என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
    • 1996-ம் ஆண்டுக்கு பிறகு இங்கு நடக்கும் மிகப்பெரிய போட்டி இது.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரின் தொடங்க ஆட்டத்தில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதினர். இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் தொடங்கியது. மைதானத்தில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. இரவில் கூட்டம் கொஞ்சம் அதிகரித்தது.

    இந்நிலையில் 29 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடைபெற்ற நிலையில் அங்கு பெரிய அளவில் கூட்டம் வரவில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிண்டலடித்துள்ளார்.

    இது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது எக்ஸ் தள பதிவில், 'பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. 1996-ம் ஆண்டுக்கு பிறகு இங்கு நடக்கும் மிகப்பெரிய போட்டி இது. ஆனால் இன்று(நேற்று) போட்டி நடப்பதை உள்ளூர் ரசிகர்களிடம் சொல்ல மறந்து விட்டீர்களா? ரசிகர்கள் கூட்டம் எங்கே?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • ஒரு ராக்கெட்டில் 2 தொகுதிகளும், மற்றொரு ராக்கெட்டில் 3 தொகுதிகளும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன.
    • சந்திரயான்-3 திட்டத்தில் 26 கிலோ எடையிலான லேண்டர் பயன்படுத்தப்பட்டது.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் நிலவில் இருந்து மண், கல், பாறைகள் அடங்கிய மாதிரிகளை ஆராய்ச்சிக்கு எடுத்து வர முடிவு செய்தனர். இதற்காக 'சந்திரயான்-3' திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, 'சந்திரயான்-4' விண்கலத்தை தயாரித்து உள்ளனர். இந்த திட்டம் மூலம் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் மென்மையாக தரையிறங்கவும், நிலவின் மேற்பரப்பில் இருந்து மண், கல், பாறைகள் அடங்கிய மாதிரிகளைச் சேகரித்து ஆராய்ச்சிக்காக பூமிக்கு திருப்பி கொண்டுவருவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

    இதனை வருகிற 2027-ம் ஆண்டு விண்ணில் ஏவுவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 'சந்திரயான்-4' விண்கலம் 9 ஆயிரத்து 200 கிலோ எடை கொண்டதாகும். சந்திரயான்-3 திட்டம் போல் இல்லாமல், இந்த திட்டத்திற்கு ஆராய்ச்சி கருவிகளை 5 தொகுதிகளாக பிரித்து 2 ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    ஒரு ராக்கெட்டில் 2 தொகுதிகளும், மற்றொரு ராக்கெட்டில் 3 தொகுதிகளும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன. ஏவும் பணிக்கு எல்.வி.எம்-3 மற்றும் பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் ஒரு மாத இடைவெளியில் ஏவப்படுகிறது. ஒரே திட்டத்திற்கு 2 ராக்கெட்டுகள் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.

    இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறும்போது, 'விண்வெளி நிலையத்திற்கு தேவைப்படும் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதற்காக பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக விண்ணில் 2 செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைப்பது மற்றும் பிரிப்பது போன்ற தொழில்நுட்ப அறிவு மிக முக்கியமாக தேவைப்படுகிறது.

    'சந்திரயான்-4' திட்டத்தில் 2 ராக்கெட்டுகள் தனித்தனியாக ஏவிய பின்னர், பூமி சுற்றுப்பாதையில் அவற்றை இணைக்கும் பணி நடக்கும். அதற்கு பிறகு, உந்துவிசை தொகுதி அடுத்து விண்கலத்தை நிலவு சுற்றுப்பாதையில் செலுத்தும். அங்கு பிரிந்த பிறகு, மீதம் உள்ள 2 தொகுதிகள் பிரிந்து நிலவு மேற்பரப்பில் தரையிறங்கி மாதிரிகளை சேகரிக்கும்.

    தொகுதிகளில் ஒன்று நிலவு சுற்றுப்பாதையில் மீதமுள்ள தொகுதிகளுடன் இணைக்கப்படும். பின்னர் மறு நுழைவு தொகுதிக்கு நகர்த்தப்படும். இது மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பும். இந்த பணிக்கு அதிக திறன் கொண்ட உந்துவிசை அமைப்பு, சிறப்பு ஆராய்ச்சி கருவிகள் மற்றும் மாதிரி சேகரிப்புக்கான ரோபோ கருவிகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது அவசியமாகிறது. இவை அனைத்திற்குமான பணிகள் நடந்து வருகின்றன.

    சந்திரயான்-5 என்று அழைக்கப்படும் நிலவு துருவ ஆய்வு திட்டம் (லூபெக்ஸ்) இஸ்ரோ-ஜப்பானுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த கூட்டுப்பணி நிலவில் தரையிறங்க உதவும் லேண்டர் எந்திரத்தை உருவாக்க உள்ளது. விண்வெளியில் உள்ள விண்வெளி நிலையத்திற்கு இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து கருவிகளைக் கொண்டு செல்லும். விண்கலத்தின் தாங்கும் சக்தி 6 ஆயிரத்து 200 கிலோவாக இருக்கும். அதே நேரத்தில் லூபெக்ஸ் ரோவர் 350-400 கிலோ எடையுள்ளதாக இருக்கும். இதுவே சந்திரயான்-3 திட்டத்தில் 26 கிலோ எடையிலான லேண்டர் பயன்படுத்தப்பட்டது.

    இதற்கான திட்ட கட்டமைப்பில் பூமி மற்றும் நிலவு சுற்றுப்பாதைகளில் பல இணைப்பு மற்றும் பிரிப்பு சோதனைகளும் செய்ய இருக்கிறோம். அதற்கான உள் அமைப்பு, வடிவமைப்புகளை முடித்துவிட்டோம். தற்போது பல்வேறு துணை அமைப்புகளின் வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.

    • டெல்லி மக்கள் முன்னேற்றத்திற்கான பணிக்காக பாஜக-விற்கு ஆதரவு அளிக்க ஆம் ஆத்மி எப்போதும் தயாராக இருக்கிறது- கெஜ்ரிவால்.
    • மார்ச் 8-ந்தேதி டெல்லி பெண்களின் வங்கி கணக்கில் 2500 ரூபாய் செலுத்தப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

    டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் பதவி ஏற்க உள்ளார்.

    டெல்லியின் 4-வது பெண் முதல்வர் இவராவார். இதற்கு முன்னதாக சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்ஷித், அதிஷி ஆகியோர் முதல்வராக இருந்துள்ளனர். தற்போது 4-வது பெண் முதல்வராக இன்று மதியம் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் ரேகா குப்தா பதவி ஏற்பது குறித்து கூறியதாவது:-

    டெல்லி முதல்வராகும் ரேகா குப்தாவுக்கு வாழ்த்துகள். டெல்லி மக்களுக்கு அவர்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். டெல்லி மக்கள் முன்னேற்றத்திற்காக அனைத்து பணிகளிலும் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம்.

    இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி கூறியதாவது:-

    டெல்லி முதல்வராகும் ரேகா குப்தாவிற்கு என்னுடைய வாழ்த்துகள். பாஜக என்னென்ன வாக்குறுதிகள் அளித்ததோ, அனைத்தையும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். டெல்லி மக்கள் முன்னேற்றத்திற்கான பணிக்காக பாஜக-விற்கு ஆதரவு அளிக்க ஆம் ஆத்மி எப்போதும் தயாராக இருக்கிறது.

    பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. மார்ச் 8-ந்தேதி அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்திருந்தது. சொன்னபடி மார்ச் 8-ந்தேதி வங்கியில் பணம் செலுத்தப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

    அவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.

    • 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
    • இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது வரை 70-க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.

    எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான மீனவர்களை யாழ்ப்பாணம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது வரை 70-க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.

    மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-8 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சப்தமி காலை 8.03 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: விசாகம் காலை 11.46 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை முருகப் பெருமான் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. சோழவந்தான் அருகல் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உறுதி

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-நட்பு

    கடகம்-உதவி

    சிம்மம்-தனம்

    கன்னி-நிறைவு

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- சுகம்

    மகரம்-ஆரோக்கியம்

    கும்பம்-வெற்றி

    மீனம்-செலவு

    • டெல்லி மாநில முதல்வராக ரேகா குப்தா இன்று பதவி ஏற்க உள்ளார்.
    • 1995-ல் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற படத்தை பகிர்ந்துள்ளார்.

    டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் பதவி ஏற்க உள்ளார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா, ரேகா குப்தா உடன் 1995-ஆம் ஆண்டு ஒன்றாக பதவி ஏற்ற படத்தை பகிர்ந்துள்ளார். இந்த படம் வைரலாக பரவி வருகிறது.

    அல்கா லம்பா

    எக்ஸ் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்த அல்கா லம்பா "1995-ம் ஆண்டு நானும், ரேகா குப்தாவும் இணைந்து பதவி ஏற்றபோது எடுத்த மறக்க முடியாத போட்டோ. டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தலைவர் பதவிக்கு என்.எஸ்.யு.ஐ. சார்பில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றேன். அவர் பொதுச் செயலாளர் பதவிக்கு ஏபிவிபி சார்பில் வெற்றி பெற்றார். வாழ்த்துகள்.

    4-வது பெண் முதல்வரை பெற இருக்கும் டெல்லிக்கு வாழ்த்துகள். யமுனை தூய்மைப்படுத்தப்படும், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    ரேகா குப்தா

    பின்னர் 1996-ஆம் ஆண்டு ரேகா குப்தா டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தலைவராக தேர்வு பெற்றார்.

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷியை எதிர்த்து அல்கா லம்பா போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    • துபாய் ஆடுகளம் சற்று மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழல் முக்கிய பங்கு வகிக்கலாம்.
    • கோலி இன்னும் 37 ரன் எடுத்தால் ஒரு நாள் போட்டியில் 14 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டும் 3-வது வீரர் என்ற சிறப்பை பெறுவார்.

    துபாய்:

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இந்த நிலையில் தொடரின் 2-வது லீக்கில் முன்னாள் சாம்பியனும், 'நம்பர் ஒன்' அணியுமான இந்தியா, வங்காளதேசத்தை (ஏ பிரிவு) துபாயில் இன்று (வியாழக்கிழமை) எதிர்கொள்கிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி போட்டியை வெற்றியோடு தொடங்கும் முனைப்புடன் தீவிரமாக தயாராகி வருகிறது. அண்மையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய உற்சாகத்துடன் களம் காணும் இந்திய அணியில் துணை கேப்டன் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஷர் பட்டேல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    கேப்டன் ரோகித் சர்மா கூட அந்த தொடரில் ஒரு சதம் அடித்தார். ஆனால் விராட் கோலியின் தடுமாற்றம் தான் தொடருகிறது. அவர் மீண்டும் ரன் குவிக்க வேண்டியது அவசியமாகும். அப்போது தான் மிடில் வரிசை வலுவடையும். கோலி இன்னும் 37 ரன் எடுத்தால் ஒரு நாள் போட்டியில் 14 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டும் 3-வது வீரர் என்ற சிறப்பை பெறுவார்.

    பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் விலகியது பலவீனமே. இருப்பினும் முகமது ஷமி, அர்ஷ்தீப்சிங், ஹர்திக் பாண்ட்யா, சுழலில் ஜடேஜா, அக்ஷர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி மிரட்ட காத்திருக்கிறார்கள். துபாய் ஆடுகளம் சற்று மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழல் முக்கிய பங்கு வகிக்கலாம்.

    சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஒரு அணி மொத்தமே 3 லீக்கில் தான் விளையாட வேண்டும். ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதி வாய்ப்பு சிக்கலாகி விடும். அதனால் இந்திய வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு ஆடுவார்கள் என்று நம்பலாம்.

    வங்காளதேச அணியை பொறுத்தவரை சமீப காலத்தில் அவர்களின் செயல்பாடு மெச்சும்படி இல்லை. வெஸ்ட் இண்டீஸ் (0-3) மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடர்களை (1-2) அடுத்தடுத்து இழந்தது. விதிமுறைக்கு புறம்பாக பந்து வீசிய சர்ச்சையில் சிக்கிய ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டதால் அவர் அணியில் இடம் பெறவில்லை. இதே போல் ரன் எடுக்க தடுமாறும் அனுபவ வீரர் லிட்டான் தாசும் கழற்றி விடப்பட்டுள்ளார். இருப்பினும் தங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனிநபராக ஆட்டத்தில் வெற்றி தேடித்தரக்கூடிய திறமை இருப்பதாக கேப்டன் ஷன்டோ நம்பிக்கையோடு சொல்லியுள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், 'ஒருநாள் போட்டி வடிவத்துக்கு எங்கள் அணி மிகவும் சரியான கலவையில் இருக்கிறது. இந்த தொடரில் எங்களால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும் என்று நம்புகிறோம். எல்லா அணிகளும் கோப்பையை வெல்வதற்குரிய திறன் படைத்தவை. ஆனால் நாங்கள் எதிரணி குறித்து அதிகமாக சிந்திக்கமாட்டோம். வியூகத்தை களத்தில் சரியாக செயல்படுத்தினால் எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும்' என்று நேற்று நிருபர்களிடம் குறிப்பிட்டார்.

    மக்முதுல்லா, முஷ்பிகுர் ரஹிம், மெஹிதி ஹசன் மிராஸ், முஸ்தாபிஜூர் ரகுமான், மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய நஹித் ராணா உள்ளிட்டோர் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் வீழ்த்தியது போல் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க முயற்சிப்பார்கள். அதனால் ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 41 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 32-ல் இந்தியாவும், 8-ல் வங்காளதேசமும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, அர்ஷ்தீப்சிங், ஹர்ஷித் ராணா அல்லது வருண் சக்ரவர்த்தி அல்லது குல்தீப் யாதவ்.

    வங்காளதேசம்: தன்சித் ஹசன், சவுமியா சர்கார், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடாய், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹூசைன், தஸ்கின் அகமது, நஹித் ராணா, முஸ்தாபிஜூர் ரகுமான்.

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • 21-ந்தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 245, கோயம்பேட்டில் இருந்து 51, மாதவரத்தில் இருந்து 20 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
    • 22-ந்தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 240, கோயம்பேட்டில் இருந்து 51, மாதவரத்தில் இருந்து 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கம்.

    வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து பிப்ரவரி 21-ஆம் தேதி (நாளை-வெள்ளிக்கிழமை) மற்றும் பிப்ரவரி 22-ஆம் தேதி (நாளை மறுதினம்- சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கிளாம்பாக்கத்தில் இருந்து 245 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 51 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

    பிப்ரவரி 22-ந்தேதி சனிக்கிழமை கிளாம்பாக்கத்தில் இருந்து 240 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 51 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

    • சூடான் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • அங்கு உள்நாட்டு போரில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

    கார்டூம்:

    சூடான் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், அவர்களுக்கு எதிராக துணை ராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது.

    இந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உள்பட 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே, சூடானின் தெற்கு பகுதியின் அல்-கடாரிஸ், அல்-கேல்லவட் கிராமத்தில் துணை ராணுவப் படையினர் பதுங்கி இருந்து செயல்படுவதாக அந்நாட்டின் ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.

    இதனால் ராணுவத்தினர் அங்கு களம் இறக்கப்பட்டனர். தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், கடந்த 3 நாளாக நீடித்து வரும் இந்தத் தாக்குதலில் தற்போதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உக்ரைனில் கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வென்று ஜெலன்ஸ்கி அதிபரானார்.
    • உக்ரைன் சட்டங்களின்படி நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையில்லை.

    வாஷிங்டன்:

    ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், ரஷியா உடனான உறவை புதுப்பிக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

    உக்ரைன் நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வென்று ஜெலன்ஸ்கி அதிபரானார். கடந்த ஆண்டுடன் அவரது பதவிக் காலம் முடிவடைந்தது. உக்ரைன் சட்டங்களின்படி நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையில்லை.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள செய்தி:

    ஜெலன்ஸ்கி தேர்தலை நடத்தாமல் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். தேர்தலை நடத்துவதற்கு அவர் மறுத்து வருகிறார். இதனாலேயே, அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடனுடன் சேர்ந்து போர் நீடித்திருக்க அவர் நாடகமாடி வந்துள்ளார்.

    அங்கு தேர்தல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஜெலன்ஸ்கிக்கு ஏற்படும்.

    விரைவில் ரஷிய அதிபர் புதினை சந்திக்க உள்ளேன். ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவதற்கான முழு முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அதில் வெற்றியும் பெறுவோம் என தெரிவித்துள்ளார்.

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீராங்கனை சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரஸ்சை சேர்ந்தவருமான அரினா சபலென்கா, டென்மார்க்கின் கிளாரா டாசன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய கிளாரா டாசன் 6-3, 6-2 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா துபாய் ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இஸ்ரேல் பிணைக்கைதிகளில் 6 பேரை சனிக்கிழமை விடுவிக்க உள்ளது.
    • வியாழக்கிழமை 4 பேரின் உடல்களை திருப்பி அனுப்புவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் பிணைக்கைதிகளில் 6 பேரை சனிக்கிழமை விடுவிப்பதாகவும், வியாழக்கிழமை 4 பேரின் உடல்களை திருப்பி அனுப்புகிறோம் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

    காசாவில் மொபைல் வீடுகள், கட்டுமான பொருட்களை இஸ்ரேல் அனுமதிப்பதை அடுத்து ஹமாஸ் இவ்வாறு அறிவித்தது. போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள கடைசி உயிருள்ள பிணைக்கைதிகள் இவர்கள் ஆவர்.

    ஒப்பந்தத்தின் படி முதல் கட்டமாக இறந்தவர்களின் உடல்களை மட்டுமே திருப்பி அனுப்ப வேண்டும் என இஸ்ரேல் கூறியது.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேல் அரசுக்கு நாளை (இன்று) மிகவும் கடினமான நாளாக இருக்கும். ஒரு துக்கமான நாள், துக்கத்தின் நாள். இறந்த எங்கள் அன்பான பிணைக்கைதிகள் 4 பேரை வீட்டிற்கு அழைத்து வருகிறோம். நாங்கள் குடும்பங்களை அரவணைக்கிறோம், முழு தேசத்தின் இதயமும் கிழிந்துவிட்டது. என் இதயமே கிழிந்துவிட்டது. உங்களுடையதும் அப்படித்தான் என பதிவிட்டுள்ளார்.

    ×