என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    • இவர்களது பதவி காலம் 2024-ம் ஆண்டு முடிவடைந்தது.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் நடிகர் சங்க உறுப்பினர் நம்பிராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கில், '2022-ம் ஆண்டு நடந்த தேர்தலின்படி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணை தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களது பதவி காலம் 2024-ம் ஆண்டு முடிவடைந்தது.

    ஆனால், மேலும் 3 ஆண்டுகளுக்கு பதவியை நீட்டிப்பு செய்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் இயற்றியுள்ளனர். இதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்'' என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்கத்தை நிர்வகிக்கவும், தேர்தலை நடத்தவும் ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்'' என்று வாதிடப்பட்டது. உடனே நீதிபதி, நடிகர் சங்கத்தின் தேர்தலை நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு நடிகர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், "தேர்தல் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. தற்போது, நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகின்றன. பணிகள் முடிவடையும் நிலையில் தேர்தல் நடத்தினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் என்பதால், நிர்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டித்து, பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்'' என்று விளக்கம் அளித்தார்.

    இதையடுத்து, இந்த வழக்கில், நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பு வாதம் செய்வதற்காக விசாரணை வருகிற 15-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • நான் சற்று பிடிவாத குணம் கொண்டவன். இல்லையென்றால், இந்த சவால்களுக்கு மத்தியில் நான் எப்போதோ விட்டுக்கொடுத்திருப்பேன்.
    • இந்தப் பிடிவாதங்களில் நான் சமரசம் செய்திருந்தால், எனக்குப் பல நன்மைகள் கிடைத்திருக்கும்.

    நேபாளத்தில் சமூக ஊடக தடைக்கு எதிராக செப்டம்பர் 8 இல் வெடித்த இளைஞர்களின் போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாக மாறி அந்நாட்டு ஆட்சியை கவிழ்த்துள்ளது.

    அடுத்த நாளே சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இது வழிவகுத்தது. அவரை தொடர்ந்து ஜனாதிபதியும் ராஜினாமா செய்தார்.

    சர்மா ஒலி தற்போது காத்மாண்டுவின் வடக்கே உள்ள சிவுபுரி ராணுவ முகாமில் தங்கியுள்ளார்.

    இந்நிலையில் பதவி விலகிய பின் அவர் முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியுள்ளார். அதில் தனது பதவி இழப்புக்கு இந்தியா மீதான தனது நிலைப்பாடே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

    அயோத்தியில் ராமர் பிறந்ததை எதிர்த்ததால் தான் ஆட்சியை இழந்ததாகக் அவர் தெரிவித்துள்ளார். 

     மேலும், இந்தியா எல்லையில் இருக்கும் சர்ச்சைக்குரிய பகுதிகளான லிபுலேக், காலாபனி மற்றும் லிம்பியாதுரா ஆகியவை நேபாளத்திற்கு சொந்தமானவை என்று தான் வலியுறுத்தியதும் தனது பதவி இழப்புக்கு ஒரு காரணம் என்று அவர் தெரிவித்தார்.

    மேலும் அவரது அறிக்கையில், "நான் சற்று பிடிவாத குணம் கொண்டவன். இல்லையென்றால், இந்த சவால்களுக்கு மத்தியில் நான் எப்போதோ விட்டுக்கொடுத்திருப்பேன். சமூக ஊடக நிறுவனங்கள் எங்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

    ராமர் நேபாளத்தில் தான் பிறந்தார், இந்தியாவில் அல்ல என்று நான் கூறினேன். இந்தப் பிடிவாதங்களில் நான் சமரசம் செய்திருந்தால், எனக்குப் பல நன்மைகள் கிடைத்திருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே போராட்டக்காரர்கள் பல அமைச்சர்களின் வீடுகளுக்குத் தீ வைத்ததுடன், நாடாளுமன்றம், பிரதமர் மற்றும் அதிபர் மாளிகைகளையும் சூறையாடினர்.

    வன்முறையில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், 13,500-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளில் இருந்து தப்பி ஓடியதாகவும் நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது. 

    • சுவிட்சர்லாந்தின் கருத்துகள் மேலோட்டமான தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டது என்று கூறினார்.
    • சுவிட்சர்லாந்து இனவெறி, திட்டமிட்ட பாகுபாடு மற்றும் வெளிநாட்டவர் வெறுப்பு போன்ற அதன் சொந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்

    ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா சுவிட்சர்லாந்து தெரிவித்த கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

    கூட்டத்தில் பேசிய சுவிட்சர்லாந்து பிரதிநிதி, இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த ஐநாவுக்கான இந்திய தூதரகத்தின் ஆலோசகர் க்ஷிதிஜ் தியாகி, சுவிட்சர்லாந்தின் கருத்துகள் மேலோட்டமான தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டது என்று கூறினார்.

    மேலும், "ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவராக சுவிட்சர்லாந்து, வெளிப்படையாக தவறான மற்றும் இந்தியாவின் யதார்த்தத்திற்கு பொருந்தாத கதைகளால் சபையின் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    சுவிட்சர்லாந்து இனவெறி, திட்டமிட்ட பாகுபாடு மற்றும் வெளிநாட்டவர் வெறுப்பு போன்ற அதன் சொந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்று தியாகி தெரிவித்தார். 

    • அவர்களை வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு சைகை காட்டி காட்டினார்.
    • வாஷிங்டன் டி.சி. காவல்துறையை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் டிரம்ப் கொண்டுவந்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தலைநகர் வாஷிங்டன் டி.சியில் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள பிரபல உணவகத்தில் இரவு உணவு அருந்த சென்றுள்ளார்.

    அப்போது, அங்கு வந்த ஒரு போராட்டக்காரர்கள் குழு, "டி.சி-க்கு விடுதலை", "பாலஸ்தீனத்திற்கு விடுதலை" என கோஷங்களை எழுப்பினர்.

    மேலும், டிரம்பை "நவீன கால ஹிட்லர்" என்றும் குறிப்பிட்டு கோஷங்களை எழுப்பினர்.

    அவர்களின் கோஷங்களைக் கேட்ட டிரம்ப், அவர்களை வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு சைகை காட்டி காட்டினார். 

    'கோட் பிங்க்' என்ற பெண்ணிய செயற்பாட்டாளர் குழு இந்த போராட்டத்திற்கு பொறுப்பேற்றது.

    அண்மையில் வாஷிங்க்டன் பாதுகாப்பற்றதாக இருப்பதாக கூறி வாஷிங்டன் டி.சி. காவல்துறையை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் டிரம்ப் கொண்டுவந்தற்கு எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது. 

    • எத்தனை மசோதாக்கள் முடக்கப்பட்டுள்ளன என்பது கேள்வி அல்ல, மாறாக மசோதாவை காலவரையின்றி முடக்க முடியுமா என்பதுதான் கேள்வி.
    • மாநிலங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக எப்படி கூற முடியும்.

    மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் சில மசோதாக்கள்  நிறுத்தப்பட்டுதான் ஆக வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    மசோதாக்கள் மீது ஆளுநர்கள், ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மெல்முறையீட்டு மனு விசாரணையில் உள்ளது.

    நேற்றைய விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மசோதாக்கள் காலவரையின்றி தாமதமாக வருவதை மத்திய அரசு நியாயப்படுத்தவில்லை.

    கடந்த 55 ஆண்டுகளில் 17,000 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 20 மசோதாக்களை மட்டும் நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து மாநிலங்கள் தவறான புகார்களை எழுப்புகின்றன என்று வாதிட்டார்.

    இதற்கு பதிலளித்த நீதிபதி சூர்யகாந்த், "எத்தனை மசோதாக்கள் முடக்கப்பட்டுள்ளன என்பது கேள்வி அல்ல, மாறாக மசோதாவை காலவரையின்றி முடக்க முடியுமா என்பதுதான் கேள்வி" என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய நீதிபதி, "மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக ஆளுநர்களால் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக எப்படி கூற முடியும்" என்று கேள்வி எழுப்பினார்.

    இதன்பின் பேசிய துஷார் மேத்தா, " ஆளுநரின் பங்கு அரசியலமைப்பின் பாதுகாவலர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்பதுதான். காலக்கெடுவை நிர்ணயிப்பதன் மூலம் ஒரு வரையறையை உருவாக்க முடியாது.

    மசோதாக்கள் அரசியலமைப்பிற்கு முரணான சூழ்நிலைகளில் இருக்கும்போது ஒப்புதலை நிறுத்தி வைக்க வேண்டும்அவசியம் உள்ளது" என்று வாதிட்டார்.  

    • பாரிஸ் மற்றும் பிரான்சின் பிற பகுதிகளில் மக்கள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பிரதமராக செபாஸ்டின் லெகர்னுவை, அதிபர் மேக்ரான் நியமித்தார்.

    பிரான்சில் அதிபர் மேக்ரானின் 'ரினைசன்ஸ்' கட்சி பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி தயவை நம்பி ஆட்சியில் உள்ளது. இதனால் கடந்த ஒன்பது மாதங்களில் நான்கு பிரதமர்கள் மாறியுள்ளனர்.

    இதற்கிடையே பொது விடுமுறை நாட்களை குறைத்தல், ஓய்வூதியத் தொகையை உயர்த்தாதது, மருத்துவம், கல்வி, வீட்டு வசதி, மானியங்கள் போன்ற மக்களுக்கு அரசு வழங்கும் நலத் திட்டங்களுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய மசோதாவை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    அண்மையில் பட்ஜெட் குறைப்பு மசோதாவை தாக்கல் செய்ய, பிரதமராக இருந்த பிராங்காய்ஸ் பாய்ரு முயற்சித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா நிறைவேறவில்லை. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பிராங்காய்ஸ் பாய்ரு கோரினார். அதில் தோல்வியடைந்ததால் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதற்கிடையே கடந்த திங்களன்று புதிய பிரதமராக செபாஸ்டின் லெகர்னுவை, அதிபர் மேக்ரான் நியமித்தார். இவ்வாறு பிரதமர்கள் தொடந்து மாறுவதும் பட்ஜெட் குறைப்பும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், நேற்று பாரிஸ் மற்றும் பிரான்சின் பிற பகுதிகளில் மக்கள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து, வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். மேலும் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

     போராட்டத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுதும் 80,000 போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

     இதற்கிடையே பட்ஜெட் குறைப்புக்கு எதிராக வரும் 18ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களும், வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. 

    • ஒரு துறவி சமூகத்தை தனது குடும்பமாகவும், தேசத்தை தனது குலமாகவும் கருதுவார், அவரது ஒரே அடையாளம் சனாதன தர்மம் தான்.
    • ராமர் கோவில், இரு மகான்களின் உறுதியான போராட்டத்திற்கு சான்றாக நிற்கிறது.

    அயோத்தி ராமர் கோயில் குறித்து ஒருவர் பெருமையடையவில்லை என்றால், அவர் இந்தியர் என்பதே சந்தேகம்தான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

    நேற்று, கோரக்நாத் கோவிலில் மகான் திக்விஜய்நாத்தின் 56-வது நினைவு நாளையும், மகான் அவைத்தியநாத்தின் 11-வது நினைவு நாளையும் முன்னிட்டு நடைபெற்ற விழாவில் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார்.

    அப்போது பேசிய அவர், "இன்று, இந்தியாவில் ராமர் கோவிலை கண்டு பெருமைப்படாதவர்கள் யார்? அப்படிப் பெருமை கொள்ளாதவர்கள் இந்தியர்களாக இருப்பது சந்தேகத்திற்குரியது" என்று தெரிவித்தார்.

    மேலும், "ஒரு துறவி சமூகத்தை தனது குடும்பமாகவும், தேசத்தை தனது குலமாகவும் கருதுவார், அவரது ஒரே அடையாளம் சனாதன தர்மம் தான். ராமர் கோவில், இரு மகான்களின் உறுதியான போராட்டத்திற்கு சான்றாக நிற்கிறது" என்று தெரிவித்தார். 

    • வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து சுமார் மூன்றரை மணி நேரம் விளக்கக்காட்சி திரையிடப்பட்டது.
    • இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், போலி பெயர்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படுவார்கள்.

    பீகாரில் மேற்கொள்ளப்பட்டதைப் போலவே, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

    இதுகுறித்து விவாதிக்க நேற்று (புதன்கிழமை) டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.

    நாள் முழுவதும் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் (CEO) பங்கேற்றனர்.

    இந்தக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து சுமார் மூன்றரை மணி நேரம் விளக்கக்காட்சி திரையிடப்பட்டது.

    மேலும் வாக்காளர் பட்டியல் திருத்த செயல்முறை குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் அக்டோபர் மாதத்திற்கு முன்பு அதன் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும், அதற்குத் தயாராகுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

    செப்டம்பர் மாதத்திற்குள் அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடையும் என்றும், அக்டோபரில் செயல்முறை தொடங்கும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த திருத்தத்தில், இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், போலி பெயர்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படுவார்கள்.

    இந்த காரணங்களை காட்டி, பீகாரில் ஏற்கனவே நடந்து முடிந்த SIR திருத்தத்தில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    தேர்தல் ஆணையம் பாஜகவுக்காக வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் இனியும் அதை அனுமதிக்க மாட்டோம் என்றும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஹமாஸ் அரசியல் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் கூடியிருந்தனர்.
    • 5 ஹமாஸ் உறுப்பினர்களும், ஒரு கத்தார் பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.

    காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஹமாஸ் அரசியல் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில்  கூடியிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று இஸ்ரேல் போர் விமானங்கள் திடீரென நேற்று, கத்தாரில் ஹமாஸ் அலுவலகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தின.

    இதில், ஹமாஸ் தலைவர்கள் உயிர் தப்பினர். ஆனால், 5 ஹமாஸ் உறுப்பினர்களும், ஒரு கத்தார் பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.

    அமைதி திரும்ப மத்தியஸ்தம் செய்த நாடு மீதே இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டித்தன.

    இந்நிலையில் பிரதமர் மோடி கத்தார் அமீருடன் தொலைபேசியில் பேசி தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், "தோஹாவில் நடந்த தாக்குதல்கள் குறித்து கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானியிடம் பேசி, ஆழ்ந்த கவலை தெரிவித்தேன்.

    சகோதரத்துவ நாடான கத்தாரின் இறையாண்மையை மீறுவதை இந்தியா கண்டிக்கிறது.

    பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், மோதல் அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம்.

    பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாகவும், அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் இந்தியா உறுதியாக நிற்கிறது" என்று தெரிவித்தார்.    

    • ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பெற்ற ஐக்கிய ஜனநாயக படை என்ற கிளர்ச்சி அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
    • கிவு மாகாணத்தில் நியாதோ என்ற இடத்தில் ஒரு இறுதிச் சடங்கில் கூடியிருந்தவர்கள் மீது நடந்த தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டனர்.

    உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட காங்கோவில் பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கள் செயல்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் காங்கோ - உகாண்டா எல்லையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பெற்ற ஐக்கிய ஜனநாயக படை என்ற கிளர்ச்சி அமைப்பினர் நடத்திய 2 வெவ்வேறு தாக்குதல்களில் பொதுமக்கள் 89 கொல்லப்பட்டனர்.

    திங்கட்கிழமை, நாட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் நியாதோ என்ற இடத்தில் ஒரு இறுதிச் சடங்கில் கூடியிருந்தவர்கள் மீது நடந்த தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை, பெனியில் நடந்த மற்றொரு தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த பகுதியில், பொதுமக்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் முன்னரும் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். 

    • டிரம்ப் கத்தாருக்குச் சென்றபோது, அவருக்கு 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொகுசு விமானம் பரிசாகக் கொடுக்கப்பட்டது.
    • "இந்தத் தாக்குதலை நடத்தியது நான் அல்ல, பெஞ்சமின் நேதன்யாகு" என்று ட்ரம்ப் மழுப்பியுள்ளார்.

    காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஹமாஸ் அரசியல் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று கூடியிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று இஸ்ரேல் போர் விமானங்கள் திடீரென கத்தாரில் ஹமாஸ் அலுவலகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தின.

    இதில், ஹமாஸ் தலைவர்கள் உயிர் தப்பினர். ஆனால், 5 ஹமாஸ் உறுப்பினர்களும், ஒரு கத்தார் பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.

    அமைதி திரும்ப மத்தியஸ்தம் செய்த நாடு மீதே இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டித்தன.

    அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக கத்தார் திகழ்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் அதிபர் டொனால்டு டிரம்பின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

    இஸ்ரேல் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரி உறுதிப்படுத்தினார்.

    இருப்பினும் "துரதிர்ஷ்டவசமாக, தாக்குதலைத் தடுக்கத் தாமதமாகிவிட்டது," என்று தாக்குதல் குறித்து டிரம்ப் அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

    மேலும், "இந்தத் தாக்குதலை நடத்தியது நான் அல்ல, பெஞ்சமின் நேதன்யாகு," என்று டிரம்ப் மழுப்பியுள்ளார்.

    அதேவேளை "ஒரு இறையாண்மை கொண்ட நாட்டில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாட்டில் தன்னிச்சையாக குண்டுவீசுவது இஸ்ரேல் அல்லது அமெரிக்காவின் நோக்கங்களை அடைய உதவாது" என்றும் டிரம்ப் கூறினார்.

    கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், தாக்குதல் தொடங்கிய 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் அமெரிக்காவிடமிருந்து அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.

    நான்கு மாதங்களுக்கு முன்புதான் டிரம்ப் கத்தாருக்குச் சென்றபோது, அவருக்கு  400 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொகுசு விமானம் பரிசாகக் கொடுக்கப்பட்டது. கத்தாரில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளமும் செயல்பட்டு வருகிறது.   

    • அபிஷேக் சர்மா 16 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 30 ரன்கள் விளாசினார்.
    • சுப்மன் கில் 9 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சுப்மன் கில் ஆகிய இருவரும் இடம் பிடித்தனர்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 57 ரன்னில் சுருண்டது. குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தினார். மொத்தமாக 2.1 ஓவரில் 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஷிவம் துபே 2 ஓவரில் 4 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    யுஏஇ அணி சார்பில் தொடக்க வீரர்கள் ஷரஃபு (22), கேப்டன் முகமது வாசீம் (19) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர்.

    பின்னர் 58 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே சிக்சர் விளாசினார். அடுத்த பந்தில் பவுண்டரி விளாசினார். அடுத்த நான்கு பந்தில் ரன்ஏதும் அடிக்கவில்லை. இதனால் முதல் ஓவரில் இந்தியா 10 ரன்கள் அடித்தது. அடுத்த ஓவரில் சுப்மன் கில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் 15 ரன்கள் அடித்தது.

    3ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தன. இதனால் இந்தியா 3 ஓவரில் 38 ரன்கள் சேர்த்தது. 4ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் சிக்ஸ் அடித்த அபிஷேக் சர்மா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 16 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்தார்.

    2ஆவது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் சூர்யகமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். சூர்யகுமார் யாதவ் 4ஆவது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கினார். இதனால் இந்தியா 4 ஓவரில் முடிவில் 54 ரன்கள் சேர்த்தது. 5ஆவது ஓவரின் 3வது பந்தை சுப்மன் கில் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 4.3 ஓவரில் 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சுப்மன் கில் 9 பந்தில் 20 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 2 பந்தில் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ×