என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ் தங்கியிருந்தார்.
    • சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 வீரர்கள் புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரையிறங்கினர்.

    சென்னை:

    விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ். எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பூமிக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது.

    இதனையடுத்து பால்க்கன்-9 எனும் ராக்கெட்டுடன், டிராகன் எனும் விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இதன்மூலமாக சுனிதா வில்லியம்ஸ் அவர்களும், புட்ச் அவர்களும், அங்கிருந்த மேலும் 2 வீரர்களோடு இணைந்து பயணித்து, பத்திரமாக புளோரிடா அருகே கடலில் தரையிறங்கினர். பூமி திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் பத்திரமாக பூமி திரும்பி சுனிதா வில்லியம்ஸ்-க்கு கவி பேரரசு வைரமுத்து தனது ஸ்டைலில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    அதில்,

    சுனிதா வில்லியம்ஸின்

    பூமி திரும்பல்

    ஒரு பெண்ணின் வெற்றியோ

    நாட்டின் வெற்றியோ அல்ல;

    மகத்தான மானுடத்தின் வெற்றி

    அவர்

    மண்ணில் இறங்கும்வரை

    இரண்டு மடங்கு துடித்தது

    பூமியின் இருதயம்

    பெண்ணினத்துக்குக்

    கூடுதல் பெருமை சேர்த்துவிட்டார்

    அந்த வேங்கை மகள்

    அவரது உயரம்

    நம்பிக்கையின் உயரம்

    அவரது எடை

    துணிச்சலின் நிறை

    மரணத்தின்

    உள்கூடுவரை சென்றுவிட்டு

    வாழ்வுக்குத் திரும்பியிருக்கிற

    சுனிதா வில்லியம்ஸை

    பூமியின் ஒவ்வொரு பொருளும்

    வரவேற்கின்றது

    இந்த விண்வெளிப் பிழை

    எதிர்கால அறிவியலைத்

    திருத்திக்கொள்ளும்

    ஆதாரமாக விளங்கும்

    பிழை என்பது அறியாமை;

    திருத்திக்கொள்வது அறிவு

    என்ற பாடத்தை

    அறைந்து சொல்லும்

    சுனிதா வில்லியம்ஸ் அனுபவம்

    வந்தவரை வாழ்த்துவோம்

    மானுடத்தை வணங்குவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளையராஜாவை நேரில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
    • அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இளையராஜாவை பெருமையோடு வாழ்த்தி வருகின்றனர்.

    இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.

    மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார். அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.

    சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையைப் படைத்தார்.

    இளையராஜாவின் அரை நூற்றாண்டு கால திரை இசை பயணத்தை தமிழ்நாடு அரசின் சார்பில் கொண்டாட முடிவு செய்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    இதையடுத்து இளையராஜாவை நேரில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இளையராஜாவை பெருமையோடு வாழ்த்தி வருகின்றனர்.

    நேற்று இளையராஜாவை நேரில் சந்தித்து நடிகர் சிவகுமார், அவருடன் அவரது மகனும் நடிகருமான சூர்யா மற்றும் மகள் பிருந்தா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.
    • கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி வேட்பாளராக களமிறங்கினார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனிடையே கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் சீமான் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார்.

    மறைந்த சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி. இவர் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சியில் அவர் இணைந்தார். உடனடியாக அவருக்கு நா.த.க தலைமை கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி வேட்பாளராக களமிறக்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • முழுவதுமாக உள்நாட்டு உபகரணங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன.
    • இரண்டு இருக்கைகள் கொண்ட ஒரு விமான டாக்சி வடிவமைக்கப்பட்டு வி2 என்று பெயரிடப்பட்டது.

    அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விமான டாக்சிகளை நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன.

    இந்தப் பந்தயத்தில் சீனா போன்ற நாடுகள் மட்டுமே முன்னிலையில் உள்ள நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் விமான டாக்சிகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    குண்டூரைச் சேர்ந்த சாவா அபிராம், அமெரிக்காவில் ரோபாட்டிக்ஸ் பொறியியலில் முதுகலைப் பட்டம் முடித்தார். நம் நாட்டில் ஏதாவது ஒரு அமைப்பை நிறுவும் நோக்கத்துடன் அவர் இங்கு வந்தார்.

    போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் விமான டாக்சிகளை கிடைக்கச் செய்வது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பி, அவர் அதை கவனமாக ஆய்வு செய்து வருகிறார்.

    விமானி இல்லாமல் தரையில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. விமானி இல்லாமல் இந்த வாகனங்களை இயக்க அனுமதிப்பதில்லை என்பதால், இரண்டு மற்றும் மூன்று இருக்கைகளுடன் கூடிய விமான டாக்சிகள் தயாரித்தார்.

    முழுவதுமாக உள்நாட்டு உபகரணங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டு இருக்கைகள் கொண்ட ஒரு விமான டாக்சி வடிவமைக்கப்பட்டு வி2 என்று பெயரிடப்பட்டது.

    சோதனை ஓட்டம் வெற்றியடைந்தது. அவர் 3 இருக்கைகள் ஏர் டாக்சி தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    • கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
    • ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு பிங்க் ஆட்டோக்கள் இயக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல்கட்டமாக தகுதியான பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச மகளிர் தினத்தன்று இளஞ்சிவப்பு ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து பிங்க் ஆட்டோக்கள் 2-ம் கட்டமாக வழங்கப்படவுள்ளதால் தகுதியான பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் பயன் பெற அடுத்த மாதம் 6-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். சென்னையில் குடியிருக்க வேண்டும்.

    எனவே, சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்ட விருப்பமுடைய பெண் ஓட்டுநர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு) அல்லது சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு) என்ற முகவரியிட்டு 6.4.2025-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 14-ந்தேதி வரை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து, கடந்த 14-ந்தேதி இதுவரை இல்லாத உச்சமாக ரூ.66 ஆயிரத்து 400 என்ற நிலையை அடைந்தது. அன்றைய தினம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440 அதிகரித்திருந்தது.

    அதனைத் தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 210-க்கும், ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 680-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 290-க்கும், ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,310-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,480-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    19-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,480

    18-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,000

    17-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,680

    16-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760

    15-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    19-03-2025- ஒரு கிராம் ரூ.113

    18-03-2025- ஒரு கிராம் ரூ.113

    17-03-2025- ஒரு கிராம் ரூ.113

    16-03-2025- ஒரு கிராம் ரூ.112

    15-03-2025- ஒரு கிராம் ரூ.112

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
    • சைரன்கள் ஒலித்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

    ஏமன் நடத்திய ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலின் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஜெருசலேமில் சைரன்கள் ஒலித்த சிறிது நேரத்திலேயே பலமுறை வெடி சத்தங்கள் கேட்டன. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    ஹமாஸ் உடனான இஸ்ரேலின் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததை அடுத்து, இந்த வாரம் ஏமனின் ஹவுதி குழு மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது. அதன்படி இன்று அதிகாலை 4 மணி தாக்குதலின் போது மத்திய இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் தரப்பில் காசா பகுதிகளில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், தாழ்வாதார பகுதி ஒன்றை கைப்பற்றியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ் தன்வசம் பிடித்து வைத்துள்ள டஜன் கணக்கான பணயக்கைதிகளை விடுவித்து பிரதேசத்தின் கட்டுப்பாட்டை கைவிடும் வரை தாக்குதல்கள் தீவிரமடையும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.

    வடக்கு காசாவை தெற்கில் இருந்து பிரிக்கும் நெட்சாரிம் தாழ்வாரத்தின் ஒரு பகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 400-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதனை காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

    நேற்று (புதன்கிழமை) ஐக்கிய நாடுகள் சபை காசாவில் தனது ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், விருந்தினர் மாளிகையில் நடந்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் கூறியது. தாக்குதலுக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பது பற்றி தெரியவில்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

    • அரைமணி நேரம் ரெயில் தாமதமாக புறப்பட்டது.
    • ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க தீட்டப்பட்ட சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

    மங்களூர் செல்லும் பரசுராமன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை குமரியில் இருந்து புறப்பட்டது. இரணியல் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த லோகோ பைலட் ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இதன்பின் தண்டவாளத்தில் இருந்த கற்களை அகற்றிய பின்னர் அரைமணி நேரம் ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதையடுத்து தண்டவாளத்தில் கற்களை வைத்தது யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இளம்பெண் அவருக்குப் பதிலளிக்கும்படியாக செய்யும் செயல்தான் வீடியோவை வைரலாக்கி இருக்கிறது.
    • வீடியோவை பல லட்சம் பேர் ரசித்து உள்ளனர்.

    வாலிபர் ஒருவர், பூங்காவில் அமர்ந்திருக்கும் இளம் பெண்ணை கவர்வதற்காக சாகசம் செய்து சொதப்பும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், பூங்காவில் உள்ள கம்பியில் இளம்பெண் ஒருவர் அமர்ந்து இருக்கிறார். அப்போது அங்கு வரும் வாலிபர், அவரது மனதை கவர்வதற்காக அருகில் உள்ள மற்றொரு கம்பியில் தாவி நின்று, சறுக்குவதுபோல பாவனை செய்து, அப்படியே தலைகீழாக சுழன்று வந்து தரையில் நின்றபடி இளம்பெண்ணின் மனநிலையை நோட்டம் விடுகிறார்.

    அப்போது அந்த இளம்பெண் அவருக்குப் பதிலளிக்கும்படியாக செய்யும் செயல்தான் வீடியோவை வைரலாக்கி இருக்கிறது. அந்த இளம்பெண், கம்பியில் தலைகீழாக பலமுறை சுழன்று சுழன்று சாகசம் செய்து அசர வைக்கிறார். இதைப் பார்க்கும் வாலிபர், இவர் எத்தனை முறை சுழல்வார் என்பதைப்போல தலையை சுழற்றி சுழற்றி... யப்பா தலை சுற்றுதப்பா... என்று அங்கிருந்து நகர்ந்து செல்வதுடன் வீடியோ முடிகிறது.

    சாகசம் செய்து மனதை கவர முயன்ற வாலிபருக்கு, பதில் சாகசத்தால் வாயடைக்கச் செய்த இளம்பெண்ணின் செயலுக்கு வலைத்தளவாசிகள் பாராட்டு கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவை பல லட்சம் பேர் ரசித்து உள்ளனர்.



    • 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    சென்னை:

    பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிற்பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் பயணிகள் வசதிக்காக இன்று சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    • இரு நாட்டு தலைவர்களிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • டிரம்ப் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக் காட்டுகிறது.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இரு நாடுகள் இடையிலான போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு அமெரிக்கா சமீப காலமாக தீவிரம் காட்டி வருகிறது. அதன் பேரில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாட்டு தலைவர்களிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இருநாட்டு அதிபர்களிடம் பேசியதன் விளைவாக உக்ரைன் மற்றும் ரஷியா குறுகிய கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. அதன்படி இருநாடுகள் இடையே 30 நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வரவுள்ளது. இருநாடுகளும் மற்றவரின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறி வைக்கக்கூடாது என்று ஒப்புக் கொள்ள செய்வதில் தான், போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்க டிரம்ப் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக் காட்டுகிறது.

    அதிபர் புதினுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேர தொலைபேசி உரையாடலுக்கு பிறகு, இருநாட்டு தலைவர்களும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்தனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்த வார இறுதியில் சவுதி அரேபியாவில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பிரச்சனைகள் தீர்க்கப்படலாம் என்று தெரிவித்தார்.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி இருநாடுகளும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறி வைக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அமெரிக்கா "எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புகள்" என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளது. எனினும், இத்துடன் ரெயில்வே மற்றும் துறைமுகங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுப்பதாக கூறப்படுகிறது.

    அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஜெலன்ஸ்கி தனது சமூக வலைதள பக்கத்தில், "போரை முடிவுக்குக் கொண்டுவரும் முதல் படியாக எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துவது தான் இருக்க முடியும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது இருநாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ள போதிலும், இது எப்போது அமலுக்கு வரும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இது தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு தான் எப்போது போர் நிறுத்த ஒப்ந்தம் அமலுக்கு வரும் என்று தெரியவரும்.

    ×