என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • வாலிபருக்கு திடீரென இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.
    • வாலிபர் 5 வயது குழந்தையாக இருந்தபோது தற்செயலாக ஒரு பேனா மூடியை விழுங்கி விட்டார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த 26 வயது வாலிபர். இவருக்கு திடீரென இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது.

    அவரை மாதப்பூரில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது நுரையீரல் பகுதியில் கட்டி போன்று அமைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சையின் மூலம் அதனை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

    அப்போது வாலிபரின் நுரையீரலில் சிக்கியிருந்தது பேனா மூடி என்பது தெரிய வந்தது. இதனை அகற்றிய டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வாலிபரின் குடும்பத்தினரிடம் கேட்டனர். அப்போது வாலிபர் 5 வயது குழந்தையாக இருந்தபோது தற்செயலாக ஒரு பேனா மூடியை விழுங்கி விட்டார்.

    எந்த பாதிப்பும் இல்லாததால் நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை என தெரிவித்தனர். 21 ஆண்டுகளாக நுரையீரலில் பேனா மூடியுடன் வாழ்ந்த வாலிபர் தற்போது நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • 10 மீட்டர் தூரத்தில் இருந்தே நோயாளியை மருத்துவர் பரிசோதிக்க முடியும்.
    • ‘புளூடூத் ஸ்டெதஸ்கோப்’ உருவாக்கியுள்ள டாக்டர் ஜான் ஆபிரகாம், அதற்கு காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு பயன்படக்கூடிய மிக முக்கியமான உபகரணம் 'ஸ்டெதஸ்கோப்'. இதனை பயன்படுத்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் இதயத்துடிப்பு, நுரையீரல், இரைப்பை, குடல், கருப்பை ஆகியவற்றில் ஏற்படும் ஒலிகள் உள்ளிட்டவைகளை கேட்க முடியும்.

    அதனை வைத்து தான் நோயாளியின் உடல் நிலை எந்த நிலையில் இருக்கிறது என்பதை மருத்துவர் கண்டு பிடித்து சிகிச்சையை தொடங்க முடியும். இத்தகைய முக்கியத்துவம் நிறைந்த ஸ்டெதஸ்கோப்பை பணியில் இருக்கும் போது மருத்துவர்கள் எப்போதும் தங்களுடன் வைத்திருப்பர்.

    இதனால் டாக்டருக்கான அடையாளமாக 'ஸ்டெதஸ் கோப்' இருந்து வருகிறது. இந்தநிலையில் கேரளாவை சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர், புளூடூத் ஸ்டெதஸ்கோப்பை உருவாக்கியிருக்கிறார். கேரள கால்நடை பல்கலைக்கழகத்தில் மன்னுத்தி வளாகத்தில் உள்ள கால்நடை உற்பத்தி மேலாண்மை கல்லூரியின் டாக்டர் ஜான் ஆபிரகாம் தான் அதனை உருவாக்கி உள்ளார்.

    இந்த ஸ்டெதஸ்கோப் இரண்டு தனித்தனி பாகங்கள் கொண்டதாக இருக்கிறது. ஒன்று நோயாளியின் உடலிலும், மற்றொன்று மருத்துவரின் காதுகளிலும் வைக்கப்படும். நோயாளியின் உடலில் இருந்து உருவாகும் சத்தம், டாக்டருக்கு அவர் காதில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி வழியாக கேட்கிறது.

    இதன் மூலம் 10 மீட்டர் தூரத்தில் இருந்தே நோயாளியை மருத்துவர் பரிசோதிக்க முடியும். இதனால் நோயாளி மற்றும் மருத்துவருக்கு இடையேயான நேரடி உடல் தொடர்பை குறைக்கிறது. நோயாளியின் இதய துடிப்பு, நுரையீரல் ஒலிகள் மற்றும் பிற சத்தங்களை தூரத்தில் இருந்தே மருத்துவர் கேட்க முடியும்.

    மேலும் பாரம்பரிய ஸ்டெதஸ்கோப்புடன் ஒப்பிடுகையில், இந்த 'புளூடூத் ஸ்டெதஸ்கோப்' விலை குறைவாகும். பாரம்பரிய 'ஸ்டெதஸ்கோப்' விலை பொதுவாக ரூ.8ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும். ஆனால் 'புளூடூத் ஸ்டெதஸ்கோப்' விலை ரூ.5ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

    காட்டு விலங்குகள் மற்றும் ஆபத்தான விலங்குகளுடன் பணிபுரியும் மருத்துவர்களுக்கு 'புளூடூத் ஸ்டெதஸ்கோப்' மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் உடல் ரீதியான தொடர்பு இல்லாத காரணத்தால் விலங்குகள் தாக்கும் அபாயம் மற்றும் தொற்று நோய்கள் பரவல் உள்ளிட்ட நேரத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'புளூடூத் ஸ்டெதஸ்கோப்' உருவாக்கியுள்ள டாக்டர் ஜான் ஆபிரகாம், அதற்கு காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார். மேலும் அவர் இதற்கு முன்பு கோழி கழிவுகளில் இருந்து பயோடீசல் உற்பத்தி செய்வதற்கான தயாரிப்புக்கு காப்புரிமை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 300 பேர் பனமாவில் உள்ளனர்.
    • அவர்கள் 40 சதவீதம் பேர் சொந்த நாடு திரும்ப மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக (ஆவணங்கள் இன்றி) குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரை நாடு கடத்தியது. அவர்கள் இந்தியா வந்தடைந்துள்ளனர்.

    ஒவ்வொரு நாட்டின் குடிமகன்களையும் வெளியேற்ற கடினம் என்பதால் மொத்தமாக அனைவரையும் பனமா மற்றும் கோஸ்டா ரிகா நாட்டிற்கு நாடு கடத்த அமெரிக்கா திட்டமிட்டது. அதற்கு ஏற்றபடி இரண்டு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வரும் நபர்கள், பனமாவிற்கு நாடு கடத்தப்படுவார்கள். அங்கிருந்து அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    அந்த வகையில் 300 பேரை பனமாவிற்கு அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா. இந்த 300 பேரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குவர்.

    இந்த 300 பேரில் சுமார் 40 சதவீதம் பேர் சொந்த நாடுகளுக்கு திரும்ப விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது பனமா அரசு ஒரு ஹோட்டலில் அவர்களை தங்க வைத்துள்ளது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் உணவுகள் வழங்கும் பணியை பனமா அரசு செய்து வருகிறது.

    இதற்கிடையே பனமா ஹோட்டலில் உள்ளவர்கள், உதவி... உதவி... என கதறி வருகிறார்கள். மேலும், எங்கள் நாட்டில் பாதுகாப்பு இல்லை என எழுதி வெளியே தெரியும்படி ஒட்டி வைத்துள்ளனர்.

    இது தொடர்பகா பனமா அதிபர் கூறுகையில் "அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட இருக்கும் 299 பேர் பனமா அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் 171 பேர் அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு செல்ல சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    171 பேரும் ஊடுருவல்காரர்களுக்கான அமைப்பு மற்றும் ஐ.நா. அகதிகள் அமைப்பு உதவியுடன் சொந்த நாடு செல்ல ஒப்புக்கொண்டுள்ளனர். எனினும் 128 பேர் சொந்த நாடு செல்வதற்கான நடைமுறை இன்னும் நடந்து வருகிறது.

    3-வது ஒரு நாட்டிற்கு அவர்கள் அனுப்பப்படுவதற்கான வழிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அயர்லாந்தை நாட்டைச் சேர்ந்த பெண் அவருடைய நாட்டிற்கு திரும்பியுள்ளார். சொந்த நாடு திரும்ப மறுக்கும் நபர்கள் தற்காலிகமாக டேரியன் மாகாணத்தில் தங்க வைக்கப்படுவார்கள்" என்றார்.

    • மகா கும்பமேளாவில் உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வருகின்றனர்.
    • கும்பமேளாவில் நீராடி விட்டு அயோத்திக்கு சென்றபோது ராமலட்சுமி, கஸ்தூரி என்ற பெண்கள் மாயமாகினர்.

    உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    மகா கும்பமேளாவில் உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வருகின்றனர். இதுவரை 55 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

    இந்நிலையில் தென்காசி பகுதியில் இருந்து 40 பேர் கொண்ட குழு உத்தரபிரதேச மாநிலம் மகா கும்பமேளாவுக்கு செல்ல திட்டமிட்டு, காசிக்கு ரெயில் மூலம் யாத்திரை சென்றனர்.

    இந்த குழுவினர் கும்பமேளாவில் நீராடி விட்டு அயோத்திக்கு சென்றபோது ராமலட்சுமி, கஸ்தூரி என்ற பெண்கள் மாயமாகினர்.

    கும்பமேளா சென்ற 2 தமிழக பெண்கள் மாயமானது தொடர்பாக உத்தரபிரதேச காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பெண்கள் மாயமானது தொடர்பாக உ.பி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது.
    • ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.

    டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

    இந்நிலையில், பாஜகவினர் 'ஷீஷ் மகால்' என்று அழைக்கும் முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதலமைச்சர் இல்லத்தை 'மியூசியமாக' மாற்றுவோம் என்று டெல்லியின் புதிய முதல்வரான ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய அவர், "பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தற்கு அவருக்கு நான் நன்றி கூறி கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக கடந்த கெஜ்ரிவாலின் ஆட்சியின் பொது முதலமைச்சர் இல்லம் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சர் இல்லத்தை சொகுசு மாளிகை என வர்ணித்து பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது.

    பாஜகவின் ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    • ஒரே வாரத்தில் 61 வாக்குறுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கு நிறைவேற்றினார்?
    • தி.மு.க. அரசு உண்மையாகவே 90% வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அதைக் கொண்டாட தமிழ்நாட்டு மக்கள் தயாராக உள்ளனர்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார். சென்னையில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர், இதுவரை 90 விழுக்காட்டுக்கும், அதாவது 450க்கும் கூடுதலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக தெரிவித்திருக்கிறார். இதுவரை 10% வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படாத நிலையில், 90%க்கும் கூடுதலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக கூறுவது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும்.

    தமிழ்நாட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. தி.மு.க. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைவிருக்கும் நிலையில், இதுவரை அதிகபட்சமாக 50 வாக்குறுதிகள், அதாவது 10% வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால், தி.மு.க.வின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றபட்டு விட்டதாகவும், இனி நிறைவேற்றுவதற்கு வாக்குறுதிகளே இல்லை என்பது போலவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.

    கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதுவரை 389 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருந்தார். ஆனால், அவ்வளவு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால் உண்மை நிலையை மக்களுக்கு விளக்க நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியிருந்தது.

    ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. ஆனால், முன்னுக்குப் பின் முரணாக பேசியிருக்கிறார். கடந்த ஆண்டில் 99% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறிய முதலமைச்சர், அதன்பின் கடந்த வாரம் 389 வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டு விட்டதாகக் கூறினார். இப்போது 90% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறுகிறார். அப்படியானால், ஒரே வாரத்தில் 61 வாக்குறுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கு நிறைவேற்றினார்? எப்படி நிறைவேற்றினார்? என்பது விந்தையாக இருக்கிறது.

    தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் முதன்மையானவை ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை, 50 லட்சம் பேருக்கு தனியார் வேலை வழங்கப்படும்; மின்சாரக் கட்டணம் மாதத்திற்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும்; சமையல் எரிவாயுவுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்; தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கப்படும்; கல்விக்கடன் ரத்து செய்யப்படும்; ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி வேலைவழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும்; நீட் தேர்வு ரத்து செய்யப்படும்; சட்டப்பேரவை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்தப்படும்; அவை நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்படும் ஆகியவை தான். இவற்றில் ஒன்றைக் கூட தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.

    தி.மு.க. அரசு உண்மையாகவே 90% வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அதைக் கொண்டாட தமிழ்நாட்டு மக்கள் தயாராக உள்ளனர். ஆனால், அதற்கு முன் 2021 தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன? என்பதை ஆதாரங்களுடன் தமிழக அரசு நிரூபிக்க வேண்டும். அவற்றை அறிந்து கொள்வது மக்களின் உரிமை. எனவே, கடந்த நான்காண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • கோவில்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுவதால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
    • ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு அது முடியாத காரணத்தால் ஏதோ பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்.

    சென்னை கொளத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * திருக்கோவில்களில் வழங்கப்படும் அன்னதானத்திற்கு ஆண்டிற்கு ரூ.112 கோடி செலவாகிறது. 3.50 கோடி பேர் பயனடைகின்றனர்.

    * கோவில்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுவதால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

    * நலத்திட்டங்கள் நடைபெறுவதும், நாளுக்கு நாள் கோவில்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதும் அண்ணாமலை போன்றோருக்கு வயிற்றெரிச்சலை கிளப்பாமல் இருக்குமா?

    * ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு அது முடியாத காரணத்தால் ஏதோ பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்.

    * எங்கள் இயக்கம் அடிக்க அடிக்க உயரும் பந்து. தீட்ட தீட்ட ஒளி தரும் வைரம். காய்ச்ச காய்ச்ச மெருகேறும் சொக்கத்தங்கம். அதனால் அவர்கள் அடித்துக்கொண்டே இருக்கட்டும். எங்கள் இயக்க தோழர்கள் இன்னும் விறுவிறுப்போடு வீறுநடை போடுவார்கள்.

    * 2026 சட்டசபை தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக வரட்டும் பார்க்கலாம்.

    * களத்திற்கு வாருங்கள். சாதாரண அடிமட்ட தொண்டனை நிற்க வைத்து அண்ணாமலையை தோற்கடித்துக் காட்டுவோம் என்று கூறினார்.

    • நூதன அறிவிப்பால் பலர் கொசுவை பிடித்து கொடுத்து பணம் வாங்கி சென்றனர்.
    • ஏராளமானோர் கொசுவை பிடிக்கும் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா நகர் அருகே உள்ள கிராம பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 2 பேர் சமீபத்தில் இறந்தனர்.

    இதனைத் தொடர்ந்து அங்குள்ள உள்ளாட்சி நிர்வாகம் கொசுவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்தது. முதற்கட்டமாக ஒரு கொசுவை பிடித்து கொடுத்தால் ஒரு பிலிப்பைன்ஸ் பெசோ அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி ரூ.1.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த நூதன அறிவிப்பால் பலர் கொசுவை பிடித்து கொடுத்து பணம் வாங்கி சென்றனர்.

    இதனால் ஏராளமானோர் கொசுவை பிடிக்கும் வேட்டையில் இறங்கி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாபெரும் விழாவில் பங்கேற்று வருகின்றனர்.
    • அகிலேஷ் யாதவ் ஆளும் பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தொடங்கியது. 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவானது வரும் 26-ந்தேதி மகா சிவராத்திரியை ஒட்டி நிறைவு பெறுகிறது. உ.பி. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாபெரும் விழாவில் பங்கேற்று வருகின்றனர்.

    இதனிடையே மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் விற்கப்படும் அதிரச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இயங்கும் கும்பல்கள், இந்த வீடியோக்களை விற்பனை செய்து வருகிறது.

    இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மகா கும்பமேளாவில் பெண்களின் கௌரவத்தைப் பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டது. இது மிகவும் அநாகரீகமான மற்றும் உணர்ச்சிகரமான சர்ச்சைக்குரிய விஷயம் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆளும் பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

    வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விற்பனை செய்தததாக இரண்டு சமூக ஊடகங்கள் மீது உ.பி. காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

    மேலும், வீடியோக்களை வெளியிட்டதாக கூறப்படும் இன்ஸ்டாகிராம் கணக்கு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்டாகிராமை கையாளும் நபர் குறித்து மெட்டாவிடம் தகவல் கோரியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

    • தமிழ்நாடு திரும்ப முடியாமல் வாரணாசி ரெயில் நிலையத்திலேயே மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் தவித்து வருகின்றனர்.
    • தமிழ்நாடு வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்துவர தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    வாரணாசி:

    வாரணாசியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தென்னிந்தியா அணி சார்பாக தமிழகத்திலிருந்து ஆறு வீரர்கள் மற்றும் அணி மேலாளர் கலந்து கொண்டுள்ளனர். போட்டி முடிந்த பிறகு தமிழகம் திரும்புவதற்காக கங்கா காவேரி எக்ஸ்பிரஸில் சென்னை செல்வதற்கு முன்பதிவு செய்துள்ளனர். ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாற்றுத்திறனாளி வீரர்கள் விளையாட்டு உபகரணங்களுடன் ரெயிலில் ஏற முடியவில்லை.

    இதனால் தமிழ்நாடு திரும்ப முடியாமல் வாரணாசி ரெயில் நிலையத்திலேயே மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் தவித்து வருகின்றனர். கும்பமேளாவுக்கு செல்லும் கூட்டத்தால் தமிழ்நாடு வர முடியாத சூழலில் உள்ள தங்களை மாநில அரசு அழைத்துவர உதவுமாறு அணியின் கேப்டன் சச்சின் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில் வாரணாசியில் தவிக்கும் தமிழ்நாடு வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்துவர தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்படி, ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டர்.

    அதன்படி காசியில் சிக்கியுள்ள மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரணசியில் இருந்து இன்று பகல் 1.30 மணிக்கு விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்து அங்கிருந்து சென்னைக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவர்களின் அத்தியாவசிய செலவுக்காக தமிழக அரசு சார்பில் ரூ. 15 ஆயிரமும் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

    • சமச்சீர் கல்வியை கொடுக்கிறேன் என்று.. வசதி படைத்தவர்களுக்கு ஒரு கல்வி.. வசதி இல்லாதவர்களுக்கு ஒரு கல்வி.
    • புதிய கல்விக் கொள்கை.. மொழியை மட்டும் முன்னிறுத்தவில்லை.. விரிவுபடுத்தப்பட்ட கல்வி.. உயர் தொழில்நுட்ப கற்றல்..

    பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பிரதானமாக.. மூன்றாவது மொழி வேண்டாம் என்று. விவாதிப்பவர்கள்.. அரசியல்வாதி மட்டுமல்ல.. சில கல்வியாளர்கள் என்று சொல்பவர்கள் கூட.. அரசாங்கப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு... அவர்களுக்கு எந்த பின் புலமும் இல்லாமல்.. இரண்டு மொழி சொல்லிக் கொடுப்பதே பெரிய சேவை போலவும்... அவர்களுக்கு வீட்டில்.. சொல்லிக் கொடுப்பதற்கு.. படித்த தாய் தந்தையர் இல்லை என்பதனால்.. அவர்களுக்கு tuition போன்ற வசதிகள் செய்து கொள்ள முடியாததால்.. அவர்களுக்கு இதுவே போதும் என்று வாதிடுகிறார்கள்...

    ஆக வறுமையில்.. வாடும் குழந்தைகளுக்கு.. இப்போது சொல்லிக் கொடுப்பதே.. ஏதோ அதுவே பெரிய சாதனை.. அதற்கு மேல். அவர்கள் ஆசைப்படக்கூடாது.. என்ற தொனியில்.. பலர் பேசி வருகிறார்கள்...

    சமச்சீர் கல்வியை கொடுக்கிறேன் என்று.. வசதி படைத்தவர்களுக்கு ஒரு கல்வி.. வசதி இல்லாதவர்களுக்கு ஒரு கல்வி என்று.. தமிழக மாணவர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.. பல ரூபாய் பணம் கட்டி.. தனியார் பள்ளிகளில்.. படிப்பதை.. அரசாங்க பள்ளி குழந்தைகளுக்கும் கொடுக்கிறேன் என்றால்... இதுவே அவர்களுக்கு போதும்.. இதற்கு மேல் அவர்களுக்கு எதற்கு.. என்ற என்ற தொனியே.. அரசாங்கத்திடமும் விவாதிப்பவர்களிடமும் இருக்கிறது...

    புதிய கல்விக் கொள்கை.. மொழியை மட்டும் முன்னிறுத்தவில்லை.. விரிவுபடுத்தப்பட்ட கல்வி.. உயர் தொழில்நுட்ப கற்றல்.. சவால்களை சமாளிக்கும் பேராற்றல்.. மாறிவரும் உலகத்திற்கு ஏற்ப.. ஏழைக் குழந்தைகளுக்கும்.. அதே விரிவு படுத்தப்பட்ட கல்வி முறை கிடைக்க வேண்டும்.. என்ற நல்லெண்ணத்தில் கொண்டுவரப்பட்டது... ஆனால் அதையெல்லாம் மறைக்கப்பட்டு.. இது ஏதோ ஹிந்தி திணிப்பு என்ற மாயத் தோற்றத்தை.. திராவிட மாடல் அரசு.. அதற்கு ஆதரவாக பேசுபவர்கள்.. ஏற்படுத்துகிறார்கள்... எனக்கு எப்பவுமே.. மிகுந்த உற்சாகத்தோடு அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மீது ஒரு ஈடுபாடு உண்டு.. எந்தவித பெரிய பின்புலமும் இல்லாமல்.. பின் பலமும் இல்லாமல்.. படிப்பில் அவர்கள் காட்டும் ஆர்வம்.. என்னை வியக்க வைத்திருக்கிறது..

    அதனால்தான் தெலுங்கானா ஆளுநராக இருந்தபோது.. பக்கத்தில் அரசாங்க ராஜ்பவன் பள்ளி.. இருந்தது.. அந்தப் பள்ளிக்கு அடிக்கடி செல்வேன்.. ஆளுநரின் பொது நிதியிலிருந்து.. அந்தப் பள்ளியை மேம்படுத்துவதற்கு.. கம்ப்யூட்டர் போன்ற கரணங்களை அளித்தேன். அந்தப் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள். அன்றாட வேலை செய்பவர்களின் குழந்தைகள் அதனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னாலேயே.. நான் வணங்கும்.. சத்ய சாய் பாபாவின் அறக்கட்டளை நடத்திய உணவகம் மூலமாக. காலை உணவிற்கு ஏற்பாடு செய்தேன்... இது அங்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது... அந்த அரசாங்க பள்ளியில்.. மாணவர் சேர்க்கைக்கு. அந்த ஆண்டிலிருந்து.. அதிக ஈர்ப்பு இருந்தது...

    அதேபோல் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக. அங்கு குடியரசு தலைவர் ஆட்சி நடந்து கொண்டிருக்கும்போது.. அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு முட்டை கொடுப்பதற்கும்.. காலை உணவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த.. ரொட்டி பால்.. கொடுப்பதற்கும்.. மதிய உணவையும்.. ஏற்பாடு செய்வதற்கு உறுதுணையாக இருந்தேன்... சுமார் 75.. அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று.. அவர்களோடு உரையாடி.. அவர்களின் திறமையை கண்டு வியந்து.. மாலை நேரங்களில்.. அரசாங்க பள்ளி மாணவர்களை ராஜ் நிவாஸிற்கு அழைத்து.. அரசு பள்ளி மாணவர்களின்.. திறமை கண்டறியும் (Talent.hunt) நிகழ்ச்சியை நடத்தி.. பல மாணவ மாணவிகளின் அபரி தமான திறமையை கண்டு.. ஊக்கப்படுத்தியது மட்டுமல்லாமல்.. அவர்களுக்கு பல வாய்ப்புகள்.. கிடைப்பதற்கு முயற்சி செய்தேன்...

    அதேபோல.. அனைவருக்கும் சமமான கல்வி என்ற வகையில்.. முதல்வர் கல்வி அமைச்சரோடு இணைந்து.. அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ.. பாடத்திட்டத்தை இன்றைய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களின் ஒத்துழைப்போடு.. கொண்டு வந்தோம்.. அரசு பள்ளி.. மாணவர்கள் மேஜையில்.. அந்தப் பாடத்திட்டத்தின்.. புத்தகங்கள் அலங்கரிப்பதை பார்த்து. அகமகிழ்ந்து போனேன் அதே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக.. மாலைநேரத்தில்.. சிறுதானிய. சிற்றுண்டி.. வழங்க ஆலோசனைக் கூறி.. முதல்வரும் கல்வி அமைச்சரும் அதை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினோம்..

    மத்திய அரசின் கல்வித் திட்டத்தில் இணைந்து அரசாங்க பள்ளிகளில் smart class rooms ஏற்பாடு செய்தோம். ஒரு பள்ளி கட்டிட வசதிக்காக அரை நாள் பள்ளி என்று அறிவித்ததை மகிழாமல் முழு நேர பள்ளிக்காக போராடிய அரசு பள்ளி மாணவி மாணவிகளின் ஆர்வத்தை வியந்து.. பாராட்டினேன் பணிவன்புடன் கேட்கிறேன் இந்த குழந்தைகளின் வாய்ப்பை பறிக்காதீர்கள்... அவர்களும் உயரட்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • நாள்தோறும் உயர்ந்து வரும் தங்கம் விலையால் மக்கள் கவலையில் உள்ளனர்.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.400-ம், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.240-ம் நேற்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64,280-க்கு விற்பனையானது.

    இதனைத் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,070-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,560-க்கும் விற்பனையாகிறது. நாள்தோறும் உயர்ந்து வரும் தங்கம் விலையால் மக்கள் கவலையில் உள்ளனர். கடந்த திங்கட்கிழமையில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடக்கத்தக்கது.



    கடந்த 5 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 109 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    19-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,280

    18-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,760

    17-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    16-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120

    15-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    19-02-2025- ஒரு கிராம் ரூ.108

    18-02-2025- ஒரு கிராம் ரூ.108

    17-02-2025- ஒரு கிராம் ரூ.108

    16-02-2025- ஒரு கிராம் ரூ.108

    15-02-2025- ஒரு கிராம் ரூ.108

    ×