என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மீன்பிடிக்கச் சென்ற 5 விசைப்படகுகள் சிங்கள கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.
- தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் அவர்கள் மீன்பிடிக்கச் சென்ற 5 விசைப்படகுகள் சிங்கள கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டு மீனவர்கள் வங்கக் கடலில் எல்லைத் தாண்டி மீன்பிடிக்கும் விவகாரத்தை வாழ்வாதாரம் சார்ந்த மனிதநேய பிரச்சினையாகத்தான் பார்க்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - இலங்கை மீனவர் நலனுக்கான கூட்டுப்பணிக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அண்மையில் இந்தியா வந்த இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் நடத்திய பேச்சுக்களின் போது இதே நிலைப்பாடுதான் எடுக்கப்பட்டது.
ஆனால், சிங்கள கடற்படையினர் இவற்றை மதிக்காமல், தமிழ்நாட்டு மீனவர்கள் ஏதோ எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டதைப் போன்று கைது செய்து சிறையில் அடைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவால் ஆகும்.
தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையினரின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தமது கடமை முடிந்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். இந்த நிலைப்பாடு தவறு.
மத்திய அரசை வலியுறுத்தி மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வுகாண தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மத்திய அரசும் இந்த விவகாரத்தை இந்தியாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதி, இலங்கை அரசை கடுமையாக எச்சரிக்க வேண்டும்.
இந்தியா - இலங்கை மீனவர் நலனுக்கான கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை உடனடியாக மீண்டும் கூட்டி அதில் தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.
- ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் மற்றும் ஹை ஆன் லவ் என்ற படங்களை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்தார். இந்த இரண்டு படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் மூலம் பிரபல மலையாள இயக்குனர் ரெஞ்சி பானிக்கர் தமிழில் நடிகராக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, துளசி, அருணாச்சலேஷ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றூம் ஃபௌசி நடித்துள்ளனர்.
திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான Awsum Kissa பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இதனை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாடலான கதவை திறந்தாயே பாடலை நாளை வெளியிடப்போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்பாடலை இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிடவுள்ளார்.
ஜோ திரைப்படத்தை தொடர்ந்து ரியோவிற்கு இப்படமும் வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்திய அணி முதல் போட்டியில் வங்காளதேசம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
- இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து வருகிறது
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 25 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் அடித்து ஆடி வருகிறது.
இந்நிலையில், விளம்பர படப்பிடிப்புக்கு நடுவே இந்தியா - பாகிஸ்தான் போட்டியை எம்.எஸ்.தோனி கண்டுகளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- எடப்பாடி பழனிச்சாமி தன்னை தானே ஓநாய் என்று ஒப்புக்கொள்கிறார்.
- லாட்டரி சீட்டு அடித்தது போல குருட்டு யோகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றைக்கு, நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது" என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், எடப்பாடி பழனிச்சாமி தன்னை தானே ஓநாய் என்று ஒப்புக்கொள்கிறார். யார் துரோகி என்று மக்களுக்கு தெரியும். லாட்டரி சீட்டு அடித்தது போல குருட்டு யோகத்தில் முதலமைச்சர் ஆனவர் அவர். துரோகி என்ற வார்த்தைக்கு எடப்பாடி பழனிசாமியின் பெயர்தான் ஞாபகம் வரும்" என்று தெரிவித்தார்.
- சத்குரு "மகா சிவராத்திரியின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும்.
- நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆதியோகி சிலைகளை நிறுவும் முயற்சியைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
கோவை ஈஷா யோக மையத்தில் "சத்குருவின் தலைமையில் நடைபெற இருக்கும் மகாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய" பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள சத்குரு "மகா சிவராத்திரியின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பிரதமரின் வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2025-ஆம் ஆண்டு மகா சிவராத்திரி கொண்டாட்டத்தின் மங்களகரமான நிகழ்வில் ஈடுபட்டுள்ள ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த அனைவருக்கும் சிவபெருமானின் எண்ணற்ற பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
விமரிசையாக கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மகா சிவராத்திரி, ஆன்மீக ரீதியில் நம்மை மேன்மைபடுத்தும் தன்மைக்காக அதன் மீதான ஆழ்ந்த பக்தியையும், மதிப்பையும் ஏற்படுத்துகிறது.
இவ்விழா விரதம், தியானம் மற்றும் சுயபரிசோதனைக்கான தருணமாகவும், அறியாமையின் மீதான அறிவின் வெற்றியையும் குறிக்கிறது.
மகா சிவராத்திரி என்ற பெயரே குறிப்பிடுவது போல, சிவபெருமான் மற்றும் அன்னை பார்வதியின் திருமணம் நடைபெற்ற மகத்தான இரவு - இதுவே சிவன் மற்றும் சக்தியின் பிரபஞ்ச சங்கமாகும்.
மகா சிவராத்திரி நாளில் பக்தி, பிரார்த்தனைகள் மற்றும் சுய கட்டுப்பாடு மூலம் பக்தர்கள் ஆன்மீக ரீதியாக முன்னேறவும், அதே போல் உயர்ந்த தெய்வீக சக்தியுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று பரவலாக நம்பப்படுகிறது.

மகா சிவராத்திரி போன்ற பண்டிகைகள் புவியியல், கலாச்சாரம், காலம் மற்றும் இடம் ஆகியவற்றின் தடைகளைத் தாண்டி, மனிதகுலத்தை உள் அமைதி, சமநிலை மற்றும் நல்லிணக்கத்தின் பொதுவான புள்ளியில் இணைக்கின்றன.
இது இயற்கையின் மீதான மதிப்பை வளர்த்து, அதனுடன் அமைதியான சகவாழ்வு வாழ்வதற்கான செய்தியையும் கற்பிக்கின்றது. மேலும், நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆதியோகி சிலைகளை நிறுவும் முயற்சியைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
பக்தர்களை விழிப்புணர்வு மற்றும் உயர்ந்த உணர் நிலைகளை வளர்ப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள சிவபெருமானின் உன்னதமான வடிவம் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்.
மனிதகுலத்தின் மீது அவரது ஆசீர்வாதங்களைப் பொழிவதற்காக சிவபெருமானின் தெய்வீக பாதங்களில் பிரார்த்தனைகளுடன், சத்குரு அவர்களின் தலைமையில் நடைபெறும் 2025 ஈஷா மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் மகத்தான வெற்றியாக அமையட்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து சத்குரு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், " பிரதமர் அவர்களே, உங்களது அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. பாரதத்தின் மிக முக்கியமான விழாக்களில் ஒன்றான மகா சிவராத்திரியின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும்.
இந்த நாகரிகத்தின் உருவாக்கத்திற்கும் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கும் ஆதியோகியின் பங்களிப்பின் எத்தகையது என்றால் அவர் கடந்த காலத்தின் சின்னமாக இல்லாமல், எதிர்கால தலைமுறையினருக்கு நல்வாழ்வு மற்றும் அதனையும் தாண்டி செல்வதற்கு மேலே தேடாமல் உள்நோக்கி தேடுவதற்கான தூண்டுதலாய் இருப்பார்.
மனித அனுபவங்கள் அனைத்துக்குமான மூலம் நமக்குள் உள்ளது, மனித பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் அனைத்துக்குமான தீர்வுகளும் நமக்குள் உள்ளது.
இதுவே ஆதியோகியின் பங்களிப்பின் அடிப்படை. மேலும் இயல்பாகவே இது இந்த உலகின் எதிர்காலமாகவும் அமையும். மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி" என கூறியுள்ளார்.
- மெகா சூர்யா புரொடக்ஷன் சார்பாக ஏ. தயாகர் ராவ் தயாரித்துள்ள திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.
- முகலாயப்பேரரசர் காலத்தில் வாழ்ந்த அரசர் அவுரங்கசீப் பற்றிய புனைவுக்கதையாக எடுக்கப்பட்டுள்ளது.
மெகா சூர்யா புரொடக்ஷன் சார்பாக ஏ. தயாகர் ராவ் தயாரித்துள்ள திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு. இந்தப் படத்தை ஜோதி கிருஷ்ணா மற்றும் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ளனர். இந்தப் படம், முகலாயப்பேரரசர் காலத்தில் வாழ்ந்த அரசர் அவுரங்கசீப் பற்றிய புனைவுக்கதையாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் பாபி தியோல், சுனில், நிதி அகர்வால், மற்றும் நாசர் உட்பட பல நட்சத்திர நடிகர்கள் உள்ளனர். இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா மற்றும் ஞானசேகர் வி.எஸ் ஆகியோரின் ஒளிப்பதிவு செய்துள்ளனர். படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொண்டுள்ளார்.
படத்தின் முதல் பாடலின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாடலான எம்மனச பறிச்சுட்டா பாடல் நாளை மதியம் 3 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா டாசில் தோல்வி அடைந்தது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா டாஸ் தோல்வியை தொடங்கியது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 12 முறை டாஸில் தோற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் அதிக முறை டாசில் தோற்ற நெதர்லாந்து அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
2023ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை இறுதிப்போட்டி முதல் இன்று வரை நடந்த அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி டாசில் தொற்றுள்ளது. இதில் ரோகித் 9 முறையும், கே.எல்.ராகுல் 3 முறையும் டாசில் தோற்றுள்ளனர்.
- கடந்தாண்டு பும்ராவுக்கு சிறந்த வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் விருது அறிவிக்கப்பட்டது.
- கடந்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணி மற்றும் டி20 அணியில் பும்ரா இடம் பிடித்திருந்தார்.
கடந்தாண்டு மிக சிறப்பாக கிரிக்கெட் விளையாடியதற்காக பும்ராவுக்கு சிறந்த வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் விருது அறிவிக்கப்பட்டது.
மேலும், ஐசிசி தேர்வு செய்த கடந்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணி மற்றும் டி20 அணியில் பும்ரா இடம் பிடித்திருந்தார்.
இந்நிலையில், 2024ம் ஆண்டிற்கான ஐசிசி விருதுகளுடன் இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா இருக்கும் புகைப்படத்தை ஐசிசி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில், சிறந்த வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது மற்றும் சிறந்த டெஸ்ட் அணி மற்றும் டி20 அணியின் தொப்பியின் முன்பு பும்ரா சிரித்தபடியாக உள்ளார்.
- இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'.
- ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வெளியீட்டுக்கு முன்பே டிராகன் திரைப்படத்தின் ஓ.டி.டி. மற்றும் இதர உரிமங்கள் விற்கப்பட்டு விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பிரதீப் ரங்கநாதன் அவரது நண்பர்களிடம் காசு வாங்கி அதை சம்பளமாக அவரின் பெற்றோரிடம் கொடுக்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 3 ஆயிரம் பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
- மாவட்ட செயலாளர்கள் மூலம் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் நுழைவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது.
சென்னை:
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தொடங்கினார்.
அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து முதலாம் ஆண்டு முடிந்து 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள சொகுசு விடுதியில் வருகிற 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பு கட்சியின் 2-ம் ஆண்டு விழாவை பிரமாண்டமாக நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டது. இதையடுத்து பொதுக்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) கட்சியின் 2-ம் ஆண்டு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்ளூயன்ஸ் அரங்கில் வருகிற 26-ந்தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 3 ஆயிரம் பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர அளவிலான நிர்வாகிகள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்.
26-ந்தேதி காலை 10 மணிக்கு ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. விழாவில் கட்சித்தலைவர் விஜய் சிறப்புரை நிகழ்த்துகிறார். அப்போது விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளார். மேலும் பொதுக்குழு கூட்டம் எப்போது நடத்தப்படும் என்கிற தேதியையும் அவர் அறிவிக்க உள்ளார்.
இந்த ஆண்டு விழாவில் பங்கேற்பவர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது. நுழைவுச்சீட்டு இருப்பவர்கள் மட்டுமே அரங்கத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் நுழைவுச்சீட்டு வழங்கும் பணி நடந்து வருகிறது.
கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் இந்த நுழைவுச்சீட்டுகளை வழங்கினார். மாவட்ட செயலாளர்கள் மூலம் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் நுழைவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது.
2-ம் ஆண்டு விழாவில் பேசும் விஜய், கட்சி சம்பந்தமாகவும், 2026 சட்டசபை தேர்தலை சந்திப்பது தொடர்பாகவும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் விஜய் நிர்வாகிகள் மத்தியில் பேச இருக்கிறார். எனவே விழாவில் விஜய் என்ன பேச இருக்கிறார்? என்னென்ன அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார் என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரமே பரபரப்பாக எதிர்பார்த்து காத்திருக்கிறது.

ஆண்டுவிழாவின் முடிவில் அதில் பங்கேற்பவர்களுக்கு 18 வகையான உணவு வகைகளை கொண்ட அறுசுவை விருந்து வழங்கப்படுகிறது. ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சித்தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சிறப்பாக செய்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு 121 மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டது. ஏற்கனவே 5 கட்டங்களாக இதுவரை 95 மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரும், பெரிய தொகுதி என்றால் ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்ததுடன் அவர்களை தனித்தனியே அழைத்தும் பேசினார். கட்சியில் எப்படி செயல்பட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 'நீங்கள் அனைவரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைவது போல, நானும் அதைப்பார்த்து மகிழ்ச்சி அடைவேன். மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க பெரிய பெரிய பணக்காரர்கள் வந்து மோதினார்கள். ஆனால் உங்களை நம்பி, நீங்கள் உழைத்த உழைப்பை நம்பி, மாவட்ட செயலாளர் பதவி தந்துள்ளேன். எனவே மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டும் இந்த பதவியை பயன்படுத்த வேண்டும்' என்று அவர்களிடம் விஜய் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகளை தீவிரப்படுத்துவதற்காக கட்சியில் 3 லட்சம் பேருக்கு முக்கிய பதவிகளை வழங்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான அறிவிப்பையும் ஆண்டு விழாவில் விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தில் ஏற்கனவே 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மாவட்ட செயலாளர்களும் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். விஜய் கட்சியில் மொத்தம் 28 அணிகள் உள்ளன. அதில் குழந்தைகள் அணி, திருநங்கைகள் அணி ஆகியவையும் உருவாக்கப்பட்டு உள்ளது. இதுவரை வேறு எந்த கட்சியிலும் இதுபோன்ற அணிகள் கிடையாது. விஜய் கட்சியில் மட்டுமே இந்த அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து அணிகளுக்கும் சேர்த்து தமிழகம் முழுவதும் மொத்தம் 3 லட்சம் பேருக்கு பதவிகள் வழங்கப்பட உள்ளன. ஆண்டுவிழா முடிந்ததும் கட்சி நிர்வாகிகளுக்கு இந்த பதவிகள் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் நடிகர் விஜய்யின் அதிரடி விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம், வெற்றி பெறுவதற்காக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தேர்தல் வியூகம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு மாவட்டம் வாரியாக இதுவரை என்னென்ன மக்கள் பணிகள் செய்யப்பட்டுள்ளது இனி என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என வியூகம் வகுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் தொடர்பான பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளன. இந்த பணிகள் நிறைவு பெற்றதும், விரைவில் விஜய் முழு வேகத்தில் அரசியலில் ஈடுபட இருக்கிறார். அடுத்த கட்டமாக கட்சியை வலுப்படுத்துவதுடன் மக்களையும் நேரடியாக சந்திக்க தயாராகி வருகிறார். இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று விஜய் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது சட்டத்துறையின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
- பாஜக அரசு நீதித்துறையின் சுதந்திரத்தை முறையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி வருகிறது.
வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதா 2025 சட்டத்துறையின் சுயாட்சியின் மீதான நேரடி தாக்குதல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
"சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு" – பேரறிஞர் அண்ணா!
வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது சட்டத்துறையின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
2014ம் ஆண்டு முதல், பாஜக அரசு நீதித்துறையின் சுதந்திரத்தை முறையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி வருகிறது.
முதலில் NJAC மூலம் நீதித்துறை நியமனங்களை அபகரிக்க முயற்சிப்பதன் மூலமும், பின்னர் நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களுக்கான கொலீஜியத்தின் பரிந்துரைகளைப் புறக்கணிப்பதன் மூலமும். இப்போது, பார் கவுன்சில்கள் மீது கட்டுப்பாட்டைக் கோருவதன் மூலம், சட்டத்துறையின் சுயாட்சியை அரிப்பதன் மூலம் நீதித்துறை சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதே அதன் நோக்கமாகும்.
"தமிழ்" மீதான பாஜகவின் வெறுப்பு இந்த மசோதாவில் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் அது தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலை மெட்ராஸ் பார் கவுன்சில் என்று மறுபெயரிட விரும்புகிறது. தமிழ்நாடு என்பது வெறும் பெயர் அல்ல; அது எங்கள் அடையாளம்!
தன்னிச்சையான போராட்டங்களும் வரைவு மசோதாவுக்கு எதிரான கடுமையான எதிர்ப்பும் மத்திய அரசை அதை திரும்பப் பெற கட்டாயப்படுத்தினாலும், அது மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் செயல்படுத்தப்படும் என்ற கூற்று கண்டிக்கத்தக்கது.
இந்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும், சட்டத்துறையின் சுயாட்சியை மதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் திமுக வலியுறுத்துகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- முதல்வர் மருந்தகங்களில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில்முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் திறக்கப்படுகின்றன.
- மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என ஒவ்வொரு மாவட்டத்திலும் மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன.
சென்னை:
நாடு முழுவதும் தற்போது பிரதமர் மக்கள் மருந்தகம் என்ற பெயரில் மருந்தகங்கள் செயல்படுகின்றன. மற்ற தனியார் மருந்தகங்களுடன் ஒப்பிடும்போது இங்கே மருந்து மாத்திரைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
அதே போல் இப்போது தமிழ்நாட்டில் 1000 இடங்களில் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் கிடைக்கும் வகையில் 'முதல்வர் மருந்தகங்கள்' நாளை திறக்கப்பட உள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாண்டிபஜாரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை நாளை காலை 10 மணியளவில் திறந்து வைத்து மருந்து விற்பனையை தொடங்கி வைக்கிறார்.
அதன் பிறகு கோட்டூர்புரம் கலைஞர் நூற்றாண்டு நூல கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரிய கருப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியில் செயல்படுத்தப்படும் முதல்வர் மருந்தகங்களில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில்முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் திறக்கப்படுகின்றன.
இதில் சென்னையில் மட்டும் 33 இடங்களில் மருந்தகங்கள் அமைக்கப்படுகின்றன. மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என ஒவ்வொரு மாவட்டத்திலும் மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன.
முதல்வர் மருந்தகங்களில் 'ஜெனரிக் மருந்துகள்', 'சர்ஜிக்கல்ஸ்' 'சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் பிற மருந்துகள்' குறைந்த விலையில் கிடைக்கும்.
இவைகளுக்கு மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து மருந்துகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பயன் அடையும் வகையில் வெளிச்சந்தையைவிட 75 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் இங்கு மருந்து மாத்திரைகள் கிடைக்கும்.






