என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர்.
- இந்த விவகாரத்தை ஐ.சி.சி. யிடம் பாகிஸ்தான் முறையிட்டது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
இந்த விவகாரம் சா்ச்சையாகி இருக்கும் நிலையில் இதற்கு பொறுப்பாக போட்டி நடுவா் ஆண்டி பைகிராப்டை (ஜிம்பாப்வே) நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. மேலும் இந்த விவகாரத்தை ஐ.சி.சி. யிடமும் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முறையிட்டது.
இந்நிலையில் ஆட்ட நடுவர் ஆண்டி பைகிராஃப்டை நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இருந்து நீக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது.
இந்நிலையில், பாகிஸ்தானின் கோரிக்கைக்கு செவிசாய்த்து ஐசிசி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது UAE உடனான கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டியில் ஆண்டி பைகிராஃப் நடுவராக இருக்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ரிச்சி ரிச்சர்ட்சன் நடுவராக செயல்படுவார் என்று ஐசிசி பாகிஸ்தானுக்கு உறுதி அளித்துள்ளது.
UAE உடனான போட்டியில் வெற்றி பெற்றால் தான் சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் அணியால் தகுதி பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இந்தி இயக்குனர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப், வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இதேபோல், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.
மேலும் மலையாள திரைப்படமான ரைஃபில் கிளப் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
பாலிவுட்டில் ஹிட் படங்களை இயக்கிய அனுராக் கஷ்யப் சமீப காலமாக இந்தி சினிமாவைவிட தென்னிந்திய படங்களில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி
வாழ்க்கையை படமாக்குவது குறித்து இயக்குநர் அனுராக் காஷ்யப் மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்," விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படத்தை நான் இயக்க விரும்பவில்லை. ஏனெனில் பல்வேறு மக்களுக்கும், குழந்தைகளுக்கும் அவர் ஏற்கனவே ஒரு ஹீரோவாக உள்ளார்.
ஒரு வாழ்க்கை படத்தை இயக்க வேண்டுமெனில் நான் வேறொருவரைதான் தேர்வு செய்ய வேண்டும்.
கோலி மிகவும் அழகானவர் மற்றும் அற்புதமான மனிதர்!" என்றார்.
- இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர்.
- கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
இந்த விவகாரம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, "ஆசிய கோப்பை தொடங்கும்போதே இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எதிரான புறக்கணிப்பு பிரசாரங்கள் இணையத்தில் அதிகரித்தன. அது வீரர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதனால் பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்க வேண்டாம் என்று பிசிசிஐ கூறியதில் ஆச்சரியமில்லை.
இதற்காக இந்திய வீரர்களை நான் குறைகூறவில்லை. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவு படி அவர்கள் நடந்துகொண்டார்கள்.
செய்தியாளர் சந்திப்பின்போது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரிடம் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கினார்.
ஆனால் இந்திய அரசாங்கத்தால் சமூக ஊடக அழுத்தத்தைக் கையாள முடியாததால் மைதானத்தில் மக்களின் முன்பு அவரால் கைகுலுக்க முடியவில்லை. இதனால் இந்திய வீரர்கள் உலகத்தின் முன் அவமானமடைந்தனர்" என்று தெரிவித்தார்.
- கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.
- கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை உறுதிப்படுத்தினார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது. இதையடுத்து இவர்களின் கூட்டணியில் அடுத்த படம் எப்போது? என்ற கேள்வி எழுந்தது.
இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வந்தது. கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை உறுதிப்படுத்தினார்.
கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கு, பிளானும் இருக்கு. ஆனால் அதற்கான இயக்குநர், கதை, கதாபாத்திரம் இன்னும் ரெடி ஆகல. ஆனதும் நடிப்பேன் என்றார்.
- எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
- முத்துராமலிக்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க கோரி மனு.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது, "முத்துராமலிக்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மனு அளித்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து,
தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கிட வேண்டும் என அதிமுக சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- தொழிலில் முதலீடு செய்வது, திருமண பேச்சுவார்த்தை நடத்துவது போன்றவை திடீர் விளைவுகளை ஏற்படுத்தும்.
- கிரகணம் கன்னி ராசிக்காரர்களின் உடல் மற்றும் மனநலனின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும் போது ஏற்படும் நிகழ்வே சூரிய கிரகணம் எனப்படுகிறது.
சந்திரன் சூரியனின் ஒளியை மறைப்பதால் பூமியின் மீது சில பகுதிகளில் சூரிய ஒளி விழாமல் இருக்கும் போதே சூரிய கிரகணம் நிகழ்கிறது.
இந்த மாதம் 21-ந்தேதி சூரிய கிரகணம் நிகழ்கிறது. இது கன்னி ராசியில் நிகழ இருப்பதாகவும், அந்த நாளில் கன்னி ராசிக்காரர்கள் செய்யக்கூடியவகைள், செய்யக்கூடாதவை ஆகிவைகளை ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
இந்த சூரிய கிரகணம் ஏற்படும் காலம் வழக்கமான அமாவாசையைப் போல் இல்லாமல் இருப்பதால், அவை நம் மனநிலைகள் மற்றும் உணர்வு நிலைகளில் திடீர் மாற்றங்கள் கொண்டு வரக்கூடும். இது துல்லியமான தெளிவுக்கு நல்ல அறிகுறியாக இருந்தாலும், உங்கள் விருப்பங்களை ஒத்துப்போகாதவற்றுடன் இணைப்பதற்கு வழிவகுக்கும். அதனால் தெளிவான மனநிலையுடன் இருங்கள்.
இந்த நேரத்தில் பெரிய முடிவுகளை எடுக்காதீர்கள், உங்கள் உடல்நலம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
உதாரணமாக தொழிலில் முதலீடு செய்வது, திருமண பேச்சுவார்த்தை நடத்துவது போன்றவை திடீர் விளைவுகளை ஏற்படுத்தும். ஆகையால் இந்த காலத்தில் பொறுமை காப்பது நல்லது. கிரகணம் கன்னி ராசிக்காரர்களின் உடல் மற்றும் மனநலனின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
இந்த காலங்களில் சுய பராமரிப்பை மேற்கொள்வது, போதுமான ஓய்வு எடுப்பது முக்கியமான ஒன்றாகும். யோகா மற்றும் சீரான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியமான ஒன்றாகும்.
கிரகணம் மனநலனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆதலால், உறவுகளை கையாள்வதை திறம்பட செய்யவேண்டும். கணவன், மனைவி, பிள்ளைகள், உறவுக்காரர்கள் என யாரையும் கட்டுப்படுத்த முயலாதீர்கள், நீங்கள் இறுகப்பிடிக்க முயற்சித்தால் உறவுகளிடையே மோதல் உருவாக வாய்ப்புண்டு. அதனால் உறவுகளிடையே பொறுமையை கடைபிடியுங்கள். உறவுப்பிரச்சனைகளை அமைதியாக கவனியுங்கள்.
கிரகணங்கள் ஆழ்ந்த ஆன்மீக சக்தியைக் கொண்டுள்ளன. கவனச்சிதறல் இருந்தால் சக்தி வாய்ந்த நுண்ணுர்வுகளை தவறவிடுவீர்கள். ஆகையால் தியானத்தில் ஈடுபடுங்கள், உள்ளத்தை குவித்து ஆன்மீக நாட்டத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு நல்வழியை மீட்டுத் தரும் ஒரு வாய்ப்பாக அமையும்.
இவ்வாறு கன்னி ராசிக்காரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஜோதிடர்கள் விளக்கியுள்ளனர்.
- பிரதமர் நரேந்திர மோடியின் 75-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- பிரதமர் மோடி அனைத்து நலன்களுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடி அனைத்து நலன்களுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் வெற்றி பெறவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2020 ஆம் ஆண்டு 6.17 மீட்டர் உயரம் தாண்டி அர்மாண்ட் டுப்லாண்டிஸ் உலக சாதனை படைத்தார்.
- அர்மாண்ட் டுப்லாண்டிஸ் 6.30 மீட்டர் உயரம் தாண்டி புதிய உலக சாதனையை படைத்தார் .
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது.
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தடியூன்றித் தாண்டுதல் (Pole Vault) இறுதிச் சுற்றில் ஸ்வீடன் நாட்டு வீரர் அர்மாண்ட் டுப்லாண்டிஸ் 6.30 மீட்டர் உயரம் தாண்டி புதிய உலக சாதனையை படைத்தார் .
இதன்மூலம் தனது உலக சாதனையை 14வது முறையாக அர்மாண்ட் டுப்லாண்டிஸ் முறியடித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு 6.17 மீட்டர் உயரம் தாண்டி அர்மாண்ட் டுப்லாண்டிஸ் உலக சாதனை படைத்தார். இதனையடுத்து கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ந்து அவரது சாதனையை 14 ஆவது முறையாக அவரே முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் தடியூன்றித் தாண்டுதல் (Pole Vault) போட்டியின் முடிசூடா மன்னனாக அவர் திகழ்ந்து வருகிறார்.
- தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி கவிஞர் வைரமுத்து புகழ் வணக்கம்.
தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது.
தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
உன் தாடி முளைத்தபோது
சமூகத்துக்கு மீசை முளைத்தது
இருட்டுச் சுவர்
இடியத் தொடங்கியது
கி.மு - கி.பி பழைய கணக்கு
பெ.மு - பெ.பி புதிய கணக்கு
நூற்றாண்டுகளாய்
எங்கள் புலிகள்
ஆடுகளுக்குப்
புல்பறித்துக் கொண்டும்
பல்தேய்த்துக் கொண்டுமிருந்தன
நகத்தில் கூர்மையும்
முகத்தில் மீசையும்
உண்டென்பதை
புலிகளுக்கு நீதான்
புலப்படுத்தினாய்
நீறுகளை ஊதி
நெருப்பை அடையாளம்காட்டிய
சுற்றுப்பயணச் சூறாவளி நீ
வர்க்கப் போரின்
இன்னோர் வடிவம்
உன் தர்க்கப்போர்
நீ சொன்ன பிறகுதான்
செருப்புத் தைத்தவன்
கையில் இருந்ததைக்
காலில் அணிந்தான்
நிர்வாணமாய்
நெசவு செய்தவன்
ஆடை சூடினான்
கலப்பையில் எழுதியவன்
காகிதத்தில் எழுதினான்
சூரியன் வந்ததும்
உடுக்கள் என்னும்
வடுக்கள் மறைவதுபோல்
உன் வருகையால்
வெள்ளை அழுக்கு
வெள்ளாவிவைத்து
வெளுக்கப்பட்டது
பழைமைவாதப் பாம்படித்ததும்
ஓலைக் குடிசைகளின்
ஒட்டடை அடித்ததும்
புலம்பும் புராணங்களுக்கெதிராய்ச்
சிலம்பம் சுற்றியதும்
உனது ஒற்றைக் கைத்தடிதான்
மூலக்கூறு பிரித்தால்
கடைசிவரை
தங்கம் தங்கம்தான்
உன் மரணத்தின்
முன் நிமிடம்வரை
நீ பேசும்புயல்தான்; பெரியார்தான்
கருப்பு நிலக்கரி வைரமாகக்
காலம் ஆகும்
கருப்பு வண்ணம் புரிதல்பெற
இன்னும் ஒரு யுகமாகும்
புகழ் வணக்கம்.
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
- சுயமரியாதையின் சின்னம் தந்தைப் பெரியாரின் 147-ஆம் பிறந்தநாள் இன்று.
- வன்னிய மக்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான தொடர்சாலை மறியல் போராட்டம் இன்று தான் தொடங்கியது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சுயமரியாதையின் சின்னம் தந்தைப் பெரியாரின் 147-ஆம் பிறந்தநாள் இன்று. தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் இந்த நாள் மிகவும் முக்கியமான நாள். வன்னிய மக்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான தொடர்சாலை மறியல் போராட்டம் இன்று தான் தொடங்கியது. தமிழ்நாட்டின் சமூகநீதி நாளும் இன்று தான். தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்குமான சமூகநீதியை வென்றெடுப்பதற்காக தந்தைப் பெரியார் வகுத்துக் கொடுத்த சமூகநீதிப் பாதையில் பயணிக்கவும், போராடவும் இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலித்து உத்தரவிட கோரிக்கை.
- தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ள பிரசாரத்துக்கு அனுமதி கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
விஜய் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், அனுமதிகோரிய விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலித்து உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
- தென் மாவட்டத்தை பொறுத்தவரை நவராத்திரி என்றாலே குலசேகரன்பட்டினம் தான்.
- தசராவில் பக்தர்கள் அணியும் ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு பலன்களை முத்தாரம்மன் தருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தென் மாவட்டத்தை பொறுத்தவரை நவராத்திரி என்றாலே குலசேகரன்பட்டினம் தான். இதனை சுருக்கி 'குலசை' என்பார்கள்.
குலசை தசரா பெருந்திருவிழாவில் பங்கேற்பதற்காக, தூத்துக்குடி மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.
இந்த ஆண்டு குலசை தசரா திருவிழா வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் நாள் திருவிழாவான அக்டோபர் 2-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இந்த கோவிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞான மூர்த்தீஸ்வரரும், அம்பிகை முத்தாரம்மனும் வீற்றிருக்கிறார்கள்.
பாண்டியநாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் இவ்வூர் குலசேகரன்பட்டினம் என அழைக்கப்பட்டதாக வரலாறு உண்டு.
இந்த கோவில் முன்பு சாதாரண ஒரு தெருக் கோவிலாக இருந்து வந்தது. ஆனால் இன்று உலகப் பிரசித்தி பெற்ற கோவிலாக சிறப்பு பெற்று வளர்ச்சி பெற, அம்பாளின் மீதுள்ள பக்தர்களின் அளவு கடந்த நம்பிக்கை தான் காரணம்.
முன்பெல்லாம் அம்மை நோய் குணமாக வேண்டி மட்டுமே அம்மனுக்கு விரதம் மேற்கொள்வார்கள். ஆனால் தற்போது கடன், வியாபார முடக்கம், வழக்கு பிரச்சினை என சகல துன்பங்களையும் நீக்கி வரம் அருள்வதால் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனின் அருளை பெறப் பக்தர்களின் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு லட்சக்கணக்கில் அதிகரித்து கொண்டே வருகிறது.
கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் அருள் பெறும் சக்தி தலமாகவே இந்த கோவில் விளங்கி வருகிறது. முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறு வேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம் உள்ளதாம்.
இந்த ஐதீகப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இதனை அம்மனே நேரில் வந்து கேட்பதாகக் கருதி மக்கள் தர்மம் செய்கிறார்கள்.
தசராவில் பக்தர்கள் அணியும் ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு பலன்களை முத்தாரம்மன் தருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். காளி, சிவன், பார்வதி, பிரம்மா, விஷ்ணு, விநாயகர், முருகன், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, நர்சு, போலீஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று, அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து, கோவில் உண்டியலில் செலுத்துவது தான் இதன் சிறப்பு ஆகும். முனிவர் வேடமானது முன் ஜென்ம பாவங்களை தீர்ப்பதாகவும், குறவர் வேடமானது மன குறைகளை தீர்க்கும் எனவும், பெண்கள் வேடமானது திருமண குறையை தீர்க்கும் எனவும், காளி வேடம் காரிய சித்தியை தரும் எனவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு பக்தர்களும் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வேடங்களை அணிந்து வருவர். காவல்துறை வேடம் முதல் செவிலியர், மருத்துவர், எமதர்மன், சித்திரகுப்தன் என பல்வேறு வேடங்களை பக்தர்கள் அணிந்து வருவர்.
அம்மன் அருளின்படி , காளி வேடம் அணிபவர்கள் 41 நாட்களுக்கு மேலாக விரதம் இருக்க தொடங்குவார்கள். அவர்கள் வீட்டருகே, குடில் அமைத்து அதில் அம்மனின் புகைப்படம் வைத்து தினமும் பூஜை செய்து அங்கேயே விரதம் இருந்து தங்கி இருப்பர். மற்ற வேடம் அனுபவர்கள் காளி வேடம் அணிபவர்களிடம் காப்பு கட்டி கொள்வர். மற்ற வேடம் அணிபவர்கள் குடியேறும் நாள் அன்று மாலை அணிந்து 11 நாள் விரதம் இருப்பர்.

ஒவ்வொரு வேடத்திற்கும் ஒவ்வொரு பலன் இருப்பது போல, ஒவ்வொரு மாலைக்கும் ஒவ்வொரு பலன் இருப்பதாக நம்பப்படுகிறது. பச்சை வண்ண மாலையானது பசுமையான வாழ்வை தரும் எனவும், மஞ்சள் வண்ண மாலை மங்கல நிகழ்வை தருவதாகவும், கருங்காலி மாலை நல்லெண்ணத்தை தருவதாகவும், துளசி மாலை புனிதத்தை தருவதாகவும், ருத்திராட்ச மாலை சன்னியாச வாழ்வையும் அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.
ஒவ்வொரு வேடம் அணிந்தவர்களும், அது எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், அருகில் வீடுகளில் யாசகம் பெற்று, அந்த காணிக்கையுடன் சூரசம்காரம் நடக்கும் நாளன்று கோவில் சென்று தங்கள் வேடத்துடன் அம்மனை தரிசித்து பின்னர் கடலில் சென்று நீராடிவிட்டு வருவர்.
பின்னர் இரவு 10 மணி அளவில் முத்தாரம்மன் எழுந்தருளி, சூரனை வீழ்த்தும் சூரசம்கார நிகழ்வு கடற்கரையில் நிகழும். இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்து இருப்பார்கள். சூரசம்காரம் முடிந்து அம்மன் சன்னதி தேரில் ஊர்வலம் வருவார்.
அம்மன் சன்னதியை அடைந்த பிறகு காப்பு தரிக்கப்படும். காளி வேடம் அணிந்தவர்கள் மட்டும் கோவிலில் காப்பு தரிப்பார்கள். மற்ற வேடம் அணிந்தவர்கள் காளி வேடம் அணிந்தவர்களிடம் காப்பு தரித்து கொள்வர். அதன் பிறகே குலசை முத்தாரம்மன் தசரா விரத காலம் நிறைவுபெறும்.
இந்த ஆண்டு தசரா திருவிழாவுக்காக 61 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த மாதம் 4-ந் தேதியே மாலை அணிந்தனர். 51 நாட்கள் விரதம் இருப்பவர்கள் கடந்த மாதம் 14-ந் தேதியும், 48 நாட்கள் விரதம் இருப்பவர்கள் 17-ந் தேதியும், 41 நாட்கள் விரதம் இருப்பவர்கள் 24-ந் தேதியும் விரதம் தொடங்கினர்.

கோவிலில் இன்று விரதம் தொடங்கிய பக்தர்கள்.
31 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த 3-ந் தேதியும், 21 நாட்கள் விரதம் இருப்பவர்கள் கடந்த 13-ந் தேதியும் விரதம் தொடங்கினர். தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது நெல்லை, தென்காசி, விருதுநகர் மற்றும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குலசை வந்து கடற்கரையில் நீராடி அம்மன் முன்பு மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். இதனால் உடன்குடி, குலசை, திருச்செந்தூர் பகுதிகளில் எங்கு திரும்பினாலும் மாலை அணிந்த பக்தர்கள் காட்சியளிக்கின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு சுமார் 7 லட்சம் பக்தர்கள், 2023-ம் ஆண்டு 8 லட்சம் பக்தர்கள், கடந்த ஆண்டு 10 லட்சம் பக்தர்கள் வேடம் அணிந்திருந்த நிலையில், இந்த ஆண்டு இருமடங்கிற்கும் அதிகமான அளவில் பக்தர்கள் வேடம் அணிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் உண்டியல் வசூலே, மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை உறுதிபடுத்துவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு சூரசம்ஹாரம் நாளில் மட்டும் 20 லட்சம் பேர் திரண்ட நிலையில், இந்த ஆண்டு அதைவிட அதிகமாக கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வாகன நிறுத்துமிட வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.






