என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • 350 பெண் ஊழியர்கள் பங்கேற்ற கொண்டாட்ட விழாவில் எல்&டி நிறுவன தலைவர் சுப்ரமணியன் கலந்து கொண்டார்.
    • மாதவிடாய் விடுப்பு கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான விவரங்கள் மற்றும் அதன் தொடக்க தேதி, உட்பட எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை.

    எல்&டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் சமீபத்தில் 90 மணி நேரம் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், சுப்ரமணியன் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொறியில் துறையில் பிரபலமான எல்&டி நிறுவனத்தின் சார்பில் மும்பையில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. 350 பெண் ஊழியர்கள் பங்கேற்ற கொண்டாட்ட விழாவில் எல்&டி நிறுவன தலைவர் சுப்ரமணியன் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.



    இருப்பினும், இந்த அறிவிப்பானது நிதி மற்றும் தொழில்நுட்ப சேவைகள் பிரிவுகளைத் தவிர்த்து, நிறுவனத்தின் முக்கிய பொறியியல் மற்றும் கட்டுமானப் பிரிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்படுகிறது.

    மேலும், மாதவிடாய் விடுப்பு கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான விவரங்கள் மற்றும் அதன் தொடக்க தேதி, உட்பட எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், எல்&டி-யின் இந்த நடவடிக்கை இந்திய நிறுவனங்களிடையே வளர்ந்து வரும் போக்குடன் ஒத்துப்போகிறது.

    ஜொமாடோ, ஸ்விக்கி மற்றும் ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி போன்ற நிறுவனங்களும், பீகார், கேரளா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களும் ஏற்கனவே பெண்களின் ஆரோக்கியத்தை ஆதரிக்க இதே போன்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

    மாதவிடாய் விடுப்பு குறித்து இந்தியாவில் தற்போது தேசிய சட்டம் இல்லை என்றாலும், இந்த விஷயத்தில் ஒரு கொள்கையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 17 கனிமங்கள் சிறிய வகை கனிமங்களுக்கு நிலவரி விதிக்க வழி வகை செய்கிறது.
    • பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரி நிர்ணயம் செய்யப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழகத்தில் கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு நிலவரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த சட்டம், பழுப்புக்கரி, சுண்ணாம்புக்கல், சுண்ணாம்புக்களி, மாக்ன சைட், காரீயம் உள்ளிட்ட 13 வகை கனிமங்களை பெரிய வகை கனிமங்களாகவும், கரட்டுக்கல், சரளை அல்லது மண், வண்ண மற்றும் கருப்பு கருங்கல், கூழாங்கற்கள், மணல், படிகக்கல், தீக்களிமண், உருட்டு களிமண், களிமண், ஆற்று மணல், நொறுங்கிய கல், சுண்ணப்பாறை உள்ளிட்ட 17 கனிமங்கள் சிறிய வகை கனிமங்களுக்கு நிலவரி விதிக்க வழி வகை செய்கிறது.

    இதன்படி, பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரியும், சிறு கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரையும் வரி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    இதைத்தவிர்த்து, தமிழகத்தில் பதவிகாலம் முடிந்த 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    இந்த இரண்டு சட்ட மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    • பெண் சிசுக் கொலையைத் தடுக்க 'தொட்டில் குழந்தை திட்டம்'.
    • அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெண்ணின் விடுதலையைப் பறைசாற்றியதில் மகாகவி பாரதிக்குப் பெரும் பங்கு உண்டு. பெண்ணின் விடுதலைக்காக அவர் எழுச்சியூட்டும் வகையில் பாடிய பாடல் வரிகளை உள்வாங்கி, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக, பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களைத் தீட்டி அவற்றையெல்லாம் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியவர் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா.

    "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற தாரக மந்திரத்தை முழங்கி, தமிழக அரசியல் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த புரட்சித் தலைவி அம்மாவின் தலைமையிலான பொற்கால ஆட்சியில், பெண்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக செயல்படுத்திய திட்டங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    பெண் சிசுக் கொலையைத் தடுக்க 'தொட்டில் குழந்தை திட்டம்'. பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம். அனைத்து மகளிர் காவல் நிலையங்கள். பெண் கமாண்டோ படை. பெண்களின் பணிச் சுமையைக் குறைத்திட விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம்.

    தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம். அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம். மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினி வழங்கும் திட்டம். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு.பெண் கல்வியை ஊக்குவிக்க ரொக்கப் பரிசு. நாட்டிலேயே முதன் முறையாக பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்.

    கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம். மகளிர் சுயஉதவிக் குழுத் திட்டம். அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம். பெண் உடல் எடை பரிசோதனைத் திட்டம்.

    பெண்களுக்கான மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், மகப்பெறு உதவித் தொகையை 12 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தியது. பெண் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 3 மாதத்தில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தியது.

    பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை. பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம். அம்மாவின் பெயரை இன்ஷியலாகப் பயன்படுத்தலாம். மகளிர் பாதுகாப்பை உறுதி செய்திட 'காவலன் செயலி' திட்டம். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட 13 அம்ச திட்டம்.

    இந்தியாவிலேயே, தமிழ் நாட்டு மக்களின் நலன்களுக்காகவும், பெண்களின் நலன்களுக்காகவும் சிறப்பான திட்டங்களை அறிவிப்ப தில் முதன்மையாகத் திகழ்ந்தவர் பஅம்மா தான் என்பதை நான் இங்கு பெருமையோடு நினைவு கூறுகிறேன்.

    இன்றைக்கு பெண்களே இல்லாத துறை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். இன்றைய பெண்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணா கவும், புரட்சிப் பெண்ணாகவும் விளங்கி வருகின்றார்கள். பெண்ணுரிமை வாழட்டும்! வளரட்டும்! என்ற வாழ்த்துதலோடு, மீண்டும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அனுமதியின்றி வேலைக்கு செல்லாமல் இருப்பது போராட்டமாக கருதப்படும்.
    • எந்த ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யக்கூடாது.

    தமிழக அரசின் ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட நடத்தை விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

    * அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது.

    * அரசு ஊழியர்கள் அரசியல் கட்சி, அமைப்பில் உறுப்பினராக இருக்கக்கூடாது.

    * அனுமதியின்றி வேலைக்கு செல்லாமல் இருப்பது போராட்டமாக கருதப்படும்.

    * அனுமதியின்றி, அரசு அலுவலக வளாகத்திலோ, அதையொட்டியோ ஊர்வலம், கூட்டம் நடத்தக்கூடாது.

    * வேலைநிறுத்தத்தை தூண்டும் செயல்களிலும் ஈடுபடக்கூடாது.

    * எந்த ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யக்கூடாது.

    * சமூகத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும், எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து கையெழுத்து வாங்குவதாக புகார் வருகிறது.
    • பா.ஜ.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.

    திருவள்ளூர் :

    திருவள்ளூரில் புத்தக கண்காட்சி திருவிழா தொடங்கியது. புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து கையெழுத்து வாங்குவதாக புகார் வருகிறது. பா.ஜ.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.

    • மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது.
    • கையெழுத்து இயக்கம் நடத்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

    மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது.

    தமிழக பா.ஜ.க. சார்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக 'சமக்கல்வி எங்கள் உரிமை' எனும் கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    இதனையடுத்து நேற்று சென்னையில் மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும், பா.ஜ.க., தி.மு.க.வினரின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் சென்னை காரப்பாக்கத்தில் பா.ஜ.க.வினர் பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட் கொடுத்து மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மத்திய சென்னை தொகுதிக்கு நடந்த பாராளுமன்ற தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
    • வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

    சென்னை:

    கடந்த ஆண்டு நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு தயாநிதி மாறன் வெற்றி பெற்றார். இதையடுத்து எம்.பி.யாக பதவியேற்று பணியாற்றி வருகிறார்.

    இதற்கிடையே, மத்திய சென்னை தொகுதிக்கு நடந்த பாராளுமன்ற தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி அத்தொகுதியில் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளராக வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்து வந்து சென்னை உயர்நீதிமன்றம், மத்திய சென்னை மக்களவை தொகுதியில் எம்.பி. தயாநிதி மாறனின் வெற்றி செல்லும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

    மேலும், தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணமும் இல்லை எனக்கூறி மனுவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

    • சர்வதேச அளவில் வர்த்தக போர் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
    • இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளன.

    பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை சரிவுடன் தொடங்கியது. சர்வதேச அளவில் வர்த்தக போர் ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகள் காலையிலேயே சரிவை சந்தித்துள்ளன.

    பி.எஸ்.இ. பென்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் 243.51 புள்ளிகள் சரிந்து 74,096.58 புள்ளிகளையும், என்.எஸ்.இ. நிஃப்டி 53.35 புள்ளிகள் சரிந்து 22,491.35 ஆக உள்ளது.

    சென்செக்ஸ்-ஐ பொருத்தவரை இண்டஸ்இண்ட் வங்கி, என்.டி.பி.சி., ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ், டெக் மஹிந்திரா, ஜொமாட்டோ, பவர் க்ரிட், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இன்ஃபோசிஸ், ஐ.டி.சி., இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பின்தங்கியுள்ளன.

    மறுபுறம் டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீல், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்டவை லாபம் ஈட்டியுள்ளன.

    • பிணையில் வருவதை "தியாகமாக" கருதும் இந்த "ஊழல் திலகங்களின்" ஆட்சியில், நேர்மையெல்லாம் எப்படி எதிர்பார்ப்பது?
    • ஊழல் பேர்வழிகளின் லஞ்சப்பைகளை மட்டுமே நிரப்பியுள்ளது.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (TASMAC) தலைமை அலுவலகத்தில் இன்று 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.

    இதுபோக, தி.மு.க.வினருடன் தொடர்புள்ள சாராய நிறுவனங்கள், பத்து ரூபாய் பாட்டில் புகழ் அமைச்சர் தியாகி பாலாஜிக்கு தொடர்புள்ள இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

    ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்று கேட்டால், மேற்கண்ட செய்திகள் உணர்த்தும் "கலெக்ஷன்- கமிஷன்- கரப்ஷன்" தான் பதில்!

    விஞ்ஞான ஊழலை நிறுவனமயமாக்கி, தமிழ்நாடு அரசு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை வரும் வெட்கக்கேடான நிலைக்கு ஸ்டாலின் மாடல் அரசு தள்ளியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    மக்களுக்கு சேரவேண்டிய நன்மைகளை முடக்கி, மக்களை நேரடியாக பாதிக்கின்ற ஊழல்களின் ஊற்றிடமான தி.மு.க.-வின் ஆட்சியில், அதுவும், ஊழல் செய்து, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, பிணையில் வருவதை "தியாகமாக" கருதும் இந்த "ஊழல் திலகங்களின்" ஆட்சியில், நேர்மையெல்லாம் எப்படி எதிர்பார்ப்பது?

    10 ஆண்டுகால அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கிய கடன்கள், மக்கள் நலத் திட்டங்களாக தமிழ்நாடெங்கும் மிளிர, 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி வாங்கிய 3.5 லட்சம் கோடி கடனோ, இத்தகைய ஊழல் பேர்வழிகளின் லஞ்சப்பைகளை மட்டுமே நிரப்பியுள்ளது.

    அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்!

    இவர்களுக்கான பதிலை 2026 களம் சொல்லும்!

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதுவரை 250க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்துள்ளனர்.
    • கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதுதொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

    இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதுவரை 250க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்துள்ளனர். கடந்த வாரமும் சிலருக்கு சம்மன் அனுப்பி, அவர்களிடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி, அவர்கள் கூறியவற்றை வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் கொடநாடு வழக்கு தொடர்பாக கொடநாடு எஸ்டேட்டின் மேலாளர் நடராஜன் விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

    இதையடுத்து அவர் நேற்று கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

    அவரிடம் போலீசார், சசிகலா கொடநாடு எஸ்டேட் வந்தபோது பங்களாவில் உள்ள அறைகளை பார்த்து விட்டு ஏதாவது கேட்டாரா? கணினி ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி, விசாரணை மேற்கொண்டனர். கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது.

    இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.

    அதில் வருகிற 11-ந் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொடநாடு வழக்கில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பலரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீண்டும் விசாரணை தீவிரமடைந்துள்ளதால் கொடநாடு வழக்கு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொழில்முறை மன அழுத்தம் காரணமாக தூங்க முடியாமல் தவித்த நான் அதற்கு சிகிச்சை பெற்று வருகிறேன்.
    • என் கணவரின் ஆதரவுடன் இதையெல்லாம் என்னால் செய்ய முடிகிறது.

    சென்னையை சேர்ந்த பிரபல சினிமா பாடகி கல்பனா. ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் மயக்க நிலையில் மீட்கப்பட்டார். கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தற்போது அவர் குணமடைந்து வருகிறார். அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

    எங்கள் குடும்பத்தை பற்றி ஊடகங்களில் தவறான பிரசாரம் பரப்பப்படுகிறது. நான் அதை அனைவருக்கும் விளக்க விரும்புகிறேன். நானும் என் கணவரும் மகளும் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். எனக்கு 45 வயது. நான் முனைவர் பட்டமும், எல்.எல்.பி பட்டமும் படித்து வருகிறேன்.

    என் கணவரின் ஆதரவுடன் இதையெல்லாம் என்னால் செய்ய முடிகிறது. எனக்கு அவர் மேல் எந்த கோபமும் இல்லை எங்கள் குடும்பம் மிகவும் நெருக்கமானது. தொழில்முறை மன அழுத்தம் காரணமாக தூங்க முடியாமல் தவித்த நான் அதற்கு சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவர்கள் பரிந்துரைத்தபடி தான் அதிக அளவு மாத்திரைகளை எடுத்து கொண்டேன். அதனால் தான் நான் மயங்கி விழுந்தேன்.

    என் கணவர் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கை, காலனி வாசிகள் மற்றும் காவல்துறையினரின் உதவி காரணமாக நான் இங்கே உங்கள் முன் இருக்கிறேன். விரைவில் மீண்டும் எனது பாடல்களால் உங்களை மகிழ்விப்பேன். அவருடைய ஆதரவினால் தான் நான் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்குகிறேன். என் வாழ்க்கையின் சிறந்த பரிசு என் கணவர் எனது உடல்நலம் குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்று அவர் வீடியோவில் கூறினார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த 4-ந்தேதியில் இருந்து விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினமும் அதேபோல் விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 65-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. நேற்று காலை 9.30 மணி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.45-ம், சவரனுக்கு ரூ.360-ம் குறைந்து இருந்த நிலையில், நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டு, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து இருந்தது.

    அதன்படி, நேற்று ஒரே நாளில் தங்கம் விலை குறைந்து, மீண்டும் ஏறி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 60-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,030-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,240-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    06-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480

    05-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520

    04-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080

    03-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    02-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    06-03-2025- ஒரு கிராம் ரூ.108

    05-03-2025- ஒரு கிராம் ரூ.107

    04-03-2025- ஒரு கிராம் ரூ.107

    03-03-2025- ஒரு கிராம் ரூ.106

    02-03-2025- ஒரு கிராம் ரூ.105

    ×