், ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்தேன்.

    நான் இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டேன். மேலும் இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் தொடர்வேன்" என்று தெரிவித்தார்.

    • வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
    • சென்னை, கடலூர் உள்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டது.

    மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று மாலை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8. 30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது.

    இதன் எதிரொலியால், சென்னை, கடலூர், நாகை ஆகிய 3 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது

    முன்னதாக, சென்னை, கடலூர் உள்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டது.

    குறிப்பாக, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஆகஸ்ட் மாதம்- ரூ.1.86 லட்சம் கோடி வசூல்.
    • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான தொகையை விட 9.1 சதவீதம் அதிகமாகும்.

    ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. கடந்த மாதத்துடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் வெளியிடப்பட்டு வருகிறது.

    அதன்படி, நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.1.89 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான தொகையை விட 9.1 சதவீதம் அதிகமாகும்.

    இதற்கிடையே, ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் அமலானது. ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்துள்ளது.

    ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் எதிரொலி அடுத்த மாத ஜிஎஸ்டி வசூலில் தெரியவரும். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் மட்டும் ரூ.10.04 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது கணவர் மீது வீட்டுப் பணிப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • இந்த விவகாரம் தொடர்பாக ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரபல நடிகையான டிம்பிள் ஹயாதி 'தேவி 2', 'வீரமே வாகை சூடும்', அட்ரங்கிரே, கில்லாடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பல தெலுங்கு படங்களில் நடித்து அவர் புகழ்பெற்றார்.

    இந்நிலையில், டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது கணவர் மீது அவரது வீட்டுப் பணிப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், ஹயாதி மற்றும் அவரது கணவர் தன்னை துன்புறுத்தியதாகவும், நிர்வாண வீடியோ எடுக்க முயன்றதாகவும், சம்பளம் தராமல் ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடிகை டிம்பிள் ஹயாதி, 2023-ல் ஐபிஎஸ் அதிகாரியின் கார் மீது செருப்பு வீசிய சர்ச்சையிலும் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அனைத்து மாநிலங்களுக்கும் வரிபகிர்வு நிதியாக ரூ.1,01,603 கோடியை மத்திய அரசு விடுவிப்பு.
    • ம.பி-க்கு ரூ.7,976 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வாக ரூ.4,144 கோடியை மத்திய அரசு விடுவித்து அறிவித்துள்ளது.

    பண்டிகை காலத்தை முன்னிட்டு அனைத்து மாநிலங்களுக்கும் வரிபகிர்வு நிதியாக ரூ.1,01,603 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

    அதிகபட்சமாக பாஜக ஆளும் உபிக்கு ரூ.18,227 கோடி, பீகாருக்கு ரூ.10,219 கோடி, ம.பி-க்கு ரூ.7,976 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தெலங்கானாவிற்கு ரூ.2136 கோடி, கர்நாடகாவிற்கு 3,705 கோடி, கேரளாவிற்கு 1956 கோடி நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

    குறைந்தபட்சமாக கோவாவிற்கு ரூ.392 கோடி விடுக்கப்பட்டுள்ளது.

    • விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்.
    • கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே, த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

    தொடர்ந்து, தவெக பரப்புரை பேருந்து கேமராவில் பதிவான காட்சிகளை ஒப்படைக்கக் கோரி ஆதவ் அர்ஜுனாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. இதேபோல் தவெக துணைப்பொதுச் செயலாளர் நிர்மல் குமாருக்கும் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

    இந்நிலையில் த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு பயணிக்கிறார்.

    அலுவல் பணிகள் மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆதவ் அர்ஜூனா செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • பல்வேறு தொழில்களில் நடிகர் ஷாருக் கான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
    • உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக 'டெய்லர் ஸ்விப்ட் உள்ளார்.

    இந்தியப் பணக்கார நடிகர்கள் பட்டியல் முதலிடம் பிடித்து வந்த ஷாருக்கான் முதல்முறையாக உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

    The Hurun India வெளியிட்டுள்ள பட்டியலில் 1.4 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.12,490 கோடி) சொத்து மதிப்புடன் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார்

    திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தொழில்களில் நடிகர் ஷாருக் கான் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உலகளவில் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்டவை ஷாருக் கானுக்கு சொந்தமானவை ஆகும்.

    உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக 'டெய்லர் ஸ்விப்ட்' 1.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2 ஆம் இடம் பிடித்துள்ளார். ஜெர்ரி செய்ன்ஃபெல்ட் 1.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.

    பிரபல அமெரிக்க பாடகி செலினா கோமஸ் 720 மில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் 4 ஆம் இடம் பிடித்துள்ளார்.

    டாப் 5 இந்தியப் பணக்காரர்கள் பட்டியல்:

    1. ஷாருக் கான் மற்றும் குடும்பத்தார் மொத்த சொத்து மதிப்பு ரூ.12,490 கோடி

    2. ஜூஹி சாவ்லா மற்றும் குடும்பத்தார் மொத்த சொத்து மதிப்பு ரூ.7,790 கோடி

    3. ஹிருத்திக் ரோஷன் மொத்த சொத்து மதிப்பு ரூ.2,160 கோடி

    4. கரண் ஜோஹர் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,880 கோடி

    5. அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தர் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடி

    • அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது.
    • இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

    கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்

    இந்நிலையில், இந்த கார் ரேஸ் தொடரில் பங்கேற்க உள்ள அஜித்குமாரின் புதிய அணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அணியில் நரேன் கார்த்திகேயன், அஜித் குமார் மற்றும் ஆதித்யா படேல் ஆகியோர் உள்ளனர்.

    இது தொடர்பான புகைப்படங்களை அஜித்குமார் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    • மோசின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது
    • இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.

    ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.

    ஆசிய கோப்பை மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் தேவ்ஜித் சாய்க்கியா தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக, கோப்பையை இந்தியாவிடம் தர தயாராகவே உள்ளேன் என்று நக்வி தெரிவித்தார்.

    இதுகுறித்து பேசிய அவர், "கோப்பையை பெற BCCI ஆர்வமாக இருந்தால் ACC அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளவும்" என்று கூறினார்.

    அதே சமயம் பிசிசிஐ-யிடம் நான் மன்னிப்பு கேட்டதாக வெளியான தகவலுக்கு நக்வி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

    ×