என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பாஜகவுக்கு மரியாதை கொடுக்காத காவல்துறை இனி தூங்கக் கூடாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    • அடுத்த ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் படத்தை பிரேம் போட்டு மாட்டுவோம்.

    சென்னை அக்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுவிக்கப்பட்டார்.

    பிறகு செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது:-

    போராட்டம் நடத்தியவர்களை மாலை 6 மணிக்கு மேல் ஆகியும் விடுவிக்க மறுத்தது ஏன்?

    ரேபிஸ்ட் ஆக இருந்தால் ராஜமரியாதை, மணல் கடத்தினால் ராஜமரியாதை.

    இனி முன் அனுமதி பெறாமல் திடீர் போராட்டங்களை நடத்தப் போகிறோம்.

    அடுத்த ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் படத்தை பிரேம் போட்டு மாட்டுவோம்.

    நமக்கு மரியாதை கொடுக்காத காவல்துறை இனி தூங்கக் கூடாது. பொறுமையை சோதித்து விட்டதால் இன்றைக்கு இரவில் இருந்து காவல்துறையை தூங்க விடமாட்டேன்.

    போலீசார் தூங்க முடியாத அளவுக்கு மே மாதம் வரை போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று, மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அவுங்கரசீப்புக்கு இணையாக கொடுங்கோல் ஆட்சி செய்கிறார்.
    • மதம் தொடர்பான விசயங்களுக்கு அவர் எப்போதும் ஆதரவாக இருக்கிறார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்கசீப்பின் கல்லறையை அப்புறப்படுத்த வேண்டும் என சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பெரும் புயலை கிளப்பி வருகிறது. இதனால் அவுரங்கசீப் கல்லைறை இருக்கும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடையாள அட்டை காண்பித்துதான் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலவைர் ஹர்ஷ்வர்தன் சப்கால், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸை அவுரங்கசீப் உடன் ஒப்பிட்டதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கால் பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது "அவுரங்கசீப் கொடுங்கோல் ஆட்சி செய்தார். இன்று, மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அவுங்கரசீப்புக்கு இணையாக கொடுங்கோல் ஆட்சி செய்கிறார். மதம் தொடர்பான விசயங்களுக்கு அவர் எப்போதும் ஆதரவாக இருக்கிறார். ஆனால், சர்பாஞ்ச் சந்தோஷ் தேஷ்முக் கொலை போன்ற வழக்குகளில் எதுவுமே செய்யவில்லை" எனக் கூறியிருந்தார்.

    இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது ஒப்பீடு சிறுபிள்ளைத்தனமானது எனத் தெரிவித்துள்ளது.

    பாஜக எம்.பி. பகவத் கராத் இது தொடர்பாக கூறுகையில் "இது மிகவும் தவறானது, கண்டிக்கத்தக்கது. பட்நாவிஸ் மாநிலத்திற்கான நல்ல விசயங்களை செய்து வருகிறார். அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது. விக்ஷித் மகாராஷ்டிரா நோக்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறார். காங்கிஸ் தலைவரின் ஒப்பீடு சிறுபிள்ளைத்தனமானது.

    தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் ஒப்பீடு நல்லதல்ல என கருத்து தெரிவித்துள்ளனர்.

    • கைது செய்யபட்டு மாலை 6 மணியாகியும் எங்களை விடுவிக்காதது ஏன்? என போலீசாருடன் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • கைது செய்யப்பட்டதும் சிலரைப் போல நெஞ்சு வலி என நாங்கள் நாடகமா போடுகிறோம்?

    டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் எனக்கூறி போராட முயன்ற தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களை சென்னையில் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டு மாலை 6 மணி ஆகியும் பாஜகவினரை விடுவிக்காததால், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள். டாஸ்மாக் அலுவலகத்தையே மூடிய பிறகு எங்களால் என்ன பிரச்சனை ஏற்பட போகிறது ?

    மாலை 6 மணியாகியும் எங்களை விடுவிக்காதது ஏன் ?

    கொல்கத்தா நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும். 3 விமானங்களை விட்டுவிட்டேன்" என்றார்.

    டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற தமிழிசை உள்ளிட்டோர் கைது செய்து சென்னை வளசரவாக்கம் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்ட நிலையில் போலீசாருடன் வாக்குவாதம் நடந்து வருகிறது.

    அப்போது தமிழிசை கூறுகையில், " மாலை 6 மணிக்கு மேலாகியும் தங்களை விடுவிக்க மறுப்பது ஏன்?

    கைது செய்யப்பட்டதும் சிலரைப் போல நெஞ்சு வலி என நாங்கள் நாடகமா போடுகிறோம்?

    இரவு 7 மணி ஆகியும் எங்களை விடுவிக்க மறுப்பது ஏன்? நாங்கள் என்ன பயங்கரவாதிகளா?" என்று ஆதங்கமாக பேசினார்.

    இந்நிலையில், சென்னை அக்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுவிக்கப்பட்டுள்ளார்.

    • பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு வசதியான ஹோட்டல்களில் அறைகள் வழங்கப்படாது.
    • ஒரு மாற்று வீரருக்கு இதற்கு முன் ஒரு போட்டிக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு இருந்தால் தற்போது அவருக்கு 125 ரூபாய் மட்டுமே வழங்கப்படும்.

    இஸ்லாமாபாத்:

    2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்று நடத்தியது. சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் தொடர் என்பதால், இதற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலையைத் தாண்டி அதிக செலவு செய்யப்பட்டது.

    சுமார் 869 கோடி ரூபாயை இந்த தொடருக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செலவிட்டது. இவ்வளவு பணத்தை வாரி இறைத்த நிலையில், இந்தத் தொடரை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.52 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாக அளித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் அமைப்பு.

    இந்த தொடரை நடத்துவதற்கான கட்டணம் மற்றும் டிக்கெட் விற்பனை வருவாய் என அனைத்தையும் சேர்த்து மொத்தமாக 52 கோடி மட்டும்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கிடைத்து இருக்கிறது. இதன் மூலம் சுமார் 739 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இது யாரும் எதிர்பாராத மிகப் பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

    இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்த நஷ்டத்தை சரி செய்வதற்காக பாகிஸ்தான் நாட்டில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் வீரர்களின் சம்பளத்தில் கை வைக்கப்பட்டு இருக்கிறது. உள்நாட்டு கிரிக்கெட் ஆடி வரும் பாகிஸ்தான் வீரர்களின் சம்பளத்தில் 90 சதவீதத்தை குறைத்து இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

    மேலும், போட்டிகளில் விளையாடாத மாற்று வீரர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்ட சம்பளத்தில் இனி 12.50 சதவீதம் மட்டுமே சம்பளமாக அளிக்கப்படும் என கூறப்பட்டு இருக்கிறது. அதாவது ஒரு மாற்று வீரருக்கு இதற்கு முன் ஒரு போட்டிக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு இருந்தால் தற்போது அவருக்கு 125 ரூபாய் மட்டுமே வழங்கப்படும்.

    மேலும், இனி பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு வசதியான ஹோட்டல்களில் அறைகள் வழங்கப்படாது. அவர்கள் சாதாரண விடுதிகளில் தான் இனி தங்க வேண்டும். பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு மிக மோசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்து வரும் நிலையில், சர்வதேச தரத்தில் மைதானங்களைத் தயார் செய்துவிட்டு உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பை மேலும் பலவீனமானதாக மாற்றி இருக்கிறது பாகிஸ்தான்.

    • முதலில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
    • டெல்லியை தொடர்பு கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.

    மத்திய அரசு மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சி செய்கிறது என தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. சில மாநிலங்களும் பிற மொழிகள் திணிக்கப்படுவதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

    இந்தநிலையில் இந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    முதலில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் அதேவேளையில் இந்திய கற்றுக் கொள்வது தேவையானதாகும். டெல்லியை தொடர்பு கொள்ள பயனுள்ளதாக இருக்கும். வாழ்வாதாரத்திற்காக மற்ற மொழிகளை கற்றுக் கொள்ளலாம். இந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழியாகும்.

    வாழ்வாதாரத்திற்காக எத்தனை மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம். தாய்மொழியை நாம் மறந்து விடக்கூடாது. மொழிகள் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும்தான். அதிக மொழிகளை கற்றுக்கொள்ளவது சிறந்தது. இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    இந்தி தேசிய மொழி கிடையாது. இந்தி, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
    • குட் பேட் அக்லி படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

    அஜித்தை இதுவரை நாம் பார்த்திராத லுக்கில் நடித்துள்ளார். படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ, இன்று மாலை வெளியானது. நாளை முழு பாடல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலுக்கு OG Sambavam என தலைப்பு வைத்துள்ளனர். OG என்றால் ஒர்ஜினல் கேங்ஸ்டர் என அர்த்தம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விண்ணப்பதாரர்களில் 90 சதவிகிதம் பேருக்கு தெலுங்கானாவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
    • ரெயில்வே தேர்வு வாரிய முடிவால் விண்ணப்பதாரர்களிடையே பரவலான குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ரெயில்வே துறையில் வேலை வாய்ப்புக்காக மார்ச் 19 அன்று உதவி லோகோ பைலட் தேர்வுக்கான கணினி அடிப்படையிலான தேர்வு எழுதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் திருப்பதி, குண்டூர், காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டிணம் போன்ற நகரங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் கரீம்நகர், ஐதராபாத், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் போன்ற நகரங்களிலும் 600 முதல் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ெரயில்வே பாது காப்புப்படைக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தொலைதூரத்தில் ஒரே நகரத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்குவதை முன்னுரிமையாக கொண்ட ரெயில்வே தேர்வு வாரிய முடிவால் விண்ணப்பதாரர்களிடையே பரவலான குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கான தேர்வு மார்ச் 18 அன்று உதவி லோகோ பைலட் தேர்வுக்கு ஒருநாள் முன்பு நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டை சேர்ந்த 50 சதவிகித விண்ணப்பதாரர்களுக்கு மற்ற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

    மார்ச் 19-ந் தேதி தேர்வு எழுதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களில் 90 சதவிகிதம் பேருக்கு தெலுங்கானாவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தகைய தேர்வு முறையின் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் ரெயில்வே துறையில் வேலை பெறுவதற்கான தேர்வில் பங்கேற்க கடுமையான சிரமங்களையும், பொருட்செலவையும் ஏற்க வேண்டியுள்ளது.

    எனவே, தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ரெயில்வே துறையின் தேர்வுகள் அனைத்தும் சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருநெல்வேலி ஆகிய மையங்களில் நடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஹிஸ்புல்லாவினர் சிரியாவிற்குள் நுழைந்து மூன்று ராணுவ வீரர்களைக் கடத்தினர்.
    • மக்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் இணையத்திலும் உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானது.

    லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லாவினர் கடந்த சனிக்கிழமை சிரியாவிற்குள் நுழைந்து மூன்று ராணுவ வீரர்களைக் கடத்தி லெபனான் எல்லையில் அவர்களைக் கொன்றதாக சிரிய இடைக்கால அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது.

    ஆனால் ஹிஸ்புல்லா தங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டது. இதற்கிடையே இந்த சம்பவத்தால் லெபனான் - சிரியா இல்லையில் தற்போது மோதல் வெடித்தது.

    எல்லையில் சிரிய வீரர்களைக் கொன்ற ஹிஸ்புல்லா கூட்டங்கள் மீது  ஷெல் தாக்குதல் நடத்தியதாக சிரிய ராணுவம் வட்டாரங்ககள் தெரிவிக்கின்றன.

    எல்லையில் உள்ள சிரிய கிராமமான ஹெர்மல் மீது பீரங்கிகள் மூலம் ஷெல் தாக்குதல் நடந்துள்ளது. இதில் இருந்து மக்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் இணையத்திலும் உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானது.

    பதிலாக வடகிழக்கு லெபனானில் உள்ள எல்லை நகரமான அல்-காசர் மீது சிரியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக லெபனானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    மூத்த ஹிஸ்புல்லா சட்டமன்ற உறுப்பினர் ஹுசைன் ஹாஜ் ஹசன் பேட்டி ஒன்றில், சிரியாவை சேர்ந்த போராளிகள் லெபனான் எல்லைக்குள் நுழைந்து அங்குள்ள எல்லை கிராமங்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார்.

    லெபனானின் அல்-காசர் எல்லைக் கிராமத்தில் நிலைகொண்டுள்ள, சிரிய இராணுவத்திற்கும், முன்னாள் சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்துடைய ஆதரவு குழுக்களுக்கும், ஆயுதமேந்திய லெபனான் ஷியா குழுக்களுக்கும் இடையேய சமீப காலமாக வன்முறை அதிகரித்த வண்ணம் உள்ளது. சிரியாவும், லெபனானும் எல்லையில் தங்கள் படையினரை அதிகம் நிலைநிறுத்தி வருகின்றன.

    இதற்கிடைய சிரியாவின் லடாகியாவில் உள்ள ஒரு ஆயுதப் பிரிவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சிரியாவின் சிவில் பாதுகாப்புத் துறை அறிவித்தது. நான்கு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உலோகத் துகள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் வெடிப்புவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

    • தமிழக பாஜகவினர், தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை
    • தமிழ்நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? எதற்காக இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்?

    தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    இதனையடுத்து, டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், அதனை கண்டித்தும் தமிழ்நாடு முழுக்க இன்று (மார்ச் 17) பாஜகவினர் முற்றுகை போராட்டம் நடத்த முயன்று கைதாகினர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "அண்மையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக நிறுவனத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை. அதில் ரூ.1000 கோடி அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகத் தெரிவித்தது. இந்த முறைகேடுகள் தொடர்பாக ஒன்றிய அரசின் அமலாக்கத் துறையானது துரிதமாகச் செயல்பட்டு மேல்நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதுபோன்று ஏதும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

    மாறாக அமலாக்கத் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக பாஜகவினர், தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை. நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள ஆளும் கட்சியினர், முற்றுகைப் போராட்டத்தை நடத்தி, அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றனர்? மற்ற மாநிலங்களில் இது போன்ற மோசடிகள் நடைபெற்ற போது என்ன நடந்தது? தமிழ்நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? எதற்காக இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்?

    தற்போது. தமிழகத்தில் நடைபெற்று வரும் பா.ஐ.க. தி.மு.க. நடத்தும் நாடகப் போக்கினைப் பார்த்தால் என்ன தெரிகிறது? ஒன்றியம் மற்றும் மாநிலத்தை ஆளும் அரசுகள் வெளியில் தங்களை எதிரிகள் போன்று காட்டிக்கொண்டு, புறவாசல் வழியாக மறைமுகக் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதே தெரிகின்றது. இதை அம்பலப்படுத்தி ஏற்கெனவே எங்கள் கழகத் தலைவர் அவர்கள் கூறியது முற்றிலும் உண்மையே என்பதை மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர். இது. இன்று நடைபெற்ற போராட்டம் மற்றும் கைது நாடகத்தின் வாயிலாக வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.

    டாஸ்மாக் நிறுவன முறைகேடுகள் தொடர்பாக உண்மையான விசாரணை நடைபெற வேண்டும். இதுவே மக்கள் நலனை நோக்கும் அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.

    எனவே, ஒன்றிய அரசுக்குத் தமிழக மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருக்குமெனில், டாஸ்மாக் மோசடி விவகாரத்தில் தொடர்ந்து மேல்நடவடிக்கை மேற்கொண்டு தவறு இழைத்தவர்களுக்கு. சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் வழியில் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜுனைத் ஜாபர் கான்.
    • 107 டிகிரி வெப்பநிலையில் விளையாடியதால் இந்த இறப்பு எற்பட்டதாக கூறப்படுகிறது.

    பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜுனைத் ஜாபர் கான் ஆவார். அவர் சர்வதேச அளவில் விளையாடாத இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வந்தார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள கான்கார்டியா கல்லூரி ஓவல் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் திடீரென மைதானத்திலேயே ஜூனைத் மயங்கி விழுந்தார்.

    உடனே மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி வழங்கினர். ஆனால் அது பலனளிக்கவில்லை. அவர் மைதானத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்த போட்டிக்கு முன்னதாக அவர் ரம்ஜான் பண்டிகைக்காக நோன்பு இருந்து வந்துள்ளார். 107 டிகிரி வெப்பநிலையில் விளையாடியதால் இந்த இறப்பு எற்பட்டதாக கூறப்படுகிறது.

    • டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றார் அமைச்சர் ரகுபதி.
    • பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் அமலாக்கத்துறை மூலமாக நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

    டாஸ்மாக் நிறுவன அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாற்று கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களை பழிவாங்க மாட்டோம் என பாஜகவினர் சொன்னார்கள்.

    ஆனால், பாஜக ஆளாத மாநிலங்களில் பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.

    மாற்று கட்சியினர் எங்கெல்லாம் ஆட்சி செய்கிறார்களோ அங்கெல்லாம் மத்திய பாஜக அரசு பழி வாங்குகிறது.

    அமலாக்கத்துறை வழக்கு தொடரப்பட்டவர்கள் பாஜகவில் சேர்ந்தவுடன் புனிதர்களாகி விடுகிறார்கள்.

    பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் அமலாக்கத்துறை மூலமாக நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

    டெல்லி பாணியில் அரசியல் செய்யலாம் என்று பாஜக கனவு கண்டு கொண்டிருக்கிறது.

    அமலாக்கத்துறையில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியர்கள் அல்ல. அமலாக்கத்துறை அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துறை அதிகாரிகளே லஞ்சம் வாங்குகிறார்கள்.

    டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழலுக்கு ஏதேனும் ஆதாரங்கள் இருக்கிறதா ?

    அனுமதியின்றி போராடப் போகிறவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்வது தவறு இல்லை. முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட அண்ணாமலை வந்து பார்க்கட்டும்; என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.

    டாஸ்மாக் ஊழல் தொடர்பாக மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.

    டாஸ்மாக் மதுபான விற்பனையால் இளம் விதவைகள் அதிகரிப்பதாக கூறுவதில் உண்மை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய் சேதுபதி 51 திரைப்படமாக ACE திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    விஜய் சேதுபதியின் 50 - வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கரன் பி ராவத் ஒளிப்பதிவு மேற்கொள்ள கோவிந்தராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் முதல் பாடலான உருகுது உருகுது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×