என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும்.
    • மத்திய அரசு எவ்வளவு நிதியை நிறுத்தினாலும் இரு மொழிக்கொள்கை தான் செயல்படுத்தப்படும் என முதலமைச்சரே தெரிவித்து உள்ளார்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து விழுப்புரத்தில் 23 மருந்தகங்களை திறக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் புதுவை சாலை, சாலை அகரத்தில் கூட்டுறவு முதல்வர் மருந்தகத்தினை வனத்துறை அமைச்சரும் மாநில தி.மு.க. துணை பொது செயலாளருமான பொன்முடி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், வன்னியர் அறக்கட்டளை உறுப்பினருமான அன்னியூர் சிவா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், கோலியனூர் சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    மருந்தக விற்பனையை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும். அதை யாராலும் அசைக்க முடியாது. மும்மொழி கொள்கையை தமிழகத்தில் யாராலும் புகுத்த முடியாது. மத்திய அரசு எவ்வளவு நிதியை நிறுத்தினாலும் இரு மொழிக்கொள்கை தான் செயல்படுத்தப்படும் என முதலமைச்சரே தெரிவித்து உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
    • இப்போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

    ஐ.சிசி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 6-வது லீக் ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் இன்று நடைபெறுகிறது. இதில் ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

    • இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் 13க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்தன.
    • அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

    ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் இன்றுடன் (பிப்ரவரி 24) ஆம் தேதியுடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறது. ஐரோப்பிய யூனியனின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிராக ரஷியா தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தை கூறி ரஷியா 2022இல் போரை தொடங்கியது.

    இந்நிலையில் ரஷியா இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் மீது நடத்தியுள்ளது.

    உக்ரைன் அதிகாரிகளின் கூற்றுப்படி, நேற்று ஒரே நாளில் ரஷியா 267 ட்ரோன்களை ஏவியது. இது இதுவரை உக்ரைன் மீது நடந்தேறாத மிகப்பெரிய வான்வழித் தாக்குதலாகும்.

    இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் 13க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்தன. அவற்றில் கார்கிவ், பொல்டாவா, சுமி, கீவ், செர்னிஹிவ், மைகோலைவ் மற்றும் ஒடெசா ஆகியவை அடங்கும்.

    உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் கூறுகையில், ரஷியா ஏவிய 267 ட்ரோன்களில் 138 இடைமறிக்கப்பட்டன. இருப்பினும், இந்த தாக்குதலின் போது மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் உடன் ஏவி, உக்ரைனின் ஐந்து நகரங்களில் ரஷியா சேதம் விளைவித்தது.

    இந்தத் தாக்குதலின் போது, உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு பல ரஷிய ட்ரோன்களை அழித்தது. உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் இந்த சம்பவத்தின் காணொளியை வெளியிட்டுள்ளது.

    முன்னதாக கடந்த சனிக்கிழமை இரவு உக்ரைனின் கிரிவி ரிஹ் நகரில் நடந்த மற்றொரு ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

    ரஷியாவின் தாக்குதலை உக்ரைன் அதிபர்ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் ரஷியா 1,150 ட்ரோன்கள், 1,400 க்கும் மேற்பட்ட வான்வழி வெடிகுண்டுகள்  மற்றும் 35 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசியதாக அவர் தெரிவித்தார்.

    உக்ரைன் போருக்கு தீர்வு காண சவுதி அரேபியாவில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

    இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லை. இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. உக்ரைனை நேட்டோ நாடுகளுடன் சேர்த்தால் தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுப்பதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முதல் விக்கெட்டை ஹர்திக் பாண்ட்யா எடுத்தார்.
    • வாட்ச்-இன் விலை 8 லட்சம் டாலர்கள் என்று தகவல்.

    துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 5வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டை ஹர்திக் பாண்ட்யா எடுத்தார்.

    நேற்றைய போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 8 ஓவர்கள் பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா வெறும் 31 ரன்களை மட்டுமே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பிறகு பேட்டிங்கின் போது பாண்ட்யா 6 பந்துகளில் 8 ரன் எடுத்த அவுட் ஆனார்.

    இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யா அணிந்திருந்த வாட்ச் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. அதன்படி ஹர்திக் பாண்டயா நேற்றைய போட்டியின் போது அணிந்திருந்த வாட்ச்-இன் விலை 8 லட்சம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 6.92 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

    உலகளவில் மிகவும் பெயர்பெற்ற அந்த வாட்ச்-ஐ காண்பது அரிது. இந்த வாட்ச் உண்மையில் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ரஃபேல் நடாலுக்காக உருவாக்கப்பட்டது. இந்த வாட்ச் மொத்தத்தில் 50 யூனிட்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    சிறப்பான பந்துவீச்சு மற்றும் ஆடம்பர வாட்ச் தவிர்த்து நேற்றைய போட்டியில் வைத்து ஹர்திக் பாண்ட்யா சர்வதேச போட்டிகளில் 200 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை கடந்தார். 

    • மருத்துவ முகாமில் பெண்கள் 300 பேருக்கு 11 பொருட்கள் அடங்கிய ஆரோக்கிய பெட்டகமும் வழங்கப்பட்டது.
    • இன்றைய ஆட்சியில் பாலியல் வன்கொடுமைக்கு பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    அவரது உருவப்படத்தை முக்கிய பகுதிகளில் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அன்னதானம், ரத்ததானம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்கள்.

    சென்னையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா இன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் வாழை மரம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கொடி தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தன.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு வந்த போது திரண்டிருந்த தொண்டர்கள் புரட்சித்தலைவியின் புகழ் ஓங்குக, எடப்பாடி வாழ்க என கோஷங்களை எழுப்பினார்கள்.

    மேலும் வாணவேடிக்கையுடன் பட்டாசு வெடித்து தாரை தப்பட்டை முழங்க எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா சிறப்பு மலரை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். முதல் பிரதியை பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

    பின்னர் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார். தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிகளுக்காக அ.தி.மு.க. தலைமைக்கழக வளாகத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

    அந்த மேடையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்திருந்த 77 கிலோ பிரமாண்ட கேக்கினை எடப்பாடி பழனிசாமி வெட்டினார். அதை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கினார்.

    அதனை தொடர்ந்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    ஜெயலலிதா பேரவை சார்பில் ஏழைகள் 5 பேருக்கு தையல் எந்திரங்கள், 5 பேருக்கு இட்லி பாத்திரங்கள், 2 பேருக்கு கிரைண்டர், 5 பேருக்கு இஸ்திரி பெட்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவற்றை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 50 பேருக்கு வேட்டி, 50 பெண்களுக்கு சேலை ஆகியவற்றையும் வழங்கினார்.

    முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

    இந்த மருத்துவ முகாமில் பெண்கள் 300 பேருக்கு 11 பொருட்கள் அடங்கிய ஆரோக்கிய பெட்டகமும் வழங்கப்பட்டது.

    அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்காக தனி கவுண்டர் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு எடப்பாடி பழனிசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி என்ற அணியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதன் லோகோவையும் வெளியிட்டார்.

    அதன்பிறகு அ.தி.மு.க. தொழில்நுட்ப அணி சார்பில் உருவாக்கப்பட்ட 'அம்மா சொல் அல்ல செயல்' மற்றும் 'அம்மா 77' ஆகிய 2 ஹேஷ்டேக்குகளையும் வெளியிட்டார்.

    கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இளைய தலைமுறையினரை இணைத்து செயல்படுத்தவும் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி தொடங்கப்பட்டுள்ளது. நல்ல உடல் ஆரோக்கியத்தை உருவாக்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும் இந்த அணி உருவாக்கப்பட்டு உள்ளது.

    இந்த அணியில் இடம் பெறுபவர்கள் ஒரு உணர்வோடு விளையாடும் போது மத நல்லிணக்கம் ஏற்படுகிறது. இதனை தொடங்கி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா அவரது ஆட்சி காலத்திலேயே மாநில பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து எங்களது ஆட்சிக்காலத்திலும் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் தற்போது அது செயல்படுத்தப்படாததால் மீண்டும் அதனை செயல்படுத்த வேண்டும்.

    இன்றைய ஆட்சியில் பாலியல் வன்கொடுமைக்கு பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. இந்த ஆட்சியில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.

    அ.தி.மு.க. ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் இருந்தது. ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் பாலியல் வன்முறைகள் நடக்கின்றன.

    பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. பணிபுரியும் ஒரு சில ஆசிரியர்களே பள்ளி குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறார்கள்.

    வேலியே பயிரை மேய்கின்ற கதை போல ஒரு சில ஆசிரியர்களால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கே பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த அரசு பெண் குழந்தைகளை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

    பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய நகரமாக சென்னை, கோவை போன்ற நகரங்கள் இருந்தது. குழந்தைகள், பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதற்கு இந்த அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சியில் பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. பெண்கள் சமூக பொருளாதார மேம்பாடு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம், சானிடரி நாப்கின் வழங்குதல், மகளிர் சுய உதவி குழுக்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தனியறை, இலவச மடிக்கணினி சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உருவாக்கி தந்தவர் ஜெயலலிதா.

    அதனால்தான் அவரை எல்லோரும் வெற்றி பெண்மணி என்று கூறினார்கள். அம்மாவின் அரசு பல்வேறு உதவிகளை செய்து வந்தது போல் இந்த அரசும் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து அருகில் உள்ள ஹேமமாலினி திருமண மண்டபத்துக்கு சென்றார். அங்கு இளம் விளையாட்டு வீரர்களுடன் கலந்தாலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் எப்படி செயல்படவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • 2-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் வருகிற 27-ந்தேதி ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28-ந்தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மார்ச் 1-ந்தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் இன்று முதல் 26-ந்தேதிவரை அடுத்த மூன்று நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மனசாட்சி இல்லாமல் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும் பேசிக்கொண்டிருக்கலாம்.
    • தாய் மொழியை காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழர்களுக்கும் உள்ளது.

    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வாரியம் வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க. உச்சத்தில் இருந்தது, அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததற்கு ஒற்றை தலைமையே காரணம், நம்பிக்கை துரோகம் யார் செய்தார்கள் என்று மக்களுக்கு தெரியும்.

    சூது, சூழ்ச்சி, வஞ்சனை, நம்பிக்கை துரோகம். துரோகத்தினால் கடைசியாக நடைபெற்ற 11 தேர்தல்களிலும் ஊரக உள்ளாட்சியாக இருந்தாலும் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் அனைத்திலும் தோல்வி பெற ஒற்றைத் தலைமை தான் வேண்டுமென்று அடம்பிடித்தது தான் காரணம்.

    மனசாட்சி இல்லாமல் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும் பேசிக்கொண்டிருக்கலாம். எங்கள் வாய் நல்ல வாய். அவர்கள் வாய் என்னவாய் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

    தமிழக மக்கள் இருமொழி கொள்கையை தான் விரும்புகிறார்கள் என்பதை அறிந்து அண்ணாவும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். நான் முதலமைச்சராக இருந்தபோதும் அதைத்தான் பின்பற்றினேன். அதேபோல இரு மொழிக் கொள்கைதான் எங்களுடைய நிலைப்பாடும்.

    தமிழகத்தில் பிறக்கிற ஒவ்வொரு குழந்தைகளும் பிறந்தவுடனே தமிழ் மொழியில் தான் அம்மா என அழைக்கிறார்கள், தாய் மொழி தமிழ், விருப்பப்பட்டவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். படித்துக் கொள்ளலாம் என அண்ணா கூறியுள்ளார். தாய் மொழியை காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழர்களுக்கும் உள்ளது.

    தொடர்ந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளை மாநில அரசின் அனுமதியின்றி தொடங்கிக் கொள்ள ஒன்றிய கல்வி இடைநிலை வாரியம் அறிவித்தது தொடர்பான கேள்விக்கு தாய்மொழி தமிழ் கட்டாயம் விருப்பப்பட்டவர்கள் எந்த மொழி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டிராகன் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது.
    • டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

    இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் டிராகன். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    வெளியீட்டுக்கு முன்பே டிராகன் திரைப்படத்தின் ஓ.டி.டி. மற்றும் இதர உரிமங்கள் விற்கப்பட்டு விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. மேலும், இந்தப் படம் திரையரங்கு வெளியீட்டில் பெரும் வசூல் முழுவதும் நிறுவனத்திற்கு போனஸ் தான் என்றும் தெரிவித்து இருந்தது.

    ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிராகன் படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் படக்குழுவை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "டிராகன் மிக அழகான திரைப்படம். அருமையான எழுத்துக்கள் - இயக்குநருக்கு பாராட்டுக்கள். அனைத்து கதாபாத்திரங்களும் அழகாகவும், முழுமையாகவும் இருந்தது."

    "பிரதீப் ரங்கநாதன் தான் ஒரு அசாத்திய எண்டர்டெயினர் என்பதை வெளிப்படுத்தியதோடு, உறுதியான மற்றும் திறமையான நடிகர் என்பதையும் உணர்த்தி இருக்கிறார். இயக்குநர் மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்."

    "அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர். கடைசி 20 நிமிடங்கள் என் கண்களை கலங்க செய்துவிட்டது. அதிகரித்து வரும் ஏமாற்று வேலைகள் நிறைந்த உலகில், இது மிகவும் அவசியமான தகவல். ஏஜிஎஸ் புரொடக்ஷன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள்," என குறிப்பிட்டுள்ளார்.

    இயக்குநர் ஷங்கரின் பதிவுக்கு பதில் எழுதிய பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் தளத்தில், "சார், உங்கள் திரைப்படங்களை பார்த்தே வளர்ந்து, உங்களை ரசித்து, உங்களை உற்று நோக்கி வந்த ஒரு Fan boy இத்தனை வாழ்த்துக்களை பெறுவதை நினைத்தும் பார்க்கவில்லை. நீங்கள் (எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்) என்னை பற்றி பேசியது நம்ப முடியாத கனவு. என் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. ரொம்ப நன்றி சார். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சிறந்த பேச்சாளர்கள், கலைஞர்களை வைத்து இந்த முறை மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது.
    • அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். நேற்று கும்பகோணத்தில் நடந்த மாநாட்டில் பேசிய அன்புமணி ராமதாஸ், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமையில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார். இது கோழைத்தனம் என்று விமர்சித்தார்.

    இந்த நிலையில் சென்னை அயனாவரம் பகுதியில் அன்னம் தரும் அமுதக் கரங்கள் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபுவிடம் இதுபற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என முதலமைச்சர் கூறுவது கோழைத்தனம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசி உள்ளார்.

    வழக்கிற்கு பயந்து, மத்திய அரசுக்கு மண்டியிடுவது கோழையா அல்லது மாநில உரிமைக்காக நெஞ்சை நிமிர்த்தி உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தோடும், மத்திய அரசு முறையாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய அனைத்து வகையான சிறப்புகளையும் இடைமறைத்து தமிழகத்தின் வளர்ச்சியை குறைக்கின்ற போதும் நெஞ்சை நிமிர்த்தி மத்திய அரசுக்கு சவால் விடுகிற முதலமைச்சரை கோழை எனக்கூறுபவர்கள் கோழை என்ற கூற்றுக்கு அர்த்தம் தெரியாத நபர்களாக தான் இருக்க முடியும்.

    எந்த நிலையிலும் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் போற்றப்பட்டது உண்டு. மத்திய அரசிடம் மாநில உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய இரும்பு மனிதராக மத்தியிலே இருக்கக்கூடிய ஒரு முதன்மையான முதலமைச்சர்தான் எங்கள் முதலமைச்சர் என அன்புமணி ராமதாசுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன் என்றார்.

    மேலும் அவர் கூறும் போது, மகா சிவராத்திரிக்கான முன் ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்து சிவனைப் போற்றி வழிபடக்கூடிய நல்ல சூழலை உருவாக்கி இருக்கிறோம்.

    இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், சிவபெருமானின் பெருமையை எடுத்துக் கூறுவது போன்ற பட்டிமன்ற பேச்சாளர்கள், சிறந்த பேச்சாளர்கள், கலைஞர்களை வைத்து இந்த முறை மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது. அனைத்து இடங்களிலும் சிறப்பாக வடிவமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

    மயிலாப்பூரில் நானும், எம்.பி. ஜெகத்ரட்சகன், மேயர் பிரியா மற்றும் அந்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் மயிலை தா.வேலு உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளோம்.

    கூடுகின்ற பக்தர்களுக்கு தேவையான சொற்பொழிவுகள் நடத்துவதும் சேர்கின்ற பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து, மருத்துவம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 'கோர்ட்' மற்றும் 'ஹிட் 3' ஆகிய 2 படங்களில் நானி நடித்து வருகிறார்.
    • ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத் தொடர்ந்து 'கோர்ட்' மற்றும் 'ஹிட் 3' ஆகிய 2 படங்களில் நானி நடித்து வருகிறார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.

    பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

     போலீஸ்  கதாபாத்திரத்தில் நானியை இதில் பார்க்க முடிகிறது. ஆனால் இடையில் அவர் உண்மையில் போலீஸ் தானா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

    எல்லாரும்  பொய்யை நம்பினார்கள் என நானி காதாபாத்திரம் கூறுவது அதற்கு உதாரணம். இறுதியில் ஒருவரை இரண்டு துண்டாக நானி கிழிக்கும் காட்சி அதிரவைக்கிறது. எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திட்டமிட்டதை விட சற்று கால தாமதம் ஆனது.
    • தாமதமாக வந்ததற்கான காரணத்தை கூறினார்.

    மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அம்மாநிலத்தின் போபாலில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். இன்று காலை தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள ஏற்கனவே திட்டமிட்டதை விட சற்று கால தாமதம் ஆனது.

    இதையடுத்து, மாநாட்டில் தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி முதலில் தாமதமாக வந்ததற்கு தன்னை மன்னிக்குமாறு கேட்டார். தொடர்ந்து பேசிய அவர், தான் தாமதமாக வந்ததற்கான காரணத்தை விளக்கி கூறினார்.

    அப்போது பேசிய அவர், "இங்கு வந்ததும் மாநிலத்தில் தேர்வுகள் நடைபெற இருப்பதும், மாணவர்கள் அதில் பங்கேற்க செல்லும் நேரமும், நான் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வரும் நேரமும் ஒன்றாக இருந்தது. ஒரே நேரமாக இருப்பதால், நாம் வெளியே வந்தால், போக்குவரத்து மாற்றங்களால் மாணவரகள் தேர்வு மையங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்படலாம்.

    இதன் காரணமாக ஆளுநர் மாளிகையில் இருந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்படுவது என முடிவு செய்தேன். இதனால் தான் நான் இங்கு வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. தாமதமானதால் ஏற்பட்ட இடையூறுக்கு மீண்டும் உங்கள் அனைவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.

    • சில நேரங்களில் சொகுசு காரில், யாருக்கும் சந்தேகம் வராதபடி சென்று கொள்ளையடித்துள்ளார்.
    • மீதி பணத்தை வர்த்தகத்தில் போடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். ஞானசேகரன் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள சொகுசு வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். பள்ளிக்கரணை பகுதியில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக சிறையில் உள்ள ஞானசேகரனிடம் விசாரணை நடத்துவதற்காக பள்ளிக்கரணை போலீசார் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்தனர். அவரிடம் பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது ஞானசேகரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:-

    ஞானசேகரன் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள சொகுசு வீடுகளை குறிவைத்து ஆட்டோ மற்றும் காரில் சென்று கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். குறிப்பாக சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லாத பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு, வீடுகளின் பின்பக்கம் வழியாக சென்று கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி வந்துள்ளார்.

    சில நேரங்களில் சொகுசு காரில், யாருக்கும் சந்தேகம் வராதபடி சென்று கொள்ளையடித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பள்ளிக்கரணையில் ஒரு வீட்டில் கொள்ளை அடிக்கும் போது வெளிமாநில கூட்டாளி ஒருவரை ஞானசேகரன் அழைத்து சென்று இருப்பதும் தெரியவந்துள்ளது.

    அவர் கொள்ளையடிப்ப தற்கு 'கூகுள் மேப்' பார்த்து சொகுசு பங்களாக்களை தேடினார். ஆட்கள் இல்லாத பங்களாக்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணிக்குள் ஆட்டோ, கார், ஜீப் ஆகியவற்றில் சென்று கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

    7-வது கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற ஜீப்பில் சென்றபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். கொள்ளையடித்த நகைகளை அடகு கடையில் விற்று, ஒரு பங்கை 3 மனைவிகளுக்கும் பிரித்துக்கொடுத்தார். மீதி பணத்தை வர்த்தகத்தில் போடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.

    அவர் இதுவரை 250 பவுனுக்கும் மேற்பட்ட நகைகளை கொள்ளையடித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் கானத்தூர், நீலாங்கரை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் இவர் மீது சுமார் 16-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சிறை சென்று வந்த பின்னர் திருந்தி வாழ போவதாக கூறி, பிரியாணி கடை நடத்தினார். காலையில் பிரியாணி கடை நடத்திவிட்டு, இரவில் காரில் சென்று சென்னை புறநகர் பகுதிகளில் கைவரிசை காட்டினார்.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து ஞானசேகரனை 7 கொள்ளை வழக்குகளிலும் கைது செய்த பள்ளிக்கரணை போலீசார், கொள்ளையடித்த நகைகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். அவரிடம் இருந்து இதுவரை சுமார் 100 பவுன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். மீதமுள்ள 150 பவுன் நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வர்த்தகத்தில் போட்ட பணத்தையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ×