என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு தொடங்கியது.
    • பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "ஆசீர்வதிக்கப்பட்ட ரம்ஜான் மாதம் தொடங்கும்போது, அது நமது சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும். இந்த புனித மாதம் பிரதிபலிப்பு, நன்றியுணர்வு மற்றும் பக்தியை எடுத்துக்காட்டுகிறது, மேலும் இரக்கம், கருணை மற்றும் சேவையின் மதிப்புகளையும் நமக்கு நினைவூட்டுகிறது. ரம்ஜான் முபாரக்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ரமலான் நோன்பு தொடங்கியதை அடுத்து பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இன்று அதிகாலை 4 மணிக்கு இஸ்லாமியர்கள் உணவு உட்கொண்டு ரமலான் நோன்பை தொடங்கினர்.

    • எஃப்-16 போர் விமானங்கள் தீப்பிழம்புகளைப் பயன்படுத்தின.
    • விமானங்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டன.

    புளோரிடாவில் உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மார்-ஏ-லாகோ ரிசார்ட்டுக்கு மேலே மூன்று பயணிகள் விமானங்கள் வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது, இதனால் வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு துறையின் எஃப்-16 ரக போர் விமானங்கள் சோதனை பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    இது குறித்து டெய்லி மெயில் வெளியிட்டுள்ள தகவல்களில், எஃப்-16 போர் விமானங்கள் தீப்பிழம்புகளைப் பயன்படுத்தி, மூன்று பயணிகள் விமானங்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டன. இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இந்த மூன்று விமானங்களும் பாம் பீச் வான்வெளியில் ஏன் பறந்தன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    பாம் பீச் போஸ்ட் எனும் உள்ளூர் வலைதளம் வெளியிட்டுள்ள தகவல்களில், மார்-எ-லாகோவிற்கு டிரம்ப் வந்திருந்த போது அந்த இடத்தின் மீது மூன்று முறை வான்வெளி விதிமீறல்கள் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி 15-ம் தேதி இரண்டு முறையும், பிப்ரவரி 17-ம் தேதி ஒருமுறையும் விதிமீறல்கள் நடந்துள்ளன.

    வான்வெளி விதிமீறல்களுக்கு எஃப்-16 போர் விமானங்கள் பதிலளித்ததாக கூறப்படுகிறது. பிப்ரவரி 18-ம் தேதி பாம் பீச்சிற்குள் மற்றொரு பயணிகள் விமானம் பறந்ததாகவும் கூறப்படுகிறது. போர் விமானங்கள் "பாதுகாப்புக்கு உட்பட்டு பயன்படுத்தப்படும். இவை விரைவாக, தரையில் உள்ள மக்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது."

    எஃப்-16 ரக போர் விமானங்கள் விமானத்தை வான்வெளியில் இருந்து வெளியேற்றிய பிறகு டிரம்ப் தனது ரிசார்ட்டை சென்றடைந்தார்.

    • மும்மொழிக் கொள்கை மற்றும் நீட் தேர்வுக்கு பெரும்பாலான பெற்றோர்களும், மாணவர்களும் ஆதரவாக இருக்கிறார்கள்
    • தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறையும் என்று கூறுவது உண்மை நிலைக்கு எதிரானது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், பா.ஜ.க.வைத் தொடர்ந்து அதன் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக அரசு கூட்டியிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) பங்கேற்காது.

    மும்மொழிக் கொள்கை மற்றும் நீட் நுழைவுத் தேர்வு சம்பந்தமான மத்திய அரசின் கல்வி நிலைப்பாட்டிற்கு பெரும்பாலான பெற்றோர்களும், மாணவர்களும் ஆதரவாகவே இருக்கிறர்கள்.

    தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசின் எந்த அதிகார பூர்வமான அறிவிப்பும் வராத நிலையில், தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறையும் என்று கூறுவது உண்மை நிலைக்கு எதிரானது.

    கடந்த வாரம் 25.02.2025 தமிழகத்திற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர், தொகுதி மறுசீரமைப்பில் எந்த நிலைப்பாட்டையும் மத்திய அரசு இதுவரை எடுக்கவில்லை என்றும் அப்படி இருந்தாலும் கூட தமிழகத்திற்கு பாராளுமன்ற தொகுதிகள் கூடுமே தவிர குறையாது என்றும் தெளிவுப்பட கூறியிருக்கிறார்கள்.

    தனிழகத்தில் தொடர்ந்து வளர்ந்துகொண்டு இருக்கும் பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருக்கும் பொழுது, அதையெல்லாம் மக்களிடம் இருந்து திசைத் திருப்பவே இக்கூட்டம் நடைபெறுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கருதுகிறது.

    எனவே வருகிற 5-ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தி.மு.க. கூட்டணி அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல.
    • பிரசாந்த் கிஷோர் சாலையில் நடந்து சென்றால் அவரை யார் என்றே தெரியாது.

    எழும்பூர்:

    சென்னை எழும்பூரில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது போதையை ஒழித்துவிடுவேன் என அன்புமணி பேசியது குறித்தும், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    பா.ம.க.வை கட்டுப்படுத்துங்கள், அப்பாவும், மகனும் மேடையிலேயே சண்டை போட்டுக்கொள்கின்றனர். சட்டவிரோத செயல்களை செய்பவர்களை ஆதரிக்கும் கர்நாடக டூப் போலீஸ் அண்ணாமலை.

    தி.மு.க. கூட்டணி அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. இதுகொள்கை சார்ந்த கூட்டணி. இந்த கூட்டணி மேன்மேலும் உறுதியாக இருப்பதை தான் கடந்த 28-ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சி எடுத்துக்காட்டு. பிரசாந்த் கிஷோர் சாலையில் நடந்து சென்றால் அவரை யார் என்றே தெரியாது என்றார்.

    • தமிழகத்தில் நடக்கும் ஆட்சியில் தற்போது சட்டமும் கிடையாது, ஒழுங்கும் கிடையாது.
    • பெண்கள் வெளியில் பாதுகாப்பாக செல்ல முடியாத சூழல் உள்ளது.

    திருத்தணி:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆர்.கே.பேட்டையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருத்தணிக்கு வந்தார். திருத்தணி ரெயில் நிலையம் அருகே கட்சிக்கொடி ஏற்றி வைத்து அவர் பேசும்போது,

    'தமிழகத்தில் நடக்கும் ஆட்சியில் தற்போது சட்டமும் கிடையாது, ஒழுங்கும் கிடையாது. பெண்கள் வெளியில் பாதுகாப்பாக செல்ல முடியாத சூழல் உள்ளது. 5 வயது குழந்தைக்கு பாலியல் கொடுமை, 8 பேர் சேர்ந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை போன்ற சம்பவங்களால் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    தான் மட்டும் ஆட்சியில் இருந்தால் பாலியல் குற்றங்களில் ஈடுபவடுபவர்களை வேறு மாதிரி செய்திருப்பேன். இந்த மிருகங்களை வெட்டிடுவோம். அப்போதுதான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு பயம் இருக்கும் என தெரிவித்தார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகை மாவட்டத்திற்கு வருகிறார்.
    • திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய விருந்தினர்கள் செல்லும் வழித்தடத்தை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகை மாவட்டத்திற்கு வருகிறார். இதனையொட்டி இன்று, நாளை (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருவாரூர் மார்க்கமாக நாகைக்கு செல்ல இருப்பதால் திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய விருந்தினர்கள் செல்லும் வழித்தடத்தை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

    இதை மீறி இந்த வழிதடத்தில் சிவில் ரிமோட் பைலட் விமான அமைப்பு மற்றும் டிரோன் கேமரா போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

    • இன்று சுபமுகூர்த்த தினம்.
    • சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-18 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை இரவு 11.58 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 11.13 மணி வரை பிறகு ரேவதி

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். மதுரை ஸ்ரீ கூடலழகர் உற்சவம் ஆரம்பம், அன்ன வாகனத்தில் ராஜாங்க சேவை. கோவை கோணியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி. திருப்பணி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தரு ளல். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர், அன்னை ஸ்ரீ காந்தியம்மன் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதிவர்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். சமயபுரம், இருக்கன்குடி மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-உவகை

    மிதுனம்-லாபம்

    கடகம்-வரவு

    சிம்மம்-போட்டி

    கன்னி-மேன்மை

    துலாம்- ஆர்வம்

    விருச்சிகம்-மறதி

    தனுசு- பாராட்டு

    மகரம்-கவனம்

    கும்பம்-ஆதாயம்

    மீனம்-ஊக்கம்

    • தேர்வை மாணவ-மாணவிகள் எழுதுவதற்கு ஏதுவாக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • தேர்வு முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் தேர்வுப் பணியில் ஈடுபட உள்ளனர்.

    சென்னை:

    பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுத இருக்கின்றனர்.

    இந்த தேர்வை மாணவ-மாணவிகள் எழுதுவதற்கு ஏதுவாக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு நாளும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் தேர்வுப் பணியில் ஈடுபட உள்ளனர்.

    தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளில் தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதை அரசு தேர்வுத்துறை உறுதி செய்து இருக்கிறது.

    பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்கிட மின்சாரத்துறைக்கும், தேர்வு பணிகளுக்கு பாதுகாப்பு வழங்கிட காவல் துறைக்கும், தேர்வு மையங்களின் போதுமான அடிப்படை வசதிகளை செய்துதர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்கள் புகார்கள், கருத்துகள், சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக முழு நேர தேர்வு கட்டுப்பாட்டு அறை (9498383075, 9498383076) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு அரசின் தலைமை காஜி டாக்டர் சலாகுத்தீன் ஆயூப் நேற்று அறிக்கை வெளியிட்டார்.
    • அதிகாலை 4 மணிக்கு உணவு சாப்பிட்டு நோன்பை தொடங்கினர்.

    புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக உள்ளது. ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கடைபிடிப்பதை இஸ்லாமியர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த புனித மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது.

    ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும். இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தலைமை காஜி டாக்டர் சலாகுத்தீன் ஆயூப் நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

    அதில், "ஹிஜ்ரி 1446 ஷாபான் மாதம் 29-ந்தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 28.2.2025 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 2.3.2025-ம்தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது," என கூறப்பட்டது.

    அந்த வகையில் இஸ்லாமியர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு உணவு சாப்பிட்டு நோன்பை தொடங்கினர். தமிழ்நாடு முழுக்க ரமலான் நோன்பு தொடங்கியதை அடுத்து நாகூர், மதுரை உள்பட மாநிலம் முழுக்க பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இந்த மாதம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள்.இந்த புனித மாதத்தில் முஸ்லிம்கள் தர்மம் எனும் ஜகாத்தில் ஈடுபடுவார்கள். மேலும் திருக்குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். ஒரு மாத கால நோன்பு முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

    • பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியது.
    • நியூசிலாந்து அணி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்த தொடரில் களமிறங்கின. இதில் ஏ பிரிவில் இந்தியா ம்றும் நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

    ஏ பிரிவில் இடம்பெற்ற பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் பி பிரிவில் இடம்பெற்று இருந்த இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன.

    நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

    அந்த வகையில் இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று, அரையிறுதி சுற்றில் விளையாடும் முனைப்பில் களமிறங்குகின்றன.

    இன்றைய போட்டியில் காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா களமிறங்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்றும் தெரிகிறது. சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துவார் என்றும் துவக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில் விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது.

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும். இந்தப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • எல்லைப்பகுதியில் சீனாவின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • சீன பல்கலைக்கழகங்களுக்கு தைவான் அரசு தடை விதித்தது.

    தைபே நகரம்:

    தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடித்து வருகிறது. இதற்காக தைவான் அருகே அடிக்கடி போர்ப்பயிற்சி மற்றும் எல்லைக்குள் போர் விமானங்களை அனுப்பி பதற்றத்தைத் தூண்டுகின்றது.

    எல்லைப்பகுதியில் சீனாவின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டி வருகிறது.

    இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த பீஹாங் பல்கலைக்கழகம், பீஜிங் தொழில்நுட்ப நிறுவனம், நான்ஜிங் விமானவியல் மற்றும் விண்வெளி பல்கலைக்கழகம் உள்ளிட்ட 7 பல்கலைக்கழகங்களுக்கு தைவான் தடை விதித்துள்ளது.

    இதுதொடர்பாக, தைவான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன பல்கலைக் கழகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அதனுடன் தைவானில் உள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் எவ்வித கல்வி நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என தெரிவித்துள்ளது.

    • வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார்.
    • ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது பதற்றத்தை அதிகரித்தது.

    மாஸ்கோ:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

    அதேநேரம் உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆயுதம் மற்றும் நிதியுதவிகளுக்கான தொகையை திருப்பித்தர வேண்டும் அல்லது உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை அமெரிக்காவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அமெரிக்கா சென்றார்.

    வெள்ளை மாளிகையில் அவர் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை அடுத்து ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசியது பதற்றத்தை அதிகரித்தது.

    இந்த கடுமையான பேச்சுவார்த்தையால் திட்டமிடப்பட்டிருந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வு ரத்தானது. பின்பு வெள்ளை மாளிகையில் இருந்து உக்ரைன் அதிபர் வெளிறிய முகத்துடன் வெளியேறினார்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இங்கிலாந்து சென்றார். அங்கு அவரை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உற்சாகமாக வரவேற்றார். அப்போது அங்கிருந்தோர் உக்ரைனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். உங்கள் ஆதரவுக்கு நன்றி என அதிபர் ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    ×