என் மலர்
தலைப்புச்செய்திகள்
- வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது சட்டத்துறையின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
- பாஜக அரசு நீதித்துறையின் சுதந்திரத்தை முறையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி வருகிறது.
வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதா 2025 சட்டத்துறையின் சுயாட்சியின் மீதான நேரடி தாக்குதல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
"சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு" – பேரறிஞர் அண்ணா!
வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது சட்டத்துறையின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
2014ம் ஆண்டு முதல், பாஜக அரசு நீதித்துறையின் சுதந்திரத்தை முறையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி வருகிறது.
முதலில் NJAC மூலம் நீதித்துறை நியமனங்களை அபகரிக்க முயற்சிப்பதன் மூலமும், பின்னர் நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களுக்கான கொலீஜியத்தின் பரிந்துரைகளைப் புறக்கணிப்பதன் மூலமும். இப்போது, பார் கவுன்சில்கள் மீது கட்டுப்பாட்டைக் கோருவதன் மூலம், சட்டத்துறையின் சுயாட்சியை அரிப்பதன் மூலம் நீதித்துறை சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதே அதன் நோக்கமாகும்.
"தமிழ்" மீதான பாஜகவின் வெறுப்பு இந்த மசோதாவில் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் அது தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலை மெட்ராஸ் பார் கவுன்சில் என்று மறுபெயரிட விரும்புகிறது. தமிழ்நாடு என்பது வெறும் பெயர் அல்ல; அது எங்கள் அடையாளம்!
தன்னிச்சையான போராட்டங்களும் வரைவு மசோதாவுக்கு எதிரான கடுமையான எதிர்ப்பும் மத்திய அரசை அதை திரும்பப் பெற கட்டாயப்படுத்தினாலும், அது மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் செயல்படுத்தப்படும் என்ற கூற்று கண்டிக்கத்தக்கது.
இந்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும், சட்டத்துறையின் சுயாட்சியை மதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் திமுக வலியுறுத்துகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- முதல்வர் மருந்தகங்களில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில்முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் திறக்கப்படுகின்றன.
- மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என ஒவ்வொரு மாவட்டத்திலும் மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன.
சென்னை:
நாடு முழுவதும் தற்போது பிரதமர் மக்கள் மருந்தகம் என்ற பெயரில் மருந்தகங்கள் செயல்படுகின்றன. மற்ற தனியார் மருந்தகங்களுடன் ஒப்பிடும்போது இங்கே மருந்து மாத்திரைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
அதே போல் இப்போது தமிழ்நாட்டில் 1000 இடங்களில் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் கிடைக்கும் வகையில் 'முதல்வர் மருந்தகங்கள்' நாளை திறக்கப்பட உள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாண்டிபஜாரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை நாளை காலை 10 மணியளவில் திறந்து வைத்து மருந்து விற்பனையை தொடங்கி வைக்கிறார்.
அதன் பிறகு கோட்டூர்புரம் கலைஞர் நூற்றாண்டு நூல கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரிய கருப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியில் செயல்படுத்தப்படும் முதல்வர் மருந்தகங்களில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில்முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் திறக்கப்படுகின்றன.
இதில் சென்னையில் மட்டும் 33 இடங்களில் மருந்தகங்கள் அமைக்கப்படுகின்றன. மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என ஒவ்வொரு மாவட்டத்திலும் மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன.
முதல்வர் மருந்தகங்களில் 'ஜெனரிக் மருந்துகள்', 'சர்ஜிக்கல்ஸ்' 'சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் பிற மருந்துகள்' குறைந்த விலையில் கிடைக்கும்.
இவைகளுக்கு மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து மருந்துகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பயன் அடையும் வகையில் வெளிச்சந்தையைவிட 75 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் இங்கு மருந்து மாத்திரைகள் கிடைக்கும்.
- இந்திய அணி முதல் போட்டியில் வங்காளதேசம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
- பாகிஸ்தான் அணியை வீழ்த்து இந்தியா அரையிறுதி சுற்றுக்கு நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பந்துவீசுகிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரின் முதல் போட்டியில் வங்காளதேசம் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. அதே உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணியை வீழ்த்து அரையிறுதி சுற்றுக்கு நுழையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- சுயநல நோக்கங்களுக்காக இந்தியை எதிர்ப்பவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
- இந்தி எதிர்ப்பு உள்ள தமிழ்நாட்டில், லட்சக்கணக்கான மக்கள் இந்தியில் சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்கிறார்கள்
இந்தி படிப்படியாக தேசிய மொழியாக முன்னேற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச்செயலாளர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.
நேற்று மும்பையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச்செயலாளர் அருண்குமார்,
"தற்போது நடைபெறும் மொழி தொடர்பான சர்ச்சைகள் துரதிர்ஷ்டவசமானவை. ஒவ்வொரு மாநிலமும் அதன் மொழியை வளர்த்து, அந்த குறிப்பிட்ட மொழியில் அதன் வணிகத்தை நடத்த வேண்டும். இந்தியாவில் எந்த பிராந்திய மொழியும் இல்லை. அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்.
நமக்கு ஒரு நிர்வாக அமைப்பு உள்ளது. நமக்கு ஒரு பொதுவான தேசிய மொழி தேவை. ஒருகட்டத்தில், அது சமஸ்கிருதம், ஆனால் இன்று அது சாத்தியமில்லை. எனவே அது இன்று இந்தியாக மட்டுமே இருக்க முடியும்.
நீங்கள் இந்தியை விரும்பவில்லையென்றால், உங்களுக்கு ஒரு தேசிய மொழி இருக்கவேண்டும். ஆங்கிலம் பொதுவான தேசிய மொழியாக இருக்கமுடியாது. அது ஒரு வெளிநாட்டு மொழியாக இருக்கும்.
ஆங்கிலம் ஒரு பொதுவான தேசிய மொழியாக மாற்றப்பட்டால், மாநில மொழிகளின் இருப்பு ஆபத்தில் இருக்கும் என்று தலைவர் கோல்வால்கர் கூறியுள்ளார்.
இந்தி படிப்படியாக ஒரு பொதுவான தேசிய மொழியாக முன்னேற வேண்டும், அந்த செயல்முறை இயற்கையாக இருக்க வேண்டும். நீங்கள் கட்டாயப்படுத்தினால், எதிர்வினை இருக்கும். சுயநல நோக்கங்களுக்காக இந்தியை எதிர்ப்பவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
இந்தி எதிர்ப்பு உள்ள தமிழ்நாட்டில், லட்சக்கணக்கான மக்கள் இந்தியில் சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்கிறார்கள். எனவே அந்த விஷயத்தில் கவலைப்படத் தேவையில்லை" என்று தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கல்வி நிதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்கள்.
- உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் அவர்களுக்குள் ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்கிறார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மயிலாப்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் விளையாட்டு துறையை ஊக்கப்படுத்துவதற்கு எதுவுமே செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் விளையாட்டு துறைக்கு என்ன செய்தோம், தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தார்கள் என்று விவாதம் வைக்கலாம். அது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன்.
தி.மு.க.வினர் 'மோடி கெட்அவுட்', பா.ஜ.க.வினர் 'ஸ்டாலின் கெட்அவுட்' என 2 தரப்பினரும் மாறி மாறி கெட்அவுட் போட்டு டிரெண்டாக்கி வருகிறார்கள். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. தினமும் கொலை நடக்கிறது. மக்கள் வாழ்வதற்கே அச்சப்படும் சூழ்நிலையில் இதைப்பற்றி பேச வேண்டும். ஆனால் இதைப்பற்றி பேசுவதில்லை.
விலைவாசி உயர்ந்து விட்டது. அதைப்பற்றி பேசுவதில்லை. பாலியல் வன்முறை, போதை கலாசாரம் எல்லாமே அதிகமாக இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி பேசாமல், இரு தரப்பினரும் மாற்றி மாற்றி கெட்அவுட் என்றால் அவர்கள் ஒருவருக்கொருவர் மறைமுக உறவுடன் பிரச்சனையை திசை திருப்புகிறார்கள் என்கிற சந்தேகம் இருக்கிறது.
ஒரு குழந்தை பக்கத்து வீட்டுக்கு போய் அங்குள்ள அம்மாவை பார்த்து அம்மா என்று கூப்பிட்டால் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள். அதுவே ஒரு குழந்தை பக்கத்து வீட்டில் உள்ள பெண்ணின் கணவரை அப்பா என்று கூப்பிட்டால் அந்த குழந்தையின் தாய் சும்மா விடுவாரா? இது வீணான வில்லங்கம். எனது பிள்ளைக்கு நான் தான் அப்பா. எனது பிள்ளைக்கு வேறு யாரும் அப்பா கிடையாது.
தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் எதையும் செய்யாமல், சொல்லாததையும் செய்தேன் என்று சொன்னால் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 2026 சட்டசபை தேர்தலில் திருப்பி அடிப்பார்கள்.
அரசு பள்ளிக்கூடங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக இருக்கத்தான் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி லாயக்கு. அவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்க லாயக்கே கிடையாது. பள்ளிக்கல்வித்துறை பூஜ்ய அளவில் தான் இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை நன்றாக வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று சர்வதேச அமைப்பு ஏதாவது ஆய்வு செய்து கூறி இருக்கிறதா?
ஒரு அமைச்சரை, முதலமைச்சர் பாராட்டுவது எப்படி சான்றிதழ் ஆகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் அவர்களுக்குள் ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்கிறார்கள்.
நாங்கள் இருமொழி கொள்கையில் தீவிரமாக இருக்கிறோம். ஆனால் 3-வது மொழி கற்க விரும்புபவர்களின் விருப்பத்தை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் இவர்கள் ஒரு தமிழினத்தையே அழித்தவர்கள். ஒன்றரை லட்சம் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் அழித்தவர்கள். தமிழினத்தை பற்றி பேச தகுதியற்றவர்கள். இவர்கள் தமிழுக்கும் எதுவும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கராத்தே பாபு திரைப்படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியானது.
- கராத்தே பாபு படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரவி மோகன். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'காதலிக்க நேரமில்லை.' இந்தப் படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இதுதவிர நடிகர் ரவி மோகன் சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே ரவி மோகனின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குவதாக போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்து இருந்தது. ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ரவி மோகனின் 34 படத்திற்கு கராத்தே பாபு என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராகவும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், கராத்தே பாபு திரைப்படத்தில் நடிகர் சக்தி வாசுதேவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை படக்குழு தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், படத்தில் சக்தி வாசுதேவன் "பாக்சர் செல்வராஜ்" என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. மேலும், படக்குழு சார்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அரசு ஊழியர்கள் சங்கங்கள் நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
- குழுவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், கயன்விழி செல்வராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்கள் சங்கங்கள் நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்நிலையில் அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவெடுக்கும் வகையில் அமைச்சர்கள் குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
குழுவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், கயன்விழி செல்வராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நாளை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
- பெய்ரூட்டில் ஒரு பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் செப்டம்பர் 27 அன்று நஸ்ரல்லா கொல்லப்பட்டார்
- சியோனிச (இஸ்ரேலிய) எதிரியால் ஒருபோதும் நசுக்க முடியாது
லெபனானின் கிளர்ச்சி அமைப்பான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்குகள் அவர் உயிரிழந்த 4 மாதங்களுக்குப் பிறகு இன்று நடைபெறுகின்றன.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் எல்லையில் இருந்து எதிர்த்தாக்குதல் நடத்தியது. இதனால் கோபமடைந்த இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தியது.
இதில் லெபனான் பொதுமக்கள் உட்பட 3000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்தனர். சுமார் 4 மாத தாக்குதல்களுக்கு பிறகு அக்டோபர் 1 ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இதற்கிடையே பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் ஒரு பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் செப்டம்பர் 27 அன்று நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிச் சடங்கில் அதிகமான மக்கள் கலந்து கொள்ளுமாறு ஹிஸ்புல்லாவின் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் ஷேக் அலி தமூச் அழைப்பு விடுத்தார்.

இதில் லெபனான் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து பலர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல ஷியா அமைப்புகளும், ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பகீர் கலிபாப்பும் இதில் பங்கேற்பார்கள். இஸ்ரேலுடனான போருக்குப் பிறகு பலவீனமடைந்துள்ள ஹிஸ்புல்லாவைப் பொறுத்தவரை, இந்த நிகழ்வு அதன் அரசியல் வலிமையை நிரூபிக்கும் நிகழ்வாக இருக்கும்.
ஹிஸ்புல்லாவின் நிறுவனர்களில் ஒருவரான ஹசன் நஸ்ரல்லா, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அந்த அமைப்பை வழிநடத்தி, அந்தக் குழுவை ஒரு இராணுவ அமைப்பாகவும், லெபனானில் ஒரு பெரிய அரசியல் சக்தியாகவும் உருவாக்கினார்.

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளுமாறு மக்களை வேண்டுகோள் விடுத்த ஹிஸ்புல்லா தலைவர் ஷேக் அலி டாமோச், "நமது எதிர்ப்பு வலுவானது, போர்க்களத்தில் நமது எதிர்ப்பு நிலைத்திருக்கும், சியோனிச (இஸ்ரேலிய) எதிரியால் அதை ஒருபோதும் நசுக்க முடியாது என்று நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் தெரிவிக்கும் வகையில், ஒவ்வொரு வீடு, கிராமம் மற்றும் நகரத்திலிருந்தும் மக்கள் பெருமளவில் வெளியே வந்து இதில் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
- 119-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
- விண்வெளி துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன்கிபாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று தனது 119-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது, "உத்தரகாண்டில் நடைபெற்ற தேசிய விளையாட்டில் நாடு முழுவம் இருந்து 11,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். உத்தரகாண்ட் தற்போது நாட்டில் வலுவான விளையாட்டு சக்தியாக வளர்ந்து வருகிறது.
இது விளையாட்டின் சக்தி. இது தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் முழு மாநிலத்தையும் மாற்றுகிறது. இது எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
விண்வெளி துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இஸ்ரோ தனது 100-வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதற்கு பாராட்டுகிறேன். 400-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
நமது நாட்டை பெண்களின் சக்தி வலுப்படுத்தும். தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களை ஊக்குவிக்கும் விதமாக எனது சமூக வலைதள கணக்குகள் ஒருநாள் பெண்களிடம் ஒப்படைக்கப்படும். மகளிர் தினத்தன்று மோடியின் சமூக வலைதள பக்கங்களில் மகளிர் தங்களுடைய பதிவுகளை பகிரலாம்.
மாணவர்கள் எந்தவித பதற்றமில்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். உடல் பருமன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்படுவது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. சமையல் எண்ணை குறைப்பு உள்ளிட்டவை மூலம் உடல் பருமனை தவிர்க்கலாம். உடல் பருமனை குறைத்து ஆரோக்கியமாக திகழ முயற்சி செய்ய வேண்டும்," என்று பேசினார்.
- மொழி மூலம் பிரிவினையை உருவாக்குவது மாநில அரசு அல்ல, மத்திய அரசுதான்.
- மும்மொழி கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வருகை தந்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக அரசு இருமொழி கொள்கையை கடைபிடிப்பது என்பது மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வந்த பிறகு நடைபெறவில்லை. காமராஜர், அண்ணா காலங்களில் இருந்து தற்போது வரை இருமொழி கொள்ளை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மத்திய பா.ஜ.க. அரசு இந்தி மொழியை திணிக்கவும், இந்தி பேசுகிற மாநிலங்களில் சமஸ்கிருத்தை திணிக்கவும் மும்மொழி கொள்கையை கொண்டு வர நினைக்கிறது. மொழி மூலம் பிரிவினையை உருவாக்குவது மாநில அரசு அல்ல, மத்திய அரசுதான். எனவே, மும்மொழி கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி கொடுத்துவிட்டு, கேரளா மற்றும் தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதி வழங்காதது பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களை தண்டிப்பது போன்றதாகும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாக உள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய்க்கு, மத்திய அரசு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளித்திருப்பது எதற்கு? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மார்ச் 1 ஆம் தேதியுடன் போர் நிறுத்தம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.
- போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் போது, இஸ்ரேலிய இராணுவம் 100 பாலஸ்தீனியர்களைக் கொன்றது.
காசாவில் கடந்த 15 மாதமாக நடந்து வந்த போர் தற்காலிக அமைதி உடன்படிக்கை மூலம் ஜனவரி 19 ஆம் தேதி நிறுத்தபட்டது. இந்த உடன்படிக்கையில் பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேலிய பிணை கைதிகளை விடுவித்தல், காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுதல், 15 மாதங்களாக இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவீச்சினால் அழிக்கப்பட்ட பகுதிக்கு உதவி வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பிணைக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது.
நேற்று 6 இஸ்ரேல் பிணை கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. இந்நிலையில் திட்டமிட்டபடி அவர்களுக்கு ஈடாக இஸ்ரேல் பிடித்துவைத்துள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 650 பேரை விடுதலை செய்ய மறுத்துள்ளது. வரும் மார்ச் 1 ஆம் தேதியுடன் போர் நிறுத்தம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.

இதுதொடர்பாக நேதன்யாகு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹமாஸின் தொடர்ச்சியான மீறல்களைக் கருத்தில் கொண்டு நமது பணயக்கைதிகளை அவமதிக்கும் அவமானகரமான விழாக்கள் மற்றும் பணயக்கைதிகளை பிரச்சாரத்திற்காக இழிவாகப் பயன்படுத்துவதன் காரணமாக நேற்று (சனிக்கிழமை) திட்டமிடப்பட்ட பயங்கரவாதிகளின்(பால்ஸ்தீனியர்களின்) விடுதலையை தாமதப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது " என்று தெரிவித்துள்ளார்.
நேற்று 6 இஸ்ரேலிய கைதிகள் விடுவிக்கப்படும்போது அதில் ஒருவர் ஹமாஸ் அமைப்பினர் ஒருவருக்கு நெற்றியில் முத்தமிட்ட காட்சி வைரலானதை தொடர்ந்து இஸ்ரேல் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறி வருவதாக ஹமாஸ் மூத்த அதிகாரி பாஸ்ஸெம் நயீம் தெரிவித்தார். அல் ஜசீராவுக்கு பேட்டி அளித்த பாஸ்ஸெம் நயீம், "போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் போது, இஸ்ரேலிய இராணுவம் 100 பாலஸ்தீனியர்களைக் கொன்றது.
இதுபோன்று தொடர்ந்து வரும் செயல்கள் ஒப்பந்தத்தை முறிக்கவும், மீண்டும் போருக்குத் திரும்புவதற்கான அதன் விருப்பத்தை வெளிப்படுத்தும் வலதுசாரி இஸ்ரேல் அரசாங்கத்தின் ஒரு மோசமான தந்திரம் என்று நாங்கள் கருதுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கக் கூடிய 2 ஆயிரம் கோடி வழங்கப்படும்.
- சிறுமி நிதி வழங்கிய தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூரில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீர்வரிசை கொண்டு வந்து வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கக் கூடிய 2 ஆயிரம் கோடி வழங்கப்படும். இதன் மூலம் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலையில், தமிழக அரசு நிதி மூலம் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் கடலூரை சேர்ந்த எல்.கே.ஜி படித்து வரும் நன்முகை என்ற சிறுமி தான் சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து ரூபாய் 10 ஆயிரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டத்திற்காக நிதி வழங்கி உள்ளார்.
மேலும் சிறுமி நிதி வழங்கிய தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு ஆதரவாக கடலூரை சேர்ந்த எல்.கே.ஜி படிக்கும் சிறுமி 10 ஆயிரம் ரூபாய் வழங்கிய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






