என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மெகா ஏலத்தில் ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
    • 2025 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கவுள்ளது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை ஆர்சிபி பதிவு செய்தது.

    இந்த ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கவுள்ளது.

    முன்னதாக நடைபெற்று முடிந்த இந்த வீரர்கள் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.

    ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்களுடைய முதல் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக 2 அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில், ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியின்போது எம்.எஸ்.தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து ரிஷப் பண்ட் பயிற்சி மேற்கொண்ட வீடியோவை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஜெயிலர் படத்தின் அலப்பறை கிளப்புறோம் பாடல் பின்னணியில் ஒலிக்கப்பட்டது தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    • முதலமைச்சர் இல்லத்தில் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு முஸ்லீம் அமைப்பிற்கு அழைப்பு.
    • நீங்கள் கூறிய உறுதிமொழிகளுக்கு எதிரானது.

    பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் விடுத்த இஃப்தார் அழைப்பை அம்மாநிலத்தின் பிரதான முஸ்லீம் அமைப்பு நிராகரித்துள்ளது. நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வக்பு வாரிய மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து முஸ்லீம் அமைப்பு இஃப்தார் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது.

    இமாரத் ஷரியா என்ற முஸ்லீம் அமைப்பு பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா முழுக்க ஆதரவாளர்களை கொண்டிருக்கிறது. இன்று (ஞாயிற்றுக் கிழமை) முதலமைச்சர் இல்லத்தில் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இமாரத் ஷரியா அமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த அழைப்புக்கு பதிலளித்த இமாரத் ஷரியா, "மார்ச் 23ம் தேதி நடைபெறும் அரசு இஃப்தாரில் கலந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்களின் பொருளாதார மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய நிலைக்கு தள்ளும் வக்பு வாரிய மசோதாவுக்கு நீங்கள் அளித்த ஆதரவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது."

    "சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு மதச்சார்பற்ற (தர்ம-நிரபெக்ஷ்) ஆட்சியை உறுதியளித்து நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால் பாஜகவுடனான உங்கள் கூட்டணியும், அரசியலமைப்பிற்கு விரோதமான மற்றும் நியாயமற்ற ஒரு சட்டத்திற்கு உங்கள் ஆதரவும், நீங்கள் கூறிய உறுதிமொழிகளுக்கு எதிரானது," என தெரிவித்துள்ளது.

    • வெறும் 8 நாள் பயணமாக சென்றவர்கள் விண்கலம் செயலிழந்ததால் 286 நாட்கள் அங்கேயே இருந்தனர்.
    • சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வந்ததற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கும் மேலாக சிக்கி தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய 2 பேரும் நீண்ட போராட்டத்துக்கு பிறகு கடந்த 19-ந்தேதி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

    வெறும் 8 நாள் பயணமாக சென்றவர்கள் விண்கலம் செயலிழந்ததால் 286 நாட்கள் அங்கேயே இருந்தனர். அதாவது, திட்டமிட்டதை விட கூடுதலாக 278 நாட்கள் அவர்கள் விண்வெளியில் இருந்தனர்.

    இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஜனாதிபதி டிரம்பிடம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விண்வெளியில் கூடுதல் காலம் தங்கியிருந்ததற்காக அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    "இதை யாரும் என்னிடம் குறிப்பிடவில்லை. தேவைப்பட்டால், நான் அதை எனது சொந்த பணத்தில் இருந்து கொடுப்பேன்" என கூறினார்.

    மேலும் அவர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வந்ததற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்தார்.

    இதனிடையே விண்வெளியில் கூடுதல் காலம் இருந்ததற்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு நாள் ஒன்று 5 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.430) சிறப்பு சம்பளமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    அதாவது அவர்களின் ஆண்டு வருமானமான 1,52,258 டாலர்களுடன் (ரூ.1 கோடியே 30 லட்சம்) கூடுதலாக 1,430 டாலர்கள் (ரூ.1.22 லட்சம்) வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்கள் அடித்து அவுட்டானார்.
    • ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்கள் அடித்து அவுட்டானார். இப்போட்டியில் 8 ஓவரை ஆர்சிபி வீரர் ரசீக் சலாம் வீசினார். அந்த ஓவரில் சலாம் வீசிய வைட் பந்தை நரைன் அடிக்க முயன்றார். ஆனால் பேட்டில் பந்து படவில்லை. அதன்பின்பு அவர் பேட்டை கீழே இறக்கையில் தவறுதலாக பேட் ஸ்டம்ப்பில் பட்டு பைல்ஸ் கீழே விழுந்தது.

    இதனால் நரைன் ஹிட் விக்கெட் ஆனார் என்று ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி சில நொடிகள் கூட நீடிக்கவில்லை. நடுவர் நரைனுக்கு அவுட் கொடுக்கவில்லை.

    அந்த பந்தை நரைன் ஆடி முடிந்தபின்பு நடுவர் வைட் கொடுத்தார். பந்து வைட் என அறிவிக்கப்பட்டதால் ஹிட் விக்கெட் முறைப்படி நரைனுக்கு அவுட் கொடுக்கப்படவில்லை. 

    • போலீசார் பறிமுதல் செய்த பணத்தின் மதிப்பு ரூ.15 கோடி என கூறப்படுகிறது.
    • இந்த குழுவினர் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விரிவான விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகளில் ஒருவரான யஷ்வந்த் வர்மாவின் டெல்லி வீட்டில் கடந்த 14-ந் தேதி இரவு திடீரென தீப்பிடித்தது.

    இது குறித்து தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு படையினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். அப்போது அந்த வீட்டின் ஒரு அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.

    போலீசார் பறிமுதல் செய்த அந்த பணத்தின் மதிப்பு ரூ.15 கோடி என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதேநேரம் ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் நீதித்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் இந்த பிரச்சனை நாடாளுமன்றத்திலும் பலமாக எதிரொலித்தது. குறிப்பாக மாநிலங்களவையில் இந்த பிரச்சனையை காங்கிரஸ் கட்சி எழுப்பி கவலை தெரிவித்து இருந்தது.

    இதற்கிடையே ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது.

    பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கொலீஜியம் உத்தரவிட்டது.

    அதன்படி டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.கே.உபத்யாய் விசாரணை நடத்தினார். குறிப்பாக பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விசாரணை நடந்தது.

    பின்னர் இது தொடர்பாக விரிவான அறிக்கையை நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அவர் சமர்ப்பித்தார்.

    அதன் அடிப்படையில், பணம் சிக்கிய விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை அமைத்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நேற்று உத்தரவிட்டார்.

    அதன்படி பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாசல பிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடகா ஐகோர்ட்டு நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த குழுவினர் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விரிவான விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.

    மேலும் தற்போதைய நிலையில் ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு சட்டப்பணிகள் எதையும் ஒதுக்கக்கூடாது என டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியையும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சமர்ப்பித்த விசாரணை அறிக்கையும், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பதில் உள்ளிட்ட ஆவணங்களையும் சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் பதிவேற்றி இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில்174 ரன்கள் எடுத்தது.
    • ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் முதல் ஓவரை ஆர்சிபி அணி வீரர் ஜோஷ் ஹேசல்வுட் வீசினார். ஆனால் அந்த ஓவரை விராட் கோலி வீசியதாக ஒளிபரப்பப்பட்டது இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

    • சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு காலை திருமஞ்சனம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-9 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி நள்ளிரவு 1.48 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: பூராடம் நள்ளிரவு 12.43 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு காலை திருமஞ்சனம். திருவெள்ளாறை ஸ்ரீ சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் பவனி. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருமஞ்சனம். இரவு கண்டபேரண்டபட்சிராஜ வாகனத்தில் சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-வெற்றி

    மிதுனம்-ஆர்வம்

    கடகம்-சாதனை

    சிம்மம்-போட்டி

    கன்னி-சலனம்

    துலாம்- பண்பு

    விருச்சிகம்-பாராட்டு

    தனுசு- அமைதி

    மகரம்-செலவு

    கும்பம்-களிப்பு

    மீனம்-ஊக்கம்

    • பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    • இஸ்ரேல் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு.

    தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. ஜனவரி மாதம் தொடங்கிய போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் அலுவலகத்தில் உறுப்பினராக இருக்கும் பர்தவீலுடன் சேர்ந்து அவரது மனைவியும் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே செய்தியை ஹமாஸ் ஆதரவு ஊடகங்களும் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, போரின் முக்கிய நோக்கம் ஹமாஸ் அமைப்பின் ராணுவ அமைப்பை அழிப்பது தான் என்று பலமுறை கூறியுள்ளார்.

    கடந்த வெள்ளிக்கிழமை, தெற்கு காசாவில் ஹமாஸின் ராணுவ உளவுத்துறை தலைவரை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    • வங்கியின் செயல்பாடுகள் முடக்கப்பட்டது.
    • முக்கிய குற்றவாளியான வங்கியின் பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தாவை கைது செய்தனர்.

    மும்பை:

    மும்பையை சேர்ந்த நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் ரூ.122 கோடி மோசடி நடந்தது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கியின் செயல்பாடுகள் முடக்கப்பட்டது. மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வங்கியின் பாதுகாப்பு பெட்டகங்களில் இருந்து பணத்தை எடுத்து கட்டுமான அதிபர், தொழில் அதிபர் உள்ளிட்டவர்களுக்கு கொடுத்த முக்கிய குற்றவாளியான வங்கியின் பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தாவை கைது செய்தனர்.

    அவர் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள வங்கியின் முன்னாள் தலைவர் ஹிதேன் பானு, அவரது மனைவி கவுரி பானுவை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே முக்கிய குற்றவாளியான ஹிதேஷ் மேத்தாவுக்கு போலீசார் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொண்டனர் இந்த சோதனையில் போதுமான அளவு வழக்கு தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை.

    இதையடுத்து போலீசார் அவருக்கு 'பிரைன் மேப்பிங்' சோதனை மேற்கொள்ள உள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாங்கள் ஹிதேஷ் மேத்தாவுக்கு 'பிரைன் மேப்பிங்' சோதனை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம். அதுதொடர்பான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஏற்கனவே அவருக்கு தடயவியல், உளவியல் சோதனைகள் மேற்கொள்ள கோர்ட்டு அனுமதி அளித்துவிட்டது" என்றார்.

    • சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது.
    • இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களில் 4-ல் ஒரு பங்கு சிறுவர்களாக இருப்பது தெரியவருகிறது.

    2024-ம் ஆண்டில் 21 லட்சத்து 95 ஆயிரத்து 122 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதும், அவர்களில் 4-ல் ஒரு பங்கு 15 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகள் ஆவார்கள் என்பதும் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

    நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. தெருநாய்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது.

    நாய்க்கடி பாதிப்புக்கு மருந்து இருக்கிறது என்றாலும், வெறிநாய்க் கடியால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் பிழைப்பது கேள்விக்குறியாகிவிடுகிறது. அதாவது, நாய்க்கடியால் பாதிக்கப்படும் ஒருவர் ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் அதில் இருந்து மீண்டு விடுகிறார்.

    ஆனால் அதுவே நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் கிருமிகள் (வெறிநோய்) நேரடியாக மூளையை தாக்கும்போதுதான் அந்த நபர் மரணத்தை தழுவும் சூழல் ஏற்படுகிறது. இதனை வெறிநாய்க்கடி பாதிப்பு என்றும் சொல்கிறார்கள்.

    இப்படியாக உலகளவில் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெறிநாய்க்கடி பாதிப்பால் மரணம் அடைவதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    உலகளவில் இந்தியாவை எடுத்துக்கொண்டால், நாய்க்கடி பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருவதை புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

    அதன்படி, இந்தியாவில் கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் 21 லட்சத்து 95 ஆயிரத்து 122 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகள் 5 லட்சத்து 19 ஆயிரத்து 704 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களில் 4-ல் ஒரு பங்கு சிறுவர்களாக இருப்பது தெரியவருகிறது.

    நாய்க்கடி பாதிப்பில் மராட்டியத்துக்கு அடுத்தபடியாக தமிழகம்தான் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த 2024-ம் ஆண்டில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 4 லட்சத்து 41 ஆயிரத்து 804 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது, இந்தியாவில் 2024-ம் ஆண்டில் 54 ஆக இருக்கிறது. இறப்பு எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. இதற்கு முன்பு 2023-ம் ஆண்டில் 50 ஆகவும், 2022-ம் ஆண்டில் 21 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 6 வழிச்சாலை மூலம் மும்பை - நாக்பூர் பயண நேரம் 8 மணி நேரமாக குறைந்து உள்ளது.
    • சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) அறிவித்து உள்ளது.

    மும்பை:

    மும்பை - நாக்பூர் இடையே ரூ.55 ஆயிரம் கோடி செலவில் 701 கி.மீ. தூரத்துக்கு சம்ருத்தி விரைவு சாலை போடும் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. தற்போது நாக்பூர் முதல் இகத்பூரி வரை பணிகள் முடிந்து சாலை திறக்கப்பட்டுள்ளது. இகத்பூரில் இருந்து அம்னே (தானே) வரை சாலைத்திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த 6 வழிச்சாலை மூலம் மும்பை - நாக்பூர் பயண நேரம் 8 மணி நேரமாக குறைந்து உள்ளது. சாலைப்பணி முழுமையாக முடிந்த பிறகு பயண நேரம் மேலும் குறையும்.

    இந்தநிலையில் வருகிற 1-ந் தேதி முதல் சம்ருத்தி சாலையில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) அறிவித்து உள்ளது.

    தற்போது இலகுரக வாகனங்களுக்கு கி.மீ.க்கு ரூ.1.73, வணிக இலகுரக வாகனங்களுக்கு ரூ.2.79, கனரக வாகனங்களுக்கு ரூ.5.85, 3 ஆக்சில் கனரக வாகனங்களுக்கு ரூ.6.83, கட்டுமான கனரக எந்திரங்களுக்கு ரூ.9.18, 7-க்கு மேற்பட்ட ஆக்சில் வாகனங்களுக்கு ரூ.11.07 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் முறையே ரூ.2.06, ரூ.3.32, ரூ.6.97, ரூ.7.60, ரூ.10.93, ரூ.13.30 ஆக உயர்த்தப்பட்டது.

    அதாவது நாக்பூர் - இகத்பூரி இடையே ரூ.1,080 ஆக இருந்த இலகுரக வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ரூ.1,290 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மினிபஸ் போன்ற இலகுரக வணிக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.1,745-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 75 ஆகவும், பஸ், லாரி உள்ளிட்ட 2 ஆக்சில் கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்து 655-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 750 ஆகவும், கனரக கட்டுமான எந்திரங்களுக்கான கட்டணம் ரூ.5 ஆயிரத்து 740-ல் இருந்து ரூ.6 ஆயிரத்து 830 ஆகவும், 7 ஆக்சில் அல்லது அதற்கு மேற்பட்ட கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.6 ஆயிரத்து 980-ல் இருந்து ரூ.8 ஆயிரத்து 315 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

    இந்த சுங்க கட்டணம் வரும் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்து 2028-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

    • கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் 3 சிறப்பு இரவு நேர மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.
    • வேளச்சேரியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 11.25 மணிக்கு சேப்பாக்கம் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), 28, ஏப்ரல் 11, 25, 30, மே 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காண செல்லும் ரசிகர்களின் வசதிக்காக சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் 3 சிறப்பு இரவு நேர மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை கடற்கரையில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 10.10 மணிக்கு சேப்பாக்கம் சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு வேளச்சேரி சென்றடையும்.

    * வேளச்சேரியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 11.25 மணிக்கு சேப்பாக்கம் வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும்.

    * சென்னை சேப்பாக்கத்தில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 12.05 மணிக்கு வேளச்சேரி சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×