என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வீடியோவாக வெளியிடப்பட்டது.
    • இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது. இந்த நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக படக்குழு அறிவித்து வந்தது.

    இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் படம் தொடர்பாக புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.


     

    ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முதற்கட்டமாக 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஜெயிலர் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வீடியோவாக வெளியிடப்பட்டது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூப்பர் முதலமைச்சரின் ஆலோசனையில் தமிழ்நாடு அரசு பின்வாங்கியது.
    • யார் அந்த சூப்பர் முதலமைச்சர் என கனிமொழி பதிலளிக்க வேண்டும்

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்கியது.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.

    தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. 

    பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யு-டர்ன் போட்டது. கடந்தாண்டு மார்ச் 15இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டு சூப்பர் முதலமைச்சரின் ஆலோசனையில் அரசு பின்வாங்கியது. சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர். யார் அந்த சூப்பர் முதலமைச்சர் என கனிமொழி பதிலளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • ஸ்மார்ட் சிட்டி அமைப்பு ரூ.620 கோடிக்கான திட்ட பணிகளை பல்வேறு துறைகள் மூலம் நிறைவேற்றி வருகிறது.
    • புதிய ஒருங்கிணைந்த பஸ் வளாகம் விரைவில் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

    பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று கவர்னர் கைலாஷ் நாதன் உரையாற்றினார். இதற்காக அவர் காலை 9.25 மணிக்கு புதுவை சட்டமன்ற வளாகத்துக்கு வந்தார். அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    பின்னர் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்று சட்டசபை மைய மண்டபத்துக்கு அழைத்து சென்றார். அங்கு சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமர்ந்தார். காலை 9.30மணிக்கு தமிழ்தாய் வாழ்த்துடன் சபை நிகழ்வுகள் தொடங்கியது. தொடர்ந்து கவர்னர் கைலாஷ்நாதன் தமிழில் உரையாற்றினார். அவரது உரையில் கூறியிருப்பதாவது:-

    ஏ.எப்.டி. உதவி திட்டம், நபார்டு வங்கிகள் மூலம் தற்போது நடைபெறும் பணிகளுக்கு ரூ.659 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் ரூ.8 ஆயிரத்து 467 கோடிக்கான புதிய பணிகளும் மேற்கொள்ளப்படும். பிரதமர் ஏக்தா மால் ஏற்படுத்த ரூ.104 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

    புதுவை விமான நிலையத்தின் ஓடுதளத்தை 3 ஆயிரம் மீட்டராக விரிவுபடுத்தவும், ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி அமைப்பு ரூ.620 கோடிக்கான திட்ட பணிகளை பல்வேறு துறைகள் மூலம் நிறைவேற்றி வருகிறது. இதில் ரூ.175 கோடிக்கான பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் ரூ.445 கோடிக்கான பணிகள் நடைபெற உள்ளது.

    புதிய ஒருங்கிணைந்த பஸ் வளாகம் விரைவில் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இதேபோல ரூ.99 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மக்கள் சேவைக்கு முன்னோடியாக அமையும்.

    அரசு எடுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையால் 2020-21ம் ஆண்டில் ரூ.8 ஆயிரத்து 418.96 கோடியிலிருந்து மாநில வருவாய், 2023-24ம் ஆண்டில் ரூ.11 ஆயிரத்து 311.92 கோடியாக உயர்ந்து 34.36 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.

    நமது பொருளாதாரத்தின் அளவு கடந்த 5 ஆண்டில் 46.44 சதவீதம் அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டு சராசரி வளர்ச்சி வீதமான 9.56 சதவீதத்தை எட்டியுள்ளது. 2020-21ம் ஆண்டில் 2.21 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம் 2024-25ம் ஆண்டில் 8.81 சதவீதத்தை எட்டியுள்ளது.

    தற்போதைய நிலையில் தனி நபர் வருமானம் 5.33 சதவீதம் அதிகரித்து கடந்த ஆண்டின் ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 354ல் இருந்து ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்து 680ஐ அடைந்துள்ளது. ஒவ்வொரு தனிநபரிடமும் கூடுதலாக ரூ.15 ஆயிரம் வருவாய் தரவுகள் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

    • சத்தீஸ்கரில் இன்று மொத்தம் 15 இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • சோதனையின் மூலம் மதுபான ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் மீதான பிடி இறுகியுள்ளது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகல் இருந்தபோது கடந்த 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மதுபானங்களை சட்ட விரோதமாக விற்று சுமார் ரூ.2,100 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுபான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல் மகன் சைதன்யா பாகல் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இதற்காக இன்று அதிகாலையே அமலாக்கத்துறை அதிகாரிகள் பிலாய், பத்மநகரில் உள்ள சைதன்யா பாகல் வீட்டுக்கு வந்தனர். உடனடியாக அவரது வீட்டில் சோதனை நடத்த தொடங்கினார்கள். சோதனை நடந்த போது வீட்டில் இருந்த யாரையும் வெளியே செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை.

    இதேபோல் சத்தீஸ்கரில் இன்று மொத்தம் 15 இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மதுபான ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில் பணமோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரின் 15 இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

    சைதன்யா பாகல் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் அவருக்கு விவசாயத்திலும் ஆர்வம் உள்ளது. அவருக்கு 3 வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. அவரது மனைவி கியாதியும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.

    இந்த சோதனையின் மூலம் மதுபான ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் மீதான பிடி இறுகியுள்ளது.

    • இந்த வீடியோவை பகிர்ந்து கடைசியில் பாஜக உண்மையை ஒப்புக்கொண்டது என விமர்சித்துள்ளது.
    • அவர் கேமரா கலைத்திறன், டெலிப்ராம்ப்டர்கள், உடைகள் மற்றும் மலர்ச்சியூட்டும் பேச்சுகளில் நிபுணர்.

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடந்த IIFA திரைப்பட விருது விழாவில் அம்மாநில பாஜக முதல்வர் பஜன்லால் சர்மா கலந்துகொண்டார்.

    நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் அவரிடம், உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேள்வி கேட்டனர். இதைக் கேட்டதும் முதல்வர் சிரித்துக் கொண்டே பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை அவர் சொன்னார்.

    இதைப் கேட்டு எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். இந்த வீடியோ இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் இந்த வீடியோவை பகிர்ந்து, ஒரு வழியாக பாஜக உண்மையை ஒப்புக்கொண்டது என விமர்சித்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோட்டாசாரா, மோடி ஒரு தலைவர் அல்ல, ஒரு நடிகர் என்று நாங்கள் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறோம்.

    தாமதமாக இருந்தாலும், பாஜக அரசாங்கத்தின் முதலமைச்சர்கள் கூட மோடி ஒரு நடிகர், மக்கள் தலைவர் அல்ல என்று கூறத் தொடங்கியுள்ளனர். அவர் கேமரா கலைத்திறன், டெலிப்ராம்ப்டர்கள், உடைகள் மற்றும் மலர்ச்சியூட்டும் பேச்சுகளில் நிபுணர் என்று விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேராவும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    • மக்களவையின் மையப்பகுதியில் ‘தமிழ்நாட்டுக்கு நீதி வேண்டும்’ என தமிழக எம்.பி.க்கள் முழக்கம் இட்டனர்.
    • மத்திய அமைச்சரின் பேச்சுக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்கியது.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசின் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக நிதி விடுவிக்காதது பழிவாங்கும் செயல் என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் காட்டமாக பேசினார்.

    இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது. PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது" என்று தெரிவித்தார்.

    மத்திய அமைச்சரின் பேச்சுக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டாக எதிர்ப்பு தெரிவித்து அவைத்தலைவரின் இருக்கைக்கு அருகே சென்று குரல் எழுப்பினர். அவையின் மையப்பகுதியில் 'தமிழ்நாட்டுக்கு நீதி வேண்டும்' என தமிழக எம்.பி.க்கள் முழக்கம் இட்டனர்.

    இதனையடுத்து, தமிழக எம்.பி.க்களின் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

    • தமிழ்நாட்டில் 8 முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது.
    • முதல் பொதுக்கூட்டம் வருகிற 23-ந்தேதி திருச்சியில் நடைபெறுகிறது.

    சென்னை:

    தேசிய கல்வி கொள்கை வலியுறுத்தும் மும்மொழி திட்டத்தை அரசு பள்ளிகளில் கொண்டு வர வேண்டும் என்று பா.ஜ.க. வற்புறுத்துகிறது. ஆனால் இருமொழி கொள்கையே தங்கள் லட்சியம் என்பதில் தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது.

    இதையடுத்து பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை பா.ஜ.க. தொடங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து வாங்க திட்டமிட்டுள்ளார்கள். மே மாதம் தான் இந்த திட்டம் முடிகிறது.

    இதற்கிடையே மும்மொழி திட்டம் என்ன சொல்கிறது? இந்தியை மட்டும் திணிக்கவில்லை. தமிழ், ஆங்கிலத்துடன் கூடுதலாக ஒரு மொழியைத்தான் கற்றுக்கொள்ள சொல்கிறது.

    இதுபற்றி பொதுமக்களிடம் மேலும் விவரிக்க விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தி பேசுவதற்கு அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.

    இதற்காக தமிழ்நாட்டில் 8 முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது.

    அதன்படி முதல் பொதுக்கூட்டம் வருகிற 23-ந்தேதி திருச்சியில் நடைபெறுகிறது. மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள் தேதி வாரியாக வருமாறு:-

    மார்ச் 25-ந்தேதி- திருநெல்வேலி, ஏப்ரல் 5-ந்தேதி- வேலூர், ஏப்ரல் 12-ந்தேதி-காஞ்சிபுரம், ஏப்ரல் 19-ந்தேதி- சேலம், ஏப்ரல் 26-ந்தேதி சென்னை, மே 3-ந்தேதி- மதுரை, மே 11-ந்தேதி- கோவை.

    இந்த கூட்டங்கள் நடைபெறும் ஒவ்வொரு கோட்டத்திலும் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை கூட்டத்தில் பங்கேற்க செய்யும் வேலையில் கட்சியினர் இப்போதே தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள்.

    • மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
    • முதற்கட்ட விசாரணையில் கபடி போட்டி விளையாடுவதில் ஏற்பட்ட மோதலால் இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் தங்க கணேஷ். இவரது மகன் தேவேந்திரன் (வயது 17).

    இவர் நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதற்காக ஊரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்சில் ஏறி ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருந்தார்.

    அரியநாயகிபுரத்திற்கு அடுத்த ஊரான கெட்டியம்மாள்புரம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 பேர் கும்பல் பஸ்சை வழிமறித்து உள்ளே புகுந்தது. அந்த கும்பல் பஸ்சில் இருந்த தேவேந்திரனை இழுத்து வெளியே போட்டுள்ளனர். மேலும் கையில் வைத்திருந்த அரிவாளால் தேவேந்திரனை சரமாரியாக அந்த மர்ம கும்பல் வெட்டியுள்ளது.

    இதில் தேவேந்திரனுக்கு தலை மற்றும் கையில் வெட்டுகள் விழுந்து காயம் ஏற்பட்டது. இதனை பஸ்சில் இருந்தவர்கள் பார்த்து சத்தம் போடவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதுகுறித்து பஸ்சில் வந்தவர்கள் ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராம

    கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பத்மபநாப பிள்ளை மற்றும் போலீசார் வெட்டுக்காயங்களுடன் கிடந்த தேவேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் கபடி போட்டி விளையாடுவதில் ஏற்பட்ட மோதலால் இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதனிடையே, மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து விசாரிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

    • சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் கேப்டன் ரோகித் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
    • ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 251 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது.

    கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். 76 ரன்கள் சேர்த்து அணி வெற்றி பெற உதவிய ரோகித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றதற்கு ரோகித் சர்மாவை பாராட்டி பாஜக இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதில், "காங்கிரஸ் கட்சி எங்கள் கேப்டனை கேலி செய்ய முயன்றது, ஆனால் அவர் தனது பேட்டை பயன்படுத்தி சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளால் வெறுப்பை பரப்பியவர்களை அமைதிப்படுத்தினார்" என்று பாஜக தெரிவித்துள்ளது.

    மேலும், அந்த வீடியோவில் ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது பதிவிட்ட எக்ஸ் பதிவையும் பாஜக இணைத்துள்ளது.

    முன்னதாக ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது கடுமையாக விமர்சனம் செய்தார். அதில், "ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன்," என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இவரது கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரரது கருத்துக்கு பாஜக முதல் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது, ரோகித் சர்மா குறித்த பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அந்நாட்டு பிரதமர் ஜோதம் நபாட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • இரண்டு முறையும் இன்டர்போல் தரப்பில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது மேட்ச் பிக்சிங் முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து, கைதில் இருந்து தப்பிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார். தற்போது லலித் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.

    இதற்கிடையே லலித் மோடி ஆஸ்திரேலியாவுக்கு அருகே தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டு குடியுரிமை பெற்று தஞ்சம் அடைத்தார். இதனையடுத்து, கடந்த வாரம் பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகிய லலித் மோடி, தனது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க விண்ணப்பித்திருந்தார்.

    இந்த நிலையில், லலித் மோடியின் பாஸ்போர்ட்டை உடனடியாக ரத்து செய்யுமாறு குடியுரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜோதம் நபாட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், லலித் மோடி குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தபோது அவரின் இன்டர்போல் குற்றப்பின்னணி தரவுகளில் அவர் எந்த குற்றவியல் தண்டனையும் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் லலித் மோடி குறித்து எச்ச்சரிக்கை அறிவிப்பை வெளியிட இந்திய அதிகாரிகள் இன்டர்போலிடம் கோரிக்கை வைத்திருப்பது குறித்த தகவல் எனக்கு கிடைத்தது. அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் இரண்டு முறையும் இன்டர்போல் தரப்பில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், இந்திய அதிகாரிகளின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு அவரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் லலித் மோடி தற்போது மேலும் சிக்கலில் மாட்டியுள்ளார். அவரை நாடு கடத்த இந்திய அதிகாரிகள் கோரிக்கை வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

    • இதையடுத்து மாணவியை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள கோர்ட்டு உத்தரவிட்டது.
    • ட்ரோன்கள் மூலமாகவும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கர்நாடகா மாநிலம் பைவளிகே பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (வயது42). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. இவரது பக்கத்து வீட்டில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் இருந்திருக்கிறார்.

    பக்கத்து வீட்டுக்காரர் என்ற முறையில் மாணவியின் வீட்டுக்கு பிரதீப் அடிக்கடி சென்றிருக்கிறார். மேலும் மாணவியிடம் சகஜமாக பேசி பழகி வந்திருக்கிறார். சகோதர பாசம் என்ற அடிப்படையில் அவர் பழகியதால், அவர்களின் பழக்கத்தை யாரும் சந்தேகப்படவில்லை.

    இந்தநிலையில் கடந்த மாதம்(பிப்ரவரி) 12-ந்தேதி வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் அவளது செல்போனை தொடர்பு கொண்டனர். முதலில் அழைப்பு சென்ற நிலையில், சிறிது நேரத்திற்கு பிறகு செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்துவிட்டது.

    மாணவி மாயமாகியிருந்த அதே வேளையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆட்டோ டிரைவரான பிரதீப்பையும் காணவில்லை. இந்தநிலையில் மாணவி, தனது உறவினர் ஒருவரின் செல்போனுக்கு ஆட்டோ டிரைவர் நெருக்கமாக இருக்கும் 50-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை அனுப்பினார்.

    இதனால் மாணவி ஆட்டோ டிரைவருடன் சென்றிருப்பதை மாணவியின் குடும்பத்தினர், அறிந்தனர். அவர்கள் வீடு இருக்கக்கூடிய பகுதி கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதி என்பதால், மாணவி மாயமானது குறித்து கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கும்பலே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவி மற்றும் பிரதீப்பை தேடினர். ஆனால் அவர்கள் மாயமாகி பல நாட்கள் ஆகியும் போலீசார் கண்டுபிடிக்காததால், மாணவியின் குடும்பத்தினர் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

    இதையடுத்து மாணவியை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் மாணவியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். மாணவி இருக்கும் இடத்தை கண்டறிய இருவரின் செல்போனை கண்காணித்தபடி இருந்தனர்.

    அதில் அவர்களின் வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள வனப்பகுதியை காண்பித்தது. இதையடுத்து வனப்பகுதிக்குள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ட்ரோன்கள் மூலமாகவும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் மாணவி மற்றும் ஆட்டோ டிரைவர் ஆகிய இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கேரள போலீசார் அந்த இடத்துக்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் சம்பவ இடத்தில் தற்கொலை செய்துகொண்டதற்கான கடிதம் எதுவும் சிக்கவில்லை.

    இருவரின் செல்போன்கள், கத்தி, சாக்லேட் ஆகியவையே கிடந்தன. மேலும் உடல் அழுகிய நிலையிலும் இல்லை. போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்து இருவரும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாயமான 25 நாட்களுக்கு பிறகு 10-ம் வகுப்பு மாணவி, ஆட்டோ டிரைவருடன் காட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பேச்சுவார்த்தை முடிவதற்குள் அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே வந்துவிட்டார்.
    • உதவிகளை நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவிட்டிருந்தார்.

    ரஷியாவுடனான போர் நிறுத்தம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சவுதி அரேபியா வருகிறார். சவுதி அரேபியாவில் வைத்து உக்ரைன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையே ரஷியாவுடனான போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. இதற்காக அமெரிக்கா சென்றிருந்த அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், பேச்சுவார்த்தை முடிவதற்குள் அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே வந்துவிட்டார்.

    இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் உக்ரைன் இடையே பரபர சூழல் உருவானது. இதன் காரணமாக ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வந்த உதவிகளை நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சவுதி மன்னர் முகமது பின் சல்மானை இன்று (திங்கள் கிழமை) சந்திக்கிறார். இந்த சந்திப்பை தொடர்ந்து, நாளை (செவ்வாய் கிழமை) அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இன்று சவுதி அரேபியா வருகிறார். உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ஜெட்டா நகரில் நடைபெறுகிறது.

    போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது, அமைதி ஒப்பந்தத்திற்கான கட்டமைப்புகளை இறுதி செய்வது மற்றும் முதற்கட்டமாக போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க மத்திய கிழக்கு செயலாளர் ஸ்டீவ் விட்கோஃப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், எங்கள் தரப்பு விருப்பங்கள் சரியான முறையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அமைதியை கொண்டுவரும் விவகாரத்திலும், ஆதரவை தொடர்வதிலும் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.

    ×