என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • குழந்தைகளிடம் கையெழுத்து வாங்கக்கூடாது.
    • ஏற்கனவே மிஸ்டுகால் கொடுத்து 1 கோடி பேரை சேர்த்தார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு துறை அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பின்னர், உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்திற்கு இதுவரை 3 முறை அரசு முறை பயணமாக வந்துள்ளேன். அரசு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் திருப்திகரமாக உள்ளது.

    திருத்துறைப்பூண்டி நகரில் சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் முதல்வர் விளையாட்டு அரங்கம் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், திருவாரூரில் ரூ.18 கோடி மதிப்பில் 12 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    திருத்துறைப்பூண்டி வீரன் நகர் பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்கள் வீட்டு மனை கேட்டு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற முதலமைச்சர் 77 குடும்பத்தினருக்கு பட்டா வழங்குவது மட்டுமல்லாமல் ரூ.5 லட்சம் மதிப்பில் அவர்களுக்கு வீடும் கட்டித்தர உத்தரவிட்டு உள்ளார்.

    ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு ஆகியவற்றை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதால் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தி வருகிறது.

    குழந்தைகளிடம் கையெழுத்து வாங்கக்கூடாது. நாங்கள் நீட் தேர்வுக்கு கிட்டத்தட்ட 1 கோடி கையெழுத்து வாங்கினோம். அப்போது பள்ளி மாணவர்களை தவிர்த்துவிட்டு தான் கையெழுத்து வாங்கினோம்.

    ஏற்கனவே மிஸ்டுகால் கொடுத்து 1 கோடி பேரை சேர்த்தார்கள். அதனுடைய தொடர்ச்சியாக இதை பார்க்கிறேன் என்று கூறினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திராவிடம் டெல்லியில் இருந்து கட்டளைகளை எடுப்பதில்லை.
    • இந்தி காலனித்துவத்தை தமிழ்நாடு பொறுத்துக் கொள்ளாது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    "மரம் அமைதியை விரும்பலாம். ஆனால் காற்று ஓய்ந்து போகாது." நாங்கள் எங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தபோது, இந்த தொடர் கடிதங்களை எழுத எங்களைத் தூண்டியது மத்திய கல்வி அமைச்சர்தான்.

    அவர் தனது இடத்தை மறந்து, ஒரு முழு மாநிலத்தையும் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ளும்படி மிரட்டத் துணிந்தார், இப்போது அவர் ஒருபோதும் வெல்ல முடியாத போராட்டத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதன் விளைவுகளை எதிர்கொள்கிறார். தமிழ்நாடு சரணடையும்படி மிரட்டப்படாது.

    மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால், தேசிய கல்வி கொள்கையை நிராகரிக்கும் தமிழ்நாடு, அதன் பல இலக்குகளை ஏற்கனவே அடைந்துவிட்டது, இந்த கொள்கை 2030-க்குள் மட்டுமே அடைய வேண்டும். இது ஒரு எல்.கே.ஜி. மாண வர் பி.எச்.டி. பட்டதாரிக்கு விரிவுரை வழங்குவது போன்றது.

    திராவிடம் டெல்லியில் இருந்து கட்டளைகளை எடுப்பதில்லை. அதற்கு பதிலாக, அது தேசம் பின்பற்ற வேண்டிய பாதையை அமைக்கிறது.

    இப்போது பா.ஜ.க.வின் மூன்று மொழி சூத்திரத்திற்கான சர்க்கஸ் போன்ற கையெழுத்து பிரச்சாரம் தமிழ்நாட்டில் ஒரு சிரிப்புப் பொருளாக மாறிவிட்டது. 2026 சட்ட மன்றத் தேர்தலில் இதை அவர்களின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக ஆக்கிக் கொள்ளவும், இந்தி திணிப்பு குறித்த பொது வாக்கெடுப்பாக இதை மாற்றவும் நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன்.

    வரலாறு தெளிவாக உள்ளது. தமிழ்நாட்டின் மீது இந்தியைத் திணிக்க முயன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டனர் அல்லது பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர் மற்றும் தி.மு.க.வுடன் இணைந்தனர். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்குப் பதிலாக இந்தி காலனித்துவத்தை தமிழ்நாடு பொறுத்துக் கொள்ளாது.

    திட்டங்களின் பெயர்கள் முதல் விருதுகள் வரை மத்திய அரசு நிறுவனங்கள் வரை, இந்தி பேசாதவர்களை மூச்சுத் திணறடிக்கும் அளவுக்கு இந்தி திணிக்கப்பட்டுள்ளது, இந்தியாவில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் குமட்டல்.

    இந்தியாவில் இந்தியின் ஆதிக்கம் தகர்க்கப்பட்ட பிறகும், பாதுகாப்பு அரணாக நின்றது தி.மு.க.தான் என்பதை வரலாறு நினைவில் கொள்ளும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல்-மந்திரி சித்தராமையா இன்று தாக்கல் செய்த 16-வது பட்ஜெட் ஆகும்.
    • 2025-2026-ம் ஆண்டுக்கு ரூ.4.09 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மத்திய அரசு நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்தது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) 7-ந்தேதி (இன்று) தாக்கல் செய்யப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி கர்நாடக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

    நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்த 16-வது பட்ஜெட் ஆகும்.

    2025-2026-ம் ஆண்டுக்கு ரூ.4.09 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வெளியான சில அறிவிப்புகள் சில...

    * தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தை போல் கர்நாடகா முழுவதும் அக்கா உணவகம், அக்கா கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்படும்.

    * சிறுபான்மை பெண்களுக்காக 2024-25 ஆம் ஆண்டில் காலியாக உள்ள வக்ஃப் நிலத்தில் 15 மகளிர் கல்லூரிகளையும், 2025-26 ஆம் ஆண்டில் மேலும் 16 கல்லூரிகளையும் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

    * அனைத்து மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா, பஞ்சாயத்து அலுவலகங்களிலும் அக்கா உணவகங்கள் திறக்கப்படும்.

    * கர்நாடகா முழுவதும் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் அதிகபட்சமாக ரூ.200 டிக்கெட் விலையை வசூலிக்கலாம்.

    * பெங்களூரு மெட்ரோ கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகிலுள்ள தேவனஹள்ளி வரை விரிவுபடுத்தப்படும்.

    * பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஹெப்பல் எஸ்டீம் மாலை சில்க் போர்டு சந்திப்பிலிருந்து ரூ.15,000 கோடி மதிப்பீட்டில் இணைக்க 18.5 கி.மீ நீளமுள்ள வடக்கு-தெற்கு சுரங்கப்பாதையை அரசு திட்டமிட்டுள்ளது.

    * பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பெயரை டாக்டர். மன்மோகன் சிங் பல்கலைக்கழகம் என மாற்றம்.

    * கன்னட மொழி திட்டங்களை ஊக்குவிப்பதற்காக அரசுக்கு சொந்தமாக OTT தளத்தை தொடங்குவதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார்.

    • மத்திய அமைச்சர் அமித் ஷா ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
    • வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு அமித் ஷா உரையாற்றினார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (CISF) ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் (RTC) செயல்பட்டு வருகிறது. மத்திய தொழில்துறை பாதுகாப்பு படைக்காக தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த பின் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று (மார்ச்07) CISF-ன் 56வது ஆண்டு எழுச்சி தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். மத்திய அமைச்சர் வருகையை ஒட்டி ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க.வினர் சார்பில் அமித் ஷாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    வரவேற்பு போஸ்டர்களில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு பதிலாக தமிழ் திரையுலகில் பிரபல நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதியின் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. ஏற்கனவே சிலமுறை பா.ஜ.க. போஸ்டர்களில் அமித் ஷாவுக்கு பதிலாக சந்தான பாரதி புகைப்படம் இடம்பெற்று இருந்தது.

    இந்த நிலையில், தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் மீண்டும் அமித் ஷாவுக்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வீரர்களின் எழுச்சி தின கொண்டாட்டத்தில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் அமித் ஷா வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    • கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
    • கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.

    அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமாரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார், (மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், எல்லாபுரம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 350 பெண் ஊழியர்கள் பங்கேற்ற கொண்டாட்ட விழாவில் எல்&டி நிறுவன தலைவர் சுப்ரமணியன் கலந்து கொண்டார்.
    • மாதவிடாய் விடுப்பு கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான விவரங்கள் மற்றும் அதன் தொடக்க தேதி, உட்பட எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை.

    எல்&டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் சமீபத்தில் 90 மணி நேரம் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், சுப்ரமணியன் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொறியில் துறையில் பிரபலமான எல்&டி நிறுவனத்தின் சார்பில் மும்பையில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. 350 பெண் ஊழியர்கள் பங்கேற்ற கொண்டாட்ட விழாவில் எல்&டி நிறுவன தலைவர் சுப்ரமணியன் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.



    இருப்பினும், இந்த அறிவிப்பானது நிதி மற்றும் தொழில்நுட்ப சேவைகள் பிரிவுகளைத் தவிர்த்து, நிறுவனத்தின் முக்கிய பொறியியல் மற்றும் கட்டுமானப் பிரிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்படுகிறது.

    மேலும், மாதவிடாய் விடுப்பு கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான விவரங்கள் மற்றும் அதன் தொடக்க தேதி, உட்பட எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், எல்&டி-யின் இந்த நடவடிக்கை இந்திய நிறுவனங்களிடையே வளர்ந்து வரும் போக்குடன் ஒத்துப்போகிறது.

    ஜொமாடோ, ஸ்விக்கி மற்றும் ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி போன்ற நிறுவனங்களும், பீகார், கேரளா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களும் ஏற்கனவே பெண்களின் ஆரோக்கியத்தை ஆதரிக்க இதே போன்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

    மாதவிடாய் விடுப்பு குறித்து இந்தியாவில் தற்போது தேசிய சட்டம் இல்லை என்றாலும், இந்த விஷயத்தில் ஒரு கொள்கையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 17 கனிமங்கள் சிறிய வகை கனிமங்களுக்கு நிலவரி விதிக்க வழி வகை செய்கிறது.
    • பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரி நிர்ணயம் செய்யப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழகத்தில் கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு நிலவரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த சட்டம், பழுப்புக்கரி, சுண்ணாம்புக்கல், சுண்ணாம்புக்களி, மாக்ன சைட், காரீயம் உள்ளிட்ட 13 வகை கனிமங்களை பெரிய வகை கனிமங்களாகவும், கரட்டுக்கல், சரளை அல்லது மண், வண்ண மற்றும் கருப்பு கருங்கல், கூழாங்கற்கள், மணல், படிகக்கல், தீக்களிமண், உருட்டு களிமண், களிமண், ஆற்று மணல், நொறுங்கிய கல், சுண்ணப்பாறை உள்ளிட்ட 17 கனிமங்கள் சிறிய வகை கனிமங்களுக்கு நிலவரி விதிக்க வழி வகை செய்கிறது.

    இதன்படி, பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரியும், சிறு கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரையும் வரி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    இதைத்தவிர்த்து, தமிழகத்தில் பதவிகாலம் முடிந்த 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    இந்த இரண்டு சட்ட மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    • பெண் சிசுக் கொலையைத் தடுக்க 'தொட்டில் குழந்தை திட்டம்'.
    • அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெண்ணின் விடுதலையைப் பறைசாற்றியதில் மகாகவி பாரதிக்குப் பெரும் பங்கு உண்டு. பெண்ணின் விடுதலைக்காக அவர் எழுச்சியூட்டும் வகையில் பாடிய பாடல் வரிகளை உள்வாங்கி, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக, பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களைத் தீட்டி அவற்றையெல்லாம் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியவர் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா.

    "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற தாரக மந்திரத்தை முழங்கி, தமிழக அரசியல் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த புரட்சித் தலைவி அம்மாவின் தலைமையிலான பொற்கால ஆட்சியில், பெண்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக செயல்படுத்திய திட்டங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    பெண் சிசுக் கொலையைத் தடுக்க 'தொட்டில் குழந்தை திட்டம்'. பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம். அனைத்து மகளிர் காவல் நிலையங்கள். பெண் கமாண்டோ படை. பெண்களின் பணிச் சுமையைக் குறைத்திட விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம்.

    தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம். அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம். மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினி வழங்கும் திட்டம். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு.பெண் கல்வியை ஊக்குவிக்க ரொக்கப் பரிசு. நாட்டிலேயே முதன் முறையாக பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்.

    கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம். மகளிர் சுயஉதவிக் குழுத் திட்டம். அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம். பெண் உடல் எடை பரிசோதனைத் திட்டம்.

    பெண்களுக்கான மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், மகப்பெறு உதவித் தொகையை 12 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தியது. பெண் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 3 மாதத்தில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தியது.

    பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை. பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம். அம்மாவின் பெயரை இன்ஷியலாகப் பயன்படுத்தலாம். மகளிர் பாதுகாப்பை உறுதி செய்திட 'காவலன் செயலி' திட்டம். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட 13 அம்ச திட்டம்.

    இந்தியாவிலேயே, தமிழ் நாட்டு மக்களின் நலன்களுக்காகவும், பெண்களின் நலன்களுக்காகவும் சிறப்பான திட்டங்களை அறிவிப்ப தில் முதன்மையாகத் திகழ்ந்தவர் பஅம்மா தான் என்பதை நான் இங்கு பெருமையோடு நினைவு கூறுகிறேன்.

    இன்றைக்கு பெண்களே இல்லாத துறை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். இன்றைய பெண்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணா கவும், புரட்சிப் பெண்ணாகவும் விளங்கி வருகின்றார்கள். பெண்ணுரிமை வாழட்டும்! வளரட்டும்! என்ற வாழ்த்துதலோடு, மீண்டும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அனுமதியின்றி வேலைக்கு செல்லாமல் இருப்பது போராட்டமாக கருதப்படும்.
    • எந்த ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யக்கூடாது.

    தமிழக அரசின் ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட நடத்தை விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

    * அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது.

    * அரசு ஊழியர்கள் அரசியல் கட்சி, அமைப்பில் உறுப்பினராக இருக்கக்கூடாது.

    * அனுமதியின்றி வேலைக்கு செல்லாமல் இருப்பது போராட்டமாக கருதப்படும்.

    * அனுமதியின்றி, அரசு அலுவலக வளாகத்திலோ, அதையொட்டியோ ஊர்வலம், கூட்டம் நடத்தக்கூடாது.

    * வேலைநிறுத்தத்தை தூண்டும் செயல்களிலும் ஈடுபடக்கூடாது.

    * எந்த ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யக்கூடாது.

    * சமூகத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும், எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து கையெழுத்து வாங்குவதாக புகார் வருகிறது.
    • பா.ஜ.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.

    திருவள்ளூர் :

    திருவள்ளூரில் புத்தக கண்காட்சி திருவிழா தொடங்கியது. புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து கையெழுத்து வாங்குவதாக புகார் வருகிறது. பா.ஜ.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.

    • மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது.
    • கையெழுத்து இயக்கம் நடத்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

    மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது.

    தமிழக பா.ஜ.க. சார்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக 'சமக்கல்வி எங்கள் உரிமை' எனும் கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    இதனையடுத்து நேற்று சென்னையில் மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும், பா.ஜ.க., தி.மு.க.வினரின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் சென்னை காரப்பாக்கத்தில் பா.ஜ.க.வினர் பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட் கொடுத்து மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மத்திய சென்னை தொகுதிக்கு நடந்த பாராளுமன்ற தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
    • வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

    சென்னை:

    கடந்த ஆண்டு நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு தயாநிதி மாறன் வெற்றி பெற்றார். இதையடுத்து எம்.பி.யாக பதவியேற்று பணியாற்றி வருகிறார்.

    இதற்கிடையே, மத்திய சென்னை தொகுதிக்கு நடந்த பாராளுமன்ற தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி அத்தொகுதியில் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளராக வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்து வந்து சென்னை உயர்நீதிமன்றம், மத்திய சென்னை மக்களவை தொகுதியில் எம்.பி. தயாநிதி மாறனின் வெற்றி செல்லும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

    மேலும், தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணமும் இல்லை எனக்கூறி மனுவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

    ×