என் மலர்
தலைப்புச்செய்திகள்
- நிறைவடைய உள்ள நிலையில் திரிவேணி சங்கமத்தில் நீராட மக்களிடையே ஒரு போட்டி நிலவுகிறது.
- போனை தண்ணீரில் நனைத்து நனைத்து எடுத்த பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். நாளையுடன் இந்நிகழ்வு நிறைவடைய உள்ள நிலையில் திரிவேணி சங்கமத்தில் நீராட மக்களிடையே போட்டி நிலவுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், ஏதோ ஒரு காரணத்தால் சங்கமத்திற்குச் சென்று குளிக்க முடியாதவர்கள், அங்கிருந்து கொண்டு வரும் தண்ணீரைத் தெளித்து அல்லது வீட்டில் உள்ள தண்ணீரில் கலந்து குளிப்பதன் மூலம் தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் கும்பமேளாவில் புனித நீராட பிரயாக்ராஜ் சென்ற இடத்தில் தன் கணவருக்கு வீடியோ-கால் செய்து, போனை தண்ணீரில் நனைத்து நனைத்து எடுத்த பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.
கணவனால் கும்பமேளாவிற்கு வரமுடியாத காரணத்தால், அப்பெண் இவ்வாறு செய்ததாக தெரிகிறது.
இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ சிறிது நேரத்திலேயே வைரலானது. இந்த வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். கமன்ட் செக்ஷனில் பலர் பலவிதமாக பதிவிட்டு வருகின்றனர்.
- சிவகங்கையில் திருடிய பைக்கை, ரூ.1500 பணத்துடன் உரிமையாளர் வீட்டின் முன்பு திருடன் நிறுத்தியுள்ளார்.
- தவறை உணர்ந்து 450 கி.மீ தூரம் பயணித்து பைக்கை கொண்டுவந்துள்ளேன்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே திருடிய பைக்கை, ரூ.1500 பணம் மற்றும் மன்னிப்புக் கடிதத்துடன் உரிமையாளர் வீட்டின் முன்பு திருடன் நிறுத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ப்ளாக் பாண்டா என்ற பெயரிலான அந்த மன்னிப்பு கடிதத்தில், "அவசரத்துக்கு பைக்கை எடுத்துட்டேன். தவறை உணர்ந்து 450 கி.மீ தூரம் பயணித்து பைக்கை கொண்டுவந்துள்ளேன்.
ரூ.1500 பணம் பெட்ரோல் டேங்க்கில் இருக்கு. எப்படியும் கெட்ட வார்த்தை பேசியிருப்பீர்கள். அதற்கு நீங்கள் வருந்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் வருந்த வைப்போம்" என எழுதப்பட்டுள்ளது"
- ஞானசேகரனிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
- பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிக்கை.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஞானசேகரனுக்கு எதிராக ஏற்கனவே போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரன் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது குற்றப்பத்திரிகை நகல் அவரிடம் வழங்கப்பட்டது.
ஞானசேகரனுக்கு எதிராக பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதனால் சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கை மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது.
- 2023 ஆம் ஆண்டு கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் MAD என்ற தெலுங்கு திரைப்படம் வெளியானது.
- இப்பாகத்தையும் கல்யாண் ஷங்கர் இயக்கியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் MAD என்ற தெலுங்கு திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நித்தின், சங்கீத் ஷோபன், ராம் நித்தின், மற்றும் பலர் நடித்து இருந்தனர். கல்லூரி நண்பர்களுக்கு இடையே நடக்கும் கதையாக அமைந்து இருந்தது. கல்லூரி, நகைச்சுவை கதைக்களத்தில் அமைந்ததால் திரைப்படம் இளம் தலைமுறைகள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து MAD இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளனர். இப்பாகத்தையும் கல்யாண் ஷங்கர் இயக்கியுள்ளார். திரைப்படத்தின் முதல் பாடலான லாடு கானி பெல்லி மற்றும் சுவாதி ரெட்டி பாடல்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. நண்பனி கல்யாணத்தை ஒட்டி 4 நண்பர்களும் சேர்ந்து கோவா டிரிப் செல்கின்றனர் அங்கு நடக்கும் பிரச்சனை என டீசர் காட்சிகள் அமைந்துள்ளது. டீசர் கடைசியில் வரும் பாய் என்ற வசனம் மிகவும் சிரிப்பாக ஹைலைட்டாக அமைந்துள்ளது. படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தங்கள் வீட்டு நாய் இறந்துவிட்டதாகவும் அதை அப்புறப்படுத்த கொண்டுவந்ததாகவும் கூறினர்.
- சுயநினைவு திரும்பியதும், மீண்டும் சண்டை ஏற்பட்டது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் குமார்துலி காட் அருகே இரண்டு பெண்கள் வெட்டப்பட்ட உடல் பாகங்களை டிராலி சூட்கேசில் வைத்துக் கொண்டுபோய் கங்கை நீரில் போட முயன்றுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடந்துள்ளது. பையுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் குமார்துலி காட் கங்கை கரையில் நீல நிற டிராலி சூட்கேஸுடன் நின்றிருந்த பெண்களை அப்பகுதி மக்கள் பிடித்து விசாரித்துள்ளனர்.
தங்கள் வீட்டு நாய் இறந்துவிட்டதாகவும் அதை அப்புறப்படுத்த இங்கு கொண்டுவந்ததாகவும் அப்பெண்கள் தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் இருந்த டிராலி பையைத் திறந்து பார்த்த மக்கள், உள்ளே இருந்த தலை உள்ளிட்ட உடல் பாகங்கள் வெட்டப்ப்பட்ட பெண்ணின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு அப்பெண்களைக் கைது செய்தனர். அதன்பின் அவர்களிடம் நடந்த விசாரணையில் இரு பெண்கள், ஃபால்குனி கோஷ் மற்றும் அவரது தாயார் ஆர்த்தி கோஷ் என்று தெரியவந்தது. சூட்கேசில் இருந்த பெண்ணின் உடல், ஃபால்குனி கோஷின் மாமனாரின் சகோதரி சுமிதா கோஷ் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அசாமின் ஜோர்ஹாட்டைச் சேர்ந்த சுமிதா, தனது கணவரிடமிருந்து பிரிந்து, பிப்ரவரி 11 முதல் கொல்கத்தாவில் உள்ள ஃபால்குனி மற்றும் ஆர்த்தி கோஷ் இருவருடனும் வசித்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஃபால்குனி தனது கணவரைப் பிரிந்து தாயுடன் வாழ்கிறார்.
நேற்று மாலை ஃபால்குனி, சுமிதா இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஃபால்குனி சுமிதாவை சுவரில் தள்ளியதில் மயக்கமடைந்தார்.
அவர் சுயநினைவு திரும்பியதும், மீண்டும் சண்டை ஏற்பட்டது. இதன் போது, ஃபால்குனி சுமிதாவின் முகம் மற்றும் கழுத்தில் செங்கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை வெட்டி சூட்கேசில் வைத்து தாயும் மக்களும் பராசத் காஜிபாராவிலிருந்து சீல்டாவுக்கு சூட்கேஸுடன் ரெயிலில் பயணம் செய்து அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து உடலை குமார்துலி காட் கங்கை நீரில் அப்புறப்படுத்த முயன்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
- தமிழ்நாட்டில் மக்கள்தொகை குறைவாக உள்ள காரணத்தினால் பாராளுமன்ற தொகுதி குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது
- தமிழகத்தில் ஏற்கனவே உள்ள 39 தொகுதியில் இருந்து 8-ஐ குறைத்து 31 ஆக மாற்ற உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடியது.
இதனையடுத்து அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மக்கள்தொகை குறைவாக உள்ள காரணத்தினால் பாராளுமன்ற தொகுதியை குறைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே உள்ள 39 தொகுதியில் இருந்து 8-ஐ குறைத்து 31 ஆக மாற்ற உள்ளனர். 39 பாராளுமன்ற தொகுதிகளை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல, இது மாநிலங்களின் உரிமை தொடர்பான பிரச்சனை. மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது.
8 பாராளுமன்ற இடங்கள் குறைவதால், நமது பிரதிநிதித்துவம் குறையும். தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும்.
மார்ச் 5-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசியல் கடந்து அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற அனைத்து கட்சிகளுக்கும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டுக்கு அரசியல் பிரதிநிதித்துவ இழப்பு ஏற்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய நிலையில், #FairDelimitationForTN என்ற ஹேஸ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து 67 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி, தாமோதரன் உள்ளிட்ட 21 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு.
கடந்த ஆண்டு ஜூன் மாத் 18-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து 67 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விஷச் சாராய விற்பனை, கடத்தல் தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி, தாமோதரன் உள்ளிட்ட 21 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி மற்றும் தாமோதரன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது முக்கிய குற்றவாளியான இருவருக்கும் ஜாமின் வழங்கக் கூடாது. மோசமான மற்றும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட இருவருக்கும் கருணை காட்டக்கூடாது என என சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் ஜாமின் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். மேலும் ஜாமின் மனுவை திரும்பப்பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இதே வழக்கில் கைது செய்யப்பட்ட பரமசிவம், விஜயாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.
- பாகிஸ்தானின் சமீபத்திய பார்ம் கொஞ்சம் கவலையாகத் தான் இருக்கிறது என்றார்.
புதுடெல்லி:
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
பாகிஸ்தான் அணி தொடர்ந்து இரு போட்டிகளில் தோல்வி அடைந்ததால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியது.
இதையடுத்து, பாகிஸ்தான் அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் பி டீமை வெல்லவே பாகிஸ்தான் வழி கண்டுபிடிக்க வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் அணியின் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி பார்க்கும்போது கொஞ்சம் கவலையாக தான் இருக்கிறது.
தற்போது அவர்களுடைய பார்மை வைத்துச் சொல்ல வேண்டுமெனில் நிச்சயம் அவர்களுக்கு இந்தியாவின் பி டீம் கூட சவாலாகவே இருக்கும். இந்தியாவின் சி அணியைப் பற்றிச் சொல்ல முடியாது. ஆனால் பி அணிக்கு பாகிஸ்தானை வீழ்த்த அனைத்து வாய்ப்புகளும் உள்ளது.
முகமது ரிஸ்வான் முதல் பந்தையே பவுண்டரி அடித்தார். உடனே பாகிஸ்தான் அணியின் அணுகுமுறை மாறுமோ என நினைத்தேன், ஆனால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பாகிஸ்தான் அணியின் தனித்திறமை அவர்களது விளையாட்டை பார்க்கும்போதே தெரியும். இந்த முறை அப்படி எதுவும் தெரியவில்லை.
பாகிஸ்தான் அணியில் இளமையான, திறமையான வீரர்கள் ஆரம்ப காலத்தை போல இணையாமல் இருப்பது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனாலும், பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி இருக்கிறது. அதன்மூலம் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு செய்வர் என எதிர்பார்க்கிறேன்.
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தரமான இளம் வீரர்களை இந்திய அணி உருவாக்குவதை பார்த்திருப்பீர்கள். ஐ.பி.எல், ரஞ்சி டிராபியில் விளையாடுவதன் காரணமாகவே அவர்களுக்கு நல்ல வீரர்கள் கிடைக்கிறார்கள். எனவே அவர்களை போல பாகிஸ்தானும் நல்ல வீரர்களைத் தேர்வு செய்யவேண்டும் என தெரிவித்தார்.
- இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
- அந்த மாநிலங்கள் எதுவும் அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் அறிக்கை அடிப்படையில் முடிவெடுக்கவில்லை.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஸ்ரீதர் குழு அறிக்கையை வெளியிட தமிழக அரசு மறுத்திருக்கிறது. அதற்காக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணம், தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த தி.மு.க. அரசுக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு விரும்பினால், மார்ச் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்தோ, புதிய நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்தோ செயல்படுத்த முடியும். அதற்காக எந்த ஆய்வும் தேவையில்லை. யாருடைய பரிந்துரையும் தேவையில்லை. இவ்வளவுக்குப் பிறகும் குழு அமைத்து பரிந்துரை பெற்றுத்தான் பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்று அரசு நினைத்தால், ஸ்ரீதர் குழு அறிக்கை மீது ஒரு மணி நேரத்தில் முடி வெடுத்து செயல்படுத்தலாம்.
ஆனால், அந்த எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. மாறாக, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் தான் இத்தகைய முரண்பட்ட அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அரசின் இந்த ஏமாற்று நாடகம் எடுபடாது.
இன்றைய நிலையில், இந்தியாவில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாநிலங்கள் எதுவும் அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் அறிக்கை அடிப்படையில் முடிவெடுக்கவில்லை. எனவே, குழு நாடகங்களை நடத்துவதைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நிகழ்ச்சியில் மனித உருவ ரோபோ அங்கு கூடியிருந்தவர்களில் சிலரை நோக்கி முன்னேறி தாக்க முயற்சிக்கிறது.
- பாதிக்கப்பட்டு அந்த ரோபோ இவ்வாறு நடந்துகொண்டதாக கூறபடுகிறது.
சீனாவில் மக்கள் கூடியிருந்த நிகழ்வு ஒன்றில் செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) கட்டுப்படுத்தப்படும் ரோபோ தாக்குதல் நடந்த முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், நிகழ்ச்சியில் மனித உருவ ரோபோ அங்கு கூடியிருந்தவர்களில் சிலரை நோக்கி முன்னேறி தாக்க முயற்சிக்கிறது.
மென்பொருள் கோளாறால் ரோபோ அவர்களை நோக்கி முன்னேறிச் சென்று அவர்களில் சிலரைத் தாக்க முயற்சிப்பதை வீடியோ காட்டுகிறது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
இருப்பினும் சிந்திக்கும் திறனுடைய ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்குவருங்காலங்களில் அச்சுறுத்தலாக அமையும் என்ற பரவலான கூற்றை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- பிரீத்தி ஜிந்தா தனது தனது சமூக ஊடக கணக்குகளை பாஜகவுக்கு விற்றுவிட்டார் என கேரளா காங்கிரஸ் குற்றச்சாட்டு
- யாரும் எனக்காக எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை என பிரீத்தி ஜிந்தா விளக்கம்
பாலிவுட் நடிகையும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர்.
இந்நிலையில், பிரீத்தி ஜிந்தா தனது ரூ.18 கோடி வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்காக தனது சமூக ஊடக கணக்குகளை பாஜகவுக்கு விற்றுவிட்டார் என்று கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளா காங்கிரசின் குற்றச்சாட்டை பிரீத்தி ஜிந்தா மறுத்துள்ளார்.
இது தொடர்பான அவரின் எக்ஸ் பதிவில், "எனது சமூக ஊடக கணக்குகளை நான் தான் பயன்படுத்தி வருகிறான். அடிப்படையே இல்லாத பொய் தகவல்களை பரப்புவதற்கு உங்களுக்கு வெட்கமா இல்லையா? யாரும் எனக்காக எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. ஒரு அரசியல் கட்சி என்னுடைய பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தி போலியான செய்திகளை பரப்புவதை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். 10 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் குறிப்பிட்டுள்ள கடனை நான் திருப்பி செலுத்தி விட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து பிரீத்தி ஜிந்தா மறுப்பு செய்திக்கு விளக்கம் கேட்டு கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "பிரபலங்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளை ஐடி பிரிவிடம் ஒப்படைத்து நிர்வகிப்பதை போல் அல்லாமல் உங்கள் சமூக ஊடக கணக்குகளை நீங்களே நிர்வகிக்கிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.
உங்கள் கடன் நிலை குறித்து தெளிவுபடுத்தியதற்கு நன்றி. நாங்கள் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். ஊடகங்கள் தெரிவித்த செய்திகளை தான் நாங்கள் பகிர்ந்தோம்.
ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின்படி, ரிசர்வ் வங்கியில் நடக்கும் ஊழல்கள் குறித்து நியூ இந்தியா கூட்டுறவு வங்கியின் முன்னாள் ஊழியர்கள், 2020 ஜனவரியில் கடிதம் எழுதி எச்சரித்தனர். அந்த கடிதத்தில் உங்கள் பெயருடன் மேலும் பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அதில், பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி கடன் திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகள் இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாங்கள் சேமிப்பை இழந்த பொதுமக்கள் பக்கம் நிற்கிறோம். இந்த தகவல்கள் தவறாக இருந்தால், அதற்கான ஆதாரத்துடன் சேமிப்பை இழந்த மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளது.
- இன்னும் இரண்டு வீரர்கள் மட்டுமே அவருக்கு மேலே இருக்கிறார்கள்.
- உடல் தகுதி அடிப்படையில் அவர் சிறப்பாகவே இருக்கிறார் என்றார்.
சிட்னி:
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். இது அவரது 51-வது சதமாகும். இந்தப் போட்டியில் விராட் கோலி 14,000 ரன்கள் கடந்து அசத்தியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் விராட் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், ரிக்கி பாண்டிங் விராட் கோலியின் ஆட்டம் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது குறித்து பேசியதாவது:
விராட் கோலியை விட ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரரை நான் பார்த்ததே இல்லை. அவர் இப்போது ஒருநாள் போட்டிகளில் என்னை முந்தி இருக்கிறார்.
இன்னும் இரண்டு வீரர்கள் மட்டுமே அவருக்கு மேலே இருக்கிறார்கள். நிச்சயமாக அவர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரராக தனது பெயரை பார்க்க விரும்புவார்.
உடல் தகுதி அடிப்படையில் அவர் சிறப்பாகவே இருக்கிறார். அதற்காக கடினமான உழைப்பை செலுத்துகிறார்.
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவரால் முறியடிக்க முடியுமா என யோசித்துப் பார்ப்பது நமக்கு விசித்திரமான உணர்வை ஏற்படுத்துகிறது.
விராட் கோலி இத்தனை ஆண்டுகள் சிறப்பாக ஆடியும் இன்னும் சச்சினின் சாதனையை நெருங்குவதற்கு அவர் 4,000 ரன்களை குவிக்க வேண்டும்.
இது சச்சின் எந்த அளவுக்கு சிறப்பாக ஆடி இருக்கிறார் என்பதை நமக்கு காட்டுகிறது. எத்தனை ஆண்டுகள் சச்சின் இந்த விளையாட்டை விளையாடி இருக்கிறார் என்பதை நாம் இதன்மூலம் புரிந்து கொள்ளலாம். ஆனால், விராட் கோலி போன்ற ஒருவர் இந்த சாதனையை முறியடிக்க மாட்டார் என நாம் ஒதுக்கித் தள்ளி விட முடியாது.
விராட் கோலியிடம் பசி இருந்தால், நிச்சயமாக அவர் சச்சின் சாதனையை முறியடிக்க மாட்டார் என என்னால் சொல்ல முடியாது என தெரிவித்தார்.






