என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • 2024-25 ம் நிதியாண்டில் கடந்த 05.12.2024 அன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
    • ஒரு நாள் வருவாய் வசூலில் இண்டாவது முறையாக இதே நிதியாண்டில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது.

    சென்னை:

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மங்களகரமான நாளான நேற்று (திங்கட்கிழமை) அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.

    பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று நேற்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்குபதிலாக 150 சாதாரண முன்பதிவுவில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது.

    2024-25 ம் நிதியாண்டில் கடந்த 05.12.2024 அன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உயர்த்தப்பட்ட முன்பதிவு வில்லைகளை பொதுமக்கள் பயன்படுத்தியதன் மூலம் நேற்று (10-ந்தேதி) அன்று 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதே நிதி ஆண்டில் 2-வது முறையாக அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் இண்டாவது முறையாக இதே நிதியாண்டில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் பிரசாந்த் கிஷோர்- விஜய் சந்திப்பு நடைபெற்றது.
    • இன்றும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபைக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. மேலும் அதற்கான வியூகங்கள் வகுக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. அரசியல் கட்சி தொடங்கி முதல் தேர்தலை சந்திக்க உள்ள விஜய், தேர்தலை சந்திப்பதற்கு பல்வேறு வியூகங்களை வகுக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.

    அதன்படி, நேற்று பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஒப்பந்தம் போட்டுள்ளார். இது தொடர்பாக கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் பிரசாந்த் கிஷோர்- விஜய் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து இன்றும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், விஜயை நேற்று சந்தித்து பேசிய பின்னர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நேற்றிரவு எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க.விற்காக பணி செய்ய சென்னை வந்துள்ள IPAC அணியினரையும் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

    • லட்டு குறித்து கார்த்தி கிண்டலாக பேசியதற்கு பவன் கல்யாண் காட்டமாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
    • கார்த்தி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் கார்த்தி தனது குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

    திருப்பதி கோவிலுக்கு செல்லும் வழியில் தன்னை சந்திக்க வந்த மக்களுடன் நடிகர் கார்த்தி கைக்குலுக்கி, செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

    முன்னதாக மெய்யழகன் படத்தின் தெலுங்கு பதிப்பின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது "லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம். எனக்கு லட்டே வேண்டாம் 'என கார்த்தி கிண்டலாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    லட்டு குறித்து கார்த்தி கிண்டலாக பேசியதற்கு ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் காட்டமாக கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து கார்த்தி, பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஐபிஎல் 2025 தொடர் வருகிற மார்ச் மாதம் தொடங்குகிறது.
    • நிர்வாக குழு ஒப்புதல் வழங்கவில்லை.

    அகமதாபாத்-ஐ சேர்ந்த டொரன்ட் குழுமம் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியில் பெரும்பாலான பங்குகளை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022-ம் ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை வென்ற குஜராத் அணியில் டொரண்ட் குழுமம் 67 சதவீத பங்குகளை வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    தற்போது கேபிட்டல் பார்ட்னர்ஸ் வசம் உள்ள பங்குகளை டொரன்ட் குழுமம் வாங்கும் என்று தெரிகிறது. 2021-ம் ஆண்டு கேபிட்டல் பார்ட்னஸ் குழுமம் குஜராத் அணியில் பெரும்பாலான பங்குகளை விலைக்கு வாங்கியிருந்தது. இந்த நிலையில், கேபிட்டல் பார்ட்னர்ஸ் மற்றும் டொரண்ட் குழுமம் இடையே பங்குகளை பரிமாற்றம் செய்வதற்கான விலை குறித்து எந்த தகவலும் இல்லை.

    இது தொடர்பாக இரு நிறுவனங்கள் இடையே மேற்கொள்ளப்பட வேண்டிய ஆவணம் சார்ந்த பணிகளை ஐ.பி.எல். மேற்கொண்டு வருகிறது. இதுதவிர ஐ.பி.எல். தொடரின் நிர்வாக குழு இதற்கு இன்னமும் இறுதி ஒப்புதலை வழங்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் மார்ச் மாதம் தொடங்கும் 2025 சீசன் முதல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு புதிய உரிமையாளராக டொரண்ட் குழுமம் உருவெடுக்கும். முன்னதாக குஜராத் அணியை விலைக்கு வாங்க கேபிட்டல் பார்ட்னர்ஸ் நிறுவனம் ரூ. 5 ஆயிரத்து 625 கோடியை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

    • பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
    • நேற்றைய சந்திப்பின் போது இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். இதையடுத்து கட்சி பணிகளில் தீவிர காட்டிவந்த விஜய் தவெக-வின் முதல் மாநில மாநாட்டில் பேசிய பேச்சு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    கட்சி தொடங்கியதில் இருந்து நடைபெற்ற எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி பணிகளை விஜய் தீவிரப்படுத்தி வருகிறார்.

    அந்த வகையில், பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் பிரசாந்த் கிஷோர்- விஜய் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    இதனை தொடர்ந்து, இன்று தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் 2-ம் நாளாக விஜய் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த ஆலோசனையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் ஏற்கெனவே திமுகவுக்கு வியூகங்களை வகுத்து கொடுத்து திமுகவின் வெற்றிக்கு பங்காற்றியுள்ளார். மேலும் தேசிய அளவில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு வியூகம் வகுத்து கொடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெட்ரோல் பங்கில் ஜீரோ செக் செய்வதோடு ஒப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் அடித்தார்.
    • சாதி தெரியாதவர்கள், சாதிவாரி கணக்கெடுப்பு கேட்கிறார்கள் என ராகுலின் சாதி குறித்து அனுராக் தாக்கூர் முன்பொருமுறை விமர்சித்திருந்தார்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 முதல் நடைபெற்று வருகிறது. இடையில் டெல்லி சட்டமன்றத் தேர்தலும் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்றது.

    பிப்ரவரி 8 நடந்த வாக்கு எண்ணிக்கையில் பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. இதன்படி 27 வருடங்கள் கழித்து பாஜக ஆட்சி அமைக்கிறது. தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கணிசமான வாக்குகள் பெற்றிருந்தாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

    கடந்த 2014 மற்றும் 2020 ஆகிய தேர்தல்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து 3 ஆவது முறையாக காங்கிரஸ் பூஜ்யம் பெற்றுள்ளது. எனவே பெட்ரோல் பங்கில் ஜீரோ செக் செய்வதோடு ஒப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் புகைப்படத்துடன் மீம்கள் வைரலாகி வருகின்றன.

    இந்நிலையில் நேற்று [திங்கட்கிழமை] நடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டத்தின்போது, பாஜக எம்பி அனுராக் தாக்கூர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார்.

    அனுராக் தாக்கூர் ஒரு பேப்பரை காட்டி, ராகுல் காந்தியிடம் ஜீரோ செக் செய்ய கூறி கிண்டல் அடித்தார்.

    12 லட்சம் வரை வருமானத்திற்கு வருமான வரி இருக்காது, பூஜ்ய வரி என்று குறிப்பிடும் காகிதத்துடன் பேசிய அனுராக் தாக்கூர், அந்த பூஜ்யத்தை செக் செய்யுமாறு ராகுல் காந்தியை கிண்டல் அடித்தார்.

    ராகுல் காந்தியை நகர்ப்புற நக்சல் என கூறிய அனுராக் தாக்கூர் பூஜ்ஜியம் என்ற சாதனையை யாராவது செய்தார்கள் என்றால் அது ராகுல் காந்தியின் தலைமையில் உள்ள காங்கிரஸ் தான் என்று கூறினார்.

    சாதி தெரியாதவர்கள், சாதிவாரி கணக்கெடுப்பு கேட்கிறார்கள் என ராகுலின் சாதி குறித்து அனுராக் தாக்கூர் முன்பொருமுறை விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக 1998 ஆம் ஆண்டு ஷீலா தீட்சித் தலைமையில் டெல்லியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் 2013 வரை தொடர்ந்து 13 வருடங்கள் ஆட்சியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

    • திருமணம் வருகிற மார்ச் மாதம் 3-ந் தேதி நடக்கிறது.
    • கட்சி பாகுபாடு பாராமல் அனைவருக்கும் திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    கோவை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய்விகாஸ் திருமணம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி நடக்கிறது.

    கோவை ஈச்சனாரி செல்வம் மகாலில் நடைபெற உள்ள இந்த திருமண விழாவுக்கான அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், அவரது குடும்பத்தினரும் நேரில் சென்று வழங்கி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை எஸ்.பி.வேலுமணி வழங்கி வருகிறார்.

    இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்தை, எஸ்.பி. வேலுமணி நேரில் சந்தித்து தனது மகன் திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து அழைப்பிதழை வழங்கினார். எஸ்.பி.வேலுமணியுடன் அவரது அண்ணன் அன்பரசன் மற்றும் குடும்பத்தினர் சென்றிருந்தனர். அவர்களுடன் ரஜினிகாந்த் சில நிமிடங்கள் பேசினார்.

    இதேபோல கட்சி பாகுபாடு பாராமல் அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், நடிகர்-நடிகைகள் என பல்வேறு தரப்பினருக்கும் திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது மகன் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட ஏராளமானோர் திருமண விழாவில் பங்கேற்க உள்ளனர். 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக நடைபெற உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்ல திருமண விழா அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • பாலஸ்தீன மக்களை வெளியேற்றி காசாவை ரியல் எஸ்டேட் தளமாக உருவாக்குவோம் என்று டிரம்ப் பேசுகிறார்.
    • போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியானது பாலஸ்தீன மக்களுக்காக மீண்டும் கட்டப்பட வேண்டும்

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.

    போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

    இந்நிலையில் காசாவை அமெரிக்கா வாங்க உள்ளதாக டிரம்ப் தெரித்துள்ளார். இது தொடர்பாக பேசிய டிரம்ப், "காசாவை வாங்குவதற்கும் சொந்தமாக்குவதற்கும் நான் உறுதிபூண்டுள்ளேன். அதை ஒரு ரியல் எஸ்டேட் தளம் என்று எண்ணிக்கொள்ளுங்கள். எனவே அதை மாற்றியமைக்க வேண்டும். ஹமாஸ் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் .

    அவர்கள் [காசா மக்கள்] காசாவுக்குத் திரும்ப விரும்பவில்லை. அவர்கள் காசாவுக்குத் திரும்புவதற்கு ஒரே காரணம் அவர்களிடம் மாற்று வழி இல்லை என்பதுதான். அவர்களுக்கு பாதுகாப்பான பகுதியில் ஒரு வீட்டைக் கொடுக்க முடிந்தால் அவர்கள் திரும்ப விரும்பமாட்டார்கள்" என்று டிரம்ப் தெரிவித்தார்.

    இந்நிலையில், காசாவை ரியல் எஸ்டேட் தளம் ஆக்குவோம் என்று டிரம்ப் அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "47000-த்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 111,000 பாலஸ்தீன மக்கள் காயமடைந்துள்ளனர். வலுக்கட்டாயமாக பாலஸ்தீன மக்களை வெளியேற்றி காசாவை ரியல் எஸ்டேட் தளமாக உருவாக்குவோம் என்று டிரம்ப் பேசுகிறார்.

    போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியானது பாலஸ்தீன மக்களுக்காக மீண்டும் கட்டப்பட வேண்டும் மாறாக 'கோடீஸ்வர சுற்றுலாப் பயணிகளுக்காக' அல்ல" என்று தெரிவித்துள்ளார்.

    • சாம்பின்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெறுகிறது.
    • இந்திய போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்-இன் (ஐசிசி) சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது.

    இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்றுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் கடைசி டெஸ்ட் போட்டியின் போது பும்ரா காயமடைந்தார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் கடைசி டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் பந்து வீசவில்லை. அதன் பின்னர் அவர் எந்தவித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

    பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) சிறப்பு மையத்தில் பும்ராவுக்கு சமீபத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் மருத்துவக் குழுவினர், தேர்வுக்குழு மற்றும் இந்திய அணி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ மாக எதுவும் தெரிவிக் கப்பட வில்லை.

    இந்த நிலையில் சாம்பி யன்ஸ் டிராபி போட் டிக்கான வீரர்களின் இறுதி பட்டியலை அறிவிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது. இதனால் ஜஸ்பிரீத் பும்ரா பங்கேற்பது குறித்த முடிவை இந்திய தேர்வுக் குழுவினர் இன்று அறிவிக்கலாம் என்று தெரிகிறது.

    ஒருவேளை ஜஸ்பிரித் பும்ரா உடல் தகுதி இல்லாமல் இடம்பெறாமல் போனால் அவர் இடத்தில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரத்தில் வேகப்பந்து வீரர் ஹர்ஷித் ராணாவும், பும்ராவுக்கான இடத்தில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

    • இட ஒதுக்கீட்டு இடங்களில் சரிக் கட்டப்பட்டுள்ளனவா என்பதும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
    • எந்தெந்த ஐஐடிகள் இட ஒதுக்கீட்டு நெறிமுறைகளை மீறி இருக்கின்றன என்பதும் பொது வெளிக்கு தெரிய வரும்.

    சென்னை:

    மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் 'ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு; முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர் இடங்கள் பறிப்பு' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இந்தியாவில் உள்ள ஐஐடிகளில் 2023-24 கல்வி ஆண்டில் எத்தனை முனைவர் பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள், அவர்களில் எத்தனை பேர் எஸ்.சி, எஸ்.டி, இதர பிற்படுத்தப்பட்டோர் என்பதை துறைவாரியாக தருமாறு நான் பாராளுமன்றத்தில் கேள்வி (922/10.02.2025) எழுப்பி இருந்தேன். அதற்கான பதிலை கல்வி இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் பாராளுமன்றத்தில் தந்துள்ளார்.

    நான் கேட்ட கேள்விக்கு ஒரே வரியில் முனைவர் படிப்புகளுக்கு மொத்தம் 6210 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 2484 பேர் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்கள் என்று தெரிவித்திருக்கிறார். பதிலிலுள்ள மற்ற வரிகள் எல்லாம் எவ்வாறு ஒன்றிய அரசு ஐஐடிகளுக்கு இட ஒதுக்கீடு பற்றி வலியுறுத்தி இருக்கிறது, அதை ஐஐடி நிறுவனங்கள் எவ்வாறு அமலாக்குகின்றன என்பதை பற்றிய வெற்று விளக்கங்களாகவே உள்ளன. நான் கேள்வியில் எழுப்பி உள்ளது போல, இட ஒதுக்கீட்டின் வாயிலாக மாணவர்கள் பெற்ற அனுமதி விவரங்களை, பிரிவு வாரியாக துறைவாரியாக நிறுவனவாரியாக அமைச்சர் தரவில்லை. இது தற்செயலானதாக கருதப்படவில்லை. முழு விவரங்களை தருவது இட ஒதுக்கீட்டு அமலாக்கத்தில் உள்ள இடைவெளிகளை அம்பலப்படுத்தும் என்பதால் நோக்கத்துடன் மறைக்கப்பட்டு இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் அமைச்சர் தந்துள்ள அரைகுறை விவரங்களைக் கொண்டே இட ஒதுக்கீடு முறையாக கடைப்பிடிக்கப்படாததை அம்பலத்திற்கு கொண்டு வர வந்துள்ளது.

    6210 மொத்த மாணவர் அனுமதிகளில் 2484 இட ஒதுக்கீட்டு பிரிவினர் என்றால் 40% மட்டுமே வருகிறது. ஓ.பி.சி 27 %, எஸ்.சி 15%, எஸ் டி 7.5% என்றால் மொத்தம் 49.5 % இடங்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் வந்திருக்க வேண்டும். இதன்படியே 590 இடங்களை எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்கள் பறி கொடுத்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

    பொதுப் பட்டியல் இடங்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்கள் இடம்பெற்றுள்ளார்களா? அல்லது அந்த இடங்கள் இட ஒதுக்கீட்டு இடங்களில் சரிக் கட்டப்பட்டுள்ளனவா என்பதும் ஆய்வு செய்யப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினர் விவரங்களை தனித்தனியாக தந்தால் எந்தெந்த ஐஐடிகள் இட ஒதுக்கீட்டு நெறிமுறைகளை மீறி இருக்கின்றன என்பதும் பொது வெளிக்கு தெரிய வரும்.

    பாராளுமன்றத்தில் முழுமையான பதில் தரப்படவில்லை என்பதை தெரிவித்தும், முழு விவரங்களை வெளியிடுமாறும் கேட்டு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார்.



    • உருது கவிஞரும் காங்கிரஸ் எம்.பி.யுமான இம்ரான் பிரதாப்கர் மீது குஜராத் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
    • படைப்பாற்றல் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

    சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு கவிதையைப் பதிவிட்டதற்காக உருது கவிஞரும் காங்கிரஸ் எம்.பி.யுமான இம்ரான் பிரதாப்கர் மீது குஜராத் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

    இம்ரான் பதிவிட்ட கவிதை வெறுப்பு மற்றும் வன்முறை செய்தியைப் பரப்புவதாகக் கூறி, போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். வழக்கை ரத்து செய்ய கோரி இம்ரான் பிரதாப்கர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம் எஃப்ஐஆரை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றம் சென்றார்.

    இதன் மீதான விசாரணை தற்போது நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இம்ரானுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜரானார். எதிர் தரப்பில் குஜராத் அரசு வழக்கறிஞர் ஆஜரானார்.

    விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், குஜராத் காவல்துறையும் உயர் நீதிமன்றமும் இந்த உருது கவிதையின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது. தயவுசெய்து உங்கள் புத்தியை பயன்படுத்துங்கள். இது ஒரு கவிதை மட்டுமே. எந்த சமூகத்திற்கும் எதிரானது அல்ல. "யாராவது வன்முறையில் ஈடுபட்டாலும் கூட, நாம் அதில் ஈடுபடுவதில்லை" என்பதே இந்தக் கவிதையின் செய்தி. படைப்பாற்றல் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து வழக்கு மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. எஃப்ஐஆரில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
    • தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளுடன் ரகசிய ஆலோசனை

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் நடிகர் விஜய்தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது முதல் அரசியல் மாநாட்டில் பேசிய விஜய் வருகிற சட்ட மன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிப்போம் என்றும் நம்மோடு கூட்டணி சேரும் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்போம் என்றும் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார்.

    இந்த நிலையில் பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.

    இது தொடர்பாக கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் பிரசாந்த் கிஷோர்- விஜய் சந்திப்பு நடைபெற்றது.

    இந்த சந்திப்பின் போது இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர். விஜய் கட்சியின் முன்னணி நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஆரோக்கியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    இந்த சந்திப்பின் போது விஜய் கட்சியின் சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றிய தகவல்களை பிரசாந்த் கிஷோர் கேட்டு தெரிந்து கொண்டார்.

    தமிழகத்தில் வெற்றி பெறுவதற்கு தேவையான வியூகங்கள் என்னென்ன என்பது பற்றி அப்போது கலந்த ஆலோசிக்கப்பட்டது.

    இந்த ஆலோசனையின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்கும் என்கிற கருத்து பரவலாகவே பேசப்பட்டு வரும் நிலையில் அது பற்றி நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது எந்தவித ஆலோசனையும் நடைபெற வில்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

    விஜய்யை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதனை மையப் படுத்தியே நேற்றைய ஆலோசனையில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

    எனவே தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்காக களத்தில் உள்ள கட்சிகளோடு கைகோர்த்து தேர்தலை சந்திக்க விஜய் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்காக ஆதவ் அர்ஜுனா மூலமாக காய் நகர்த்தி புதிய கூட்டணி அழைப்பதற்கு விஜய் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்காக தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதன்மூலம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய் அதிரடியாக களமிறங்க திட்ட மிட்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதனால் இன்னும் போகப்போக விஜய்யின் அரசியல் வேகம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்பையும் உருவாக்கி உள்ளது.

    ×