என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஓவல் டெஸ்டின் கடைசி நாளில் இங்கிலாந்து பயந்துவிட்டது- முன்னாள் கேப்டன் வாகன் விமர்சனம்
- இங்கிலாந்து அணிக்கு ஒரே ஒரு பார்ட்னர்ஷிப் மட்டுமே தேவைப்பட்டது.
- ஹாரி புரூக்கின் விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.
லண்டன்:
இங்கிலாந்து- இந்தியா அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஓவல் மைதானத்தில் நடந்த பரபரப்பான 5-வது டெஸ்டில் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிக்கு 35 ரன்னே தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட் இருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை குறிப்பாக முகமது சிராஜின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி தோற்றது.
இந்த நிலையில் ஓவல் டெஸ்டின் கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்து விட்டது என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்திருந்தால் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று இருக்கும். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு அவர் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கி இருப்பார். ஓவல் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அச்சமடைந்துவிட்டது.
இங்கிலாந்து அணிக்கு ஒரே ஒரு பார்ட்னர்ஷிப் மட்டுமே தேவைப்பட்டது. பயத்தினால் அதிரடியாக விளையாட முயன்று தோல்வி அடைந்தனர். ஹாரி புரூக்கின் விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்துக்கு மிகப் பெரிய சவாலானதாக அமைந்தது.
இவ்வாறு வாகன் கூறி உள்ளார்.
மற்றொரு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் கூறியதாவது:-
இங்கிலாந்து அணி தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று இருந்தால் அது ஒரு கேலிக்கூத்தாக இருந்து இருக்கும். இந்த தொடரில் இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. இதனால் 2-2 என்ற கணக்கில் இந்தியா தொடரை சமன் செய்ய தகுதியானது. 2-வது இன்னிங்சில் இந்தியா குவித்த ஸ்கோர் தகுதியானது. மேலும் கடைசி விக்கெட்டை முகமது சிராஜ் வீழ்த்தியது மிகவும் பொருத்தமாக அமைந்தது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






