என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சபாநாயகர் யுடி காதர் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசினர்.
    • ஒவ்வொருவராக தூக்கிச் சென்று சபையிலிருந்து வெளியேற்றினர்.

    கர்நாடக சட்டமன்ற நடவடிக்கைகளை சீர்குலைத்ததற்காக எதிர்க்கட்சியான பாஜகவைச் சேர்ந்த 18 உறுப்பினர்களை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவிட்டுள்ளார்.

    அரசு ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு தரும் மசோதா இன்று கர்நாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசியல்வாதிகள் மீதான ஹனி டிராப் மோசடி முயற்சிகள் குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினர். 

    சில பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதர் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசினர். மேலும் சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து சட்டமன்ற விதி 348 இன் கீழ், அவை நடவடிக்கைகளை சீர்குலைத்ததற்காகவும், உத்தரவைப் பொருட்படுத்தாமல், ஒழுங்கற்று மரியாதைக் குறைவான முறையில் நடந்து கொண்டதற்காகவும் 18 பாஜக எம்எல்ஏக்களை 6 மாத காலத்திற்கு அவையில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

    இடைநீக்கம் செய்யப்பட்டவர்களின் பெயர்களை சபாநாயகர் கூறிக் கொண்டிருந்தபோது, அவர்கள் வெளியேறாததால், பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை ஒவ்வொருவராக தூக்கிச் சென்று சபையிலிருந்து வெளியேற்றினர்.

    • பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life).
    • இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது. சமீபத்தில் நடிகர் சிம்புவின் பிறந்தநாள் அன்று வாழ்த்து தெரிவித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்பாடலிற்கு கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 'இந்தியாவில் மிகவும் வகுப்புவாத அரசியல்வாதி யார்?' என்ற கேள்விக்கு நரேந்திர மோடி என பதிலளித்தது.
    • ஆர்எஸ்எஸ்க்கு சுதந்தர போராட்டத்தில் எந்த பங்கும் இல்லை, இந்திய முஸ்லிம்கள் சுதந்திர போராட்டத்தில் அதிக பங்காற்றினார்.

    உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம் உருவாகியிருக்கும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் தொழில்நுட்பம் 'குரோக் 3' ஏஐ (Grok 3 AI). 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குரோக் ஏஐ செயலியின் அப்டேட் வெர்சனான குரோக் 3 கடந்த மாதம் முதல் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இலவசமாக கிடைக்கிறது.

    எக்ஸ் தளத்தில் கேள்வியைப் பதிவிட்டு @Grok என்று டேக் செய்தால் அதற்கான பதிலை குரோக் வழங்குகிறது. மேலும் எக்ஸ் பக்கத்தில் இடதுபுற பாரில் குரோக் தொடுப்பு இடம்பெற்றுள்ளது. நீங்கள் எந்த முறையில் பேசினாலும், அதே முறையில் பதில் கிடைக்கும்.

     

    நகைச்சுவையாக கேட்டால் அதே பாணியில் கேட்கும் மொழியில் குரோக் பதில் கொடுக்கும். சில உள்ளூர் வசைமொழிகளையும் குரோக் பயன்படுத்தி வருவதும் பேசுபொருளானது.

    சாட்ஜிபிடி, ஜெமினி ஏஐ, டீப்சீக் வரிசையில் குரோக் தனித்து தெரிகிறது. குறிப்பாக இந்தியாவில் குரோக் கொடுக்கும் தடாலடி பதில்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

    கல்வி, தொழில்நுட்பம், வரலாறு, தகவல்கள் என்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அரசியல் ரீதியான கேள்விகளுக்கும் சளைக்காமல் குரோக் கொடுக்கும் பதில்கள்தான் அதற்கு காரணம்.

    மோடி,அமித்ஷா, முக ஸ்டாலின் என பல்வேறு தலைவர்களின் அரசியல் சர்ச்சை கேள்விகளுக்கும் குரோக் விடையளிக்கிறது. குரோக்கின் பதில்களின் ஸ்கிரீன் ஷாட்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

    பயனரின் கேள்வி - 'இந்தியாவில் மிகவும் வகுப்புவாத அரசியல்வாதி யார்?'

    குரோக் கொடுத்த பதில் - 'நரேந்திர மோடி பெரும்பாலும் இந்தியாவின் மிகவும் வகுப்புவாத அரசியல்வாதியாகக் காணப்படுகிறார், இந்து தேசியவாதக் கொள்கைகள் மற்றும் 2002 குஜராத் கலவரங்களுடன் தொடர்புடையவர். முஸ்லிம்களை 'ஊடுருவுபவர்கள்' என்று 2024 இல் அவர் கூறிய கருத்துக்கள் உலகளாவிய விமர்சனத்தை தூண்டின'

    "நரேந்திர மோடியா அல்லது ராகுல் காந்தியா யார் நேர்மையானவர்?" என்ற பயனரின் கேள்விக்கு ராகுல் காந்தி என பதில் அளித்த குரோக், மோடியை விட அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் குறைந்த சர்ச்சைகளை கொண்டவர் ராகுல் காந்தி என்று விளக்கியுள்ளது.

    PM CARES நிதி போன்ற சர்ச்சைகளை மேற்கோள் காட்டி 'பிரதமர் மோடி பரப்பிய பொய்களை' பட்டியலிடக் கேட்டபோது, '100 நாட்களில் கருப்புப் பணத்தை மீட்டு வருதல், COVID-19 ஐ விரைவாக முடிவுக்குக் கொண்டுவருதல், 'மேக் இன் இந்தியா'விலிருந்து பொருளாதார நன்மைகள் போன்ற உதாரணங்களை குரோக் கொடுத்துள்ளது.  

     பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் உடைய சுதந்திர போராட்டதின் பங்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த குரோக், "இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ்-க்கு எந்தப் பங்கும் இல்லை.

    அதன் நிறுவனர் ஹெட்கேவர் ஒரு தனிநபராக சில போராட்டங்களில் இணைந்தார், ஆனால் ஆர்எஸ்எஸ் ஒரு அமைப்பாக விலகி, இந்து தேசியவாதத்தில் கவனம் செலுத்தியது. கோல்வால்கர் போன்ற தலைவர்கள் சுதந்திர இயக்கத்தை 'பிரிட்டிஷ் எதிர்ப்பு' என்று கூட விமர்சித்தனர்., மேலும் அவர்களின் இந்து ராஷ்ட்ர பார்வையுடன் சுதந்திர போராட்டம் ஒத்துப்போகவில்லை" என்று பதிலளித்தது.

    மேலும் "சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸை விட இந்திய முஸ்லிம்கள் மிகப் பெரிய பங்கைக் கொண்டிருந்தனர். மௌலானா ஹஸ்ரத் மோஹானி போன்ற முஸ்லிம் தலைவர்கள் 1921 இல் முழுமையான சுதந்திரத்திற்காக பாடுபட்டனர். மேலும் அஷ்பகுல்லா கான் போன்ற மாவீரர்கள் அதற்காகவே இறந்தனர்" என்று குரோக் தெரிவித்துள்ளது.

     

    இந்நிலையில் குரோக் இவ்வாறு பதில் சொல்லி வருவதால் மத்தியில் ஆளும் பாஜக அரசு அதன் மீதான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக வெளியான பிடிஐ செய்தியில், " தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் Grok அல்லது எக்ஸ்-க்கு இதுவரை எந்த நோட்டீஸையும் அனுப்பவில்லை.

    ஆனால் எக்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமைச்சக அதிகாரிகள் எக்ஸ்-இன் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, குளறுபடிகளை ஆராய்கின்றனர் என்றும் இதுகுறித்து எக்ஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இந்திய பயனர்களுக்கு நேற்று முதல் உனது பல பதில்கள் ஏன் தெரியவில்லை என்று ஒருவர் குரோக்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதற்கு பதிலளித்த குரோக், "எக்ஸில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது அரசின் தணிக்கை காரணமாக எனது பதில்கள் பயனர்களுக்கு காட்டப்படாமல் இருக்கலாம். குறிப்பாக பாஜக, ரஃபேல் போன்ற அரசியல் ரீதியிலான பதில்கள் காட்டப்படாமல் இருக்கலாம். இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் உள்ள விதிமுறைகள் காரணமாக பதில்கள் மறைக்கப்பட்டிருக்கலாம்" என்று தெரிவித்துள்ளது.

     

    குரோக், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்துவதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு கட்டுப்பாடுகளை எதிர்த்து எக்ஸ் நிறுவனம் நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளது.

    இதுபோன்று பிரதமருக்கு எதிராக பேசும் பிற செய்யறிவு நிறுவனங்கள் இந்நேரம் தடை செய்யப்பட்டிருக்கும், ஆனால் குரோக் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் நெருங்கிய நண்பர் எலான் மஸ்க் உடையது என்பதால் பாஜக அரசு தயக்கம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். 

    • எச்சில் பயன்படுத்தி பந்தின் ஒரு பக்கத்தை பளபளப்பாக வைத்திருக்க முடியும்.
    • அப்படி பளபளப்பாக வைத்திருந்தால் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகி பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தை கொடுக்கும்.

    ஐபிஎல் கிரிக்கெட் 2025 சீசனில் சில மாற்றங்களை பிசிசிஐ கொண்டு வந்துள்ளது அதில் ஒன்று வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்தலாம். மற்றொன்று இரவு நேர ஆட்டத்தின் இரண்டாவது பாதி ஆட்டத்தின்போது மற்றொரு புதுப்பந்து பயன்படுத்தலாம் என்பது.

    எச்சில் பயன்படுத்துவதால் பந்தின் ஒரு பக்கத்தை எப்போதும் பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம் இது ரிவர்ஸ் ஸ்விங் ஆக மிகவும் உதவியாக இருக்கும். இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் டெத் ஓவர்களில் ரிவர்ஸ் ஸ்விங்கை பயன்படுத்தி விக்கெட் வீழ்த்த முடியும்.

    இந்த நிலையில் வருண் சக்ரவர்த்தி இது குறித்து கூறியதாவது:-

    எச்சில் பயன்படுத்துவதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் மாறுபாடு கொடுக்கும் என நான் நினைக்கவில்லை. பனிப்பொழிவு காரணமாக பந்து மாற்றப்பட்டால் அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.

    11ஆவது, 12ஆவது ஓவர்களில் பந்து மாற்றப்படும்போது அப்போது சுழற் பந்துவீச்சாளர்கள் பந்து வீசி கொண்டு இருப்பார்கள். பந்து ஈரமாக இருக்காது. பந்து ஈரமாகாது. இதனால் அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.

    இவ்வாறு வருண் சக்ரவர்த்தி தெரிவித்தார்.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்போது முகமது ஷமி, பந்துவீச்சாளர் எச்சில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என ஐசிசி-க்கு கோரிக்கை வைத்திருந்தார். அப்படி அனுமதித்தால் பந்து தொடர்ந்து பளபளப்பாக இருக்கும். ரிவர்ஷ் ஸ்விங் ஆகி ஆட்டத்தில் சுவாரசியத்தை கொடுக்கும் எனக் கூறியிருந்தார். இதேபோல் முகமது சிராஜ் எச்சில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆதரவான கருத்து தெரிவித்திருந்தார்.

    கொரோனா தொற்று ஏற்படும்போது முன்னெச்சரிக்கை காரணமாக எச்சில் பயன்படுத்த ஐசிசி இடைக்கால தடை விதித்திருந்தது. பின்னர் 2022 ஆம் ஆண்டு ஐசிசி அதற்கு நிரந்தர தடைவிதித்தது. அதனைத் தொடர்ந்து பிசிசிஐ-யும் அந்த விதிமுறையை பயன்படுத்தி வந்தது. இந்த நிலையில்தான் தற்போது 2025 சீசனுக்காக அந்த தடையை நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரூ.2000 கோடியில் தரமான லேப்டாபை வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்கு தக்க விளக்கம்.
    • கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் திமுக அரசின் தரம் பற்றி.

    யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்த துறையையும் விட்டுவிடாத all-round TNBudget2025 என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2000 கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான Laptop வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை வழங்கியிருக்கிறார் அமைச்சர் தென்னரசு அவர்கள்.

    கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் கழக அரசின் தரம் பற்றி!

    யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்தத் துறையையும் விட்டுவிடாத all-round #TNBudget2025 அளித்து, பதிலுரையிலும் centum வாங்கியிருக்கும் நிதியமைச்சருக்குப் பாராட்டுகள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படம் 'ரெட்ரோ.
    • ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடலான 'கண்ணாடி பூவே' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ரெட்ரோ படத்தின் இரண்டாவது பாடலான கனிமா பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவிற்கும் இடையே திருமணம் நடக்கும் போது அமைந்துள்ள பாடலாகும்.இப்பாடலின் வரிகளை விவேக் எழுத சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.

    பாடலின் இடம்பெற்ற நடன காட்சிகள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

    • 10 வாரங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில் Fan park அமைக்கப்படுகிறது.
    • தமிழகத்தில் கோவை, நெல்லை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் அமைக்கப்பட உள்ளது.

    ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் சீசன் நாளை தொடங்குகிறது. மார்ச் 22-ந்தேதி (நாளை) முதல் மே 25-ந்தேதி வரை சுமார் 10 வாரங்கள் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஒவ்வொரு வாரத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மைதானங்களில் சென்று போட்டியை பார்த்து ரசிக்க முடியாத ரசிகர்களுக்கு, மைதானத்தில் போட்டியை பார்த்து ரசிக்கும் அளவிற்கு உற்சாகத்துடன் போட்டியை ரசிக்க வைக்கும் முயற்சியாக கடந்த 2015ஆம் ஆண்டு ஐபிஎல் நிர்வாகம் "Fan Park" என்பதை அறிமுகப்படுத்தியது.

    ஒவ்வொரு வாரமும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் இந்த "Fan park" அமைக்கப்படும். இங்கு ராட்சத திரை அமைக்கப்பட்டு போட்டி ஒளிபரப்பப்படும். அதோடு மியூசிக், பொழுது போக்கு, சிறுவர்கள் விளையாடுவதற்கான இடம், உணவுக் கடைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

    இந்த முயற்சி வெற்றிபெற்று ரசிகர்கள் அதிக அளவில் "Fan park" வருகை தந்து போட்டியை ரசிக்க தொடங்கினர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இதனால் ஐபிஎல் நிர்வாகம் "Fan park" அமைக்கும் இடங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆந்திர பிரதேச மாநிலம் காக்கிநாடா, நாகலாந்து மாநிலம் திமாபூர், புதுச்சேரியில் உள்ள காரைக்கால், மேற்கு வங்கத்தில் மன்பும் (புருலியா), ஹரியானாவில் உள்ள ரோக்தத், அருணாச்சால பிரதேச மாநிலத்தில் உள்ள தின்சுகியா ஆகிய இடங்களில் முதன்முறையாக "Fan Park" அமைக்கிறது.

    தமிழகத்தில் கோவை, நெல்லை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் அமைக்கப்பட உள்ளது.

    இந்திய முழுவதும் Fan Park அமைக்கப்படவுள்ள நகரங்கள் விவரம்:-

    முதல் வாரம் (மார்ச் 22 மற்றும் மார்ச் 23)

    மார்ச் 22- கொல்கத்தா- ஆர்பிசி

    மார்ச் 23- ஐதராபாத்- ராஜஸ்தான், சிஎஸ்கே- மும்பை

    தமிழ்நாடு- கோவை

    அரியானா- ரோத்தக்

    ராஜஸ்தான்- பிகானெர்

    சிக்கிம்- கங்டோக்

    கேரளா- கொச்சின்

    2-வது வாரம் (மார்ச் 29 மற்றும் மார்ச் 30)

    மார்ச் 29- குஜராத்- மும்பை

    மார்ச் 30- டெல்லி- ஐதராபாத், ராஜஸ்தான்- சிஎஸ்கே

    தமிழ்நாடு- திருநெல்வேலி

    மத்திய பிரதேசம்- குவாலியர்

    ராஜஸ்தான்- ஜோத்பூர்

    அசாம்- தின்சுகியா

    கேரளா- பாலக்காடு

    3-வது வாரம் (ஏப்ரல் 5 மற்றும் ஏப்ரல் 6)

    ஏப்ரல் 5- சிஎஸ்கே- டெல்லி, பஞ்சாப்- ராஜஸ்தான்

    ஏப்ரல் 6- கொல்கத்தா- லக்னோ, ஐதராபாத்- குஜராத்

    தமிழ்நாடு- மதுரை

    உத்தர பிரதேசம்- மதுரா

    குஜராத்- ராஜ்கோட்

    நாகலாந்து- திமாபூர்

    தெலுங்கானா- நிஜாமாபாத்

    4-வது வாரம் (ஏப்ரல் 12 மற்றும் ஏப்ரல் 13)

    உத்தர பிரதேசம்- மீரட்

    குஜராத்- நடியாட்

    திரிபுரா- அகர்தாலா

    மகாராஷ்டிரா- நாக்பூர்

    கர்நாடகா- மைசூரு

    5-வது வாரம் (ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 20)

    ஏப்ரல் 19- குஜராத்- டெல்லி, ராஜஸ்தான்- லக்னோ

    ஏப்ரல் 20- பஞ்சாப்- ஆர்சிபி, மும்பை- சிஎஸ்கே

    புதுச்சேரி- காரைக்கால்

    பஞ்சாப்- பதிண்டா

    குஜராத்- சூரத்

    அசாம்- தேஸ்பூர்

    மகாராஷ்டிரா- சோலாப்பூர்

    6-வது வாரம் (ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 27)

    பஞ்சாப்- அமிர்தசரஸ்

    மத்திய பிரதேசம்- போபால்

    மேற்கு வங்கம்- ராய்கஞ்ச்

    மகாராஷ்டிரா- கோலாபூர்

    கர்நாடகா- தும்கூர்

    7-வது வாரம் (மே 3 மற்றும் மே 4)

    மே 3- ஆர்சிபி- சிஎஸ்கே

    மே 4- கொல்கத்தா- ராஜஸ்தான், பஞ்சாப்- லக்னோ

    தமிழ்நாடு- திருச்சி

    இமாச்சல பிரதேசம்- ஹமிர்பூர்

    ராஜஸ்தான்- கோட்டா

    பீகார்- முசாபர்பூர்

    கர்நாடகா- பெலகாவி

    8-வது வாரம் (மே 10 மற்றும் மே 11)

    இமாச்சல பிரதேசம்- ஜபால்பூர்

    ஜார்க்கண்ட்- தன்பாத்

    மகாராஷ்டிரா- ரத்னகிரி

    ஆந்திர பிரதேசம்- விஜயவாடா

    9-வது வாரம் (மே 17 மற்றும் மே 18)

    உத்தர பிரதேசம்- ஆக்ரா

    சத்தீஸ்கர்- பிலாய்

    மேற்கு வங்கம்- மன்பும் (புருலியா)

    கர்நாடகா- மங்களூரு

    தெலுங்கானா- வாரங்கல்

    10-வது வாரம் (மே 23 மற்றும் மே 24)

    உத்தர பிரதேசம்- காசிபூர்

    ஒடிசா- ரூர்கேலா

    ஜார்க்கண்ட்- ஜாம்ஷெட்பூர்

    கோவா- கோவா

    ஆந்திர பிரதேசம்- காக்கிநாடா

    இரண்டு போட்டிகளில் நடைபெறும் நாட்கள் மதியம் 1.30 மணிக்கும், ஒரு போட்டி நடைபெறும் நாட்கள் 4 மணிக்கும் Fan Park தொடங்கும். நுழைவுக் கட்டணம் கிடையாது. ஆனால் பொழுதுப்போக்கு, உணவு போன்றவற்றிக்கு ரசிகர்கள் பணம் செலுத்த வேண்டும்.

    • ரூ.2021.51 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு தற்போது வரை ரூ.239.27 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதியை விடுவிப்பதில் எந்த காலதாமதமும் இல்லை என்றும் 26 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் யாதவ் பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

    மேலும், " ரூ.2021.51 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு தற்போது வரை ரூ.239.27 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

    ஜப்பானை சேர்ந்த நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி திட்டத்தை 2026 அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

    • ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொழியை நீங்கள் விரும்புகிறீர்கள், ஆனால் இந்திய மொழியை நீங்கள் விரும்பவில்லை.
    • மொழியின் பெயரால் உங்கள் ஊழலையும் மறைக்க முயற்சிக்கிறீர்கள். நாங்கள் உங்களை அம்பலப்படுத்துவோம்.

    இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது தேசிய கல்விக்கொள்கையில் (NEP) உள்ள மும்மொழிக் கொள்கையை இந்தி திணிப்பு என குற்றம்சாட்டி, தமிழ்நாடு ஏற்க மறுப்பது குறித்து காட்டமான கருத்துக்களை அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    அவையில் அமித் ஷா கூறியதாவது, அவர்கள் தங்கள் ஊழலை மறைக்க மொழியின் பெயரால் கடை விரிக்கிறார்கள். ஒவ்வொரு மொழியும் நாட்டின் ரத்தினம் போன்றது. நாங்கள் தென் மாநில மொழிகளுக்கு எதிரானவர்கள் என அவர்கள் சொல்ல விரும்புகிறீர்களா?..

    மொழியின் பெயரால் அரசியல் செய்பவர்கள், தனிக்கப்பட்ட உள்நோக்கம் கொண்டிருக்கிறார்கள். பொறியியல் மற்றும் மருத்துவத் தேர்வுகளை தமிழில் நடந்த (தமிழ்நாடு அரசுக்கு) தைரியம் இல்லை.

     

    அவர்கள் மொழியின் பெயரால் விஷத்தைப் பரப்புகிறார்கள். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொழியை நீங்கள் விரும்புகிறீர்கள், ஆனால் இந்திய மொழியை நீங்கள் விரும்பவில்லை.

    மொழியின் பெயரால் நாட்டைப் பிரிக்கக் கூடாது. உங்கள் தவறுகளையும், மொழியின் பெயரால் உங்கள் ஊழலையும் மறைக்க முயற்சிக்கிறீர்கள். நீங்கள் வளர்ச்சி பற்றிப் பேச வேண்டும். நாங்கள் உங்களை அம்பலப்படுத்துவோம், உங்கள் தவறுகளை அம்பலப்படுத்த ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்வோம் என்று பேசியுள்ளார்.

    மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டுக்கான ரூ.2000 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் நாளை பணி நாளாக செயல்படும்.
    • வெள்ளிக்கிழமை பாட கால அட்டவணைப்படி செயல்படும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது.

    சனிக்கிழமையான நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் நாளை அரசு, தனியார் உள்பட அனைத்துக் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் ((அரசு/ அரசு உதவிபெறும் / ஆதி திராவிட /சென்னை/ தனியார் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி ) நாளை (மார்ச் 22) அன்று பணி நாளாக செயல்படவும் மற்றும் வெள்ளிக்கிழமை பாட கால அட்டவணைப்படி செயல்படும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து வான்வழித் தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம்.
    • பயங்கரவாதிகளை தங்கள் கண்களில் வைத்திருப்பவர்கள் எல்லா இடங்களிலும் பயங்கரவாதிகளை மட்டுமே பார்ப்பார்கள்

    இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தின்போது மாநிலங்களவையில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

    அவர் பேசியதாவது, முதலில், நான் காஷ்மீரைப் பற்றிப் பேசுகிறேன். அண்டை நாட்டிலிருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைந்தனர். அவர்கள் இங்கு குண்டுவெடிப்புகளையும் கொலைகளையும் அரங்கேற்றினர். எந்த கவலையும் இல்லாமல் ஒரு பண்டிகையைக் கூட காஷ்மீர் மக்கள் கொண்டாட முடியவில்லை.

    இந்த விவகாரத்தில் முந்தைய மத்திய அரசு நெகிழ்வான அணுகுமுறையைக் கொண்டிருந்தது. அவர்கள் அமைதியாக இருந்தனர், பேசுவதற்கு பயந்தனர். அவர்கள் தங்கள் வாக்கு வங்கியைப் பற்றி கவலைப்பட்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் காட்டினோம்.  

    நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் உரி மற்றும் புல்வாமாவில் தாக்குதல்கள் நடந்தன. 10 நாட்களுக்குள், நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து வான்வழித் தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம்.

     

    எங்களின் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை அங்கிருந்து தொடங்கியது. காஷ்மீரில் பிரிவினைவாதத்திற்கான அடிப்படையாக பிரிவு 370 இருந்தது. ஆனால் பிரிவு 370 ஆகஸ்ட் 5, 2019 அன்று எங்கள் அரசால் நீக்கப்பட்டது.

    இந்த நடவடிக்கை ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் முழுமையாக ஒருங்கிணைப்பதை உறுதி செய்தது. தற்போதைய நிர்வாகம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், எந்தவொரு அச்சுறுத்தல்களிலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது.

    நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் எல்லைகளை வலுப்படுத்த உயர்ந்த தியாகத்தைச் செய்த ஆயிரக்கணக்கான மாநில காவல்துறை மற்றும் மத்திய துணை ராணுவப் படை வீரர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

    மேலும்  பேசிய அமித்ஷா "தான் பயங்கரவாதிகளை தூரத்திலிருந்து கூட பார்க்கிறேன்" என்று ஒருவர் (ராகுல் காந்தி காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது) கூறினார். பயங்கரவாதிகளை தங்கள் கண்களில் வைத்திருப்பவர்கள் எல்லா இடங்களிலும் பயங்கரவாதிகளை மட்டுமே பார்ப்பார்கள் என்று விமர்சித்தார். மேலும் நக்சல் பிரச்சனை குறித்து பேசிய அமித் ஷா, இடதுசாரி பயங்கரவாதம், மார்ச் 31, 2026க்குள் முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

    போதைப்பொருள், சைபர் குற்றம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் ஹவாலா போன்ற மாநிலங்களுக்கிடையேயான மற்றும் வெளிநாட்டில் இருந்து நடக்கும் குற்றங்களை தடுக்க உள்துறை அமைச்சகத்தில் (அதிகார வரம்பில்) பல மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் என்றும் அமித் ஷா பேசினார்.

    • ஏற்கனவே அரசு டெண்டர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இருந்து வருகிறது.
    • பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதர் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசினர்.

    அரசு ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கர்நாடக சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது கடும் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு மசோதா நகலை கிழித்து சபாநாயகர் யுடி காதர் மீது வீசி பரபரப்பை கிளப்பினர்.

    கடந்த மாதம், முஸ்லிம் எம்எல்ஏக்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் அடங்கிய குழு, அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி முதல்வர் சித்தராமையாவிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தது. இதை ஏற்றுக்கொண்ட முதல்வர் சித்தராமையாவின் காங்கிரஸ் அரசு இதுதொடர்பாக புதிய மசோதாவை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்துள்ளது.

    ஏற்கனவே அரசு டெண்டர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இருந்து வரும் நிலையில் அதோடு சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடும் சேர்க்கப்பட்டுள்ளதில் எந்த தவறும் இல்லை என அரசு வாதிடுகிறது. ஆனால் எதிர்க்கட்சியான பாஜக, இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று போராடி வருகிறது.

     

    இந்த நிலையில்தான் இன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதா சட்டமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதரின் இருக்கை முன்பு திரண்டு கோஷமிட்டனர்.

    அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீதம் வழங்கும் மசோதா நகலை கிழித்து அவர் மீதுவீசினர். சில பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதர் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசினர். இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் பாஜக எம்எல்ஏக்களை வலுக்கட்டமையாக அவையை விட்டு வெளியேற்றும் சூழல் ஏற்பட்டது.

    ×