என் மலர்
தலைப்புச்செய்திகள்
- 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- கூட்டுறவுத் துறை சார்பில் 500 கடைகளும், தொழில் முனைவோர்களுக்கு 500 கடைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கூட்டுறவுத் துறை சார்பில் 500 கடைகளும், தொழில் முனைவோர்களுக்கு 500 கடைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏசி வசதியுடன் அமைக்கபட்டுள்ள இந்த மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் பிற மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எல்லோருக்கும் உயர்தர மருத்துவம் என்ற இலக்கில்..
* மக்களைத் தேடி மருத்துவம்,
* இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48,
* இதயம் காப்போம்,
* பாதம் பாதுகாப்போம் போன்ற திட்டங்களின் தொடர்ச்சியாக,
*குறைந்த விலையில் மக்களுக்கு மருந்துகள் கிடைத்திடவும்; B.Pharm., D.Pharm., முடித்தவர்களைத் தொழில்முனைவோர்களாக வளர்த்தெடுக்கவும் தமிழ்நாடு முழுக்க 1000 #முதல்வர்மருந்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 4 புதிய பாலங்கள் கட்ட 1,100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
- என்டிஏ அரசு காரணமாக பால் உற்பத்தி இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் சென்றிருந்தார். அப்போது பீகார் மாநில முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவை மறைமுகமாக விமர்சித்தார்.
அவர் பேசும்போது கூறியதாவது:-
காட்டாட்சி தலைவர்கள் மகா கும்பமேளாவையும், இந்து மதத்தையும் கேலி செய்தனர். அவர்களை பீகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
முன்னதாக மகா கும்பமேளா குறித்து லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவிக்கையில் "மகா கும்பமேளா அர்த்தமற்றது" எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் லாலு பிரசாத் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் "விவசாயிகளுக்கான 19-வது தவணை நிதியை விடுவித்த பிரதமர் மோடி, என்டிஏ அரசு விவசாயிகள் நலன் மற்றும் பீகார் மக்கள் வளர்ச்சிகாக உறுதிப்பூண்டுள்ளது. என்டிஏ அரசு காரணமாக பால் உற்பத்தி இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தாமரை விதைக்கான (makhana) வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன்மூலம் பீகார் விவசாயிகள் பயனடைவார்கள்.
4 புதிய பாலங்கள் கட்ட 1,100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். பொருளாதார வளர்ச்சிக்காக இணைப்புகளை மேம்படுத்த இந்த பாலங்கள் கட்டப்படுகிறது" என்றார்.
- ஜெயலலிதா அவர்களை, அவரது பிறந்தநாளில் நினைவுகூறுகிறேன்.
- மக்களுக்கான செயல்பாடுகளில் ஜெயலலிதா எப்போதுமே மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பார்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாளை அதிமுகவினர் இன்று வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி அவருடன் பழகிய அனுபவத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த இரக்கமுள்ள தலைவரும் சிறந்த நிர்வாகியுமான ஜெயலலிதா அவர்களை, அவரது பிறந்தநாளில் நினைவுகூறுகிறேன். எண்ணற்ற சந்தர்ப்பங்களில் அவருடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது, எனது பாக்கியம். மக்களுக்கான செயல்பாடுகளில் அவர் எப்போதுமே மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.
- சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
- இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் ஒரு காதல் திரைப்படம் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறினார். திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில் ரெட்ரோ படம் மே 1 வெளியாகவுள்ளது.
படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் படப்பிடிப்பு காட்சியை படக்குழு காமிக் வடிவத்தில் வாரவாரம் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் காமிக்கின் 3 -வது அதியாயத்தை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சிறப்பு வீடியோவை காட்சி படுத்திய விதத்தை படக்குழு அதில் விவரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
- அரசு தரப்பில் என்ன பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறித்து பதிலளிக்க உத்தரவு.
அரசு ஊழியர்கள் மற்றும் அரசு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விராணையின்போது, அரசு ஊழியர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்ய 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அரசு தரப்பில் என்ன பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
- சாம்பியன்ஸ் டிராபியில் 10,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட்டு வருகிறார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் ஐ.சி.சி. தொடரை நடத்துகிறது. 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை அந்நாடு நடத்தியது. அதன் பிறகு பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அந்நாட்டில் ஐ.சி.சி. கிரிக்கெட் தொடர்கள் நடைபெறாமல் இருந்தது.
லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் உள்ள மைதானங்கள் மற்றும் கிரிக்கெட் அணியினர் தங்கும் ஓட்டல்களில் உயர் கமாண்டோ பிரிவுகள் உட்பட 10,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி, போட்டிக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பார்க்க வரும் வெளிநாட்டு ரசிகர்களை கடத்த ISKP என்ற பயங்கரவாத அமைப்பு திட்டம் போட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இரு மொழிகளில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்'. திரைப்படம்
- 'லெவன்' வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்'. இப்படத்திற்காக 'தமுகு' எனும் சிறப்பு பாடல் உருவாக்கப்பட்டு சரிகம தமிழ் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டி. இமான் இசையில், ராகேண்டு மெளலி வரிகளில் உருவான இப்பாடலை பிரபல நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா பாடியுள்ளதோடு இமானுடன் சேர்ந்து நடனமும் ஆடியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவாகியுள்ள இந்த பிரத்யேகப் பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பாடலை பற்றி பேசிய இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், "பரபரப்பான கிரைம் திரில்லரான 'லெவன்' படத்தின் கதைக்கேற்றவாறு இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்டுள்ளதால், தமிழ் மற்றும் தெலுங்கு வரிகளைக் கொண்டு பாடலை உருவாக்கியுள்ளோம். இதன் காரணமாகவே இதற்கு தமுகு என்று பெயரிட்டுள்ளோம்," என்றார். கோடை விடுமுறையின் போது 'லெவன்' படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'செம்பி' ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான 'லெவன்' படத்தை தங்களது மூன்றாவது படைப்பாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் சுந்தர் சி யிடம் 'கலகலப்பு 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் 'ஆக்ஷன்' ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடித்திருக்கிறார். 'சரபம்', 'சிவப்பு', 'பிரம்மன்','ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' மற்றும் 'கேம் சேஞ்சர்' உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் 'விருமாண்டி' புகழ் அபிராமி, 'வத்திக்குச்சி' புகழ் திலீபன், 'மெட்ராஸ்' புகழ் ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 'லெவன்' வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி பங்குகள் சரிவு.
- ஐ.டி.சி., கோடக் மகிந்திரா வங்கி, மாருதி சுசுகி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி பங்குகள் ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 856.65 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. இந்திய பங்குச் சந்தையான நிஃப்டி 242.55 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் நேற்று சென்செக்ஸ் 75,311.06 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை வர்த்தகம் சென்செக்ஸ் 567.62 புள்ளிகள் சரிந்து 74,893.45 புள்ளிகளுடன் தொடங்கியது. அதன்பின் சற்று ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. இறுதியாக 856.66 புள்ளிகள் சரிந்து 74,454.41 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று அதிகபட்சமாக 74,907.04 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 74,387.44 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
இதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் சரிவுடன் தொடங்கி, சரிவுடன் முடிவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை நேற்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 22,795.90 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை 188.4 புள்ளிகள் சரிந்து 22,607.50 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 226,68.05 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 22518.80 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது. இறுதியாக 243.40 புள்ளிகள் சரிந்து 22,552.50 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், எஸ்.பி.ஐ., இந்துஸ்தான் யுனிலிவர், பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் சரிவை சந்தித்தன.
ஐ.டி.சி., கோடக் மகிந்திரா வங்கி, மாருதி சுசுகி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி, நெஸ்லே இந்தியா பங்குகள் ஏற்றம் கண்டன.
- பாடலாசிரியர் - நடிகர் - இயக்குநர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'அகத்தியா' திரைப்படம்
- 'அகத்தியா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்து, ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் பா. விஜய் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி வெளியாகும் 'அகத்தியா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
பாடலாசிரியர் - நடிகர் - இயக்குநர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அகத்தியா' திரைப்படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, எட்வர்ட், மெடில்டா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
படத்தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை சண்முகம் மேற்கொண்டிருக்கிறார். ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜானரில் கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் 'அகத்தியா' திரைப்படம் பிப்ரவரி 28ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய இந்திய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், இயக்குநர் பா.விஜய், நடிகர் ஜீவா, நடிகை ராஷி கண்ணா, ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நடிகை ராஷி கண்ணா பேசுகையில், ''நான் ஏற்கனவே 'அரண்மனை 3' , 'அரண்மனை 4' போன்ற ஹாரர் படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்தத் திரைப்படத்தில் ஹாரருடன் புதிய எலிமெண்ட்டும் இருக்கிறது. அதற்காக இயக்குநர் பா. விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் பா விஜயை பாடலாசிரியராக தெரிந்திருக்கும். ஆனால் இந்தப் படம் வெளியான பிறகு அவர் இயக்குநராகவும் வெற்றி பெறுவார். படத்தில் புது எலிமெண்ட் கிளைமாக்ஸில் இடம் பிடித்திருக்கிறது. புது தொழில்நுட்பத்துடன் இணைந்து அது உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
என் மீது அன்பு செலுத்தி வரும் தமிழ் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். ,'' என்றார்.
இயக்குநரும், நடிகரும், பாடலாசிரியருமான பா. விஜய் பேசுகையில், ''அகத்தியா- வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மதிப்புமிகுந்த திரைப்படமாக உருவாகி இருக்கிறது. அகத்தியா' இரண்டேகால் மணி நேரம் மனதை ரிலாக்ஸாக வைக்கும் ஜனரஞ்சகமான படம் என்பதுடன் குடும்பத்தினருடன் ரசிக்கும் வகையில் தயாராகி இருக்கிறது.சினிமாவில் வெற்றி என்பது கூட்டு முயற்சி. சினிமாவில் தனிப்பட்டவர்களின் வெற்றி சாத்தியமில்லை. கூட்டு முயற்சியில் தான் ஒரு கலைஞரின் வெற்றி அடங்கியிருக்கிறது," என்றார்.
நடிகர் ஜீவா பேசுகையில் "படத்தின் கிளைமாக்ஸ் முக்கியமானதாக இருக்கும். ஒரு வருடம் காத்திருந்த பிறகு அண்மையில் தான் அந்த கிளைமாக்ஸ் காட்சிகளை பார்த்தோம். உண்மையில் வியந்து போனோம். இயக்குநர் பா. விஜய் கடினமாக உழைத்திருக்கிறார். அவருடைய விடாமுயற்சிக்காக அவரை நான் மனதார பாராட்டுகிறேன். நானும், நடிகர் ராஷி கண்ணாவும் இரண்டு ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். அவர் எனக்கு இந்தி திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வாக்களித்து இருக்கிறார்.இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் வகையில் உருவாகி இருக்கிறது," என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ்நாட்டில் அரசின் அங்கீகாரம் பெற்ற போதை மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கை 35 ஆகும்.
- அரசின் அங்கீகாரம் பெறாமல் நூற்றுக்கணக்கான மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் போதை மறுவாழ்வு மையங்களில் மருத்துவம் பெறுவோர் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 5 மடங்கு அதிகரித்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் போதை மறுவாழ்வு மையங்களில் மருத்துவம் பெறுவோர் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 5 மடங்கு அதிகரிப்பு: இளைய தலைமுறையை காக்க மதுவிலக்கு மட்டும் தான் தீர்வு!
தமிழ்நாட்டில் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி போதை மறுவாழ்வு மையங்களில் மருத்துவம் பெற்று வருவோரின் எண்ணிக்கை 2023-24ஆம் ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டை விட 5 மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மதுவால் ஏற்பட்டுள்ள தீமைகளை நன்கு அறிந்தவன் என்ற முறையில் இந்த புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கவில்லை.
தமிழ்நாட்டில் அரசின் அங்கீகாரம் பெற்ற போதை மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கை 35 ஆகும். அவற்றில் 2022-23ஆம் ஆண்டில் 3,668 பேர் மருத்துவம் பெற்று வந்தனர்.
2023-24ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 15,938 ஆக உயர்ந்து விட்டதாக மத்திய அரசின் சமூகநீதித்துறை வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட போதை மறுவாழ்வு மையங்களில் மருத்துவம் பெறுவோரின் எண்ணிக்கை மட்டும் தான்.
அரசின் அங்கீகாரம் பெறாமல் நூற்றுக்கணக்கான மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் லட்சக்கணக்கான குடிநோயர்கள் மருத்துவம் பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மதுக்கடைகள் கடந்த 2002-03ஆம் ஆண்டில் அரசுடைமையாக்கப்பட்ட பிறகு மது குடிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 2015-16 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மதுவுக்கு அடிமையான 18 வயது நிறைவடைந்தவர்களின் அளவு 46.50% ஆக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை 50 விழுக்காட்டுக்கும் கூடுதலாக அதிகரித்திருக்கக் கூடும்.
தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக மது விற்பனையாகி வருகிறது . அதிகாரப்பூர்வமற்ற வகையில் சந்துக்கடைகள் உள்ளிட்ட வழிகளில் அதே அளவு மது விற்பனையாகி வருகிறது.
இவற்றை வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் மதுவுக்கு அடிமையான குடி நோயர்களின் எண்ணிக்கை கணக்கில் காட்டப்படுவதை விட நூறு மடங்குக்கும் கூடுதலாக இருக்கும்.
மது, கஞ்சா ஆகிய போதைப் பொருட்கள் போதை நோயர்களை உருவாக்குவது மட்டுமின்றி, குற்றங்கள் பெருகுவதற்கும் காரணமாக உள்ளன.
போதைப் பழக்கத்தால் நாம் நமது எதிர்காலத் தூண்களான இளைஞர் சமுதாயத்தை இழந்து கொண்டிருக்கிறோம். இதைத் தடுப்பதற்கானத் தீர்வு தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு ஏற்படுத்துவதும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களில் நடமாட்டத்தை ஒழிப்பதும் தான்.
தமிழக அரசு இவற்றை உடனடியாக செய்வதுடன் போதைக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் போதை மீட்பு மையங்களைத் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.
- அனசுயா பாரத்வாஜ் மற்றும் பூஜிதா பொன்னாடா ஆகியோர் நடனம் பாடலுக்கு கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.
பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு. இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது.
அதிரடி இசை, பவன் கல்யாண் மாஸ், என பாடல் தற்போது வைரலாகி வருகிறது. பவன் கல்யாணின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் படம் என்பதால் ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் பாடலை ஹிட் அடித்து வருகிறார்கள். அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் அழகு பாடலுக்கு மேலும் புத்துணர்வு சேர்க்கிறது. அத்துடன் அனசுயா பாரத்வாஜ் மற்றும் பூஜிதா பொன்னாடா ஆகியோர் நடனம் பாடலுக்கு கூடுதல் சிறப்பு.
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ள இப்பாடலுக்கு பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பிரபல பாடகர்கள் மங்களி, ராகுல் சிப்லிகுஞ்ச், ரம்யா பிஹாரா, யாமினி கந்தசாலா, ஐரா உடுபி, மோகனபோகராஜு, வைஷ்ணவி கண்ணன், சுதீப் குமார் மற்றும் அருணா மேரி ஆகியோர் குரல்கள் ,
சந்திரபோஸ், அப்பாஸ் டைர்வாலா, பி.ஏ. விஜய், வரதராஜ் சிக்கபள்ளாபுரா மற்றும் மங்கொம்பு கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் ஆழமான வரிகள் இந்தப் பாடலை மேலும் சிறப்பாக்குகின்றன.
ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் மேகா ஸூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்த்னம் தயாரிக்கும் ' ஹரி ஹர வீர மல்லு ' திரைப்படம் 2025 கோடை விடுமுறை கொண்டாட்டமாக வருகிற மார்ச் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 1000 மருந்தகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்துள்ளார்.
- முதல்வர் மருந்தகத்தில் மருந்துகளின் விலை 75% வரை குறைந்த விலையில் வழங்கப்பட உள்ளது
தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் தொடங்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்கள் திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் 39 மாவட்டங்களில் முதல்கட்டமாக கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் 1000 மருந்தகங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்துள்ளார், பிற மருந்தகங்களை ஒப்பிடும்போது முதல்வர் மருந்தகத்தில் மருந்துகளின் விலை 75 சதவிகிதம் வரை குறைந்த விலையில் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் மருத்துவச் செலவிற்கான சுமை பெரிய அளவில் குறையும். அத்தோடு பி.பார்ம், டி.பார்ம் படித்துள்ள மாணவர்களும், தொழில்முனைவோர்களும் இந்த திட்டத்தில் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இம்மருந்தகங்களில் உயிர்காக்கும் மருந்துகள் அனைத்தும் குறைந்த விலையில் கிடைப்பதை படிப்படியாக தமிழக அரசு உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மக்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த திட்டத்தை திட்ட செயல்படுத்தியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






