என் மலர்
தலைப்புச்செய்திகள்
- நாள்தோறும் உயர்ந்து வரும் தங்கம் விலையால் மக்கள் கவலையில் உள்ளனர்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.400-ம், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.240-ம் நேற்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64,280-க்கு விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,070-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,560-க்கும் விற்பனையாகிறது. நாள்தோறும் உயர்ந்து வரும் தங்கம் விலையால் மக்கள் கவலையில் உள்ளனர். கடந்த திங்கட்கிழமையில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடக்கத்தக்கது.

கடந்த 5 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 109 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
19-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,280
18-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,760
17-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
16-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120
15-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
19-02-2025- ஒரு கிராம் ரூ.108
18-02-2025- ஒரு கிராம் ரூ.108
17-02-2025- ஒரு கிராம் ரூ.108
16-02-2025- ஒரு கிராம் ரூ.108
15-02-2025- ஒரு கிராம் ரூ.108
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்.
- இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
- மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்?
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் Blue Star Secondary School என்ற பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர், அண்ணன் திருமாவளவன் தான்.
அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்? என்று வினவியுள்ளார்.
- படையப்பா படத்தில் வரும் மாஸ் வசனமான 'என் வழி தனி வழி' என்ற வசனத்தை தோனி தமிழில் கூறினார்.
- சஞ்சு சாம்சனும் பாட்ஷா படத்தில் வரும் 'நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி' என்ற வசனத்தை பேசி அசத்தினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. இவர் தலைமையில் சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. அவர் கடந்த சீசனுடன் கேப்டன் பதவியில் இருந்து இறங்கிய நிலையில், தற்போது இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கே-வின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இதேபோல சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினர். அப்போது சில சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறியது.
அதில் குறிப்பாக இருவரும் நடிகர் ரஜினிகாந்தின் பிரபல வசனங்களை பேசி மாஸ் காட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் வரும் மாஸ் வசனமான என் வழி தனி வழி என்ற வசனத்தை தோனி தமிழில் கூறினார். இதற்கு அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதனை தொடர்ந்து சஞ்சு சாம்சனும் பாட்ஷா படத்தில் வரும் நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி என்ற வசனத்தை பேசி அசத்தினார். இருவரும் தமிழில் பேசிய வீடியோ கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- தமிழகம் முழுவதும் உள்ள 72 மாவட்டத் தலைவர்களில் சிலர் இந்த கிராமக் கமிட்டி அமைக்கப்படுவதை ஏற்கவில்லை.
- காங்கிரஸ் தலைவர்கள் சுமார் 25 பேர், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடாங்கரை சந்தித்து மனு அளித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த கே.எஸ்.அழகிரி மாற்றம் செய்யப்பட்டு கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி 17-ந் தேதி செல்வப்பெருந்தகை மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்டார். அதன்படி, மாநில தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்து உள்ளது.
ஆனால், செல்வப்பெருந்தகையால் புதிய நிர்வாகிகள் நியமனமோ, மாவட்டத் தலைவர்கள் சீரமைப்போ சரியாக செய்ய முடியவில்லை. மூத்த தலைவர்களும் கே.எஸ்.அழகிரிக்கு ஒத்துழைப்பு அளித்தது போல் இவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் மாநில கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கிராமக் கமிட்டிகளை நியமிக்கும் நடைவடிக்கையில் செல்வப்பெருந்தகை தீவிரம் காட்டி வருகிறார். அதன்படி, புதிதாக நியமிக்கப்பட்ட கிராமக் கமிட்டி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளையும் மாவட்டந்தோறும் சென்று செல்வப்பெருந்தகை வழங்கி வருகிறார்.
ஆனால், தமிழகம் முழுவதும் உள்ள 72 மாவட்டத் தலைவர்களில் சிலர் இந்த கிராமக் கமிட்டி அமைக்கப்படுவதை ஏற்கவில்லை. அவர்கள் செல்வப்பெருந்தகை நடத்திய ஆலோசனை கூட்டங்களையும், காணொலிக் காட்சி கூட்டங்களையும் புறக்கணித்தனர்.
இதற்கிடையே வடசென்னை மாவட்டத் தலைவர் எம்.எஸ்.திரவியம் மற்றும் செங்கம் குமார், டீக்காராமன் உள்பட 32 மாவட்டத் தலைவர்கள் செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்றக் கோரி தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முகாமிட்டுள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சுமார் 25 பேர், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடன்கரை சந்தித்து மனு அளித்தனர். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடந்துள்ளது.
அவர்கள் அளித்த புகாரில், கட்சிக்காக உழைத்த மூத்த தலைவர்களை செல்வப்பெருந்தகை மதிப்பதில்லை. கட்சியை தி.மு.க.வின் ஒரு அணி போல மாற்றி விட்டார். மூத்த தலைவர்கள் சிலரின் ஆதரவாளர்களை பதவியில் இருந்து தூக்கி உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
மாவட்டத் தலைவர்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அமைப்புப் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்து தங்கள் புகார்களை தெரிவிக்க உள்ளனர்.
- மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாட தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தயாராகி வருகின்றனர்.
- நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கும் ‘அமுதக் கரங்கள்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வருகிற 1-ந்தேதி 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து அவரது பிறந்தநாளை கொண்டாட தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் 'அமுதக் கரங்கள்' திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி வரை 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கும் 'அமுதக் கரங்கள்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- எம்.எஸ். தோனி மற்றும் சஞ்சு சாம்சன் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்.
- இந்தியர்களின் மனநிலையே இன்னும் கொஞ்சம் கேட்பதுதானே.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. இவர் தலைமையில் சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. அவர் கடந்த சீசனுடன் கேப்டன் பதவியில் இருந்து இறங்கிய நிலையில், தற்போது இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கே-வின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
தோனி, இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள், தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடுங்கள் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எம்.எஸ். தோனி மற்றும் சஞ்சு சாம்சன் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டர். அப்போது தோனியின் ஓய்வு குறித்து சஞ்சு சாம்சன், இன்னும் கொஞ்சம் விளையாடுங்க பாய் என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எப்போதெல்லாம் தோனி, ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெறவேண்டும் என மக்கள் சொல்கிறார்களோ, அப்போதெல்லாம், 'இன்னும் கொஞ்சம் விளையாடுங்க பாய்' (Thoda Aur) என்றுதான் கேட்கத்தோன்றும். இந்தியர்களின் மனநிலையே இன்னும் கொஞ்சம் கேட்பதுதானே.
என்று சஞ்சு சாம்சன் கூறினார்.
- 2007-ல் டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார்.
- 2015 மற்றும் 2020-ல் ஷாலிமார் பார்க் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
இவர் முதல் முறையாக எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஷாலிமார் பார்க் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பந்த்னா குமாரியை 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார்.
என்றபோதிலும் இது இவருக்கு முதல் தேர்தல் இல்லை. 2015 மற்றும் 2020-ல் இதே தொகுதியில் பந்த்னா குமாரியிடம் தோல்வியடைந்திருந்தார். தற்போது 3-வது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டு, வெற்றி பெற்றதும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ரேகா குப்தாவின் வாழ்க்கை பின்னணியை பார்ப்போம்...
50 வயது ஆகும் ரேகா குப்தா அரியானா மாநிலம் சிந்து மாவட்டத்தில் உள்ள நந்த்கார்க் கிராமத்தில் 1974-ஆம் ஆண்டு ஜூலை 19-ந்தேதி பிறந்தார்.
ரேகா குப்தாவின் தந்தை வங்கி அதிகாரியாக பணியாற்றினார். இதனால் 1976-ம் ஆண்டு 2 வயதாகும்போது, அவரது குடும்பம் டெல்லிக்கு குடிபெயர்ந்தது.
டெல்லி பல்கலைகழகத்தில் படிக்கும்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர்கள் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷாத்தில் (ABVP) இணைந்தார்.
மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதன் காரணமாக, 1996-1997 காலகட்டத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தயால் சிங் கல்லூரியன் செயலாளராக இருந்துள்ளார்.
2000-ம் ஆண்டில் இருந்து பாஜக-வோடு ரேகா குப்தாவின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. பாஜக-வின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவா மோர்ச்சாவில் சேர்ந்தார். டெல்லி பாஜக இளைஞர் பிரிவின் செயலாளராக பணியாற்றினார்.
சிறப்பாக செயல்படும் அவரது திறமைக்கு உடனடியாக கட்சியில் அங்கீகாரம் கிடைத்தது. இளைஞர் அணியின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். 2004 முதல் 2006 வரை தேசிய செயலாளராக இருந்தார்.
கட்சி அமைப்புகளுக்கான வலுவான திறமையும், கட்சியின் நோக்கத்திற்கான அர்ப்பணிப்பும் பாஜக-வில் முக்கிய இடம பிடிக்க உதவியது.
2007-ல் டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார். வடக்கு பிதாம்பூரா தொகுதிக்குப்பட்ட இடத்தில் இருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டெல்லி மாநகராட்சியின் பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கமிட்டி தலைவராக 2007 முதல் 2009 வரை பதவி வகித்துள்ளார்.
பாஜக-வின் டெல்லி பெண்கள் பிரிவு பொதுச் செயலாளர், தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
- மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள தினமும் அதிக அளவில் பக்தர்கள் வருவதால், நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மாணவர்கள், தங்களது இருசக்கர வாகனத்தில் பக்தர்களை திரிவேணி சங்கமம் பகுதிக்கு அழைத்து சென்று, மீண்டும் கொண்டுவந்து விடுகிறார்கள்.
பிரயாக்ராஜ்:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள தினமும் அதிக அளவில் பக்தர்கள் வருவதால், நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரெயில், விமானம் மற்றும் பஸ்களில் வரும் பக்தர்கள் திரிவேணி சங்கமத்துக்கு மிகுந்த சிரமத்துடன் செல்ல வேண்டியுள்ளது. பலர் வெகு தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது.
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட உள்ளூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், தங்களது இருசக்கர வாகனத்தில் பக்தர்களை திரிவேணி சங்கமம் பகுதிக்கு அழைத்து சென்று, மீண்டும் கொண்டுவந்து விடுகிறார்கள். இதற்காக ரூ.100 முதல் ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கிறார்கள் என்றும். இதன் மூலம் அவர்கள் தினமும் ரூ.5 ஆயிரம் வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
பக்தர்களும் இந்த சேவை தங்களுக்கு மிகவும் வசதியாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
- பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை.
- பிரதமர் மோடி, தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட மயிலாடுதுறை எம்.பி. சுதா செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பட்ஜெட் தாக்கலின் போது தமிழகத்துக்கு ஏதாவது ஒரு நிதியை, நிதிஅமைச்சரும், பிரதமரும் ஒதுக்குவார்கள் என்று நம்பிக்கையோடு தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு சின்ன அறிவிப்பு கூட கிடையாது. நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம். பாராளுமன்றத்தில் பெரிய அளவில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காதது குறித்து குரல் எழுப்பினோம். தமிழகத்திற்கா? என்ற வெறுப்புணர்வோடு தான் இன்றைக்கு நிதியமைச்சர் தமிழகத்தை பார்க்கிறார்.
அதைப்போன்று இங்கு இருக்கிற அண்ணாமலை தமிழகத்துக்கு நிதி கேட்க வேண்டியதற்கு பதிலாக மற்ற கதையெல்லாம் பேசுகிறார். தமிழக மக்கள் ஆகட்டும், தமிழ் மண்ணாகட்டும் எல்லாவற்றையும் வெறுப்பது போன்றுதான் பிரதம மந்திரி நடந்து வருகிறார். திருக்குறள், தமிழ் என பிரதமர் மோடி பேசுகிறார். பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை. நாம் செலுத்தும் வரியை கேட்கிறோம்.
கல்விக்கு இந்தாண்டு வர வேண்டிய 4,500 கோடி ரூபாய் கேட்டால், மும்மொழி கொள்கையை ஒத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. ஒரு போதும் தமிழ் மக்களும், தமிழ் மண்ணும், தமிழ் உணர்வாளர்களும் மத்திய அரசின் சர்வாதிகார போக்கிற்கு தலை வணங்க மாட்டோம். தமிழ் மொழியை கற்றவர்கள் உலக அரங்கில் தலைசிறந்தவர்களாக உள்ளனர். இந்தியை நாங்கள் வெறுக்கவில்லை. திணிக்க வேண்டாம் என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
பிரதமர் மோடி, தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், தமிழக மக்களுக்கு அவர் செய்வது பெரிய துரோகம். கல்விக்கான தொகையை கேட்கிறோம் என்பதற்காக திருப்பரங்குன்றம், திருத்தணிக்கு போய் பிரச்சனை என முருகனை வைத்து திசை திருப்புகிறார்கள். முருகனின் பெயரை வைத்துக்கொண்டு எல்லா வித்தைகளையும் செய்து வருகிறார்கள். முருகனே வந்து திருத்தினாலும், இவர்கள் திருந்த மாட்டார்கள். ஆனால் ஒருநாள் முருக பெருமான் சூரனை எப்படி வதம் செய்தாரோ அதுபோன்று ஆர்.எஸ்.எஸ்.கும்பலை வதம் செய்யப்போகிறார் என்றார்.
- 16 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற ஜூலை மாதம் 7-ந்தேதி நடக்கிறது.
- ராஜகோபுரத்தை புதுப்பித்து வர்ணம் பூசும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2-7-2009 அன்று கும்பாபிஷேக விழா நடந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற ஜூலை மாதம் 7-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி, அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாக பணிகளும், கும்பாபிஷேக திருப்பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதில் ஒரு பகுதியாக 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ராஜகோபுரத்தில் தலா 7¾ அடி உயரமுள்ள செம்பாலான 11 அடுக்குகள் கொண்ட 9 கலசங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பழமைமாறாமல் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் அவற்றில் வரகு நிரப்பப்பட்டு ராஜகோபுரத்தின் உச்சியில் மீண்டும் பொருத்தப்பட்டது.
ராஜகோபுரத்தில் 9-வது நிலையில் கட்டப்பொம்மன் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட பெரிய மணியையும் பழமை மாறாமல் புதுப்பித்து நிறுவி உள்ளனர். கும்பாபிஷேக தினத்தன்று ராஜகோபுர மணி மீண்டும் ஒலிக்கவுள்ளது. ராஜகோபுரத்தை புதுப்பித்து வர்ணம் பூசும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக ராஜகோபுரத்தைச் சுற்றிலும் கம்புகளால் சாரம் கட்டப்பட்டு, அவற்றில் நின்று தொழிலாளர்கள் பழங்கால சிற்பங்களுக்கு வர்ணம் பூசுகின்றனர். சேதமடைந்த சிற்பங்களையும் புதுப்பிக்கின்றனர்.
கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளதால் கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
- பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
- 1996-ம் ஆண்டுக்கு பிறகு இங்கு நடக்கும் மிகப்பெரிய போட்டி இது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரின் தொடங்க ஆட்டத்தில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதினர். இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் தொடங்கியது. மைதானத்தில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. இரவில் கூட்டம் கொஞ்சம் அதிகரித்தது.
இந்நிலையில் 29 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடைபெற்ற நிலையில் அங்கு பெரிய அளவில் கூட்டம் வரவில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிண்டலடித்துள்ளார்.
இது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது எக்ஸ் தள பதிவில், 'பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. 1996-ம் ஆண்டுக்கு பிறகு இங்கு நடக்கும் மிகப்பெரிய போட்டி இது. ஆனால் இன்று(நேற்று) போட்டி நடப்பதை உள்ளூர் ரசிகர்களிடம் சொல்ல மறந்து விட்டீர்களா? ரசிகர்கள் கூட்டம் எங்கே?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.






