என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தேர்வை மாணவ-மாணவிகள் எழுதுவதற்கு ஏதுவாக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- தேர்வு முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் தேர்வுப் பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னை:
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுத இருக்கின்றனர்.
இந்த தேர்வை மாணவ-மாணவிகள் எழுதுவதற்கு ஏதுவாக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு நாளும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் தேர்வுப் பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளில் தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதை அரசு தேர்வுத்துறை உறுதி செய்து இருக்கிறது.
பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்கிட மின்சாரத்துறைக்கும், தேர்வு பணிகளுக்கு பாதுகாப்பு வழங்கிட காவல் துறைக்கும், தேர்வு மையங்களின் போதுமான அடிப்படை வசதிகளை செய்துதர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்கள் புகார்கள், கருத்துகள், சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக முழு நேர தேர்வு கட்டுப்பாட்டு அறை (9498383075, 9498383076) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு அரசின் தலைமை காஜி டாக்டர் சலாகுத்தீன் ஆயூப் நேற்று அறிக்கை வெளியிட்டார்.
- அதிகாலை 4 மணிக்கு உணவு சாப்பிட்டு நோன்பை தொடங்கினர்.
புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக உள்ளது. ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கடைபிடிப்பதை இஸ்லாமியர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த புனித மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது.
ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும். இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தலைமை காஜி டாக்டர் சலாகுத்தீன் ஆயூப் நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அதில், "ஹிஜ்ரி 1446 ஷாபான் மாதம் 29-ந்தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 28.2.2025 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 2.3.2025-ம்தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது," என கூறப்பட்டது.
அந்த வகையில் இஸ்லாமியர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு உணவு சாப்பிட்டு நோன்பை தொடங்கினர். தமிழ்நாடு முழுக்க ரமலான் நோன்பு தொடங்கியதை அடுத்து நாகூர், மதுரை உள்பட மாநிலம் முழுக்க பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இந்த மாதம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள்.இந்த புனித மாதத்தில் முஸ்லிம்கள் தர்மம் எனும் ஜகாத்தில் ஈடுபடுவார்கள். மேலும் திருக்குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். ஒரு மாத கால நோன்பு முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
- பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியது.
- நியூசிலாந்து அணி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்த தொடரில் களமிறங்கின. இதில் ஏ பிரிவில் இந்தியா ம்றும் நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஏ பிரிவில் இடம்பெற்ற பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் பி பிரிவில் இடம்பெற்று இருந்த இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
அந்த வகையில் இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று, அரையிறுதி சுற்றில் விளையாடும் முனைப்பில் களமிறங்குகின்றன.
இன்றைய போட்டியில் காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா களமிறங்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்றும் தெரிகிறது. சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துவார் என்றும் துவக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில் விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும். இந்தப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- எல்லைப்பகுதியில் சீனாவின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- சீன பல்கலைக்கழகங்களுக்கு தைவான் அரசு தடை விதித்தது.
தைபே நகரம்:
தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடித்து வருகிறது. இதற்காக தைவான் அருகே அடிக்கடி போர்ப்பயிற்சி மற்றும் எல்லைக்குள் போர் விமானங்களை அனுப்பி பதற்றத்தைத் தூண்டுகின்றது.
எல்லைப்பகுதியில் சீனாவின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த பீஹாங் பல்கலைக்கழகம், பீஜிங் தொழில்நுட்ப நிறுவனம், நான்ஜிங் விமானவியல் மற்றும் விண்வெளி பல்கலைக்கழகம் உள்ளிட்ட 7 பல்கலைக்கழகங்களுக்கு தைவான் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக, தைவான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன பல்கலைக் கழகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அதனுடன் தைவானில் உள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் எவ்வித கல்வி நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என தெரிவித்துள்ளது.
- வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார்.
- ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது பதற்றத்தை அதிகரித்தது.
மாஸ்கோ:
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
அதேநேரம் உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆயுதம் மற்றும் நிதியுதவிகளுக்கான தொகையை திருப்பித்தர வேண்டும் அல்லது உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை அமெரிக்காவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அமெரிக்கா சென்றார்.
வெள்ளை மாளிகையில் அவர் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை அடுத்து ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசியது பதற்றத்தை அதிகரித்தது.
இந்த கடுமையான பேச்சுவார்த்தையால் திட்டமிடப்பட்டிருந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வு ரத்தானது. பின்பு வெள்ளை மாளிகையில் இருந்து உக்ரைன் அதிபர் வெளிறிய முகத்துடன் வெளியேறினார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இங்கிலாந்து சென்றார். அங்கு அவரை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உற்சாகமாக வரவேற்றார். அப்போது அங்கிருந்தோர் உக்ரைனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். உங்கள் ஆதரவுக்கு நன்றி என அதிபர் ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
- பிரக்ஞானந்தா 8-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.
- குகேஷ் 10 புள்ளி அதிகரித்து 2 இடம் முன்னேற்றம் கண்டுள்ளார்.
புதுடெல்லி:
உலக செஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை (கிளாசிக்கல்) சர்வதேச செஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி முன்னாள் உலக சாம்பியனான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் (2,833 புள்ளி), ஜப்பானின் ஹிகாரு நகமுரா (2,802) முறையே முதல் 2 இடங்களில் தொடருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய சென்னையைச் சேர்ந்த குகேஷ் (2,787) 10 புள்ளிகள் அதிகரித்து 2 இடம் முன்னேற்றம் கண்டு 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும்.
சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா (2,758) 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு டாப்-10 இடங்களுக்குள் வருவது இதுவே முதல்முறையாகும்.
- சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அதிபர் டிரம்ப்
- அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதற்கிடையே, அமெரிக்கா-மெக்சிகோ எல்லை பாதுகாப்புக்காக 10,000 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டனர். ஏற்கனவே பணியில் உள்ள வீரர்களுடன் இணைந்து எல்லையில் ரோந்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள் என பென்டகன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், தனது பிரச்சாரத்தின் முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றவும் முயல்வதால் அமெரிக்க-மெக்சிகோ எல்லைக்கு சுமார் 3,000 ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக பென்டகன்
தெரிவித்துள்ளது.
- ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
பெர்லின்:
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, இந்தோனேசியாவின் குஷார்ஜண்டோ-குளோரியா ஜோடி மோதியது.
இதில் இந்திய ஜோடி 23-25, 21-10, 15-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது.
- எதிர்பாராத விதமாக மின்கம்பம் மீது ஏணி உரசியதில் மின்சாரம் பாய்ந்தது.
- இச்சம்பவத்தில் 4 பேர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டம் இணையம்புத்தன்துறை கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலய விழாவை முன்னிட்டு பெரிய அளவில் அலங்கார வளைவு அமைக்கும் பணி நடந்தது. அப்போது, சிலர் இரும்பு ஏணியை தூக்கிக் கொண்டு சென்றனர். அந்த ஏணி எதிர்பாராத விதமாக மின்கம்பம் மீது உரசிய நிலையில், ஏணியில் மின்சாரம் பாய்ந்தது.
இந்தச் சம்பவத்தில் 4 பேர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், இனயம்புத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித அந்தோணியார் தேவாலய வருடாந்திர திருவிழா நடந்துவரும் நிலையில் இன்று (1.3.2025) மாலை நடைபெற்ற தேர் பவனியில் அலங்காரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வைக்கப்பட்டிருந்த இரும்பு ஏணியை சாலையின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற முயன்றபோது எதிர்பாரா விதமாக மின்சாரம் தாக்கி, இனயம்புத்தன்துறையைச் சேர்ந்த விஜயன் (52) த/பெ. தனிஸ்லாஸ், சோபன் (45) த/பெ. பெர்னின், மனு (42) த/பெ. ஒஸ்மான் மற்றும் ஜெஸ்டிஸ் த/பெ. விக்டர் (35) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் கிரீஸ் வீரர் வெற்றி பெற்றார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சிட்சிபாஸ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- செமி கண்டக்டர்கள் முதல் விமானம்தாங்கி கப்பல்கள் வரை இந்தியா உற்பத்தி செய்கிறது.
- பல சர்வதேச மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது என தெரிவித்தார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் நடந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியா வர விரும்புகிறார்கள். உலகிற்கு புதிய பொருளாதார பாதையை இந்தியா வழங்கி உள்ளது.
செமி கண்டக்டர்கள் முதல் விமானம்தாங்கி கப்பல்கள் வரை இந்தியா உற்பத்தி செய்கிறது. பல சர்வதேச மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது.
உலகை முன்னோக்கி அழைத்துச் செல்லும் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் இந்தியா இணை தலைமையாளராக இருந்தது. தற்போது உலக நாடுகளின் தொழிற்சாலையாக உள்ளது.
இந்தியாவின் வெற்றியை விரிவாக அறிய உலகம் விரும்புகிறது. உலக அளவில் நம் நாட்டின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
பல காலாவதியான சட்டங்களை பா.ஜ.க. அரசு ரத்து செய்துள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 3-வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது.
இந்தியாவின் புதிய சாதனைகளை உலகளாவிய செய்தி சேனல்கள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லும் என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய பெங்களூரு 5 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது.
- அடுத்து பேட் செய்த டெல்லி அணி 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பெங்களூரு:
3வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. ஓரளவு நிலைத்து நின்று ஆடிய எல்லீஸ் பெர்ரி அரை சதம் அடித்து 60 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ராக்வி பிஸ்ட் 33 ரன் எடுத்தார்.
டெல்லி சார்பில் ஷிகா பாண்டே, நல்லபுரெட்டி ஷாரனி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கேப்டன் மெக் லேனிங் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய ஜெஸ் ஜான்சேன், ஷபாலி வர்மாவுடன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இருவரும் அரை சதம் அடித்தனர்.
இறுதியில், டெல்லி அணி 15.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.






