என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • உலகம் முழுவதும் 140 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்க உள்ளனர்.
    • தொடக்கம் மற்றும் நிறைவு விழா போட்டிகள் ஐதராபாத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 72-வது உலக அழகி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் வருகிற மே மாதம் 7-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 4 வாரங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கு முன்பு மும்பை மற்றும் டெல்லியில் உலக அழகி போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

    நாட்டில் 3-வது முறையாக தெலுங்கானாவில் உலக அழகி போட்டி நடைபெற உள்ளது.

    இந்த போட்டிகளில் உலகம் முழுவதும் 140 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்க உள்ளனர்.

    நாட்டில் புதிய மாநிலமாக தோன்றிய தெலுங்கானா கடந்த 10 ஆண்டுகளாக வேகமாக முன்னேறி வருகிறது. தற்போது உலக அழகி போட்டி நடைபெற உள்ளதால் உலக அளவில் தெலுங்கானா, ஐதராபாத் பெருநகர பகுதி பிரபலமாகும். தெலுங்கானா சுற்றுலா துறையுடன் இணைந்து இந்த போட்டிகளை மிஸ் வேர்ல்ட் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

    தொடக்கம் மற்றும் நிறைவு விழா போட்டிகள் ஐதராபாத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.

    மீதமுள்ள போட்டிகள் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான இடங்கள் தேர்வு நடந்து வருகிறது.

    • இது உதயநிதிக்கும் பா.ஜ.க. தலைவருக்குமான பிரச்சனை இல்லை.
    • தனியார் பள்ளியில் காலையில் இலவச உணவு கொடுக்கிறார்களா?

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஒருமையில் விமர்சித்தது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

    * மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான நிதியை பெற்றுத்தர துப்பில்லை.

    * பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் தரம் அவ்வளவு தான். பெரிதாக ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

    * தமிழகத்திற்கான நிதியை வாங்கி தருவதை விட்டு விட்டு பிரச்சனையை மடைமாற்றும் செயலில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார்.

    * போஸ்டர் ஒட்டுவதாக கூறிய அண்ணாமலை தாராளமாக வரட்டும்.

    * அண்ணா அறிவாலயத்திற்கு வருவதாக சொன்னார். தைரியம் இருந்தால் அண்ணாமலையை அண்ணாசாலைக்கு வரச்சொல்லுங்கள்.

    * இது உதயநிதிக்கும் பா.ஜ.க. தலைவருக்குமான பிரச்சனை இல்லை. தமிழகத்திற்கான நிதி உதவியை கேட்டு பெற வேண்டும்.

    * தனியார் பள்ளி என்ன சட்டவிரோதமாகவா நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஒன்றிய அரசிடம் அனுமதி வாங்கி தான் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

    * தனியார் பள்ளியில் காலையில் இலவச உணவு கொடுக்கிறார்களா? சீருடை இலவசமாக கொடுக்கிறார்களா? தயவுசெய்து இதை அதோடு ஒப்பிடாதீங்க.

    * உ.பி. கும்பமேளாவில் கூடிய கூட்டத்தை சமாளிக்க தெரியவில்லை.

    * வாரணாசியில் சிக்கித் தவிக்கும் மாற்றுத்திறனாளி வீரர்கள் விமானம் மூலம் அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று கூறினார்.

    • கருங்கல்பாளையம் போலீசார் சீமான் மீது வழக்கு பதிவு செய்தனர்.
    • எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது போன்ற அடிப்படை விவரங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 24-ம் தேதி முதல் மார்ச் மாதம் 3-ம் தேதி வரை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் பெரியார் குறித்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இரவில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அசோகபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும் போது, உன் பெரியார் வெங்காயம் வைத்துள்ளார். நான் வெடிகுண்டு வைத்திருக்கிறேன்.

    நீ வெங்காயத்தை வீசு. நான் வெடிகுண்டு வீசுகிறேன் என்று பேசினார். இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் சீமான் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருங்கல்பாளையம் போலீசார் சென்னையில் உள்ள சீமான் வீட்டுக்கு சென்று இது குறித்து சம்மன் அளித்தனர். அதில் வியாழக்கிழமை (இன்று) கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று சீமான் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு நேரில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரது வக்கீல் நன்மாறன் ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணை அதிகாரி விஜயனிடம் சீமானின் கடிதத்தை வழங்கினார்.

    அந்த கடிதத்தில், ஏற்கனவே தமிழகம் முழுவதும் தொடரப்பட்டுள்ள 70-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒரே இடத்தில் விசாரணை செய்ய வேண்டுமென காவல்துறை இயக்குநரிடம் மனு அளித்திருப்பதாகவும், அந்த மனு மீது முடிவெடுத்து அறிவிக்கும் வரை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்குமாறும் கோரியிருந்தார்.

    இந்த மனுவை விசாரணை அதிகாரி விஜயன் பெற்றுக் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதுகுறித்து சீமான் வக்கீல் நன்மாறன் நிருபர்களிடம் கூறும்போது, புகார் கொடுத்தவர் யார்? எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது போன்ற அடிப்படை விவரங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை.

    இது மட்டுமின்றி சீமான் மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறோம். உரிய உத்தரவு கிடைக்க பெற்றவுடன் விசாரணைக்கு சீமான் ஆஜராவார் என்றும் கூறினார்.

    • சாம்பியன் டிராபி தொடர் நேற்று பாகிஸ்தானில் கோலாகலமாக தொடங்கியது.
    • போட்டி தொடங்குவதற்கு முன் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்று பாகிஸ்தானில் கோலாகலமாக தொடங்கியது. இதில் விமான சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனையடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேடிங்க் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 320 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் 260 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    முன்னதாக போட்டி தொடங்கும் முன்பு விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இது அனைவருக்கும் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது போல இருந்தது. போர் விமானங்கள் வந்ததும் ரசிகர்கள் மட்டுமின்றி நியூசிலாந்து வீரர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

    குறிப்பாக நியூசிலாந்து பேட்டர் இந்த சத்தத்தை கேட்டதும் குணிந்து கொள்வார். இதனை பார்த்த சக வீரர் 'நீ நினைப்பது போல இல்லை' என்பது போல சிரித்து கொள்வார். மேலும் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் காதுகளை மூடிக்கொண்டு பயத்துடன் இருந்தார். பின்னர் சாதாரண நிலைக்கு சென்று விடுவார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    • கமல்ஹாசன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து நாளைய விழாவில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • தொடக்க விழாவையொட்டி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை (21-ந்தேதி) மாலை 3 மணிக்கு நடக்கிறது.

    கட்சி தலைவர் கமல்ஹாசன் விழாவில் கலந்து கொண்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். கமல்ஹாசன் வெளிநாடு சென்று திரும்பிய நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கட்சியினர் மத்தியில் பேச இருப்பதால் அவர் என்ன பேசப்போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கமல்ஹாசன் வருகிற ஜூலை மாதம் மேல்சபை எம்.பி.யாகி டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றியும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போதைய அரசியல் நிலவரம் பற்றியும் கமல்ஹாசன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து நாளைய விழாவில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடக்க விழாவையொட்டி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளரான அருணாச்சலம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தனது கொள்கையில் இருந்து சிறிதும் விலகாமல், தலைவர் காட்டும் பாதையில் பயணித்து, அரசியலில் பீடுநடை போட்டுவரும் மக்கள் நீதி மய்யத்துக்கு நடப்பாண்டும், வரும் ஆண்டும் வரலாற்றுத் திருப்புமுனைகளாக மாற உள்ளன.

    மண், மொழி, மக்களைக் காக்கும் விஷயங்களில் சிறிதும் சமரசமின்றி, தொடர்ந்து களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் 8-ம் ஆண்டு தொடக்க விழாவைக் கொண்டாட உள்ளோம்.

    கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கும் இந்த விழாவில் சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையினர் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மண்டலங்களைத் தவிர்த்து இதர மண்டலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும், அவரவர் சார்ந்த மாவட்டம் மற்றும் தொகுதி அலுவலகங்களில் கட்சிக் கொடியேற்றியும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் 8-ம்ஆண்டுத் தொடக்க விழாவை சிறப்பாக ஒருங்கிணைந்து நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தடுப்பணை கட்டியதில் சந்திரசேகர் ராவ் ஊழலில் ஈடுபட்டார் என்று ராஜலிங்கமூர்த்தி என்பவர் குற்றம் சாட்டியிருந்தார்.
    • இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர் நீதிமன்ற விசாரணைக்கு ஒருநாள் முன்னதாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    2023 ஆம் ஆண்டு காலேஸ்வரம் திட்டத்தின் ஒரு பகுதியாக மேடிகட்டா தடுப்பணை கட்டியதில் சந்திரசேகர் ராவ் ஊழலில் ஈடுபட்டார் என்று ராஜலிங்கமூர்த்தி என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    இந்நிலையில், நேற்று இரவு ராஜலிங்கமூர்த்தி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த இருவர் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

    இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • நகைகள் 6 இரும்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சென்னை கொண்டு வரப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
    • ஜெயலலிதாவின் நகைகள் அனைத்தும் தமிழக அரசிடம் வந்துள்ளதால் கோர்ட்டு வழிகாட்டுதலின் படி ஏலம் விடும் நடவடிக்கைகள் தொடங்கும்.

    சென்னை:

    1991 முதல் 1996 வரை தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக 1996-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களது வீட்டில் சோதனை நடத்தி சட்ட விரோத சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த சோதனையில் ஜெயலலிதா வீட்டில் 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளிப் பொருட்கள் 11 ஆயிரத்து 344 புடவைகள், 750 ஷூக்கள், 91 வாட்ச்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதில் நகைகளில் மட்டும் விதவிதமான தங்க செயின்கள், வளையல்கள், தங்க கை கடிகாரங்கள், கடிகாரத்தின் தங்க வார்கள், தங்க தட்டுகள், தங்க கிரீடம் நெத்திச்சுட்டி, தங்க ஒட்டியானம், தங்க காசு மாலை, நெக்லஸ்கள் என 481 வகையான தங்க நகைகள் இடம்பெற்றிருந்தது.

    இதில் தங்க ஒட்டியானம் 1.2 கிலோ, தங்க வாள் 1.5 கிலோ, தங்க கிரீடம் ஒரு கிலோ, 1, 600 கிராம் எடை கொண்ட தங்க எழுதுகோல், ஜெயலலிதா ஒரு குழந்தையை கையில் வைத்திருப்பது போன்ற தங்க சிலை ஆகியவை மிகப் பிரமாண்டமாக காட்சி அளிக்கின்றன.

    அத்துடன் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வாங்கி குவித்திருந்த 1,526 ஏக்கர் நிலங்களுக்கான ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.

    ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடக சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்ட போது ஜெயலலிதாவின் ரூ.60 கோடி மதிப்புள்ள நகைகள், சொத்து ஆவணங்கள் அனைத்தும் கர்நாடக மாநில கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

    அப்போது அந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் சசிகலா உள்பட மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.

    அதன்பிறகு மேல் முறையீடு வழக்கில் பெங்களூரு சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

    இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பு 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது. சசிகலா உள்ளிட்ட மற்ற 3 பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

    அதன்படி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்து விட்டனர்.

    இந்த வழக்கில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி ஜெ.தீபா, தீபக் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

    இதையடுத்து ஜெயலலிதாவின் ரூ.60 கோடி மதிப்புள்ள 27 கிலோ தங்கம், வைரம், முத்து, மாணிக்கம், பவள நகைகள் மற்றும் 1,526 ஏக்கர் நிலங்களுக்கான ஆவணங்களை பெங்களூரில் நீதிபதி மோகன் முன்னிலையில் கடந்த 14-ந் தேதி தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இவற்றை தமிழக உள்துறை இணை செயலாளர் ஆனி மேரி, லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு விமலா, கூடுதல் சூப்பிரண்டு புகழ்வேந்தன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    இந்த நகைகள் 6 இரும்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சென்னை கொண்டு வரப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்த நகைகளை ஏலம் விடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அரசு உயர் அதிகாரி கூறியதாவது:-

    ஜெயலலிதாவின் நகைகள் அனைத்தும் தமிழக அரசிடம் வந்துள்ளதால் கோர்ட்டு வழிகாட்டுதலின் படி ஏலம் விடும் நடவடிக்கைகள் தொடங்கும். லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையில் கலெக்டர் மேற்பார்வையில் வருவாய்த் துறையினர் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்குவார்கள். இந்த பணிகள் ஓரிரு மாதங்களில் நடைபெறும்.

    அ.தி.மு.க. ஆட்சியாக இருந்திருந்தால் ஜெயலலிதாவின் நகைகள் விற்கப்படாமல், ரிசர்வ் வங்கி அல்லது அருங்காட்சியகத்தில் வைக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

    ஆனால் இப்போது ரிசர்வ் வங்கி மூலமாகவோ அல்லது ஏலம் மூலமாகவோ பணமாக்கி கொள்ளலாம் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் அதன்படி அரசு செயல்படும்.

    கட்டிடங்கள், இடங்கள், நிலத்தை பொறுத்தவரை சிட்கோ, அல்லது டான்சி மூலம் அரசு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொண்டு அதன் பிறகு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது அல்லது விற்பது என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ மற்றும் வில்சன் எம்.பி. ஆகியோரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    ஜெயலலிதாவின் நகைகள் மற்றும் பல ஏக்கர் நிலங்கள் அனைத்தும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஏலம் விடும் பணிகள் தொடங்கும்.

    ஜெயலலிதா வழக்கை பொறுத்தவரை ஆரம்ப கட்டத்தில் இருந்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கையாண்டு வந்துள்ளதால் அவர்களுடன் சேர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் கலெக்டர் மேற்பார்வையில் இவற்றை ஏலம் விடும் பணியை தொடங்குவார்கள் என தெரிகிறது.

    இதை யார் மூலம் செயல்படுத்துவது என்பது பற்றி கோர்ட்டு தெளிவாக கூறி இருக்கும். அதன் நகலை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை. இன்று அல்லது நாளை வந்ததும் விளக்கமாக தெரிவிக்கிறோம் என்றனர். 

    • எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகத்தை பார்க்கும்போது எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்.
    • 'ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை' என பெண் உரிமைகளை பறைசாற்றிய பாரதி மண்.

    தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மும்மொழி கொள்கையை எதிர்த்து நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,

    எதையும் பற்றி கவலைக்கொள்ளாமல் நம்மை தூசு என்று நினைக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும். இதை சரியான களமாக மாற்ற வேண்டும். வரி கொடா இயக்கம் தொடங்குவோம். சுங்கக் கட்டணத்தைத் தவிர்ப்போம். ஜி.எஸ்.டி கொடுக்க மாட்டோம் என முடிவு எடுப்போம். மத்திய அரசு திட்டங்கள் அனைத்தையும் முடக்குவோம் என முடிவு எடுங்கள். மோடி நம் முன் மண்டியிடுவார்.

    நம்முடைய ஆட்கள் கேட்கிற கேள்விகள் ஒன்றுக்கு கூட பா.ஜ.க.வினரால் பதில் சொல்ல முடியவில்லை.. நிர்மலா சீதாராமன் கதறுகிறார். தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமனுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால், நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும். எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகத்தை பார்க்கும்போது எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்." என ஆவேசமாக பேசியிருந்தார்.

    இந்நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    'ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை' என பெண் உரிமைகளை பறைசாற்றிய பாரதி மண்ணில், பெண் அமைச்சர் அடக்கமாக இருக்க வேண்டும் என மூத்த பெண் தலைவர் மீது தொடர்ந்து சொல்லெறியும் உங்களின் ஆணாதிக்க மனப்போக்கு ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் வெளியிட்டது.
    • இதன்மூலம் இந்தியாவில் டெஸ்டா நிறுவனம் கால் பதிப்பது உறுதியாகிவிட்டது.

    இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது. சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. மேலும் குறைந்த பட்சம் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் இந்தியாவில் முதலீடு மற்றும் தொழிற்சாலை அமைக்கும் மின்சார வாகன நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியை 15 சதவீதம் வரை குறைக்கப்படும் என இந்திய அரசு தெரிவித்திருந்தது.

    இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடி எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார்.

    இந்நிலையில் இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் 'லிங்க்ட் இன்' தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மும்பையில் பணியாற்ற வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது.

    இதன்மூலம் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் டெஸ்லா அமெரிக்காவின் வரி விதிப்பை தவிர்க்க இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் இருந்தால் அது மிகவும் நியாயமற்றது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறுகையில் "மின்சார வாகனம் தயாரிக்கும் டெஸ்லா, அமெரிக்காவின் வரி விதிப்பை தவிர்ப்பதற்காக இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு திட்டம் இருந்தால் அது மிகவும் நியாயமற்றது" எனத் தெரிவித்துள்ளார்.

    கடந்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின்போது, கார்கள் மீதான இந்தியாவின் அதிக வரி தொடர்பாக வலியுறுத்தியதை நினைவு கூர்ந்த டொனால்டு டிரம்ப், விரைவில் முன்னதாக உள்ள வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிச் செயல்படவும், வரிகள் தொடர்பான மோதலைத் தீர்க்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி இனிமேல் தமிழ்நாட்டிக்கரு வந்தால் Get Out Modi என்று சொல்வார்கள்" என்று உதயநிதி தெரிவித்தார்.
    • "GET OUT MODI என்று சொல்ல முடியுமா என்று உதயநிதிக்கு அண்ணாமலை சவால் விட்டிருந்தார்.

    சில நாட்களுக்கு முன்பு பேசிய துணை முதல்வர் உதயநிதி, "முன்பெல்லாம் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் Go Back Modi என்று தான் சொல்வார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு நிதி தராத பிரதமர் மோடி இனிமேல் இங்கு வந்தால் Get Out Modi என்று சொல்வார்கள்" என்று தெரிவித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கரூரில் பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "GET OUT MODI என்று சொல்ல முடியுமா என்று உதயநிதிக்கு சவால் விட்டிருந்தார்.

    இந்நிலையில், எக்ஸ் வலைதளத்தில் #GetOutModi என்ற ஹேஸ்டேக் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி திமுகவினர் #GetOutModi என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    #GetOutModi என்ற ஹேஸ்டேக் தற்போது இந்திய அளவில் முதல் இடத்திலும் உலக அளவில் 2 ஆவது இடத்திலும் ட்ரெண்டாகி வருகிறது.

    • இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.
    • நிதி வழங்கும் விவகாரங்களில் ஒன்றிய அரசு அழுத்தம் தரும் இத்தகைய முயற்சி, கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்.

    சென்னை :

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலும், இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதியும், தமிழ்நாட்டிற்கு 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின்கீழ் வரவேண்டிய நிதியினை ஒன்றிய அரசு உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ முழுமையாக அமல்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழ்நாட்டிற்கான 'சமக்ர சிக்ஷா' (Samagra Shiksha) திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்பட மாட்டாது" என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருப்பது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், இது தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெருத்த கவலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூகச் சூழலில், இருமொழிக் கொள்கையானது நீண்ட காலமாக ஆழமாக வேரூன்றியுள்ளதாகவும், அதனைப் பின்பற்றுவதில் தமிழ்நாடு எப்பொழுதும் உறுதியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அலுவல் மொழிகள் விதி, 1976-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, "அலுவல் மொழிச் சட்டம், 1963"-ஐச் செயல்படுத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    நவோதயா வித்யாலயா போன்ற ஒன்றிய அரசுப் பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதால் தான், தமிழ்நாட்டில் அவை நிறுவப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்த இரு மொழிக் கொள்கை மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட முற்போக்குக் கொள்கைகளின் காரணமாக, கடந்த அரை நூற்றாண்டில் தமிழ்நாடு அடைந்துள்ள மகத்தான முன்னேற்றங்கள் மற்றும் அதற்கு வித்திடும் முன்முயற்சிகளைக் காண முடிகிறது எனவும், எங்கள் இருமொழிக் கொள்கையில் எந்தவொரு மாற்றமும் கொண்டுவர உத்தேசிப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்காது என்பதை மேலே உள்ளவை தெளிவாக எடுத்துக்காட்டுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

    இதுதவிர, தேசியக் கல்விக் கொள்கை-2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள சில விதிகள் குறித்து 27.08.2024 நாளிட்ட தனது கடிதத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் ஆழ்ந்த கவலைகள் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதோடு, 27.09.2024 அன்று தனிப்பட்ட முறையில் விரிவான கோரிக்கை மனுவாக இந்தியப் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர், இருப்பினும், பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், "சமக்ரா சிக்ஷா" திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய நிதி ஒன்றிய அரசால் வழங்கப்படாமல் உள்ளதாக கவலையோடு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ஒன்றிய அரசின் இரண்டு வெவ்வேறு திட்டங்களான "சமக்ர சிக்ஷா" திட்டத்தையும், தேசிய கல்விக் கொள்கையைப் பிரதிபலிக்கும் பி.எம்.ஸ்ரீ. (PM SHRI) திட்டத்தையும் ஒன்றாகப் பொருத்திப் பார்ப்பது என்பது அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பதைத் தான் மீண்டும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தற்போது ஒரு மாநிலத்தில், அங்குள்ள காலச் சூழலுக்கேற்ப பின்பற்றப்பட்டு வரும் கொள்கைகளுக்கு எதிராக, அந்த மாநிலத்தைக் கட்டாயப்படுத்துவதற்கு, நிதி வழங்கும் விவகாரங்களில் ஒன்றிய அரசு அழுத்தம் தரும் இத்தகைய முயற்சி, கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும் என்று தெரிவித்துள்ளதோடு, குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் தங்களது கல்விக் கொள்கைகளை வடிவமைக்கும் மாநிலங்களின் உரிமைகளை பெருமளவில் பாதிக்கும் என்றும் கவலையோடு சுட்டிக்காட்டியுள்ளார்.

    தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்படாததால், ஆசிரியர்கள் சம்பளம், மாணவர்களுக்கான நலத் திட்டங்களை உள்ளடக்கிய கல்வி முன்னெடுப்பு முயற்சிகள், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும் வறிய நிலையில் வாழும் மாணவர்களுக்கான கல்வித் தொகையைச் திருப்பிச் செலுத்துதல் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கான போக்குவரத்து போன்றவற்றிற்கான பல முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படாமல் உள்ளதால் ஏற்பட்டுள்ள வருந்தத்தக்க சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ செயல்படுத்துவதோடு 'சமக்ர சிக்ஷா' திட்டத்தைப் பொருத்திப் பார்க்காமல், 2024-25 ஆம் நிதியாண்டில் இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இப்பொருண்மையின் தீவிரத்தை உணர்ந்து, தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • வாலிபருக்கு திடீரென இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.
    • வாலிபர் 5 வயது குழந்தையாக இருந்தபோது தற்செயலாக ஒரு பேனா மூடியை விழுங்கி விட்டார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த 26 வயது வாலிபர். இவருக்கு திடீரென இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது.

    அவரை மாதப்பூரில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது நுரையீரல் பகுதியில் கட்டி போன்று அமைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சையின் மூலம் அதனை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

    அப்போது வாலிபரின் நுரையீரலில் சிக்கியிருந்தது பேனா மூடி என்பது தெரிய வந்தது. இதனை அகற்றிய டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வாலிபரின் குடும்பத்தினரிடம் கேட்டனர். அப்போது வாலிபர் 5 வயது குழந்தையாக இருந்தபோது தற்செயலாக ஒரு பேனா மூடியை விழுங்கி விட்டார்.

    எந்த பாதிப்பும் இல்லாததால் நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை என தெரிவித்தனர். 21 ஆண்டுகளாக நுரையீரலில் பேனா மூடியுடன் வாழ்ந்த வாலிபர் தற்போது நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ×