என் மலர்
தலைப்புச்செய்திகள்
- வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஹேமராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், கந்தம்பாளையத்தில் வசித்துவரும் ஆந்திர மாநிலம், சித்தூர், மங்கலசமுத்திரத்தைச் சேர்ந்த ஜெமினி ஜோசப்பின் மனைவி ரேவதி (வயது 36) என்ற 4 மாத கர்ப்பிணிப் பெண் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக கடந்த 6-ந்தேதி பிற்பகல் கோயம்புத்தூர் திருப்பதி விரைவு ரெயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணித்தபோது, ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் அப்பெட்டியில் ஏறிய கே.வி.குப்பம், பூஞ்சோலை கிராமம், சின்ன நாகல் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவன் அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்று அப்பெண்ணைத் தாக்கி, வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம், சீதாராமன் பேட்டை அருகில் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்தப் பெண் பலத்த காயம் அடைந்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தப் பெண்ணிற்கு நேற்று கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ரேவதிக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரேவதியின் முழு மருத்துவச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஹேமராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரேவதியின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவருக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திமுக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலையை பற்றி பதற்றத்துடன் பேசி இருக்கிறார்.
- அண்ணாமலை பற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது, அண்ணாமலைக்கு கிடைத்த நற்சான்றிதழ்.
ஆவடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 2026 சட்டப் பேரவை தேர்தல் வரை, கவர்னர் ஆர்.என்.ரவியும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் அவரவர் பதவியில் நீடிக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சாரமே செய்யாமல் திமுக ஆட்சிக்கு வர முடியும் என்றார்.
இது பற்றி தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அண்ணாமலையால் திமுகவுக்கு பாதிப்பு இல்லை என்றால், அவரைப் பற்றி ஏன் பதற்றப்பட வேண்டும்?
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவுக்கு எளிமையானதாக இருக்காது. திமுக கண்டிப்பாக தோற்கடிக்கப்படும் என்றுதான் முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார் என்பது, அவரது பேச்சில் இருந்து தெரிகிறது. தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல், திமுகவினர் பதற்றத்தில் இருக்கிறார்கள்.
திமுக அரசின் ஊழல் முறைகேடுகளை, தி.மு.க.வினரின் மக்களை ஏமாற்றும் தந்திரங்களை எல்லாம் மக்கள் மன்றத்தில் அண்ணாமலை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருகிறார்.
தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நீடித்தால் திமுகவுக்கு வேட்டு வைத்து விடுவார் என்பது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும். அதனால் அவரை எப்படியாவது மாற்றி விடுவார்கள் என்ற நப்பாசையில், அவரே தொடரட்டும் என்று கூறி தற்காலிக இன்பம் அடைந்து வருகிறார்.
அண்ணாமலை ஜுரம் முதல்வர் ஸ்டாலினை ஆட்டி படைக்கிறது. அதனால் தான் திமுக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலையை பற்றி பதற்றத்துடன் பேசி இருக்கிறார். அண்ணாமலை பற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது, அண்ணாமலைக்கு கிடைத்த நற்சான்றிதழ்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
- முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. துவக்க வீரர் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலியும் குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளனர்.
இந்த போட்டியின் மூலம் வருண் சக்கரவர்த்தி இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமாகிறார்.
- மகாராஷ்டிரா விமானம் சண்டிகரில் தரையிறங்கும்போது, ஏக்நாத் ஷிண்டேவாக மாறும் முதல் பயணி பகவந்த் மான்.
- பகவந்த் மான் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.
மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்குக் கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
10 வருடங்களாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி தோல்வியை தழுவியுள்ளது. அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தத்தமது தொகுதிகளில் தோல்வியை தழுவினர். 10 வருடங்களாக ஆம் ஆத்மி வசம் இருந்த டெல்லி தற்போது கைநழுவியுள்ளது.
இதற்கிடையே பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் நடந்து வரும் ஆம் ஆத்மியின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, பகவந்த் மான் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் அவர் பாஜகவுக்கு மாறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பிரிவில் விரிசல் ஏற்படக்கூடும் என்று பஜ்வா கணித்ததுள்ளார். மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்து பாஜக பக்கம் சாய்ந்ததை போன்ற முடிவை, பகவந்த் மான் தனது அரசியல் எதிர்காலம் கருதி எடுக்கக்கூடும் என்று மறைமுகமாக பஜ்வா தெரிவித்துள்ளார்.
"இந்த மகாராஷ்டிரா விமானம் சண்டிகரில் தரையிறங்கும்போது, ஏக்நாத் ஷிண்டேவாக மாறும் முதல் பயணி பகவந்த் மான் ஆவார்" என்று பஜ்வா கூறினார். மேலும் பஞ்சாபைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் பஜ்வா கூறியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் - பகவந்த் மான் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா கூறியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து டெல்லி தேர்தலை எதிர்கொண்டிருந்தால் முடிவுகள் மாறியிருக்க அதிக வாய்ப்பிருந்ததாக அரசியல் நோக்கர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
- இரு தரப்புக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
- துப்பாக்கி சண்டையில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
பிஜப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் இருந்து வருகிறது. இதையடுத்து நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள காட்டுப்பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் துப்பாக்கி சண்டையில் நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் எதிர்தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கி சண்டையில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் உள்ள வனப்பகுதியில் பல்வேறு பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த வீரர்கள் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டி ருந்தபோது துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 12 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சண்டையில் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் சிறப்புப் பணிப் படையைச் சேர்ந்த ஒருவர் என 2 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர். 2 பேர் காயமடைந்தனர் என்றனர்.
அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
கடந்த ஜனவரி 16-ந்தேதி தெற்கு பிஜாப்பூர் மாவட்டத்தின் காடுகளில் நடந்த என்கவுண்டரில் 12 நக்சலைட்டுகளும், கடந்த 2-ந்தேதி பிஜாப்பூா் மாவட்டத்தின் கங்களூர் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த என்கவுண்டரில் 8 நக்சலைட்டுகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டிராகன் திரைப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது.
- டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக "டிராகன்" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா மற்றும் வி.ஜே. சித்து, ஹர்ஷத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் 'ரைஸ் ஆஃப் தி டிராகன்' மற்றும் 'வழித்துணையே' பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

'டிராகன்' திரைப்படம், வருகிற பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில்,டிராகன் படத்தின் டிரெய்லர் பிப்ரவரி 10-ம் தேதி மாலை 5.00 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
டிராகன் திரைப்படம் வெளியாகும் இதே நாளில் தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வேலூரில், ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கீழே தள்ளிவிட்ட கொடூரம்!
- அனைத்துத் தரப்பு மக்களும், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், இந்தக் காட்டாட்சி தர்பாரை வீழ்த்த உறுதி பூண்டுள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
'திராவிட' என்ற சொல்லுக்கே குந்தகம் விளைவிக்கும் வகையில் 'திராவிட மாடல்' என்ற பெயரில் ஒரு காட்டாட்சியை விடியா தி.மு.க-வின் தலைவர், நிர்வாகத் திறமையற்ற பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வருவது. தமிழக மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.
இந்த ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், அஜாக்கிரதையால், சமூக விரோத செயல்களில் ஈடுபட ஆளும் தி.மு.க-வினருக்கு கட்சிக் கொடியின் பெயரால் லைசென்ஸ் வழங்கி உள்ளதால், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களோடு, கொலை, கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களும் வரிசை கட்டி நிற்கின்றன. இதை ஊடகப் பேட்டியில் காவல் துறை அதிகாரியே ஒத்துக்கொள்வது, தமிழகக் காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி உள்ளதையே காட்டுகிறது.
* கிருஷ்ணகிரியில் 13 வயது அரசுப் பள்ளி மாணவியை மூன்று ஆசிரியர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு!
* கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே, பள்ளி விடுதியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணம்!
* மணப்பாறை தனியார் பள்ளியில் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!
* வேலூரில், ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கீழே தள்ளிவிட்ட கொடூரம்!
* வேலூரில் இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து, ஆறு பேர் கொண்ட காமுக கும்பல் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்!
* தமிழகக் காவல் துறையின் உயர் பதவியில் உள்ள பெண் ADGP-யே தனது உயிருக்கு பாதுகாப்பில்லை என புகார்!
* கள்ளக்குறிச்சியில் பெண் VAO மீது சாணி அடித்து தாக்குதல்!
* சிவகங்கையில் காவல் நிலையத்தில் புகுந்து பெண் SI மீது தாக்குதல்!
* அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு வன்கொடுமை 'யார் அந்த சார்?' உண்மையான, பின்புலம் மறைந்துள்ள குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்குப் பதில், பத்திரிகையாளர், காவல் துறை என்று தடம் மாறும் விசாரணை!
* கிழக்கு கடற்கரை சாலையில், நள்ளிரவில் பெண்கள் சென்ற காரை, திமுக கொடி கட்டிய காரில் துரத்தி அச்சுறுத்தியவர்கள் மற்றும் இதுகுறித்து துப்பு துலக்க வேண்டிய காவல் அதிகாரி, இரண்டு வெவ்வேறான பேட்டிகள் அளிப்பதும்; தொடர்ந்து கைது செய்யப்பட்ட குற்றவாளி மற்றும் திமுக நிர்வாகிகளின் பேட்டிகள்! உண்மையில் குற்ற வழக்கு விசாரணை நடைபெறுகிறதா? அல்லது புனையப்பட்ட நாடகம் அரங்கேற்றமா? என்று ஏவல் துறைதான் விளக்க வேண்டும்!
பெண் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை, உயர் பதவியில் உள்ள பெண் காவல் அதிகாரி உள்ளிட்ட யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறியுள்ள தமிழகம், கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறும் பொம்மை முதலமைச்சரின் கைகளில் உள்ள காவல் துறை!
* கோவை மத்திய சிறையில் கைதி தனது உயிருக்கு ஆபத்து என்று வீடியோ வெளியீடு!
* புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்திற்கே இன்னும் முழுமையான முடிவு எட்டப்படாத நிலையில், திருச்சி, ஸ்ரீரங்கம் கோட்டத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் கலப்பு செய்திகள் வெளிவருகின்றன!
* விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி என்று இருமுறை கள்ளச் சாராய மரணங்கள் நடைபெற்றும். கள்ளச் சாராய விற்பனை தொடர்வது வாடிக்கையாக உள்ளது!
தொடரும் குற்றச் சம்பவங்கள் பற்றிய எனது இந்த அறிக்கைக்கும், சட்ட நடவடிக்கை எடுக்காமல், யாரையாவது விட்டு அறிக்கை வெளியிடுவார் பொம்மை முதலமைச்சர்.
அந்த காலத்தில் மன்னன் நகர்வலம் போவதுபோல, இந்த திராவக மாடல் ஆட்சியின் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகம் முழுவதும் நகர்வலம் போக ஆரம்பித்துள்ளார். இரு நாட்களுக்கு முன்பு திருநெல்வேலியில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து, தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை கொடுப்பதற்காக மணிக்கணக்கில் காத்திருந்த சமயத்தில், அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்க மனமில்லாத நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சரின் செய்கை கண்டனத்திற்குரியது!
இத்தகைய நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், விவசாயிகள், நெசவாளர்கள், வியாபாரிகள், தொழில் துறையினர், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் என, கொதிப்படைந்துள்ள அனைத்துத் தரப்பு மக்களும், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், இந்தக் காட்டாட்சி தர்பாரை வீழ்த்த உறுதி பூண்டுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியாத பொம்மை முதலமைச்சருக்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், இனியாவது சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை வெளியில் எடுத்தார்.
- விமானப் பணிப்பெண்கள் துணிச்சலாகச் செயல்பட்டு மடக்கினர்.
பறக்கும் விமானத்தில் பயணி ஒருவர் துப்பாக்கியைக் காட்டி சக பயணிகளைக் கொலை செய்யப்போவதாக மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.
மத்திய அமெரிக்காவில் உள்ள ஹோண்டுராஸ் நாட்டில் சமீபத்தில் டெகுசிகல்பாவில் உள்ள டோன்காண்டின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ரோட்டனுக்கு சென்ற விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை வெளியில் எடுத்து பயணிகளை நோக்கி நீட்டி அவர்களைக் கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் அனைவரும் அச்சத்தில் உறைந்தனர். இருப்பினும் விமானப் பணிப்பெண்கள் துணிச்சலாகச் செயல்பட்டு அந்த நபரை மடக்கினர்.
பயணிகளுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் அவர்கள் தடுத்தனர். விமானி உடனடியாக விமானத்தை மீண்டும் டோன்காண்டின் சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பிவிட்டார்.
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதும் தேசிய காவல்துறை அதிகாரிகள் விமானத்தில் ஏறி, அந்த நபரைக் கைது செய்தனர். பின்னர் பயணிகள் மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் தீங்கு ஏற்படவில்லை.
இந்த சம்பவம் விமான நிலைய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பு சோதனைகளை மீறி அந்த நபர் எப்படி விமானத்தில் துப்பாக்கியை கொண்டு வந்தார் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
- டெல்லியில் தி.மு.க. மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்றனர்.
- எல்லா வகையிலும் மத்திய அரசுக்கு பொருள் ஈட்டித் தந்த தமிழகத்திற்கு ஏன் இந்த ஓரவஞ்சனை?
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மத்திய பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க. சார்பில் நேற்று கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
* தமிழகத்தில் நேற்று 72 இடங்களில் தி.மு.க. சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது.
* துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவத்தோடு உரையாற்றினார்.
* டெல்லியில் தி.மு.க. மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்றனர்.
* மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டி தமிழக எம்.பி.க்கள் போராடினர்.
* தமிழகத்தை வஞ்சிக்கக்கூடிய பட்ஜெட்டாக உள்ளது.
* பட்ஜெட்டில் மிகப்பெரிய துரோகத்தை மத்திய அரசு செய்துள்ளது.
* யுஜிசி புதிய வரைவு விதி மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது.
* எல்லா வகையிலும் மத்திய அரசுக்கு பொருள் ஈட்டித் தந்த தமிழகத்திற்கு ஏன் இந்த ஓரவஞ்சனை?
* ஆசிரியருக்கு சம்பளம், 100 நாள் வேலைவாய்ப்பு என எதற்கும் நிதி தராது வஞ்சிக்கிறது மத்திய அரசு.
* உ.பி., பீகார், குஜராத் மாநிலங்களுக்கு கேட்காமலேயே நிதி தருகிறது மத்திய அரசு.
* அளிக்க வேண்டி நிதியை கூட மத்திய அரசு இன்னும் அளிக்கவில்லை.
* அமெரிக்காவில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை கூட கண்டிப்பதற்கு பிரதமர் மோடி குரல் கொடுக்கவில்லை.
* நான் ஒரு தமிழச்சி தான் என கூறும் நிதியமைச்சர் நிர்மலா தமிழகத்திற்காக செய்தது என்ன?
* மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடிக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.
- கடந்த வியாழக்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை
- உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
ஒடிசாவில் பள்ளி சீருடையில் இருந்த இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் காட்டில் உள்ள மரம் ஒன்றில் சிறுமிகளின் உடல்கள் தொங்கிய நிலையில் நேற்று கண்டெடுப்பட்டன.
உயிரிழந்த சிறுமிகள் இரண்டு நாட்களாகக் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த எம்.வி 74 கிராமத்தைச் சேர்ந்த ஜோதி ஹல்தார் (13) மற்றும் எம்.வி 126 கிராமத்தைச் சேர்ந் மந்திரா சோடி (13) என அடையாளம் காணப்பட்டனர். இருவரும் ஒரே உள்ளூர் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தனர்.
கடந்த வியாழக்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை என்று பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதற்கிடையே அருகில் காட்டில் உள்ள ஒரு மரத்தில் கயிற்றில் தொங்கிய நிலையில் இரண்டு உடல்களையும் உள்ளூர்வாசிகள் கண்டு போலீசுக்கு தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
- நட்சத்திர வேட்பாளர்கள் பலர் தோல்வியை தழுவினர்.
- காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வது மற்றும் ஆட்சியமைப்பது தொடர்பான பணிகளில் பா.ஜ.க. மேலிடம் பரபர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியதை அடுத்து டெல்லி முதல்வர் அதிஷி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று காலை டெல்லி ஆளுநர் மாளிகைக்கு சென்ற முதல்வர் அதிஷி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்துள்ளார்.
ராஜினாமா கடிதத்தை வழங்கிய பிறகு ஆளுநர் மாளிகையில் இருந்து அதிஷி புறப்பட்டு சென்றார். இதைத் தொடர்ந்து டெல்லி சட்டசபை கலைக்கப்பட்டுவதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்செனா கூறியுள்ளார். இது நேற்று (பிப்ரவரி 8) முதல் அமலுக்கு வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜ.க. மொத்தம் 48 இடங்களில் வெற்றி பெற்றது.
நடைபெற்று முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர்கள் பலர் தோல்வியை தழுவினர்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
- ஆன்லைனில் விளையாடுவோருக்கு ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும்.
- பணம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு இனி கட்டாயம்.
சென்னை:
பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டு களை ஒழுங்குபடுத்தும் வகையில் கடுமையான விதிகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது, இதன்மூலம் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பங்கேற்கும் சிறார்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, 'ஆன்லைன் உண்மையான பண விளையாட்டு' என்பது, தகவல் தொழில்நுட்பம் விதிகள், 2021-ன்படி, 'வெற்றிகளை' சம்பாதிக்கும் எதிர்பார்ப்புடன் ஒருவர் பணம் அல்லது பொருளை டெபாசிட் செய்யும் விளையாட்டு என வரையறுக்கப்படுகிறது.
ஆன்லைன் விளையாட்டில் ஒரு வீரரின் செயல் திறனின் அடிப்படையில் 'வெற்றிகள்' பணமாகவோ அல்லது பொருளாகவோ பரிசுகளை வழங்குகின்றன அல்லது விநியோகிக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் தெளிவுபடுத்தியுள்ளன.
தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் தலைமையில், அதன் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், பதிவு செய்வதற்கும் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் இப்போது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பு இப்போது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைன் பண விளையாட்டுகளில் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஆன்லைனில் விளையாடுவோருக்கு ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும்.
நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைனில் பணம் கட்டி சிறார்களை விளையாட அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு இனி கட்டாயம் ஆகும்.
இந்த திருத்தப்பட்ட விதிகள் தமிழ்நாட்டில் இப்போது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. பணம் சூதாட்ட இணையதளங்கள் மற்றும் உள்நுழைவு பக்கத்தில் தொடர்ச்சியான எச்சரிக்கை செய்தி காட்டப்பட வேண்டும் என்று அதில் விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளது.






