என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ரசாயனம் என்பதால் தீ கொளுந்து விட்டு எரிவதுடன் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.
- தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை திருமுல்லைவாயில் சுதர்சன் நகர் பகுதியில் உள்ள தின்னர் தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரசாயனம் என்பதால் தீ கொளுந்து விட்டு எரிவதுடன் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.
தின்னர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ அருகே உள்ள தனியார் பள்ளிக்கும் பரவியது. பள்ளி மாணவர்களின் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
- பா.ம.க கவுரவ தலைவர் ஜி.கே. மணி முன்னிலை வகித்தார்.
- சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாத வரை அனைத்து சமூகத்திற்கும், உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காது என்றும் வலியுறுத்தினார்கள்.
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதி பேரவை சார்பில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் பா.ம.க.தலைவர் டாக்டர் அன்புமணி தலைமையில் நடந்தது. அப்போது அனைத்து சமூகங்களை ஒன்று திரட்டி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலை தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி வரவேற்றார். பா.ம.க கவுரவ தலைவர் ஜி.கே. மணி முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் விளக்கி பேசினார்கள். த.மா.கா. சார்பில் துணைத்தலைவர் விடியல் சேகர், அமைப்பு செயலாளர் ஜி. ஆர். வெங்கடேஷ், அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ., தமிழ் நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் என்ஜினீயர் டி. விஜயகுமார், தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே. செல்வகுமார், பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சை முத்து, தென் இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன், கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் கவுண்டர், யாதவ மகா சபை செயலாளர் சேது மாதவன் ஆகியோர் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதின் அவசியம் பற்றியும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாத வரை அனைத்து சமூகத்திற்கும், உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காது என்றும் வலியுறுத்தினார்கள்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் பா.ம.க. எம்.எல்.ஏ. இரா.அருள், சென்னை மாவட்ட தலைவர்கள் ஜெயராமன், வெங்கடேசன் மற்றும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி வ.மு.பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வழக்கறிஞர் பாலு நன்றி கூறினார்.
- உயிரிழந்த ஜமுனாவின் கணவருக்கு 4 வாரத்திற்குள் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
- அவசர நேரத்தில் பயன்படும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணிநேரமும் ஆம்புலன்ஸ் தயாராக இருக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவிழிவேந்தன். இவர் தன்னுடைய மனைவி ஜமூனாவிற்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் மாம்பாக்கம் ஆரம்ப சுகாதர நிலைய மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அங்கு மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆகியோர் ஜமூனாவிற்கு பிரசவம் பார்த்ததில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அதிக ரத்த போக்கு ஏற்பட்டதையடுத்து ஜமுனாவை ஆரணி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்ததில், ஜமுனா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு 'தினந்தந்தி' நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், பிரசவத்தின் போது உயிரிழந்த ஜமுனாவின் கணவருக்கு 4 வாரத்திற்குள் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதர மருத்துவமனைகளிலும் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும். அவசர நேரத்தில் பயன்படும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணிநேரமும் ஆம்புலன்ஸ் தயாராக இருக்க வேண்டும். மருத்துவ வசதி, மருத்துவர் இருப்பதை உறுதி செய்ய அடிக்கடி நேரில் ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை இயக்குநருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- தேவரா திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
- ல்ஐகே படத்தின் தீமா தீமா பாடல் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து உள்ளனர். .
இந்நிலையில், தேவரா திரைப்படத்தில் அனிருத் இசையில் உருவானா 'பத்தவைக்கும்' பாடலுக்கு விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து அவரது குழந்தைகள் Vibe செய்யும் விடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக தீமா தீமா பாடலுக்கு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் lip sync செய்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாகிஸ்தான் அணி வருகிற 23-ந் தேதி இந்தியாவுடன் துபாயில் மோதுகிறது.
- இந்த போட்டிக்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் துபாய்க்கு செல்கின்றனர்.
8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 320 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 260 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த போது பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பகர் ஷமான் காயமடைந்தார். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகே அவர் களத்திற்கு வந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி வருகிற 23-ந் தேதி இந்தியாவுடன் துபாயில் மோதுகிறது. இந்த போட்டிக்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் துபாய்க்கு செல்கிறது. இந்த அணியுடன் காயமடைந்த பகர் ஷமான் செல்லவில்லை. அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக இமாம் உல் ஹக் அணியில் இணைந்துள்ளார். பகர் ஷமான் விலகியது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
- பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 22-ந்தேதி பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 23 மற்றும் 24-ந்தேதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 25 மற்றும் 26-ந்தேதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- நாயை லிஃப்ட்டிற்குள்ளே கொண்டு வரவேண்டாம் என்று அப்பெண்ணிடம் சிறுவன் கெஞ்சுகிறான்.
- இது தொடர்பாக சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நாய்க்கு பயந்து ஓடியதால், 8 வயது குழந்தையை லிஃப்டில் இருந்து வெளியே இழுத்து பெண் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சிறுவன் லிஃப்ட் உள்ளே நின்று கொண்டிருக்கிறான். அப்போது ஒரு பெண் தனது செல்ல நாயுடன் உள்ளே வருகிறார். அப்போது நாயைப் பார்த்து பயமடைந்த சிறுவன் நாயை லிஃப்ட்டிற்குள்ளே கொண்டு வரவேண்டாம் என்று அப்பெண்ணிடம் கெஞ்சுகிறான்.
இதனால் கோபமடைந்த அப்பெண், சிறுவனை லிப்டிலிருந்து வெளியே இழுத்து அடித்தார். இதனையடுத்து, அந்த சிறுவன் மீண்டும் லிப்டிற்குள் நுழைந்து அழுகிறான்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில், அப்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றபோது முதலமைச்சர் தெரிவித்தார்.
- இதுவரை சென்னையில் மட்டும் 60,000 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை ஷெனாய் நகரில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வருவாய்த்துறை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி அமுதா கூறுகையில்,
* ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
* தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றபோது முதலமைச்சர் தெரிவித்தார்.
* இதுவரை சென்னையில் மட்டும் 60,000 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
* சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 86,388 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
- ரேகா குப்தா உடன் 6 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
- பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியது. முதல்வர் யார் என அறிவிக்காமல், இன்று பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று டெல்லி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ரேகா குப்தா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். டெல்லி சட்டமன்ற பாஜக கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், துணைநிலை ஆளுநர் சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அதனடிப்படையில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
ஆளுநர் சக்சேனா ரேகா குப்தாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனையடுத்து ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் பர்வேஷ் சாகிப் சிங் வர்மா, கபில் மிஷ்ரா, ரவீந்தர் இந்திரஜ் சிங், மன்ஜிந்தர் சிங் சிர்சா, பங்கஜ் குமார் சிங், ஆஷிஷ் சூட் உள்ளிட்டவர்கள் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்றதன் மூலம் டெல்லியின் 4-வது பெண் முதல்வரானார் ரேகா குப்தா.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ரேகா குப்தா ஷாலிமார் பார்க் தொகுதியில் போட்டியிட்டு ஆம் ஆத்மி வேட்பாளரை சுமார் 29 ஆயிரம் வாக்குகள் விததியாசத்தில் தோற்கடித்திருந்தார்.
- உலகம் முழுவதும் 140 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்க உள்ளனர்.
- தொடக்கம் மற்றும் நிறைவு விழா போட்டிகள் ஐதராபாத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 72-வது உலக அழகி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் வருகிற மே மாதம் 7-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 4 வாரங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு முன்பு மும்பை மற்றும் டெல்லியில் உலக அழகி போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
நாட்டில் 3-வது முறையாக தெலுங்கானாவில் உலக அழகி போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டிகளில் உலகம் முழுவதும் 140 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்க உள்ளனர்.
நாட்டில் புதிய மாநிலமாக தோன்றிய தெலுங்கானா கடந்த 10 ஆண்டுகளாக வேகமாக முன்னேறி வருகிறது. தற்போது உலக அழகி போட்டி நடைபெற உள்ளதால் உலக அளவில் தெலுங்கானா, ஐதராபாத் பெருநகர பகுதி பிரபலமாகும். தெலுங்கானா சுற்றுலா துறையுடன் இணைந்து இந்த போட்டிகளை மிஸ் வேர்ல்ட் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
தொடக்கம் மற்றும் நிறைவு விழா போட்டிகள் ஐதராபாத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.
மீதமுள்ள போட்டிகள் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான இடங்கள் தேர்வு நடந்து வருகிறது.
- இது உதயநிதிக்கும் பா.ஜ.க. தலைவருக்குமான பிரச்சனை இல்லை.
- தனியார் பள்ளியில் காலையில் இலவச உணவு கொடுக்கிறார்களா?
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஒருமையில் விமர்சித்தது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
* மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான நிதியை பெற்றுத்தர துப்பில்லை.
* பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் தரம் அவ்வளவு தான். பெரிதாக ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
* தமிழகத்திற்கான நிதியை வாங்கி தருவதை விட்டு விட்டு பிரச்சனையை மடைமாற்றும் செயலில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார்.
* போஸ்டர் ஒட்டுவதாக கூறிய அண்ணாமலை தாராளமாக வரட்டும்.
* அண்ணா அறிவாலயத்திற்கு வருவதாக சொன்னார். தைரியம் இருந்தால் அண்ணாமலையை அண்ணாசாலைக்கு வரச்சொல்லுங்கள்.
* இது உதயநிதிக்கும் பா.ஜ.க. தலைவருக்குமான பிரச்சனை இல்லை. தமிழகத்திற்கான நிதி உதவியை கேட்டு பெற வேண்டும்.
* தனியார் பள்ளி என்ன சட்டவிரோதமாகவா நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஒன்றிய அரசிடம் அனுமதி வாங்கி தான் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
* தனியார் பள்ளியில் காலையில் இலவச உணவு கொடுக்கிறார்களா? சீருடை இலவசமாக கொடுக்கிறார்களா? தயவுசெய்து இதை அதோடு ஒப்பிடாதீங்க.
* உ.பி. கும்பமேளாவில் கூடிய கூட்டத்தை சமாளிக்க தெரியவில்லை.
* வாரணாசியில் சிக்கித் தவிக்கும் மாற்றுத்திறனாளி வீரர்கள் விமானம் மூலம் அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று கூறினார்.
- கருங்கல்பாளையம் போலீசார் சீமான் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது போன்ற அடிப்படை விவரங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 24-ம் தேதி முதல் மார்ச் மாதம் 3-ம் தேதி வரை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பெரியார் குறித்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இரவில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அசோகபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும் போது, உன் பெரியார் வெங்காயம் வைத்துள்ளார். நான் வெடிகுண்டு வைத்திருக்கிறேன்.
நீ வெங்காயத்தை வீசு. நான் வெடிகுண்டு வீசுகிறேன் என்று பேசினார். இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் சீமான் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருங்கல்பாளையம் போலீசார் சென்னையில் உள்ள சீமான் வீட்டுக்கு சென்று இது குறித்து சம்மன் அளித்தனர். அதில் வியாழக்கிழமை (இன்று) கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று சீமான் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு நேரில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரது வக்கீல் நன்மாறன் ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணை அதிகாரி விஜயனிடம் சீமானின் கடிதத்தை வழங்கினார்.
அந்த கடிதத்தில், ஏற்கனவே தமிழகம் முழுவதும் தொடரப்பட்டுள்ள 70-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒரே இடத்தில் விசாரணை செய்ய வேண்டுமென காவல்துறை இயக்குநரிடம் மனு அளித்திருப்பதாகவும், அந்த மனு மீது முடிவெடுத்து அறிவிக்கும் வரை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்குமாறும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரணை அதிகாரி விஜயன் பெற்றுக் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதுகுறித்து சீமான் வக்கீல் நன்மாறன் நிருபர்களிடம் கூறும்போது, புகார் கொடுத்தவர் யார்? எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது போன்ற அடிப்படை விவரங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை.
இது மட்டுமின்றி சீமான் மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறோம். உரிய உத்தரவு கிடைக்க பெற்றவுடன் விசாரணைக்கு சீமான் ஆஜராவார் என்றும் கூறினார்.






