என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கோலிக்கு புகழாரம்.. தோனியை  மொக்க பண்ண மைக்கெல் வாகன்
    X

    கோலிக்கு புகழாரம்.. தோனியை மொக்க பண்ண மைக்கெல் வாகன்

    • விராட் கோலி இந்த ஆண்டு இங்கிலாந்தில் விளையாட மாட்டார் என்பதை அறிந்து நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பாத ஒரு அணியைத்தான் தோனி வழி நடத்தி வந்தார்.

    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 36 வயதான விராட் கோலி, தனது 14 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவுகட்டி ஓய்வை அறிவித்தார். 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 9230 ரன்கள் குவித்து 30 சதங்களை அடித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளை அதிக ரசிகர்கள் பார்க்கக் காரணமாக இருந்தவர் விராட் கோலி எனப் பலரும் தற்போது அவரைப் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் விராட் கோலி அணியில் இணைவதற்கு முன்பு இந்தியா, டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக ஆர்வம் காட்டாத அணியாக இருந்தது எனவும், அந்த அணிக்குத்தான் தோனி கேப்டனாக இருந்தார் எனவும் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் டெஸ்ட் போட்டி ஓய்வுகளைப் பற்றி பெரும்பாலும் ஏமாற்றம் அடைய மாட்டேன். ஆனால், விராட் கோலி இந்த ஆண்டு இங்கிலாந்தில் விளையாட மாட்டார் என்பதை அறிந்து நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அவர் ஓய்வு பெற்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அது எனக்குச் சோகத்தையும் அளித்தது.

    கடந்த 30 ஆண்டுகளில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளுக்குச் செய்த நன்மையைப் போல வேறு யாரும் செய்ததில்லை. இந்தியா இதற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆர்வத்தை இழந்து கொண்டிருந்தது. விராட் கோலி கேப்டன் ஆகும் வரை அப்படித்தான் இருந்தது.

    வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தோனி ஒரு ஜாம்பவானாக இருந்தார். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பாத ஒரு அணியைத்தான் அவர் வழி நடத்தி வந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோதுதான் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவருடைய ஆர்வமும் திறமையும் டெஸ்ட் போட்டிகளுக்கு என்று வடிவமைக்கப்பட்டது. அவர் அந்த டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தை மற்றொரு உயரத்துக்கு அழைத்துச் சென்றார். அதற்கென அவர் நிறைய நேரத்தையும் ஆர்வத்தையும் முதலீடு செய்தார்.

    அவரது ஓய்வு என்பது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கு அவரது டெஸ்ட் கிரிக்கெட் ஆர்வம் மிகப்பெரிய உந்துதலாக அமையும். பல்வேறு சகாப்தங்களைச் சேர்ந்த வீரர்களையும் ஒப்பிடுவது என்பது சாதாரணமானது அல்ல. டி20 போட்டிகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது முதல், மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விராட் கோலி மிகச் சிறந்த வீரராக இருந்திருக்கிறார்

    என்று மைக்கேல் வாகன் கூறினார்.

    Next Story
    ×