என் மலர்
நீங்கள் தேடியது "Andrea Jeremiah"
தில் சத்யா இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் மாளிகை படத்தில் ஆண்ட்ரியாவுக்கு இரண்டு வேடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. #Maaligai #AndreaJeremiah
ஆண்ட்ரியா, ‘தரமணி’, ‘அவள்’, ‘விஸ்வரூபம் 2’, ‘வடசென்னை’ போன்ற படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். இதை தொடர்ந்து, தில் சத்யா இயக்கும் ‘மாளிகை’ படத்தில் இளவரசியாகவும், போலீசாகவும் நடிக்க இருக்கிறார்.
ஆண்ட்ரியாவை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து தில் சத்யா இயக்கிக்கொண்டிருக்கும் படம், ‘மாளிகை’. இந்தப் படத்தில், அவர் காவல் துறை அதிகாரியாகவும், கடந்த காலத்தின் இளவரசியாகவும் நடிக்க இருக்கிறார். படம்குறித்து தில் சத்யா அளித்துள்ள பேட்டியில், ’ஆக்ஷன், பேன்டசி, ஹாரர் என மூன்று ஜானர்களில் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

ஆண்ட்ரியா நடிக்கும் இளவரசி கதாபாத்திரம், பேன்டசி பகுதியில் இடம்பெறும். அது, 400 வருடங்களுக்கு முன்பு நடக்கும் கதை. போலீசாக நடிக்கும் ஆண்ட்ரியா, ஒரு மாளிகைக்கு விசாரணைக்காகச் செல்கிறார்.
அங்கு, அவருக்கு கடந்த கால நினைவுகள் ஞாபகத்துக்கு வருவதில் இருந்து படம் அப்படியே போகும்“ என்று தெரிவித்திருக்கிறார். கன்னட நடிகர் கார்த்திக் ஜெயராம், இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், மனோ பாலா, ‘ஜாங்கிரி’ மதுமிதா போன்ற நடிகர்கள் இதில் நடிக்கிறார்கள். படத்தின் டீசரை விஜய் ஆண்டனி வெளியிட்டு வாழ்த்தினார். #Maaligai #AndreaJeremiah
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்திருக்கிறார்கள். #Andrea
ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார்.
இந்த ஆண்டில் அவர், ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சியாகவும் நடிக்கிறார். நடிப்பு தவிர பாடகியாகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் வெளியிடுகிறார்.

தனது இளமை பொலிவை வெளிப்படுத்த அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் பட்டன் போடாத டாப்ஸ் அணிந்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். கச்சிதமான அவரது தோற்றத்துக்கு ஏற்ப கவர்ச்சி வேடத்தை அவருக்கு இயக்குனர்கள் யாராவது தாருங்களேன் என்று சில ரசிகர்கள் கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர். சிலர் அந்த கவர்ச்சி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.
கன்னடத்தில் ‘தில்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய சத்யா அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் ஆண்ட்ரியா போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். #AndreaJeremiah
பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் புதிய படத்தை ராஜேஷ் குமார் தயாரிக்கிறார்.
கன்னடத்தில் ‘தில்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய சத்யா இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடிக்கிறார். ஜேகே, அசுதோஷ் ராணா, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஆக்ஷன், திரில்லர் கலந்த பேண்டஸி படமாக உருவாகும் இந்த இதில் ஆண்ட்ரியா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியுள்ளது. படத்தின் பூஜையில் சத்யா, ஆண்ட்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

சென்னை, கொச்சின், பரோடா (குஜராத்), ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. #AndreaJeremiah
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வடசென்னை' படத்தின் விமர்சனம். #VadaChennaiReview #Dhanush #AishwaryaRajesh
படத்தின் தொடக்கத்திலேயே ஒரு கொலை நடக்கிறது. சமுத்திரக்கனி, கிஷோர், பவன் குமார், சாய் தீனா உள்ளிட்ட நான்கு பேரும் இணைந்து அந்த கொலையை செய்கின்றனர். வடசென்னையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமீர். அவரின் விசுவாசிகளாக சமுத்திரக்கனி, கிஷோர், பவன் குமார், சாய் தீனா நான்கு பேரும் வருகின்றனர்.
ஆண்ட்ரியாவை திருமணம் செய்து கொண்ட அமீர் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்துகிறார். இந்த நிலையில், வடசென்னை இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கேரம் விளையாட்டு கிளப் ஒன்றை ஆரம்பிக்கிறார். கேரம் விளையாட்டின் மீது அதீத ஈர்ப்பு கொண்ட சாதாரண வடசென்னை இளைஞன் தனுஷுக்கு (அன்பு) கேரம் விளையாட்டில் தான் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருக்கிறது. அமீர் அவரை ஊக்கப்படுத்துகிறார்.

இதற்கிடையே அதே பகுதியில் இருக்கும் வாயாடி ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் (பத்மா), தனுஷுக்கும் இடையே அடிக்கடி மோதல் வருகிறது. இருவருக்கும் இடையேயான மோதலே அவர்களுக்கு இடையே காதல் வர காரணமாகிறது.
எம்.ஜி.ஆர். இறக்கும் காலத்தில் நடக்கும் இந்த கதையில், வடசென்னை பகுதியில் உள்ள சாலைகளை அகலப்படுத்த திட்டமிடப்படுகிறது. சாலைகள் அகலப்படுத்தப்பட்டால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த அமீர் மக்களுக்கு ஆதரவாக களமிறங்குகிறார்.
சமுத்திரக்கனியும், கிஷோரும் காசுக்கு ஆசைப்பட்டு, அமீர் விட்ட தொழிலை மீண்டும் கையில் எடுக்கின்றனர். இதனால் போலீசில் சிக்கும் அவர்களை அமீர் பொது இடத்தில் வைத்து அடித்துவிடுகிறார். தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பழிதீர்க்க சமுத்திரக்கனியும், கிஷோரும் சேர்ந்து திட்டமிடுகின்றனர்.

இந்த நிலையில், சாய் தீனாவுக்கும், தனுஷுக்கும் இடையே பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனைக்கு பிறகு தனுஷின் கை ஓங்குகிறது.
கடைசியில், வடசென்னையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அமீரின் தலைமை என்ன ஆனது? தனுஷ் அந்த ஏரியாவையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாரா? படத்தின் தொடக்கத்தில் கொலை செய்யப்பட்டவர் யார்? சமுத்திரக்கனி, கிஷோர் என்ன ஆனார்கள்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை நிரூபித்து வரும் தனுஷ், இந்த படத்திலும் அனைவரும் ஆச்சரியப்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு அதே சாயலில் தனுஷை பார்க்க முடிகிறது. ஐஸ்வர்யா ராஜேஷிடம் அடியும், திட்டும் வாங்கும் தனுஷ், எதிரிகளிடம் சண்டை செய்யும் காட்சிகள் ரசிக்க முடிகிறது. தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே வடசென்னை கதாபாத்திரத்திற்கு அப்பட்டமாக பொருந்தி இருக்கிறார்கள்.
காக்கா முட்டை படத்திற்கு பிறகு ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். வடசென்னையில் வசிக்கும் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. வாயை திறந்தாலே இந்த பொண்ணு உண்மையாவே வடசென்னையா தான் இருக்குமோ என்று யோசிக்கும் அளவுக்கு அவரது நடிப்பு இயல்பாக இருக்கிறது. அழுத்தமான கதாபாத்திரத்தில் தனது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்.

அமீர் இதுவரை ஏற்றிராத ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். ஒரு டானாக படத்தை தூக்கி நிறுத்துகிறார். சமுத்திரக்கனி, கிஷோர் இருவரும் சமமான கதாபாத்திரத்தில் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். ஆண்ட்ரியா வித்தியாசமான பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மற்றபடி டேனியல் பாலாஜி, பவன்குமார், கருணாஸ், பாவல் நவகீதன் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராதா ரவி அரசியல்வாதியாக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கருணாஸ், சீனு மோகன், சுப்ரமணியன் சிவா, டேனியல் அனி போப் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்திற்கு வலுசேர்த்திருக்கிறார்கள்.
பொதுவாகவே தனது யதார்த்தமான காட்சிகளின் மூலம் திரைக்கதை நகர்த்துவதில் கைதேர்ந்தவர் இயக்குநர் வெற்றிமாறன். வடசென்னையில் வாழும் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும், அவர்களின் சூழல், பேச்சு, அடிதடி சண்டை, வார்த்தைகள் என அனைத்தும் இயல்பாக அமையும்படி படத்தை இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன். முதல் பாதி சற்றே மெதுவாக சென்றாலும் சிறிது நேரத்தில் காட்சிகள் வேகமெடுப்பது, திரைக்கதைக்கு பலமாகிறது. வசனங்கள் வடசென்னைக்கு சென்று வந்த அனுபவத்தை கொடுக்கிறது.

உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் முதல் பாகத்தின் முடிவு, அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டுகிறது. எனினும் அடுத்தடுத்த இதன் இரண்டாம் பாகம் 2019-லும், மூன்றாம் பாகம் 2020-லும் வெளியாக இருக்கிறது.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `வடசென்னை' அதகளம். #VadaChennaiReview #Dhanush #AishwaryaRajesh
நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் காட்டை மையப்படுத்தி உருவாகும் “கா“ படத்தின் முன்னோட்டம். #Kaa #AndreaJeremiah
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ கா “ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது.
கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளதால் “ கா “ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு மற்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சலீம் கவுஸ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு - அறிவழகன், இசை - அம்ரிஷ், எடிட்டிங் - கோபிகிருஷ்ணா, கலை - லால்குடி இளையராஜா, ஸ்டன்ட் - விக்கி, நிர்வாக தயாரிப்பு - சங்கர், தயாரிப்பு - ஜான்மேக்ஸ், ஜோன்ஸ், இணை தயாரிப்பு - ரவிகாந்த், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நாஞ்சில்
முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கிரைம் திரில்லர் படமாக உருவாகிறது. அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. #Kaa #AndreaJeremiah
தமிழ் சினிமாவில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஆண்ட்ரியா, இனி நடிக்கும் படங்களில் கவர்ச்சி, நெருக்கமான மற்றும் புகைப்பிடிக்கும் காட்சிகளிலோ நடிக்க மறுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #AndreaJeremiah
ஆண்ட்ரியா தேர்ந்தெடுத்து தான் படங்களில் நடிப்பார். பிடித்த வேடம் என்றால் கவர்ச்சியாக நடிக்கவோ, நெருக்கமாக நடிக்கவோ தயங்க மாட்டார். சமீப காலமாக ஆண்ட்ரியாவின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்து வருகிறது.
தரமணி படத்தில் சிங்கிள் மதராக சிறப்பாக நடித்தவர், விஸ்வரூபம் 2 படத்தில் ஆக்ஷன் காட்சிகளிலும் அசரடித்தார். அடுத்து அவர் நடித்து இருக்கும், வடசென்னை படத்திலும் நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள வேடம்.

எனவே இனி இமேஜ் விஷயத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். இனி லிப்லாக், கவர்ச்சி, நெருக்கமான காட்சிகளிலோ, புகை பிடிக்கும் காட்சிகளிலோ நடிக்க மாட்டேன் என்று கதை கேட்கும்போதே கூறிவிடுகிறாராம். #AndreaJeremiah
கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள `விஸ்வரூபம்-2' படம் கடந்த 10-ஆம் தேதி வெளியாகிய நிலையில், முழு படமும் இணையதளத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Vishwaroopam2 #KamalHaasan
கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள `விஸ்வரூபம்-2' படம் கடந்த 10-ஆம் தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும் விநியோகஸ்தர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தென் மாவட்டங்களில் சில இடங்களில் படம் வெளியாகவில்லை.
சிலர் பிண்ணனியில் இருந்து படத்தை வெளியாக விடாமல் தடுக்கின்றனர் என்றும், பிரச்சினை சரியாகி அந்த மாவட்டங்களிலும் படம் திரைக்கு வந்து விடும் என்றும் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் விஸ்வரூபம்-2 முழு படமும் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக ரஜினிகாந்தின் கபாலி, காலா உள்ளிட்ட படங்கள் தியேட்டரில் திரையிட்ட உடனேயே திருட்டுத்தனமாக படம்பிடித்து இணையதளங்களில் வெளியிட்டனர். சமீபத்தில் திரைக்கு வந்த விஜய், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்துமே திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருட்டுத்தனமாக படத்தை வீடியோ எடுப்பவர்களை கண்டுபிடிக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காகவே திருட்டு வீடியோ தடுப்பு குழு ஒன்றையும் நியமித்து உள்ளது. அவர்கள் கண்காணிப்பையும் மீறி, புதிய படங்கள் இணையதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. #Vishwaroopam2 #KamalHaasan
கமல்ஹாசன் - பூஜா குமார் - ஆண்ட்ரியா ஜெரோமியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `விஸ்வரூபம் 2' படத்தின் விமர்சனம். #Vishwaroopam2Review #PoojaKumar #AndreaJeremiah
இந்திய ராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கமல்ஹாசனிடம் பயிற்சி பெறுகிறார் ஆண்ட்ரியா. இராணுவ பகுதியை விட்டு வெளியே சென்ற குற்றத்திற்காக கமல்ஹாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் இருந்து தப்பிக்கும் கமல்ஹாசன், ரகசியமாக தனது வேலைகளில் ஈடுபடுகிறார். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கச் செல்கிறார்.
பின்னர், அமெரிக்காவில் டர்ட்டி பாமை செயழிலக்கச் செய்ய செல்லும் கமல், பூஜா குமாரை திருமணம் செய்து கொள்கிறார். அவளது உதவியுடன் டர்ட்டி பாமை செயழிலக்கச் செய்கிறார். முதலில் கமல் மீது அதீத அன்பு இல்லாமல் இருக்கும் பூஜா குமார், கமல் பாமை செயழிலக்கச் செய்யவே தன்னை திருமணம் செய்து கொண்டார் என்பதை அறிந்து வருத்தப்படுகிறார். இருப்பினும் உள்ளுக்குள் கமலை காதலிக்கிறார்.

இதற்கிடையே கமல் தனது குழுவினருடன் இந்தியா மற்றும் லண்டனில் வைக்கப்பட்டுள்ள மற்ற இரண்டு டர்ட்டி பாம்களை செயழிலக்கச் செய்யும் முயற்சியில் இறங்க, அல்கொய்தா தலைவனான உமர், கமல்ஹாசனை கொல்வதற்காக தேடி வருகிறார்.
கடைசியில், கமல் டர்ட்டி பாம்களை செயழிலக்கச் செய்தாரா? உமரை கொன்றாரா? அவரது முந்தைய வாழ்க்கையில் நடந்தது என்ன? அம்மாவுடனான சந்திப்பு, அதன் பின்னணியில் நடப்பது படத்தின் மீதிக்கதை.

கமல்ஹாசன் ஒரு நடிகராக தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டிருக்கிறார். தனது ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு நுணுக்கம் உண்டு என்பதற்கு ஏற்ப, அவரது நடிப்பே படத்தின் கதையை ஓட்டிச் செல்கிறது. முதல் பாகத்தை விட, இந்த பாகத்தில் பூஜா குமார் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். காதல், கவர்ச்சி என அனைத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ராணுவத்தில் பணிபுரியும் ஆண்ட்ரியா அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். குறிப்பாக ஸ்டன்ட் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார்.
முதல் பாகத்தில் தனது அமைதியான வில்லத்தனத்தால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ராகுல் போஸ், இந்த பாகத்திலும் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். மற்றபடி சேகர் கபூர், ராகுல் போஸ், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் அவரவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக பூர்த்தி செய்திருக்கின்றனர்.

கமல்ஹாசன் ஒரு இயக்குநராக வழக்கமான அவரது பாணியை பின்பற்றியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சி, நீட்சி என அடுத்தடுத்த காட்சிகள் வேகமாக நகர்வது சற்றே குழப்பத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. வசனங்கள், பேச்சில் ஆங்காங்கே அரசியல் வசனத்தையும் நுழைத்திருக்கிறார். நியூயார்க்கில் வாழும் கதக் நடனக் கலைஞர், இந்தியாவின் ரகசிய உளவாளி, அல்கொய்தா தீவிரவாதிகளின் பயிற்சியாளர், என பல்வேறு கதாபாத்திரங்களுடன் முதல் பாகத்தில் கலக்கிய கமல்ஹாசனின் அடுத்த ரூபங்கள் என்னென்ன என்பதையே விஸ்வரூபம் 2 படமாக உருவாக்கி இருக்கிறார்.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. சனு ஜான் வர்கீஸ், சம்தத் சய்னதீன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `விஸ்வரூபம் 2' ரூபங்கள் குறைவு. #Vishwaroopam2Review #PoojaKumar #AndreaJeremiah
கமல்ஹாசன் இயக்கம் மற்றும் நடிப்பில் விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் `விஸ்வரூபம்-2' படத்தின் முன்னோட்டம். #Vishwaroopam2 #KamalHaasan
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் `விஸ்வரூபம்-2'.
கமல்ஹாசன் இயக்கிய நடித்துள்ள இந்த படத்தில் நாயகிகளாக ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் நடித்துள்ளனர். நாசர், ராகுல் போஸ், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அக்லவாட், ரசல் கோஃப்ரி பேங்ஸ், வகீதா ரெஹ்மான், மிர் சர்வார், தீபக் ஜேதி, ஆனந்த் மகாதேவன், ஜுட் எஸ்.வால்கோ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை - ஜிப்ரான், ஒளிப்பதிவு - சனு வர்கீஸ், ஷம்தத் சய்னுதீன், படத்தொகுப்பு - மகேஷ் நாராயன், விஜய் சங்கர், சண்டைப் பயிற்சியாளர் - பிராஹிம் அச்சபாக்கே, லீ விட்டாகர், ஸ்டீபன் ரிக்டர், விஷுவல் எபெக்ட்ஸ் - அஸ்மிதா பாரதி, ஆடை வடிவமைப்பாளர் - கவுதமி, கதை, திரைக்கதை, இயக்கம் - கமல்ஹாசன்.

படம் குறித்து கமல்ஹாசன் பேசும்போது,
“விஸ்வரூபம்-2’ படம் தாமதத்திற்கு நாங்கள் காரணமல்ல. முதல் பாகம் தாமதத்துக்கும் நாங்கள் பொறுப்பு அல்ல. தடைகளை வென்று வருகிறது. இதில் நடித்த நாசர், சேகர் கபூர், ராகுல் போஸ், ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோருக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், காஸ்ட்யூம் பணியை சிறப்பாக செய்து விட்டுபோன கவுதமிக்கும் நன்றி.
விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற வைரமுத்து எழுதிய பாடலை இந்த படத்திலும் பயன்படுத்தி உள்ளோம். ஐந்தாறு டைரக்டர்களும் இதில் நடித்துள்ளனர். எனது அண்ணன் சந்திரஹாசன் அவருக்குள்ள சாராம்சத்தை எனக்குள் இறக்கிவிட்டு போய் இருக்கிறார். அவர் இடத்தை நிரப்ப எனக்கு இப்போது நிறைய சகோதரர்கள் கிடைத்து இருக்கிறார்கள். ‘விஸ்வரூபம்-2’ படம் பல்லாயிரம் பிரிண்ட்களுடன் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ஆகஸ்டு 10-ந் தேதி திரைக்கு வருகிறது” என்றார். #Vishwaroopam2 #KamalHaasan
தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆண்ட்ரியா தற்போது தெலுங்கில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார். #Andrea
கடந்த ஆண்டு வெளியான ‘அவள்’ திரைப்படத்தை தொடர்ந்து ஆண்ட்ரியா நடிப்பில் வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆனால் தமிழில் அவர் நடித்த 2 பெரிய படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளன.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த பூஜா குமாருக்கு இணையாக ஆண்ட்ரியாவுக்கும் வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு வெளியாகவுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் முதல் பாகத்தை விட அதிகக் காட்சிகளில் நடித்துள்ளார்.
அந்தப் படத்தில் நாட்டியம் ஆடிய ஆண்ட்ரியா இந்தப் படத்தில் ராணுவ உடையில் வலம் வருகிறார். வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வட சென்னை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கில் சரண் தேஜ் இயக்கி கதாநாயகனாக நடிக்கும் ‘ஆயுஷ்மான் பவா’ படத்தில், ஜெனிபர் என்ற பாப் பாடகியாக நடிக்க ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் தொடங்கவுள்ள படப்பிடிப்பில் ஆண்ட்ரியா இணையவுள்ளார். தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தவும் முடிவு செய்துள்ளார்.