என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ராமநகரம் பகுதியை பெங்களூரு தெற்கு என பெயர்மாற்றம் செய்ய சட்டசபை ஒப்புதல் அளித்தது.
    • ஆனால் மத்திய அரசு இந்தப் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் ராமநகரம் பகுதியை பெங்களூரு தெற்கு என பெயர்மாற்றம் செய்ய அம்மாநில சட்டசபை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. ஆனால் மத்திய அரசு இந்தப் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

    இந்நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரி கே.டி.சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம். கோடை தொடங்குவதற்கு முன்பு தண்ணீரை சேமிப்பதாக உறுதிமொழி எடுக்க ஒரு பிரசாரம் செய்ய விரும்புகிறோம்.

    நாளை மாலை காவிரி ஆரத்தி எடுப்போம். இது ஒரு அரசு திட்டம். நாங்கள் அரசியலுக்காக அல்ல, வளர்ச்சிக்காக இருக்கிறோம்.

    ராமநகரம் பெங்களூரு தெற்கு என பெயர் மாற்றப்படும். டெல்லியில் சில அமைச்சர்கள் குறும்பு செய்து வருகின்றனர். சட்டப்பூர்வமாக விஷயங்களை எப்படி கையாள்வது என்பது எங்களுக்குத் தெரியும் என தெரிவித்தார்.

    • 23-ந் தேதி சன்ரைசர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகிறது.
    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது சஞ்சு சாம்சனின் விரலில் காயம் ஏற்பட்டது.

    ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. 23-ந் தேதி சன்ரைசர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் ராஜஸ்தான் அணி விளையாடும் முதல் 3 போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனால் சாம்சன் பேட்ஸ்மேனாக (இம்பாக்ட் பிளேயர்) மட்டுமே இடம்பெறுவார் என்றும் ஆர்ஆர் குறிப்பிட்டுள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது சஞ்சு சாம்சனின் விரலில் காயம் ஏற்பட்டது. அதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பிசிசிஐ இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

    ராஜன்ஸ்தான் அணி விளையாடிய பயிற்சி போட்டியில் ரியான் பராக் 64 பந்தில் 144 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்சர்களும் 16 பவுண்டரிகளும் அடங்கும்.

    • அ.தி.மு.க.வை பொறுத்தவரை தமிழக மக்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற முறையில் செயல்படுகிறது.
    • கொலை பட்டியலை காண்பதே தி.மு.க. ஆட்சியின் சாதனையாக உள்ளது.

    சட்டசபையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

    இ.பி.எஸ் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

    இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * சட்டம்-ஒழுங்கு பற்றி பேச அனுமதிக்கவில்லை.

    * எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நேற்று நடந்த கொலை சம்பவம் குறித்து சட்டசபையில் பேச முற்பட்டேன்.

    * அ.தி.மு.க.வை பொறுத்தவரை தமிழக மக்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற முறையில் செயல்படுகிறது.

    * சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் பேசுவதற்கு அ.தி.மு.க.வினருக்கு அனுமதி மறுப்பை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.

    * மதுரை பெருங்குடி அருகே காவலர், கோவையில் பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்பு, ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரவுடி ஜான் காரில் சென்றபோது வழிமறித்து சினிமா பாணியில் கொலை, நெல்லையில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் தொழுகை முடித்துவிட்டு வந்தபோது கொலை, சென்னையில் தி.மு.க. நிர்வாகியை கடத்தி வெட்டிக்கொலை என நாள்தோறும் கொலை சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

    * கொலை பட்டியலை காண்பதே தி.மு.க. ஆட்சியின் சாதனையாக உள்ளது.

    * தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா என கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

    * முதலமைச்சருக்கு கீழுள்ள காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கின்ற அவலநிலை தான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்தக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டதை போல பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை கொண்டு வர வேண்டும் என்று அனைத்து சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர். விடுமுறை நாளில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் இருந்து அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்து உள்ளனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

    சென்னையில் எழிலகம் பின்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், மாயவன் ஆகியோர் கூறியதாவது:-

    பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். விடுமுறை நாளில் போராட்டம் நடைபெறுவதால் அரசு ஊழியர்கள் அதிகளவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. ஈட்டிய விடுப்பு சரண் சலுகையை 1.4.2026 பதிலாக வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்க வேண்டும்.

    இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட் கூட்டத்தில் வெளியிட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்ற வேண்டும். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்று கூடி ஆலோசித்து அடுத்த கட்டமாக வேலை நிறுத்தம் அல்லது மறியல் போராட்டம் என தீவிரமாக முன்னெடுத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.
    • குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    நடிகர் அஜித் குமார் மற்றும் இக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படம் குறித்து பேசும் போது, "நான் அஜித் சாரின் தீவிர ரசிகன் என்பதால் என்னிடம் இந்தப் படம் தொடர்பாக நிறையய யோசனைகள் இருந்தன. மேலும், 'குட் பேட் அக்லி' என்ற தலைப்பை அஜித் குமார் தான் தெரிவித்தார். படக்குழுவும் இந்த தலைப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் குமார் பில்லா மற்றும் தீனா பட கெட்டப்களில் நடித்துள்ளார். அஜித் குமார் எப்போதும் தன்னை ஒரு பெரிய நட்சத்திரமாக நினைத்துக் கொள்ளவே மாட்டார். அவர் தன்னை ஒரு நடிகராகவே நினைக்கிறார். மேலும், படத்திற்கு ஒரு நடிகராக என்ன கொடுக்க முடியுமோ அதனை வழங்குகிறார்.

    இந்தப் படத்தில் அஜித் குமார் ரெட் டிராகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை அவரிடம் சொன்னதும் அவர் சரி என சம்மதம் தெரிவித்தார். அஜித் குமார் மிக கடுமையாக டயட் இருந்தார். அவரை போல் மனஉறுதி கொண்ட நபரை பார்க்கவே முடியாது. இந்தப் படத்தில் நடிக்கும் போது நேரடியாக விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து வருவார். வரும் வழியில் தூங்கிக் கொள்வார். வெறும் 72 நாட்களில் குட் பேட் அக்லி படத்தில் நடித்துக் கொடுத்தார்," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மதுரை குற்ற சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • ஒரே ஆண்டில் சுமார் 17 ஆயிரம் குற்றங்களை குறைத்திருக்கிறோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் சம்பவத்தை மறந்துவிடக் கூடாது என அ.தி.மு.க. உறுப்பினர்களை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் அவர் கூறியதாவது:-

    * சட்டம் ஒழுங்கு பற்றி பேச அ.தி.மு.க.விற்கு தைரியம் இருக்கிறதா?

    * சேலம் மாவட்டத்தை சேர்ந்த சரித்திரப்பதிவேடு குற்றவாளியான ஜான், மனைவியுடன் நேற்று காரில் சென்றபோது கொலை நடந்துள்ளது. ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஜான் கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரிகிறது.

    * கொலையாளிகள் சதீஷ், சரவணன், பூபாலன் உள்ளிட்டோரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

    * தமிழக காவல்துறையின் கடும் நடவடிக்கை காரணமாக கொலை குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைகிறது.

    * மதுரை குற்ற சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    * எண்ணிக்கையில் பார்கையில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்தாண்டு 109 கொலைகள் குறைந்துள்ளன.

    * ஒரே ஆண்டில் சுமார் 17 ஆயிரம் குற்றங்களை குறைத்திருக்கிறோம்.

    * குற்றவாளிகள் யாராக, எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கிறோம்.

    * தொடர் குற்றம் புரிவோர், கூலிப்படையினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன என்றார். 

    • கடந்த 11 ஆண்டுகளில் இரு முறை மிகப்பெரிய அளவிலான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டது.
    • ஆனாலும் அவை பெரிய அளவில் பயனளிக்காமல் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

    கோலாலம்பூர்:

    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்குக்கு 2014ம் மார்ச் 8-ம்ம் தேதி 227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட 777 வடிவமைப்பு கொண்ட எம்.எச்.370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வியட்நாம் வான்பரப்பை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடன் விமானத்துக்கு இருந்த அனைத்து தொடர்புகளும் செயலிழந்தன.

    கடந்த 11 ஆண்டுகளில் இரு முறை மிகப்பெரிய அளவிலான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை பெரிய அளவில் பயனளிக்காமல் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

    இந்நிலையில், 11 ஆண்டுக்கு முன் காணாமற்போன எம்.எச்.370 விமானத்தின் பாகங்களைத் தேடும் நடவடிக்கையை தொடர மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த முறை இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் பணி மேற்கொள்ளப்படும். அதற்காக பிரிட்டனில் செயல்படும் ஓஷன் இன்பினிடி நிறுவனத்துடன் மலேசியா ஒப்பந்தம் செய்துள்ளது.

    விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே மலேசிய அரசாங்கம் அந்நிறுவனத்துக்குக் கட்டணம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
    • இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன் டிராபி பட்டத்தை வென்றது.

    பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்தது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.

    இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. 

    இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.58 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு 3 கோடியும் துணை பயிற்சி ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சமும் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில் அதிக முறை பட்டத்தை வென்ற அணி எனும் சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்திய அணி இதற்கு முன் கடந்த 2002 மற்றும் 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்றுள்ளது. இதில் 2002-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இலங்கை அணியுடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க. ஆட்சியில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளனர்.
    • தி.மு.க. ஆட்சியில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மக்கள் முதல்வரின் மனித நேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக எழும்பூர் தெற்கு பகுதி சார்பில் செனாய் நகர் வைத்தியநாதன் சாலை மற்றும் சேத்துப்பட்டு, அம்பேத்கர் திடலில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ஏழை-எளிய மக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு காலை உணவு வழங்கினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளனர். தி.மு.க. ஆட்சி அமைந்து இதுவரை 2ஆயிரத்து 700-க்கும் அதிகமான கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் அது 3 ஆயிரத்தை தாண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை இருக்கிறதா, பொறுப்பு அமைச்சர் யார்? என்ற கேள்வி இருந்தது.

    ஆனால் தற்போது சங்கிகள் தலையிட்டு திருச்செந்தூர் கோவில் விஷயத்தை திசை திருப்புவதாகவும், ஆகம விதிகளின்படி இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கோவில்களில் ஒரே ஒரு மருத்துவமனை இருந்த நிலையில் தி.மு.க. ஆட்சி அமைந்து 17 கோவில்களில் மருத்துவமனை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது. குற்றவாளிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓட்டம் பிடிக்கும் அளவிற்கு தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக தமிழ்நாடு காவல்துறை உள்ளது என்றார்.

    எதிர்பாராது நடக்கும் குற்றங்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது, சட்டம்-ஒழுங்கு பாதிப்பு என்பது அவர்களுடைய குற்றச்சாட்டு, தி.மு.க. ஆட்சியில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது.

    பா.ஜ.க.வினர் பலப்பரீட்சைக்கு வாருங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம். அப்பாவி தொண்டர்களை தூண்டிவிட்டு சட்டம்-ஒழுங்கு கெட பா.ஜ.க. முயற்சி செய்கிறது.

    இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

    • இஸ்ரேலின் போரை கண்டித்து சில மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
    • பதர் கான் சூரியை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பாலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து சில மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளித்த இந்திய மாணவியின் விசா சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தாமாக அமெரிக்காவில் இருந்து வெளியேறினார்.

    இந்த நிலையில் ஹமாஸ் ஆதரவு குற்றச்சாட்டில் அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த பதர் கான் சூரி அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். அவர் பல்கலைக் கழகத்தின் எட்மண்ட் ஏ. வால்ஷ் வெளிநாட்டு சேவைப் பள்ளியில் உள்ள அல்வலீத் பின் தலால் மையத்தில் முஸ்லிம்-கிறிஸ்தவ புரிதலுக்கான முதுகலை பட்டதாரி ஆவார்.

    இதற்கிடையே ஹமாஸ் ஆதரவு பிரசாரத்தை பரப்பியதாக பதர் கான் சூரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவருடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து வர்ஜீனியாவில் உள்ள வீட்டில் இருந்த அவரை குடியேற்ற அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. பதர் கான் சூரியை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் உதவிச் செயலாளர் டிரிசியா மெக் லாப்லின் கூறும்போது, பதர் கான் சூரி ஹமாஸ் பிரசாரத்தை சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பரப்பி யூத எதிர்ப்புவாதத்தை ஊக்குவித்தார் என்றார்.

    அமெரிக்க பெண்ணை மணந்துள்ள பதர் கான் சூரி, கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தன் மீது எந்த குற்றப் பதிவும் இல்லை என்றும், தனது மனைவியின் பாலஸ்தீன பூர்வீகம் காரணமாக தான் குறி வைக்கப்படுவதாகவும் தெரிவித்து உள்ளார்.

    • ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
    • நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    கொல்கத்தா:

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.

    நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    சுமார் 6 மாத விசாரணைக்குப் பிறகு கடந்த ஜனவரி 20-ம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் டெத் சர்டிபிகேட் அவரது பெற்றோரிடம் இன்று அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக, மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், அவர்களுக்கு அசல் இறப்புச் சான்றிதழ் தேவைப்பட்டது. இன்று, நான் இங்கு வந்து அதை அவர்களிடம் ஒப்படைத்தேன். எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என தெரிவித்தனர்.

    • சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ் தங்கியிருந்தார்.
    • சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 வீரர்கள் புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரையிறங்கினர்.

    சென்னை:

    விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ். எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பூமிக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது.

    இதனையடுத்து பால்க்கன்-9 எனும் ராக்கெட்டுடன், டிராகன் எனும் விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இதன்மூலமாக சுனிதா வில்லியம்ஸ் அவர்களும், புட்ச் அவர்களும், அங்கிருந்த மேலும் 2 வீரர்களோடு இணைந்து பயணித்து, பத்திரமாக புளோரிடா அருகே கடலில் தரையிறங்கினர். பூமி திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் பத்திரமாக பூமி திரும்பி சுனிதா வில்லியம்ஸ்-க்கு கவி பேரரசு வைரமுத்து தனது ஸ்டைலில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    அதில்,

    சுனிதா வில்லியம்ஸின்

    பூமி திரும்பல்

    ஒரு பெண்ணின் வெற்றியோ

    நாட்டின் வெற்றியோ அல்ல;

    மகத்தான மானுடத்தின் வெற்றி

    அவர்

    மண்ணில் இறங்கும்வரை

    இரண்டு மடங்கு துடித்தது

    பூமியின் இருதயம்

    பெண்ணினத்துக்குக்

    கூடுதல் பெருமை சேர்த்துவிட்டார்

    அந்த வேங்கை மகள்

    அவரது உயரம்

    நம்பிக்கையின் உயரம்

    அவரது எடை

    துணிச்சலின் நிறை

    மரணத்தின்

    உள்கூடுவரை சென்றுவிட்டு

    வாழ்வுக்குத் திரும்பியிருக்கிற

    சுனிதா வில்லியம்ஸை

    பூமியின் ஒவ்வொரு பொருளும்

    வரவேற்கின்றது

    இந்த விண்வெளிப் பிழை

    எதிர்கால அறிவியலைத்

    திருத்திக்கொள்ளும்

    ஆதாரமாக விளங்கும்

    பிழை என்பது அறியாமை;

    திருத்திக்கொள்வது அறிவு

    என்ற பாடத்தை

    அறைந்து சொல்லும்

    சுனிதா வில்லியம்ஸ் அனுபவம்

    வந்தவரை வாழ்த்துவோம்

    மானுடத்தை வணங்குவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×