search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Michael Vaughan"

    • நடப்பு ஐ.பி.எல். சீசனில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
    • மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமனம் செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. நடப்பு சீசனில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமனம் செய்யப்பட்டார்.

    ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு ரசிகர்கள் பலர் அதிருப்தி தெரிவித்ததுடன் ஐ.பி.எல். போட்டி தொடரின் போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகிறார்கள். தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையின் கீழ் மும்பை அணியில் ஒரு வீரராக ரோகித் சர்மா விளையாடி வருகிறார்.

    இதற்கிடையே, அடுத்த ஆண்டு ரோகித் சர்மா வேறு அணிக்கு மாறக்கூடும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    தோனிக்கு மாற்றாக ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்வார் என நினைக்கிறேன்.

    சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆண்டு மட்டுமே இருப்பார். அடுத்த ஆண்டு ரோகித் சர்மாவை சென்னை அணி கேப்டனாக பார்க்கலாம்.

    ஹர்திக் பாண்ட்யா தற்போது கடினமான காலகட்டத்தில் இருக்கிறார். இது அவரது தவறு கிடையாது.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறீர்களா என்று அணி நிர்வாகம் கேட்டால் எந்த வீரர் தான் வேண்டாம் என்று சொல்வார்.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவை மும்பை அணி கேப்டனாக இந்த ஆண்டு நீட்டித்திருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும் என தெரிவித்தார்.

    • இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (11 ரன்) 2-வது இன்னிங்சில் அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
    • டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்த போது பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால் முடிவை மாற்றிக் கொண்ட நடுவர் அவுட் வழங்கினார்.

    இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (11 ரன்) 2-வது இன்னிங்சில் அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. பிறகு டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்த போது பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால் முடிவை மாற்றிக் கொண்ட நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் இந்த தீர்ப்பு குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

    அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'தொழில்நுட்பத்தை பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. பந்து பாதிக்கு மேல் லெக்ஸ்டம்புக்கு வெளியே இருப்பது தெரிந்தது. ஆனாலும் சிவப்பு லைட் ஒளிர்கிறது. எல்.பி.டபிள்யூ.வை கண்டறிய பயன்படுத்தப்படும் 'ஹாக்ஐ' நுட்பம் இந்த தொடர் முழுவதும் சராசரி அளவில் தான் இருக்கிறது. எப்படியோ அது இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேனான ஜோ ரூட்டின் கதையை முடித்து விட்டது' என்று கூறியுள்ளார். இது சர்ச்சையானதும் அவர் தனது பதிவை நீக்கி விட்டார். இன்னொரு பதிவில் ரூட்டின் அவுட்டுக்கான ரீப்ளேயை ஏன் அதிக முறை போட்டு காண்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • 3-வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
    • இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    குறிப்பாக முதல் போட்டியில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

    இந்த தொடரில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். மேலும் 12 சிக்சர்கள் அடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற வாசிம் அக்ரமின் உலக சாதனையை சமன் செய்தார்.

    இந்நிலையில் ஜெய்ஸ்வால் தான் இந்திய அணியின் புதிய சேவாக் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியா புதிய வீரேந்திர சேவாக்கை கொண்டுள்ளது. அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பல்வேறு பவுலிங் அட்டாக்கை சேவாக் அடித்து நொறுக்கியதை போலவே யசஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடக் கூடிய வீரராக திகழ்கிறார்.

    என்று கூறியுள்ளார்.

    இந்த தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி ரஞ்சி நகரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

    • சிறந்த அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசி இருக்கிறார்.
    • மூன்றாவது இளம் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்திய துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எதிரணிக்கு பிரச்சினையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். கிளப் பிரையர் ஃபயர் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய மைக்கேல் வாகன், இந்திய இளம் வீரரான ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு பிரச்சினையாக உள்ளார் என்று தெரிவித்து இருக்கிறார்.

    இது குறித்து பேசிய அவர், "இங்கிலாந்து அணிக்கு அவர் பிரச்சினை என்று நான் சொல்வேன். அவர் நம்பவே முடியாத வீரர். நான் அவரை மும்பையில் சந்தித்தேன், மறுநாளே அவர் ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்கு எதிராக சதம் விளாசினார். தற்போது அவர் உலகின் சிறந்த அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசி இருக்கிறார்," என்று தெரிவித்தார்.

     


    இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய மூன்றாவது இளம் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக வினோத் காம்ப்ளி தனது 21 ஆண்டுகள் 35 நாட்களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 224 ரன்களை விளாசினார்.

    இவரை தொடர்ந்து சுனில் கவாஸ்கர் தனக்கு 21 ஆண்டுகள் 283 நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 220 ரன்களை விளாசினார். இவர்கள் வரிசையில் தற்போது ஜெய்ஸ்வால் தனது 22 ஆண்டுகள் 37-வது நாளில் இரட்டை சதம் விளாசியுள்ளார். 

    • ரோகித் சர்மா ஒரு ஜாம்பவான் வீரர் என்பதில் சந்தேகமில்லை.
    • முதல் போட்டியில் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டிருந்தால் நிச்சயம் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருக்காது.

    லண்டன்:

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்த விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியது.

    இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் இந்தியா தோல்வியடைந்திருக்காது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய டெஸ்ட் அணி விராட் கோலியின் கேப்டன்சியை பெரிதும் இழந்துள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டிருந்தால் நிச்சயம் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருக்காது. ரோகித் சர்மா ஒரு ஜாம்பவான் வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் தற்போது செயலிழந்து விட்டதாக உணர்கிறேன்.

    மேலும் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மிகமிக சராசரியாக இருந்ததாக நான் கருதுகிறேன். களத்தில் அவர் சரியான திட்டங்களை தீட்டியதாகவோ அல்லது பந்து வீச்சு மாற்றங்களில் முனைப்புடன் இருந்ததாகவோ எனக்கு தெரியவில்லை.

    என்று வாகன் தெரிவித்தார்.

    • டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் திகழ்வார்
    • சர்வதேச கிரிக்கெட்டில் 1,001 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் டாப் விக்கெட் மேக்கர் என்ற பட்டத்தை பாட் கம்மின்ஸ் பெற்றார்.

    டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் திகழ்வார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும் போது, கேப்டனுக்கு இப்போது முப்பது வயதுதான் ஆகிறது. இன்னும் அவர் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் விளையாட வேண்டும். சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக பிராட்மேனுக்குப் பிறகு கம்மின்ஸ் இருப்பார். "டான் பிராட்மேனை விட சிறந்தவராக இருப்பார் என நினைக்கவில்லை, ஆனால் டான் பிராட்மேனுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக பேட் கம்மின்ஸ் இருப்பார்" என நம்புவதாக தெரிவித்தார்

    ஏனென்றால், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய கம்மின்ஸ் தனது சிறப்பான ஆட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவை அதன் 6-வது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு வழிநடத்தினார். மேலும் ஒவ்வொரு போட்டியிலும் பத்து விக்கெட்டுகள், இரண்டு ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி சிறப்பாக ஆடினார்.

    சமீபத்தில் துபாயில் நடந்த ஐபிஎல் விற்பனையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் ரூ 20.50 கோடிக்கு பேட் கம்மின்ஸ் ஒப்பந்தம் செய்தார். அதன் பிறகு ஐபிஎல் வரலாற்றில் விலைமதிப்பற்ற வீரராக திகழ்ந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 1,001 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் டாப் விக்கெட் மேக்கர் என்ற பட்டத்தை பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் கம்மின்ஸ் ஒன்பதாவது இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்னுடைய சிறந்த நண்பரிடம் இருந்து தீபாவளி டிரிம் எனப்பதிவு.
    • வாகன் செயலை பாராட்டி கருத்து பதிவிட்டு வரப்படுகிறது.

    இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

    மைக்கேல் வாகன் மும்பையில் உள்ளார். அவர் மும்பை ஆர்மிஸ்டன் சாலையில் மரத்தடியில் அமர்ந்து முடி வெட்டிய வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளா். வீடியோவுடன் "என்னுடைய சிறந்த நண்பர் தினஜயாலிடமிருந்து தீபாவளி பார்ட்டி டிரிம் மற்றும் தலை மசாஜ்" எனப் பதிவிட்டுள்ளார்.

    மற்றொரு டுவிட்டரில் சேவ் செய்யும் படத்தையும் வெளியிட்டுள்ளார். மிகப்பெரிய நபரான மைக்கேல் வாகன் மரத்தடியில் அமர்ந்து சாலையோர நபரிடம் முடி வெட்டிய அவரது செயலை பெரும்பாலானோர் பாராட்டி கருத்து பதிவிட்டு வருகிறார்கள். அதனுடன் அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

    • ஆஸ்திரேலிய அணி வலுவான பந்துவீச்சு தாக்குதலையும், தரமான பேட்ஸ்மேன்களையும் கொண்ட வித்தியாசமான அணி என மெக்ராத் கூறினார்.
    • இங்கிலாந்து இப்போது மிகச்சிறந்த அணியாக திகழ்கிறது. நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு ஆச்சரியம் அளிப்பார்கள் என மைக்கெல் வாகன் கூறினார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 16-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. நூற்றாண்டு கால பழமைவாய்ந்த ஆஷஸ் தொடரில் இந்த முறை ஆஸ்திரேலியா முழுமையாக வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளைன் மெக்ராத் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி சமீபகாலமாக ஆக்ரோஷமாக விளையாடி வரும் விதம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. அதே நேரத்தில் இந்த ஆஸ்திரேலிய அணி வலுவான பந்துவீச்சு தாக்குதலையும், தரமான பேட்ஸ்மேன்களையும் கொண்ட வித்தியாசமான அணி. இது நம்ப முடியாத ஒரு போட்டித்தொடராக இருக்கப்போகிறது. முதல் டெஸ்ட் போட்டி முடிவு மிகவும் முக்கியமானது. இதில் சிறப்பான தொடக்கம் அமைய வேண்டியது அவசியம். ஒவ்வொரு டெஸ்டும் கடைசி வரை பரபரப்பாக நகர்ந்து, அதில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதை பார்க்க முடியும் என்று நம்புகிறேன். தொடரை ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்லும் என்பதே எனது கணிப்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில்,

    2001-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை வென்றதில்லை என்பது வரலாறு சொல்லும் உண்மை. கிட்டத்தட்ட இதே அணி வீரர்களுடன் கடைசியாக 2019-ம் ஆண்டில் இங்கிலாந்தில் ஆடிய போது அவர்களால் 2-2 என்று தொடரை சமன்தான் செய்ய முடிந்தது. இங்கிலாந்து இப்போது மிகச்சிறந்த அணியாக திகழ்கிறது. நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு ஆச்சரியம் அளிப்பார்கள். தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும்.

    இவ்வாறு வாகன் கூறினார்.

    • குறிப்பாக பந்து நேராக வரும் போது சுப்மன் கில் ஆபத்தான வீரர் என்பதில் சந்தேகமில்லை.
    • 2018-ல் இதே லண்டன் ஓவல் மைதானத்தில் கேஎல் ராகுல் சதமடித்து 149 ரன்கள் அடித்தார்.

    உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2-வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் இருக்கும் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

    அதில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த இறுதி போட்டியில் ரோகித் சர்மாவுடன் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் இளம் வீரர் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ளும் அளவுக்கு சுப்மன் கில்லிடம் டெக்னிக்கல் அளவில் குறைபாடுகள் இருப்பதாகவும் கோப்பையை வெல்ல ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக ராகுல் தான் விளையாட வேண்டுமென்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வரலாற்றை மறந்து விட்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்காக சிறந்த 11 பேர் அணியை தேர்வு செய்யுங்கள். குறிப்பாக பந்து நேராக வரும் போது சுப்மன் கில் ஆபத்தான வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருடைய டெக்னிக்கில் சில குறைபாடுகளை நான் பார்த்துள்ளேன்.

    குறிப்பாக பந்து நகரும் போது அவர் தன்னுடைய கைகளை பந்தை நோக்கி சற்று அதிகமாக எடுக்கிறார். அதனால் அடிக்கடி எட்ஜ் கொடுக்கிறார். எனவே கில்லுக்கு பதிலாக ராகுல் தேர்வு செய்யப்படுவாரா என்பது எனக்கு தெரியாது. ஏனெனில் நான் இந்திய அணியின் தேர்வு குழுவில் இல்லை.

    ஆனால் ஃபைனலுக்கு பின்பாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை கருத்தில் கொண்டு அந்த போட்டிக்கான அணியை தேர்வு செய்யாதீர்கள். நீங்கள் இறுதிபோட்டி எனும் ஒரு போட்டியில் வெல்வதற்கான சிறந்த அணியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    என்று அவர் கூறினார்.

    அவர் கூறுவது போல 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கிய கில் 28, 8 என 2 இன்னிங்சிலும் சுமாராகவே செயல்பட்டார்.

    மறுபுறம் 2021-ல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது பெற்ற ராகுல் 2018-ல் இதே லண்டன் ஓவல் மைதானத்தில் சதமடித்து 149 ரன்கள் விளாசிய அனுபவத்தை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்றில் எந்த அணிகள் விளையாட போகின்றன என்பதை கணிப்பது எப்போதும் கடினமானது.
    • ஏனென்றால் அனைத்து அணிகளும் சம பலத்துடன் இருக்கும்.

    16-வது ஐபிஎல் சீசன் இன்று அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் அணியும் மோதுகின்றனர்.

    இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் வெல்ல வாய்ப்பு இல்லை எனவும் ராஜஸ்தான் அணிதான் வெல்லும் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

    இது குறித்து மைக்கேல் வாகன் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டியில் இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கானது என்று கருதுகிறேன். அந்த அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் என்றார்.

    அதேபோல் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் கூறும்போது:-

    ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்றில் எந்த அணிகள் விளையாட போகின்றன என்பதை கணிப்பது எப்போதும் கடினமானது. ஏனென்றால் அனைத்து அணிகளும் சம பலத்துடன் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் இடையே போட்டி இருக்கும். கோப்பையை டெல்லி அணி வெல்லும் என்று கருதுகிறேன் என்றார்.

    • 6-வது டெஸ்ட்டில் விளையாடும் ஹாரி புரூக்கிற்கு இது 4-வது சதம் ஆகும்.
    • கடந்த 10 ஆண்டுகளில் ஜோ ரூட் போல பேட்டிங் செய்ய வேண்டும் என்று அனைத்து குழந்தைகளும் விரும்பினர்.

    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி 21 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜோ ரூட் நிதானமாக ஆடி சதம் அடித்தார். மறுமுனையில் இருந்த ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

    இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 315 எடுத்துள்ளது. ஹாரி புரூக் 184 ரன்களுடனும் ஜோ ரூட் 101 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    6-வது டெஸ்ட்டில் விளையாடும் ஹாரி புரூக்கிற்கு இது 4-வது சதம் ஆகும். 24 வயதாகும் அவர் தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் 807 ரன்களை குவித்துள்ளார்.

    புரூக்கின் மிரட்டல் ஆட்டத்தை பார்த்து வியந்த இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வெகுவாக பாராட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில் ஜோ ரூட் போல பேட்டிங் செய்ய வேண்டும் என்று அனைத்து குழந்தைகளும் விரும்பினர். தற்போது அடுத்த 10 ஆண்டுகளில் அதே குழந்தைகள் ஹாரி புரூக்கை போல விளையாட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்' என கூறியுள்ளார்.   

    டோனியை போலவே ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பதவியில் செயல்படுவதாக டெலிவிஷன் வர்ணனையாளரும், முன்னாள் கேப்டனுமான கவாஸ்கர் புகழாரம் சூட்டி இருந்தார்.
    புதுடெல்லி:

    15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது.

    புதுமுக அணியான குஜராத் தனது அறிமுக போட்டியிலேயே ஐ.பி.எல். கோப்பையை வென்று முத்திரை பதித்தது. இதற்கு ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன் பதவி முக்கிய பங்கு வகித்தது.

    டேவிட் மில்லர், ரஷீத்கான், சுப்மன்கில், ராகுல்திவேதியா, விர்த்திமான் சஹா போன்ற வீரர்களின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது.

    இறுதிப்போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தியதோடு பேட்டிங்கில் 34 ரன்கள் எடுத்தார். அவரது கேப்டன் பதவியை முன்னாள் வீரர்கள் வீரேந்திர ஷேவாக், ரவிசாஸ்திரி ஏற்கனவே பாராட்டி இருந்தனர்.

    டோனியை போலவே ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பதவியில் செயல்படுவதாக டெலிவிஷன் வர்ணனையாளரும், முன்னாள் கேப்டனுமான கவாஸ்கர் புகழாரம் சூட்டி இருந்தார்.

    இந்த நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும், ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன் திறமையை பாராட்டி உள்ளார்.

    ஹர்திக் பாண்ட்யா

    புதுமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் ஐ.பி.எல். போட்டியில் மகத்தான சாதனையை படைத்தது. எதிர்கால இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட சாத்தியம் இருக்கிறது. அவர் குஜராத் அணியை வழி நடத்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல குஜராத் அணியின் ஆலோசகரும், தென் ஆப்பிரிக்க முன்னாள் தொடக்க வீரருமான கேரி கிரிஸ்டனும் கேப்டன் பதவியில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டி உள்ளார்.

    விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ரோகித்சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக பணியாற்றி வருகிறார். 3 வடிவிலான போட்டிகளுக்கும் அவர் கேப்டனாக இருக்கிறார்.

    அவருக்கு பிறகு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர்கள் கணித்து உள்ளனர்.

    28 வயதான ஹர்திக் பாண்ட்யா இந்த ஐ.பி.எல். போட்டியில்487 ரன்கள் எடுத்தார். 8 விக்கெட் வீழ்த்தினார். 
    ×