என் மலர்
தலைப்புச்செய்திகள்
- நன்றியில்லாத நபரின் கன்னத்தில் அறையப்பட்டிருக்கிறது.
- உக்ரைனுக்கு அமெரிக்காவின் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும்
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்கா வந்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்காவை பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்த சந்திப்பு நடத்தப்பட்டது.
இந்த சந்திப்பில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் இருதலைவர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் பதிலுக்கு பதில் பேசி கொண்டே இருந்தனர். இதில் ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் பல குற்றச்சாட்டுகளை கூறினார்.
டிரம்ப் கூறும்போது, "நீங்கள் பெரிய சிக்கலில் இருக்கிறீர்கள். இதில் நீங்கள் வெற்றி பெற போவதில்லை. நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். 3-ம் உலகப் போரோடு விளையாடுகிறீர்கள். நீங்கள் செய்வது நாட்டிற்கு மிகவும் அவமரியாதையானது.
உங்களிடம் போதுமான ராணுவம் இல்லை. உங்களுக்காக 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவு செய்தது. உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டார்கள். இல்லையென்றால் போர் 2 வாரத்தில் முடிந்திருக்கும். நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். ஆனால் எங்கள் நாட்டிற்கு அவமரியாதையை காட்டுகிறீர்கள். உங்களால் போரில் வெற்றி பெற முடியாது என்று எனக்கு தெரியும்.
நீங்கள் இப்படி நடந்து கொண்டால் அமைதி ஒப்பந்தத்தை மிகவும் கடினமாக்கும் என்று நான் பயப்படுகிறேன். நீங்கள் தனியாக செல்ல எந்த வாய்ப்பும் உங்களிடம் இல்லை. மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் வீரர்கள் குறைவாக உள்ளனர். ஆனால் நீங்கள் எனக்கு போர் நிறுத்தம் வேண்டாம். நான் தொடர்ந்து போராட விரும்புகிறேன்' என்று எங்களிடம் கூறுகிறீர்கள்.
உயிர்கள் இழக்கப்படாமல் இருக்க போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். ஆனால் நீங்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை. நான் புதினுடன் இணையவில்லை., நான் யாருடனும் இணைய வில்லை. நான் அமெரிக்காவுடன் இணைந்திருக்கிறேன். நீங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள் அல்லது நாங்கள் வெளியேறி விடுவோம்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஜெலன்ஸ்கி - டிரம்ப் சந்திப்பு குறித்து பேசிய ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ், "நடந்தது மிக நல்ல விஷயம், முதன் முதலில் ஜெலன்ஸ்கியின் முகத்துக்கு நேராக டிரம்ப் உண்மையை போட்டுடைத்து விட்டார். நன்றியில்லாத நபரின் கன்னத்தில் அறையப்பட்டிருக்கிறது, ஆனால் இது போதாது. உக்ரைனுக்கு அமெரிக்காவின் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
- கட்சியை பலப்படுத்தும் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
- 2026-ல் முதலமைச்சர் வேட்பாளராக விஜயை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கவே திட்டமிட்டுள்ளதாக த.வெ.க.வினர் கூறினர்.
சென்னை:
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தொடங்கினார்.
அதன்பிறகு கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மாற்றாக, அ.தி.மு.க.வுடன் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரு கட்சிகளிடையே கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-ம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே உள்ள சொகுசு விடுதியில் கடந்த 26-ந்தேதி நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்று பேசிய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய், அறிஞர் அண்ணா கட்சி ஆரம்பித்து 1967-ம் ஆண்டு முதல் முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆர். கட்சி ஆரம்பித்து 1977-ம் ஆண்டு தேர்தலில் நின்று ஆட்சியை பிடித்தார். அவர்கள் இருவருமே மிகப்பெரிய வெற்றியை பெற்றனர். அதுதான் வரலாறு, அதேபோல் 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வரலாறு படைக்கும் என்றார்.
இந்த விழாவில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்று பேசினார். '35ஆண்டு கால அரசியலில் விஜய் புதிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளார். விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்' என்று அவர் பேசினார்.
இந்த நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் விஜய், அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரமாட்டார். விஜய் தனித்து நின்று ஆட்சியை பிடிப்பார் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் தந்தி டி.வி.க்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை.
தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிட உள்ளது. தனித்து தேர்தலை சந்திப்பதற்காக கட்சியின் தலைவர் விஜய் வியூகம் வகுத்து வருகிறார். தேர்தலில் விஜய் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பார்.
இவ்வாறு அவர் கூறி னார்.
விஜய் தனித்து போட்டியிடப் போவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்து இருப்பது அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரசாந்த் கிஷோரின் இந்த பிரத்யேக பேட்டி இன்று இரவு 9 மணிக்கு தந்தி டி.வி.யில் முழுமையாக ஒளிபரப்பாக உள்ளது.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு கடிதம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 72-வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு கடிதம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொலைபேசி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வாழ்த்து வருமாறு:-
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் தலைமையில் தமிழ் நாடு எல்லாத் துறைகளிலும் திசைகளிலும் முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நலமுடன் நல்லாட்சி நடத்துக.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில்,
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மும்மொழிகளிலும் அவர் பதிவிட்டு உள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று 72-வது பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து செய்தியில்:-
இன்று 72-வது பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
நடிகர் சத்யராஜ் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-
இந்திய ஒன்றியத்தின் முதல்வர்களில் முதலிடம் வகிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை வாழ்த்துவதில் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி கே.சி.வேணுகோபால், ராஜீவ் சுக்லா எம்.பி., வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமூக வலைதளம் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
- மவுனம் காப்பது பெண்களுக்கு செய்ய கூடிய துரோகமாகும்.
- நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடக்கும் விசாரணையை திமுகவுக்கு எதிராக திசை திருப்புவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"பெண் ஒடுக்குமுறை என்பது யுகம் யுகமாக எல்லாச் சமூகங்களிலும், எல்லாப் பண்பாடுகளிலும் நிலவி வந்த ஒரு சமூக அநீதி. இந்தச் சமூக அநீதிமுறை இன்னும் இந்தப் பூமியிலிருந்து அகன்றுவிடவில்லை.
எமது சமூகக் கட்டமைப்பில் பெண்ணினம் மிகவும் மோசமான ஒடுக்குமுறை வடிவங்களை எதிர்கொண்டு நிற்கிறது. மிகவும் பின்தங்கிய சமூகப் பொருளாதார வாழ்வு ஒரு புறமும், அரச அடக்குமுறை அழுத்தங்கள் மறுபுறமும், ஆணாதிக்கக் கொடுமைகள் இன்னொரு புறமுமாகப் பல பரிமாணங்களில் எமது பெண்கள் ஒடுக்குமுறையைச் சந்திக்கிறார்கள்.
நீண்ட நெடுங்காலமாக எமது சமூகத்தில் வேரூன்றி வளர்ந்த மூட நம்பிக்கைகளும், இந்த மூட நம்பிக்கைகளிலிருந்து தோற்றம் கொண்ட சமூக வழக்குகளும், சம்பிரதாயங்களும், எமது பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருகின்றன. ஆணாதிக்க அடக்குமுறையாலும், வன்முறையாலும், சாதியம், சீதனம் என்ற கொடுமைகளாலும் தமிழீழப் பெண்ணினம் விபரிக்க முடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறது.
எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றுத் தேவை. இந்த வரலாற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது. எமது மண்ணின் விடுதலை, பெண்ணின் விடுதலைக்கு மட்டுமன்றி எமது இனத்தின் விடுதலைக்கும் அத்திவாரமானது"
-அனைத்துலக பெண்கள் தினத்தில் 1992 ஆம் ஆண்டு மேதகு பிரபாகரன் விடுத்த அறிக்கையிலிருந்து…
பெண்கள் விடுதலை குறித்து மேதகு பிரபாகரன் பார்வை தனித்துவமானது. அதனால் தான் பெண்கள் படையணியை 1985 ஆண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கினார் மேதகு பிரபாகரன். ஆனால் சீமான் நேற்று (28.2.2025)மட்டும் கொடுத்த பேட்டிகளை பார்த்தால் எவ்வளவு ஆணாதிக்க சிந்தனை உள்ளவராக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். பொது வெளியில் பெண்களை இவ்வளவு இழிவாக யாரும் பேசியிருக்க மாட்டார்கள்.
தான் செய்த பாலியல் சம்பவங்களை பெருமையோடு Normalize பண்ணுகிறார். அருவருப்பான உடல் மொழியோடும் அநாகரீகமான உரையாடலை தொடரும் சீமானை மாதர் சங்கங்கள் மற்றும் #meetoo என்ற பெயரில் இயங்குபவர்கள் இதுவரை கண்டிக்கவில்லை.
மவுனம் காப்பது பெண்களுக்கு செய்ய கூடிய துரோகமாகும்.
நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடக்கும் விசாரணையை திமுகவுக்கு எதிராக திசை திருப்புவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?
அதிலும் விசாரணைக்கு மேதகு பிரபாகரன் படத்தோடு வந்திருப்பது எத்தனை கொடுமையான அயோக்கியத்தனம்?
தமிழ்த்தேசியத்தின் அரசியல் இது தானா?
"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!
வைய வாழ்வு தன்னில் எந்த வகையினும் நமக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே" என்றார் பாரதி.
இன்று தமிழ்த்தேசியத்தின் பெயரில் அதுவும் மேதகு பிரபாகரன் பெயரில் பெண்களை இழிவுபடுத்துவதும் அதை பெருமைப்படுத்துவதும் அருவருப்பின் உச்சம். அமைதி காப்பது அதனினும் உச்சம் என்று கூறியுள்ளார்.
- சப்தம் திரைப்படம் நேற்று (பிப்ரவரி 28) ரிலீசாக இருந்தது.
- கடன் பிரச்சனையால் சப்தம் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதற்கடுத்து நகுல் நடிப்பில் வெளிவந்த 'வல்லினம்' மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பார்டர்', 'குற்றம் 23' திரைப்படத்தை அறிவழகன் இயக்கினார்.
'ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி- அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவான சப்தம் திரைப்படம் இன்று வெளியானது.
சப்தம் திரைப்படம் நேற்று (பிப்ரவரி 28) ரிலீசாக இருந்த நிலையில், கடன் பிரச்சனையால் அப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில், சப்தம் படம் இன்று ரிலீசானது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த வார தொடக்கத்தில் கேரள மாநிலம் கண்ணூரில் அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரியாக இருந்தது.
- மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 38 டிகிரி வெயில் அடித்தது.
புதுடெல்லி:
கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் வறுத்தெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் இயல்பை விட வெயில் அதிகமாக இருந்ததாக அகில இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
1901-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே போன்று வெயில் கொளுத்தியது. 124 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் பிப்ரவரியில் வெப்பநிலை அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. இந்த மாதத்தில் சராசரியாக 22.04 டிகிரி வெயில் பதிவானது. இது இயல்பை விட 1.34 டிகிரி வெயில் அதிகமாகும். கொங்கன் மற்றும் கர்நாடக கடலோர பகுதி மற்றும் கேரளாவில் சில பகுதிகளில் அதிக வெப்பம் பதிவானது.
இங்கு இயல்பை விட 4-ல் இருந்து 8 டிகிரி வரை அதிக வெயில் இருந்தது. இந்த வார தொடக்கத்தில் கேரள மாநிலம் கண்ணூரில் அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரியாக இருந்தது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 38 டிகிரி வெயில் அடித்தது.
இந்த ஆண்டை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வடகிழக்கு மாநிலங்கள், வட மாநிலங்கள், தென் மேற்கு இந்திய பகுதிகளில் கடந்த ஆண்டுகளை விட வெப்ப அலை அதிகமாக வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இயல்பை விட அதிக வெயில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மார்ச் மாத இறுதியில் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் கோதுமை உள்ளிட்ட பயிர்கள் அறுவடை நடைபெறும். இந்த ஆண்டு வெயில் அதிகரிக்கும் என்பதால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே கோதுமை உற்பத்தி கடந்த 3 ஆண்டுகளாக குறைந்து வருவதால் அதன் விலை மேலும் அதிகரிப்பதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.
- கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரர் கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
- விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர்.
தமிழக கர்நாடக எல்லையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிந்தனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் விபத்தில் உயிரிழந்தனர். கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரர் கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர். 5 பேரும் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகபட்சமாக 07.02.2025 அன்று 3,56,300 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
- Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளலாம்.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில்பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம்செய்துள்ளனர். அதிகபட்சமாக 07.02.2025 அன்று 3,56,300 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2025, பிப்ரவரி மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 14,80,150 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 936 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 6,046 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப்பயன்படுத்தி 37,56,385 பயணிகள் (Online QR 1,52,615; Paper QR 18,34,474; Static QR 2,68,084; Whatsapp - 6,14,516; Paytm 4,18,839; PhonePe – 3,40,151; ONDC – 1,27,706),சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 34,22,286 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர்குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), Whatsapp, Paytm App,PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20%கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளலாம்.
மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்புநல்கி வரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பெண்கள் தொடர்பாக அயோக்கியர்கள் கூட பேசத் தயங்கும் வார்த்தைகளை சீமான் கூச்சமின்றி பேசியிருக்கிறார்.
- சீமானை ஆதரிக்கும் பிள்ளைகளை அவரின் பிடியிலிருந்து விடுவிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.
நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடபழனி விடுதியில் இருந்து தனது வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜாரானார்.
இதனிடையே, பாலியல் புகார் குறித்து சீமான் கொச்சையாக தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சீமானின் இத்தகைய பேச்சுக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி சுதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "தான் ஒரு மோசமான அரசியல்வாதி மட்டுமல்ல அநாகரீகமான மனிதர் என மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் சீமான். பெண்கள் தொடர்பாக பொதுவெளியில், அயோக்கியர்கள் கூட பேசத் தயங்கும் வார்த்தைகளை கூச்சமின்றி பேசியிருக்கிறார்.
முதலில் இந்த வழக்கு அரசியல்ரீதியான வழக்கு என்ற வாதமே பொய். சீமான் மீது ஒரு நடிகை புகார் தருகிறார்; நீண்ட நாட்களாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கை ரத்து செய்யுங்கள் என சீமானேதான் நீதிமன்றம் சென்றார்.
விசாரணை முடிவில், புகாரில் முகாந்திரம் இருப்பதை அறிந்து 12 வாரத்திற்குள் விசாரிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இப்போது நீதிபதிக்கும் உள்நோக்கம் கற்பித்துக் கொண்டிருக்கிறார் சீமான்.
சாமானிய மக்களுக்கான கடைசி நம்பிக்கையாக இப்போது வரை நீதிமன்றங்களும், நீதிபதிகளும்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பது மூலம் எதை சாதிக்க விரும்புகிறார் சீமான்?.
நீதிமன்ற அவமதிப்பெல்லாம் வராது என்ற உத்தரவாதம் எதுவும், எங்கிருந்தாவது கிடைத்ததா?
எல்லாவற்றிற்கும் மேல், வயசுக்கு வந்த பெண்ணையா கற்பழித்தேன் என பெண்களை சுற்றி உட்கார வைத்துக் கொண்டு எள்ளலான உடல் மொழியில் பேசியது. பெண்களுக்கு எதிரான வன்முறையை இயல்பான ஒன்றாகப் பார்க்கும், இயல்பான ஒன்றாக மாற்றும் வக்கிர புத்தி அதில் ஒன்றுமில்லை.
பெண்களைச் சுற்றி உட்கார வைத்துக் கொண்டு பேசியதன் மூலம், சமூகத்திற்கு என்ன சொல்ல நினைக்கிறார் சீமான்?.
50%க்கு மேல் பெண்கள் வசிக்கும் ஒரு மாநிலத்தில் உட்கார்ந்து கொண்டு, பெண்மையைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார் சீமான். தமிழ்ச்சமூகத்தில் இடம் கொடுக்கப்படாமல் அவர் விரட்டப்பட வேண்டும்.
பெரியார் தொடர்பில் ஆதாரமின்றி அவதூறாக சீமான் பேசிய போது, அவர் எங்கள் Theme Partner என்று சொன்ன தமிழிசை சௌந்தரராஜன் இப்போது என்ன சொல்லப் போகிறார்?. Theme Partnerன் கருத்தை ஆதரிக்கிறாரா?
அவர் பேசிய பேச்சுகள், எந்த நாகரீக சமூகத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. நாம் தமிழர் கட்சியில் இருக்கும் பெண்கள், அந்தக் கட்சியை ஆதரிக்கும் பெண்கள் இனியும் இந்த வக்கிரவாதிக்கு ஆதரவு கொடுப்பதா என சிந்திக்கட்டும்.
சீமானை ஆதரிக்கும் தம்பிகளின் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை சீமான் பிடியிலிருந்து விடுவிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது" என்று பதிவிட்டுள்ளார்.
- நாட்டு சர்க்கரை ரேஷன் கடையில் விற்க வேண்டும்.
- 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகளை நிர்வகிக்க ஒரு லட்சம் புதிய பணியாளர்கள் நியமனம்.
சென்னை:
பா.ம.க. சார்பில் 18-வது ஆண்டாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். அதில்,
* வேளாண்துறையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வேண்டும்.
* நாட்டு சர்க்கரை ரேஷன் கடையில் விற்க வேண்டும்.
* பயிர்க்காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.
* வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.22,500 கோடி ஒதுக்கப்படும்.
* ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.
* 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகளை நிர்வகிக்க ஒரு லட்சம் புதிய பணியாளர்கள் நியமனம்.
* பருப்பு, எண்ணெய் வித்து உற்பத்தியை பெருக்க சிறப்புத் திட்டம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
- வெடிகுண்டு மிரட்டலையடுத்து டெல்லி காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு பொதிகை அரசு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து டெல்லி காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லி காவல் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- கடந்த 2024-ம் ஆண்டில் ஜப்பானில் மொத்தம் 7,20,988 குழந்தைகளே பிறந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
- குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் பலன் தரவில்லை.
ஜப்பானில் மக்கள் தொகை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இதையடுத்து குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் அந்த நாட்டில் தொடர்ந்து 9-வது ஆண்டாக மக்கள் தொகை சரிவை சந்தித்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டில் ஜப்பானில் மொத்தம் 7,20,988 குழந்தைகளே பிறந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்று ஜப்பான் அரசின் செய்தித் தொடர்பாளர் யோஷிமசா ஹயாஷி தெரிவித்தார். அங்கு திருமண வாழ்க்கை நடைமுறையை இளைஞர்கள் விரும்பாததே குழந்தை பிறப்பு குறைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.






