என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.
- அனசுயா பாரத்வாஜ் மற்றும் பூஜிதா பொன்னாடா ஆகியோர் நடனம் பாடலுக்கு கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.
பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு. இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது.
அதிரடி இசை, பவன் கல்யாண் மாஸ், என பாடல் தற்போது வைரலாகி வருகிறது. பவன் கல்யாணின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் படம் என்பதால் ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் பாடலை ஹிட் அடித்து வருகிறார்கள். அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் அழகு பாடலுக்கு மேலும் புத்துணர்வு சேர்க்கிறது. அத்துடன் அனசுயா பாரத்வாஜ் மற்றும் பூஜிதா பொன்னாடா ஆகியோர் நடனம் பாடலுக்கு கூடுதல் சிறப்பு.
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ள இப்பாடலுக்கு பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பிரபல பாடகர்கள் மங்களி, ராகுல் சிப்லிகுஞ்ச், ரம்யா பிஹாரா, யாமினி கந்தசாலா, ஐரா உடுபி, மோகனபோகராஜு, வைஷ்ணவி கண்ணன், சுதீப் குமார் மற்றும் அருணா மேரி ஆகியோர் குரல்கள் ,
சந்திரபோஸ், அப்பாஸ் டைர்வாலா, பி.ஏ. விஜய், வரதராஜ் சிக்கபள்ளாபுரா மற்றும் மங்கொம்பு கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் ஆழமான வரிகள் இந்தப் பாடலை மேலும் சிறப்பாக்குகின்றன.
ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் மேகா ஸூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்த்னம் தயாரிக்கும் ' ஹரி ஹர வீர மல்லு ' திரைப்படம் 2025 கோடை விடுமுறை கொண்டாட்டமாக வருகிற மார்ச் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 1000 மருந்தகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்துள்ளார்.
- முதல்வர் மருந்தகத்தில் மருந்துகளின் விலை 75% வரை குறைந்த விலையில் வழங்கப்பட உள்ளது
தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் தொடங்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்கள் திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் 39 மாவட்டங்களில் முதல்கட்டமாக கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் 1000 மருந்தகங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்துள்ளார், பிற மருந்தகங்களை ஒப்பிடும்போது முதல்வர் மருந்தகத்தில் மருந்துகளின் விலை 75 சதவிகிதம் வரை குறைந்த விலையில் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் மருத்துவச் செலவிற்கான சுமை பெரிய அளவில் குறையும். அத்தோடு பி.பார்ம், டி.பார்ம் படித்துள்ள மாணவர்களும், தொழில்முனைவோர்களும் இந்த திட்டத்தில் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இம்மருந்தகங்களில் உயிர்காக்கும் மருந்துகள் அனைத்தும் குறைந்த விலையில் கிடைப்பதை படிப்படியாக தமிழக அரசு உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மக்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த திட்டத்தை திட்ட செயல்படுத்தியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டெல்லி தேர்தலின்போது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2500 ரூபாய் வழங்கப்படும் என பாஜக அறிவிப்பு.
- மார்ச் 8-ந்தேதிக்குள் பெண்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என மோடி உத்தரவாதம் அளித்திருந்தார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க. சார்பில் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
தேர்தலுக்கான பிரசாரத்தின்போது டெல்லி பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும். மார்ச் 8-ந்தேதி அவர்களுடைய வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். அமைச்சரவையில் எடுக்கப்படும் முதல் முடிவு இதற்கானதாகத்தான் இருக்கும். இது மோடி உத்தரவாதம் என பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்திருந்தார்.
ஆனால் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்திற்கு முதல் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படுவதற்கான முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.-க்கள் அதிஷி தலைமையில் முதல்வர் ரேகா குப்தாவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு, 2500 ரூபாய் வழங்குவதாக தெரிவித்த வாக்குறுதி என்னாச்சு? என கோரிக்கை எழுப்பினர்.
இது தொடர்பாக அதிஷி கூறியதாவது:-
இரண்டு நாட்களுக்கு முன்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். ஆனால் எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. ஆகவே, சட்டமன்றத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கு வெளியே கூடினோம்.
முதல் அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் மோடி அளித்த 2500 ரூபாய் வாக்குறுதி பற்றி அவரிடம் கேட்டுக்கொள்ள விரும்பினோம். மோடியின் உத்தரவாதம் தவறு என நிரூபனமாகிக் கொண்டு வருகிறது.
முதல்வர் எங்களுக்கு எந்த உத்தரவாதமும் தரவில்லை. ஆனால், மார்ச் 8-ந்தேதிக்குள் வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார்.
இவ்வாறு அதிஷி தெரிவித்தார்.
இன்று முதல்வர் ரேகா குப்தா சட்டமன்றத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பின் 6 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். பின்னர் மீதமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.-வாக பதவி ஏற்றனர். எம்.எல்.ஏ.-க்கள் ஆங்கிலம், இந்தியா, சமஸ்கிருதம், உருது, மைதிலி, பஞ்சாபி என ஆறு மொழிகளில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
- பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் உடல் உறுப்புகள் சிதறி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
- பட்டாசு குடோன் மொத்தமாக வெடித்துச் சிதறி ஏற்பட்ட விபத்தில் தீ மளமளவென பரவியது.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே முருக்கம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் உடல் உறுப்புகள் சிதறி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
பட்டாசு குடோன் மொத்தமாக வெடித்துச் சிதறி ஏற்பட்ட விபத்தில் தீ மளமளவென பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழு தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'.
- லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வெளியீட்டுக்கு முன்பே டிராகன் திரைப்படத்தின் ஓ.டி.டி. மற்றும் இதர உரிமங்கள் விற்கப்பட்டு விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது. இன்று டிராகன் படத்தை பார்த்த பிரபல இயக்குனரான ஷங்கர் படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இந்த நிலையில் படத்தின் 3 நாள் வசூல் விவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. திரைப்படம் வெளியாகி மூன்றே நாட்களில் உலகளவில் 50.3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் 100 கோடி ரூபாயை திரைப்படம் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் நாட்டில் - 24.9 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் - 6.25 கோடி, கேரளா/கரநாடகா/வடக்கு மாநிலங்களில் - 4.37 கோடி, ஓவர்சீஸ் - 14.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தான் கதாநாயகனாக நடித்த லவ் டுடே மற்றும் டிராகன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஆபெரும் வெற்றிப்பெற்றதால் பிரதீப் ரங்கநாதன் வளர்ந்து வரும் நாயகர்களில் முக்கிய பங்கை நிலைநாட்டியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு.
- திருமணமான சிறுமி, 2 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வடக்கு காட்டுப்பட்டி பகுதியில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமூகநலத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த சிறுமி, 2 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது
இந்த விவகாரம் தொடர்பாக திருப்பதி (21), மூக்கன் (60), ராணி (50), முத்து (62) ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
- ஜெயலலிதாவின் நினைவு அனைவரது மனதிலும் நிலைத்திருக்கும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாளை அதிமுகவினர் இன்று வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தில் ஜெ.தீபா இன்று பிறந்தநாள் விழா நடத்தினார். அவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு அனைவரது மனதிலும் நிலைத்திருக்கும். இதற்கு முன்பு 3 முறை வேதா இல்லத்திற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த காலங்களில் ஜெயலலிதாவோடு முரண்பட்ட ரஜினிகாந்த் தற்போது ஜெயலலிதாவை பாராட்டி பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் - ஜெயலலிதா முரண்பாடுகள்:
1992 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின் போது போயஸ் கார்டனில் ரஜினியின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம், அவருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து வெளியான அண்ணாமலை திரைப்படத்தில் ஜெயலலிதாவை குறிக்கும் வகையில் வசனம் இடம் பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணாமலை படத்திற்கு பின்பு 'நாளைய முதல்வரே' ரஜினிக்கு அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்தனர். இது ஜெயலலிதாவிற்கு கடும் கோவத்தை உருவாக்கியது.
1995 இல் இயக்குநர் மணிரத்னத்தின் 'பம்பாய்' படம் வெளியான சமயத்தில் அவருடைய வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது தொடர்பாக 'பாட்ஷா' திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த், "தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவியுள்ளது'' என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து உடனடியாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 1996 இல் நடந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ரஜினிகாந்த் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று கலைஞர் கருணாநிதி ஆட்சியை பிடித்தார்.
திமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் முதல்வன் படத்தின் கதையை ரஜினிகாந்திடம் இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார். ஆனால் ஏனோ அந்த படத்தில் நடிக்க ரஜினிகாந்த் மறுத்துவிட்டார். ஒருவேளை திமுகவுக்கு பதில் அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் ரஜினிகாந்த் அந்த படத்தில் நடித்திருப்பாரோ என்னவோ?
ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக அரசியலுக்கு விரைவில் வருவேன் என்று நீண்ட நாட்களாக கூறி வந்த ரஜினிகாந்த் ஜெயலலிதா, கருணாநிதி இறப்பிற்கு பிறகு இனிமேல் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார்.
அதிமுக - பாஜக கூட்டணி?
பாஜகவின் 'குரலாக' ரஜினிகாந்த் பேசி வருகிறார் என்ற விமர்சனம் நீண்ட நாட்களாக இருந்த நிலையில் திடீரென தற்போது ஜெயலலிதாவிற்கு ரஜினிகாந்த் மரியாதை செலுத்துவதற்கு பின்னால் ஏதேனும் அரசியல் நோக்கம் உள்ளதா என்று கேள்வி எழுகிறது,
ஜெயலலிதா மரணத்திற்கு பின்பு அதிமுக பல துண்டுகளாக பிளவுபட்டது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஓர் அணியிலும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் போன்றோர் மற்றொரு அணியிலும் இருந்து கொண்டு ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். அதிமுக கட்சி சின்னம் தொடர்பான பிரச்சனையும் தேர்தல் ஆணையத்தில் தற்போது விசாரணையில் உள்ளது.
பாஜக கூட்டணிக்கு வரமாட்டேன் என்று எடப்பாடி ஒருபக்கம் அடம் பிடிக்க இன்னொரு பக்கம் அதிமுக ஒன்றிணைந்து 'பாஜக' கூட்டணியில் சேர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பல பாஜக தலைவர்கள் தற்போது ஜெயலலிதாவை புகழ்ந்து பேசி வருகின்றனர். இது அதிமுகவை கூட்டணியில் இழுக்கவும் அல்லது அதிமுக ஓட்டுக்களை தன்பக்கம் இழுக்கவும் பயன்படும் என்று பாஜக நினைக்கிறது.
ஜெயலலிதாவை ரஜினிகாந்த் புகழ்வதன் காரணம் என்ன?
ஜெயலலிதாவோடு முரண்பட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்து, பின்னர் பின்வாங்கிய ரஜினிகாந்த், இப்போது ஏன் திடீரென ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுகிறார்?
தற்போது வரை பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில், ஜெயலலிதா நினைவு நாளில் அவர் வசித்த வேதா நிலையத்திற்கே ரஜினிகாந்த் சென்று திரும்பியது 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி உருவாக ரஜினிகாந்த் குரலாக ஒலிப்பாரோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- காய்ந்த புற்கள் மற்றும் மரங்களால் தீ வேகமாக பரவி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுங்கான்டை மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
தீ வேகமாக பரவி வருவதால் மலை அடிவாரத்தில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவித்து, மாணவிகளை கல்லூரி நிர்வாகம் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், காய்ந்த புற்கள் மற்றும் மரங்களால் தீ வேகமாக பரவி வருகிறது.
- நாம்தமிழர் உறவுகளுக்கும் நன்றிகளை சொல்வதோடு என் வருத்தங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.
- இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை எண்ணி மனம் வருந்துகிறேன்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அறிவித்துள்ளார்.
காலத்தின் சூழல் காரணமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுகிறேன் என காளியம்மாள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூற்பப்பட்டுள்ளதாவது:-
இதுவரை இல்லாத கனத்த இதயத்தோடு எழுதுகிறேன். கட்சியில் பயணித்த ஒவ்வொரு கணமும் உண்மையும், நேர்மையுமாய் உளப்பூர்வமாக என் குடும்பத்திற்கும் மேலாக நேசித்து வந்தேன்.
இந்த 6 ஆண்டுகால பயணம் எனக்கு அரசியல் ரீதியான பல அனுபவங்களை கொடுத்துள்ளது. பல உறவுகள் அக்கா தங்கையாகவும் அண்ணன், தம்பிகளாகவும் கிடைத்ததையும் அவர்கள் என்னுடன் பழகிய விதங்களையும் எண்ணி மகிழ்கிறேன்.
நமக்கெல்லாம் ஒரே பெருங்கனவு தான், அது தமிழ்த்தேசியத்தின் வெற்றியும், அதனை மக்களிடம் கொண்டு சேர்த்தல் என்னும் உன்னத நோக்கமும் அந்த நோக்கத்தை அடைய வேண்டும் என்ற பாதையில் நானும் ஒரு பகுதியாய் இணைந்து பயணித்ததில் நான் பெருமை கொள்கிறேன்.
ஆனால் இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன்.
எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி, வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இங்கு பயணித்ததில் பலரின் அன்பு, அக்கறை, நம்பிக்கை என்மீதான அளவற்ற பாசம் என்ற அனைத்தையும் மனதில் நிலைநிறுத்தியுள்ளேன், என்னுடன் இத்தனை நாட்களாக உண்மையாய், உறவாய் பழகிய பயணித்த களத்தில் இன உணர்வோடு நின்று நேர்மையாய் வேலை செய்த அத்தனை உறவுகளுக்கும், உண்மையான உழைப்பாளர்களுக்கும், உலகத்தமிழர்கள் மற்றும் நாம்தமிழர் உறவுகளுக்கும் நன்றிகளை சொல்வதோடு என் வருத்தங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.
ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து பிறந்த இனத்துக்காக தமிழ்த்தேசிய களத்தில் ஓடிய என்மீது மிகுந்த நம்பிக்கையும் அன்பும் வைத்து களமாடிய உங்கள் அத்துணை பேருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள் எனக்கான நெருக்கடிகள் நிறைய வந்த போதும் என்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையாலும், நான் உங்கள் மீது கொண்ட அன்பினாலும், எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தேன்.
ஆனால் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை எண்ணி மனம் வருந்துகிறேன். அவதூறு வெறும் வார்த்தைகள் தானே என்று நினைத்து அள்ளி தெளிப்பவர்களுக்கு மத்தியில் என் மீது அளப்பரிய அன்பு கொண்டு நேசிக்கிற உங்கள் அத்தனை பேருக்கும் நான் என்றென்றும் கடமை பட்டவளாக இருப்பேன் என்னுடைய இந்த முடிவு பலருக்கு வருத்தத்தைத் தரலாம், எனக்கும் தான். காலத்தின் வழிநடத்தல்!
என்றும் தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும்...
நன்றி,வணக்கம், நாம் தமிழர்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஜவுளி, சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப துறைகள் வரும் ஆண்டுகளில் கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
- இந்தியாவின் மின்சார வாகன புரட்சியில் மத்திய பிரதேசம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகும்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளா்கள் உச்சி மாநாடு இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
மத்திய பிரதேசத்தை உலகளாவிய முதலீட்டு மையமாக முன்னிறுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும், இந்தியாவில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில்துறை தலைவா்கள் மற்றும் கொள்கை வகுப்பாளா்களும் பங்கேற்றனர்.
வாகனத் தொழில் கண்காட்சி, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு கண்காட்சி, 'ஒரு மாவட்டம், ஒரு பொருள்' திட்டம் தொடா்பான கண்காட்சி என 3 கண்காட்சிகள் நடைபெறுகிறது.
உலக முதலீட்டாளா்கள் உச்சி மாநாட்டை பிரதமா் மோடி தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேச அரசின் 18 புதிய கொள்கைகளையும் அவர் வெளியிட்டார். உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் பிரதமா் மோடி பேசியதாவது:-
மாநாட்டு நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இருப்பது நினைவுக்கு வந்தது. பாதுகாப்பு காரணங்களால் சாலைகள் மூடப்பட்டதால் தேர்வுக்கு செல்வது தாமதமாகும். மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் தேர்வு மையத்தை அடைவதற்காக நான் 15 முதல் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டேன். உங்கள் சிரமத்திற்கு மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக, முழு உலகமும் இந்தியாவைப் பற்றி மிகவும் நம்பிக்கையுடன் இருக்கும்போது இதுபோன்ற ஒரு வாய்ப்பு வந்துள்ளது. சாதாரண மக்களாக இருந்தாலும் சரி, பொருளாதார கொள்கை வல்லுனர்களாக இருந்தாலும் சரி, பல்வேறு நாடுகளாக இருந்தாலும் சரி, நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் இந்தியாவிடம் இருந்து பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன.
வரும் ஆண்டுகளில் உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என்று உலக வங்கி சமீபத்தில் தெரிவித்தது. உலகளாவிய விண்வெளி நிறுவனங்களுக்கான சிறந்த வினியோகமாக இந்தியா வளர்ந்து வருகிறது.
ஜவுளி, சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப துறைகள் வரும் ஆண்டுகளில் கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
மத்திய பிரதேசம் முதலீட்டாளர்களுக்கு சிறந்த வருமானத்திற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. வலுவான திறமையாளர்கள் குழு மற்றும் செழிப்பான தொழில்களுடன் மத்திய பிரதேசம் ஒரு விருப்பமான வணிக இடமாக மாறி வருகிறது.
இந்தியாவின் மின்சார வாகன புரட்சியில் மத்திய பிரதேசம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகும். மத்திய பிரதேசத்தில் இரட்டை எந்திர அரசாங்கத்துக்கு பிறகு வளர்ச்சியின் வேகம் இரட்டிப்பாகியுள்ளது.
இவ்வாறு மோடி பேசினார்.
- ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு தி.மு.க. அரசு தான் கோழைத்தனத்தை பின்பற்றுகிறது.
- தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இருந்தும், எனக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவது தான் கோழைத்தனம்.
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் அருகே வேட்டமங்கலம் கிராமத்தில் உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி தந்தை மறைவுக்கு, அவரது இல்லத்திற்கு சென்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கும்பகோணத்தில் நேற்று நடந்த சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாட்டில் தி.மு.க. அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாமல் கோழைத்தனத்தை பின்பற்றுகிறது என நான் பேசினேன். இதற்கு அமைச்சர் சேகர்பாபு, பாட்டாளி மக்கள் கட்சி தான் வழக்கிற்கு பயந்து, மத்திய அரசிடம் மண்டியிடுவது தான் கோழைத்தனம் என விமர்சித்து உள்ளார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு தி.மு.க. அரசு தான் கோழைத்தனத்தை பின்பற்றுகிறது. பீகார், தெலுங்கானா, ஜார்கண்ட், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு இந்திய சட்டம் 2008-ன் படி நடத்தி உள்ளனர். தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இருந்தும், எனக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவது தான் கோழைத்தனம்.
பா.ம.க. வழக்கிற்கும், இதற்கும் சம்மந்தம் இல்லை. மற்ற மாநிலங்களுக்கு உள்ள அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லையா? அதிகாரத்தை வைத்துக் கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று பொய் சொல்வது தான் கோழைத்தனம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும்.
- மத்திய அரசு எவ்வளவு நிதியை நிறுத்தினாலும் இரு மொழிக்கொள்கை தான் செயல்படுத்தப்படும் என முதலமைச்சரே தெரிவித்து உள்ளார்.
விழுப்புரம்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து விழுப்புரத்தில் 23 மருந்தகங்களை திறக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் புதுவை சாலை, சாலை அகரத்தில் கூட்டுறவு முதல்வர் மருந்தகத்தினை வனத்துறை அமைச்சரும் மாநில தி.மு.க. துணை பொது செயலாளருமான பொன்முடி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், வன்னியர் அறக்கட்டளை உறுப்பினருமான அன்னியூர் சிவா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், கோலியனூர் சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
மருந்தக விற்பனையை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும். அதை யாராலும் அசைக்க முடியாது. மும்மொழி கொள்கையை தமிழகத்தில் யாராலும் புகுத்த முடியாது. மத்திய அரசு எவ்வளவு நிதியை நிறுத்தினாலும் இரு மொழிக்கொள்கை தான் செயல்படுத்தப்படும் என முதலமைச்சரே தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.






